Friday, March 31, 2006

ஃபிபனோசி எண்கள் ! கணக்குப் பாடமல்ல..

Fibonacci numbers

ஃபிபனோசி எண்கள் !

ஒரு எண்தொடரில் இவ்வளவு ரகசியங்களா..மர்மம்.. ஸ்வாரஸ்யம் இதன் மறுபெயர் தான் ஃபிபனோசி எண்கள் என நினைக்கிறேன். டாவின்ஸி கோட் என்னும் பிரபலமான நாவலும் இந்த எண்ணின் ரகசிங்களை உணர்த்தியுள்ளது.

இயற்கையைக் கவிஞராக மட்டுமே உருவகப் படுத்திய கவிகள் இப்போது கணிதவியல் வல்லுனராக வாழ்த்திப் பாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஃபிபனோசி எண்களைக் கேள்விப்படாதவர்கள் இங்கே குறைவுதான் என நினைக்கிறேன். பன்னிரண்டாம் வகுப்பிலேயே கணிதப் பாடத்தில் வந்திருக்கிறது அல்லவா.

கல்லூரிகளின் கணிப்பொறியியல் படித்தவர்கள் நிச்சயமாக ஏதேனும் ஒரு கணிணி மொழியிலாவது இந்த ஃபிபனோசி எண்களை உருவாக்க ப்ரொகிராம் எழுதியிருக்க வேண்டும்.

எதற்கும் இங்கே சிறு விளக்கம்..இந்த ஃபிபனாஸி தொடரில் ஒவ்வொரு எண்ணும் அதற்கு முந்தைய இரு எண்களின் கூட்டுத்தொகையாகும் ..இதோ அந்த தொடர்.. Fibonacci series: 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144, 233, 377, 610, 987, 1597, 2584, 4181, ... அடுத்தடுத்த ஜோடி எண்களின் விகிதம் கோல்டன் செக்ஸன் ( golden section) (GS) - 1.618033989 அதன் தலைகீழி 0.618033989 .

இந்த எண்களின் பயன்பாடு குறித்து எனக்கு அப்போது பெரிதாக ஏதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்த எண் இவ்வளவு மர்மமான.. சுவாரஸ்யமான வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்பு படுத்தக் கூடியதாய் இருக்குமென நினனக்கவே இல்லை..

இயற்கையோடு இந்த எண்ணுக்குரிய தொடர்பைப் பார்க்கும் முன்பு ஒரு சிறிய வரலாற்றுப் பிண்ணனியைப் பார்ப்போம்..

1170இல் பிறந்த லியாணர்டோ பைசானோ (Leonardo Pisano ) என்பது இயற்பெயராக இருந்தபோது அதை ஃபிபனோசி அதாவது பனோசியின் மகன் (son of Bonacci) என மாற்றிக் கொண்டார். இவர் ஹிந்து-அராபிய (0-9) எண்களின் பயனை அறிந்து ஐரோப்பியாவில் அதை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர்.

இவரின் பங்களிப்பு பாஸ்கல் முக்கோணம் , தங்க கோணம் (Goldan Angle ) என பலபலவாக இருந்தாலும் இயற்கைக்குள்ள தொடர்பைக் காண்போம்.

நம்மில் பலர் மலர்களை ரசித்திருந்தாலும் அவற்றின் இதழமைவை ஆராய்ந்திருப்போமா என்பது சந்தேகமே.அவ்வாறு ஆராய்ந்திருந்தால் பலபல மலர்களுக்கிடையேயான இதழ் எண்ணிக்கைகள் ஒரு எண் தொடரில் இருந்திருப்பதை உணரலாம்.. அது ஃபிபனோசி தொடரே

  • 3 petals: lily, iris
  • 5 petals: buttercup, wild rose, larkspur, columbine (aquilegia)
  • 8 petals: delphiniums
  • 13 petals: ragwort, corn marigold, cineraria,
  • 21 petals: aster, black-eyed susan, chicory
  • 34 petals: plantain, pyrethrum
  • 55, 89 petals: michaelmas daisies, the asteraceae family

Some species are very precise about the number of petals they have - e.g. buttercups, but others have petals that are very near those above, with the average being a Fibonacci number.


ஒரு இதழில் மலர் ...
white calla lily

ஈரிதழ் மலர்கள் அரிய வகை


euphorbia
மூவிதழ் மலர்கள் வெகு சாதாரணம்


trillium

ஐவிதழ் மலர்க் குடும்பங்களே நூற்றுக்கணக்கில்


எட்டு இதழ்கள் கொஞ்சம் அரிது


bloodroot

இது பதிமூன்று


black-eyed susan
டெய்ஸி மலர்கள் 13, 21, 34, 55 அல்லது 89 இதழ்களோடு காணப்படுவது சாதாரணம்.


shasta daisy with 21 petals

34 இதழோடு.



ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. அடுத்தமுறை என்ன பூ கிடைத்தாலும் பொறுமையாக எண்ணிப்பருங்கள்..

மலர்களோடு மட்டும் இது நிற்கவில்லை.. இதோ அடுத்த ஆச்சர்யம்.

மனித கைகளின் விரலமைவும் கூட இந்த எண்ணை ஒத்து போகிறது. இது தற்செயலாகக் கூட இருக்கலாம் !

இன்னும்பல ஆச்சர்யங்கள் இங்கே... http://www.world-mysteries.com/sci_17.htm


கூகுள் சரணம் கச்சாமி : Just Think , don't type, we search for you

ஸ்டேண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பாலிகிராஃப் சம்பந்தமாக ஒரு ஆராய்ச்சி நடந்து வந்தது. அதில் முக்கியமான கண்டுபிடிப்பு இது ..

நாம் எதாவது ஒன்றைப் பற்றி சிந்திக்கும் போது நம் மூளை அதைப் பற்றி மீச்சிறு அலைகளை எழுப்புகிறது..அது சிலசமயம் பேசுபவரின் தாய் மொழியின் வார்த்தைகளை ஒத்துள்ளது என்பது.

பலநாள் முன்பு உடைப்பில் போட்ட இதை கூகுள் தூசி தட்டி எடுத்து இப்போது ஒரு புது தேடல் வசதியை அறிமுகப் படுத்த முயற்சி செய்கிறது.

இதற்கு புதிதாக எந்த உபகரணமும் தேவை இல்லை என்பதே இதன் ஹைலைட். நாம் வழக்கமாக உபயோகப் படுத்தும் மைக் போதும்.. அதுவே நாம் யோசிக்கும் போது வெளிப்படும் கீ வேர்ட்ஸ்ஸை உள்ளிழுத்து சில pattern மேட்சிங் செய்து அதை வைத்து இணையத்தில் தேட ஆரம்பித்துவிடும்.

இதில் ஒரு பிரச்சினை .. மிக முக்கியமான பிரச்சினை .. ப்ரைவசி.. ஆமாம் .. இந்த வசதி கொண்டு அருகில் உள்ளவரின் மனதையும் கிட்டத்தட்ட படிக்க முடியும்.. அதனால் கூகுள் குழம்பியுள்ளது.. இதை வெளியிடுவதில் உள்ள சட்டச் சிக்கல் குறித்து ஆராய்ந்து வருகிறது.

ஹும்...பார்த்து யாரவது மைக்கோட இருக்கும் போது எக்கு தப்பா நினைச்சு வெக்காதீங்க .. :)

மூலம் : http://think.google.com/

வானின்று பெய்யும் அமிழ்தம் ..



ஆதவன் கடல் காய்ச்சி
கடைந்தெடுத்த அமிழ்தமது

அந்த மேருமலை வருந்தவில்லை
அரவக் கயிறும் தேவையில்லை

ஆமை முதுகிலும் பாரமில்லை
ஆனாலும் அமிழ்து கிடைக்கிறது

ஆவியாதலனெ அறிவியலாருரைக்க
ஆண்டவன் சித்தமென ஆன்மீகத்தார் கூற

ஆங்காங்கே சில கழுதைச் சோடிகளும்
ஆவென்று வாய்பிளந்து வான்நோக்க

கருப்புக் காளான்கள்
சாலைகளில் முளைத்திருக்க

காய்ந்திருந்த மரங்களின்
கற்பனையைத் தட்டிவிட அவை

தூரிகை ஏதுமின்றித் தன் மேனியிலே
பல வண்ண படம் வரைய

போட்டிக்கு சாலைத் தண்ணீரும்
தூக்கிய வேஷ்டிகளையும் புடவைகளைப் பதம் பார்க்க

பலநாள் கழித்துக் குளித்த காக்கைகள்
ஒரத்தில் ஒதுங்கி உடலுலுலர்த்த

வானம் பார்த்த பூமியாம் சில
உதடுகள் உஷ்ணமாக

சில்லென காற்று டீ கடையில்
சில சில்லரைகளைச் சேர்க்க

பல்லவன் தன்னுள் சிலைரைத்
தவணை முறையில் குளிப்பாட்டி

சாலையோர நடைபாதைவாசிகளை
தாராளமாய்க் குளிப்பாட்ட

சைக்கிள்காரர்கள் தலையில்
பாலித்தீன் பூக்கள் பூத்திருக்க

மாடியிலே மறக்கப்பட்ட வடாம்கள் சில
எமதர்மராணிகளை நினைத்து சிரிக்க

ஓட்டு வீட்டுத் தோணிகளின் தண்ணீர்
வீட்டுப் பாத்திரங்களை நிரப்ப

திண்ணைக் குழந்தைகள்
காகிதக் கப்பல் விட

இடியே விழுந்தாலும் மெகாத்தொடர்கள்
விடாது பார்க்கப் பட

மறக்கப்பட்ட குடைகள்
ஆணிகளில் தூங்கியிருக்க

இன்று கடும்வெயிலென்ற
வாநிலை ஆராய்ச்சி நிலையம் மீது

கொஞ்சம் கடுமையாகவே
நீர் வீழ்த்த..

சில செல்லத் திட்டுக்கள்
சில நன்றிகள்
சில சந்தோஷங்கள்
சில எரிச்சல்கள்

எதையும் பொருட்படுத்தாமல்
சோ வென பெய்யும் மழை..

~~~~~~~~~~~~****~~~~~~~~~~~

மேலே உள்ள கோடு ..இத்தோடு கவிதை முடிந்தது என்பதைக் காண்பிக்க. :) (நல்ல கவிஞர்களுக்கு இது தேவை இல்லை தான் ) .. மழைக் கவிதைக்கு காரணம் இதோ கீழே உள்ள வாநிலை அறிக்கை தான் ..

Thursday, March 30, 2006

நோபல் பரிசின் ஏமாற்றமான மறுபக்கம்


சென்ற வாரம் தொலைக்காட்சி (KQED) யில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது. ஒரு நோபல் பரிசின் மறுபக்கம் இவ்வளவு மோசமானதாக இருக்கும் என நான் கனவினுலும் நினைக்கவில்லை.

ஏப்ரல் 15, 1953 இல் இயற்கை(Nature) என்ற அறிவியல் இதழில் மூன்று முக்கிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியாயின. அவை மூன்றும் இன்றைய மருத்துவத்துறை வளர்ச்சியின் அடிப்படையான டி.என்.ஏ வின் கண்டுபிடிப்பைப் பற்றியவை. முதன் முறையாக அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

அந்தக் கட்டுரைகள் மரபணுவின் அமைப்பின் இரும்புத்திரை ரகசியத்தை உடைத்து அதன் டபுள் ஹீலிக்ஸ் எனும் வடிவத்தை உலகிற்குக் காட்டின. இந்த ரகசியம் மனித உடலில் வியாதிகள் பரவும் விதத்தையும் அதற்கு உடல் தகவமைத்துக் கொள்ளும் விதத்தையும் அறிவியலாலர்களுக்கு எளிதில் புரியவைத்து பலப் பெரும் வியாதிகளுக்கு மாற்று மருந்துகளைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவியது. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பல மருந்துகளுக்கு இந்த நிகழ்வே முன்னோடி என்க் கூறலாம்.

1950க்கு முன்பு அறிவியலாலர்களுக்கு மரபணுவைப் பற்றி ஒரு விதமான அனுமானத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை. கிரகார் மெண்டலின் அடிப்படைக் கோட்பாடுகள் மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். அதற்கு அடுத்த படியை அடையும் ஓட்டப்பந்தயத்தில் அறிஞர்களுக்கிடையே கடும் போட்டி இருந்தது.

சிலருக்கு ரோஸாலின் பிராங்ளின் பற்றி.. அவர் ஒரு கெமிஸ்ட், எக்ஸ் ரே கிரிப்டலோகிராஃபர் என தெரிந்திருந்தது. இன்னும் சிலருக்கு மட்டுமே அவருடைய எக்ஸ்ரே படங்களே.. இந்தப் புதிய கண்டுபிடிப்பிற்கு அடிகோலின என்றும் தெரிந்திருந்தது. ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடிக்குப் பிறகு அந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக மிளிர்ந்த டி.என்.ஏ வின் வடிவக் கண்டுபிடிப்பின் பின் உள்ள ஒரு அசிங்கமான நம்பிக்கைத் துரோகம் விஷயமறிந்த பலரைப் பலகாலம் துக்கத்திலாழ்த்தியது.

1951 இல் ரோஸாலின் லண்டனின் கிங்ஸ் காலேஜில் ரேண்டல் லேபில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். அங்கே ஏற்கனவே இருந்த மௌரிஸ்க்கு ரோஸலினை அவ்வளவாக பிடிக்கவில்லை.

ஐந்து அடி உயரம்..வெகு ஒடிசலான தேகம்..யாரையும் சகஜமாய் பழகவிடாத வெட்கம்..வேலையைத் தவிர வேறெதையும் நினைக்காத குணம், எப்போதும் ஆராய்ச்சியே என கரும சிரத்தையாய் இருப்பது.. மனதில் பட்டதை வெளிப்படையாய் சொல்லுவது..போன்ற குணங்கள் அவருக்கு நண்பர்கள் யாரையும் சேர்க்கவில்லை..

பின்னாளில் நோபல் பரிசு வாங்கிய வாட்சன் தனது சுயசரிதையில் கூறுகையில் " ரோஸாலின் ஒரு பெண் போலவே இருக்கவில்லை.. உடையிலோ ..முக அலங்காரத்திலோ எதிலும் நாட்டமில்லை.." என தன் ஆணாதிக்கத்தைக் கொட்டினாலும் " அறிவுக்கு மட்டும் பஞ்சமில்லை" என ஒத்துக் கொண்டார்.

கிங்ஸ் காலேஜில் ரோஸாலின் , மௌரிஸ் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை.. டி.என்.ஏ வின் வடிவத்தை எக்ஸ்.ரே மூலம் கண்டறிவது..

அதே நேரத்தில் கேம்பிரிட்ஜ் லேபில் வாட்சனுக்கு புரதங்களை ஆராய்ச்சி செய்யும் வேலை இருந்தது..ஆனால் அதில் நாட்டமில்லாமல் இவர்கள் ஆராயும் டி.என்.ஏ பக்கம் அவர் கவனம் திரும்பியது.

ரோஸாலினின் கடின உழைப்பு படிப்படியாக பலனளிக்கத் துவங்கியிருந்தது.. மௌரிஸ்க்கு பெண்ணுடன் வேலை செய்யவேண்டியிருக்கிறது என்ற ஒரு குறுகுறுப்பும்..அதிலும் அவள் நன்றாக வேலை செய்கிறாலோ என்ற எரிச்சலும் அதிகமாகிக் கொண்டே வந்தது.

1951 இல் மௌரிஸ் வாட்சனை சந்தித்து பழக வாய்ப்பு கிடைத்தது.. ரோஸலினைப் பற்றிய மௌரிஸின் எரிச்சல்.. கிங்ஸ் காலேஜை ..கேம்பிரிட்ஜ்க்கு முன்னாலிழுத்துச் செல்லும் ரோஸலின் மீது உள்ள வாட்சனின் வெறுப்பு ..இரண்டும் இவர்களை நண்பர்களாக்கியது.

சில மாதங்களுக்கு பின் நவம்பர் 1951 இல் ரோஸலின் ஒரு ஆராய்ச்சி வகுப்பில் அதுவரையிலான தன் கண்டுபிடிப்பை விளக்கி .. டி.என்.ஏ வின் முதுகெலும்பு அதற்கு வெளியிலேயே அமைந்துள்ளது..அது ஹெலிக்கள் வடிவம் என விளக்கினார்.

வாட்சன் அந்த வகுப்பில் அமர்ந்திருந்தார்.. குறிப்பேதும் எடுக்காமல்..தவறாக சிலவற்றை நினைவில் இருத்தினார். அதற்கு இரண்டு காரணம் ..ஒன்று அவர் ரோஸலின் போல கெமிஸ்ட்ரி மேஜர் அல்ல... இரண்டாவது ஒரு பெண்ணின் லக்ட்சரை கேட்பதா என்ற எண்ணம்..

அவர் தன் அரைகுறை அறிவுடன் கிர்க் என்பவருடன் சேர்ந்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.. அதன் அடிப்படையே தவறாக முதுகெலும்பை உள் நிறுத்தி டி.என்.ஏ வடிவம் செய்து அதை மௌரிஸ் மற்றும் ரோஸலின் முன் சமர்ப்பித்தார்.

ரோஸ்லின் அதை தக்க காரணங்களுடன் தவறு என அனைவர் முன் நிரூபித்துவிட..வாட்சன் , கிர்க் இருவருக்கும் அவமானத்துடன் எரிச்சலும் வந்துவிட்டது. இவர்களின் இந்தத் தோல்வி அவர்களது கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சி தலைமைக்கு எட்ட ..புரதங்களை ஆராயமல் கால விரயம் செய்ததால் கடும் கோபம் கொண்டு டி.அன்.ஏ ஆய்வை அத்தோடு முடித்து பழைய ஆய்விற்குத் திரும்ப உத்தரவிட்டது.

ரோஸலினின் வளர்ச்சியை அங்கீகரித்த கிங்ஸ் காலேஜ் உயர்ந்த இடம் கொடுத்துக் கவுரவப்படுத்தியது. ஆனால் உடன் வேலை செய்யும் மௌரிஸ் அதைப் பொருட்படுத்தாமல் ரோஸலினைத் தன் அஸிஸ்டெண்ட் போல பயன்படுத்த அதற்கு ஒரு நிலையில் எதிர்ப்பு தெரிவித்தார். மௌரிஸ் மட்டுமல்ல அங்குள்ள கிட்டத்தட்ட அனைத்து ஆராய்ச்சியாளர்களாலும் பெண் என்ற ஒரே காரணத்திற்காக தனிமைப் படுத்தப்பட்டார். மதிய உணவு கூட அனைவரும் அமர்ந்து உண்ணுமிடத்தில் உண்ண அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மௌரிஸ்ஸால் சுத்தமாக ரோஸலினை சகித்துக் கொள்ள முடியாத நிலை வந்துவிட்டது .. ரோஸலின் அறைப்பக்கமே போவதில்லை.. ரோஸலினோ சுற்றி நடப்பதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தன் ஆய்வில் மூழ்கியிருந்தார்.

மே 1952 இல் மிக நுண்ணியமாக அவர் எடுத்த இரண்டு டி.என்.ஏ படங்கள் ட்ரை மற்றும் வெட் ஃபார்ம் மிக முக்கியமான மைல்கல்லாகின. யாரும் அது வரை அவ்வளவு தெளிவாக எடுத்ததில்லை.

எதுவும் சாதிக்காத வெறியிலிருந்த மௌரிஸ் .. ரோஸலினின் ஆராய்ச்சிக் குறிப்பு.. படங்களை அவர் இல்லாத போது நகலெடுக்க ஆரம்பித்தார்.

ஜனவரி 1953 இல் வாட்சன் திரும்பவும் ரோஸலினை சந்திக்க வந்தார்.. அவமானகரமான முந்தைய சந்திப்பிற்குப் பிறகு இவர் மீண்டும் வரக் காரணம்... லைனஸ் பாலிங் என்ற மற்றோரு விஞ்ஞானி டி.என்.ஏ வடிவமைப்பு பந்தையத்தில் வாட்சனுக்கு முன்பிருந்ததே... எப்படியும் இந்த முறை சரியான தகவலைப்பெற்று வென்று விடவேண்டும் அதற்கு ரோஸலினை விட்டால் கதியில்லை என வந்தார்.

அங்கே ரோஸலினை சந்திப்பதற்குள் மௌரிஸைப் பார்த்து வந்த காரணத்தைக்கூற... ரோஸலினிடனிருந்து திருடிய நகல்களைத் தாரைவார்த்தார். அந்தக் குறிப்புகளும் புகைப்படங்களும் அங்கேயே வெற்றிக் கோப்பையை வாட்சனுக்குக் காட்டின..

அறிவியல் ஆராய்ச்சியைப் பொறுத்தமட்டிலும் விஞ்ஞானிகள் தங்கள் படைப்புகளை பகிர்தல் அவசியம். அவ்வாறு பகிரும் போது கண்டுபிடிப்பாளர்களுக்குரிய அங்கீகாரம் வழங்க வழிவகுக்க வேண்டும் யாருடைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பையோ தன்னுடையது என உரிமை கொண்டாடக்கூடாது. இதுவே அடிப்படை விதி.

அதை மீறி வாட்சனும் , கிர்க்கும் ரோஸலினை அங்கீகரிக்காமல் அவரது படைப்பை மட்டும் கொண்டு இரண்டாம் மாதிரியைப் படைத்தனர். அதை ரோஸலினை வைத்தே சரிபார்க்க வைத்தனர்.
அந்த ஆய்வினடிப்படையில் வெளியான கட்டுரைகள் தான் முதலில் நான் சொன்னது.

கண்டுபிடிப்பின் காரணகர்த்தாவான ரோஸலினின் கட்டுரை ஏதோ வடிவமைப்பை சரிபார்க்க மட்டுமேபயன்படுத்தப்பட்டது போல் தோற்றத்தை ஏற்படுத்தி நோபல் பரிசைத் தட்டிச் சென்றனர் வாட்ஸனும் கிர்க்கும்.

ரோஸலினுக்கு கிடைத்தது "டார்க் லேடி" என்ற சக ஆணாதிக்கவாதிகளின் பட்டப்பெயர் மட்டுமே.

முலம்: http://www.historycooperative.org/journals/ht/36.1/rapoport.html

நாடுகள் மாறலாம்.. கிண்டல்கள்!!

இன்று காலையில் பண்பலையில் கேட்ட செய்தி நன்றாக சிரிக்க வைத்தது..

அவங்கவங்க அடுத்த நாட்டைப் பற்றிக் கிண்டலடிக்கறதிலிருக்க சுகம் அனைத்து நாட்டினருக்கும் பொதுதான் போல...

இது அமரிக்காவின் கிண்டல் இங்கிலாந்தைப் பற்றி..

லண்டனில் ஜேப்படித் தொல்லை அதிகமாகி விட்டதாம்... போலீஸார் நேரில் திருடன் ஓடுவதைப் பார்த்தாலும் ஓடிப்போய் பிடிக்க முடியவில்லையாம்.. (இனி நம்ம ஊர் போலீசை யாராவது கிண்டல் பண்ணினீங்கன்னா பாருங்க..)

அதனால ரெம்ப யோசிச்சு சூப்பரா ஒரு ஐடியா பண்ணினாங்களாம் .. (அநேகமா பின்னால விசாரிச்ச போது..அந்த ஐடியாவைக் கொடுத்தது ..போலீஸ் உடையணிந்த திருடன்ன்னு கண்டு பிடிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..)

ஐடியா என்னன்னா.. ஸ்கேட்டிங் ஷூஸ்... ஆமாம் ..எல்லா ரோந்து போலீஸ் கால்லயும் சக்கரம் கட்ட சொன்னாங்களாம்..

அதுக்கு கொஞ்ச நாள் ட்ரெயினிங் வேற .. எல்லாம் முடிஞ்சு களத்தில் குதிச்சா .. அங்க அவங்களுக்கு பெரிய ஆப்பு !

திருடங்க இப்ப ரோட்ல ஓடாம ..புல் தரைல ஓடராங்களாம் உண்மைல நடந்தே போறாங்களாம்.. காலில் சக்கரத்தோடு போலீஸார் பாவமா முழிக்கறாங்களாம் ..

இத சொல்லி அமரிக்க ரேடியோ கேலி பண்ணுது .. இவங்களை பத்தி தெரியாதா.. இது ரெம்ப நாள் முன்னால கேட்ட ஜோக்..

அமரிக்கா காரங்க விண்வெளிக்கு போயி.. (ஸ்டுடியோ இல்லைங்க.. நெஜமான விண்வெளி) அங்க எதோ நோட்ஸ் எடுக்க ட்ரை பண்ணும் போது ... பேனா எழுதுலயாம் ..

என்னன்னு பார்த்தா .. விண்வெளில வாயு அழுத்தம் வேறு படரதுனாலன்னு கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிச்சாங்களாம்..

அப்புறம் .. இத சரி பண்ண ஒரு ஃபேமஸ் பேனா கம்பெனிக்கு நிறையா மில்லியன் கொடுத்து ஒரு புது டெக்னாலஜி பேனா .. விண்வெளில .. தண்ணீர்க்கடியில பயன்படுத்தறமாதிரி ஒரு சூப்பர் பேனா செஞ்சாங்களாம்.. மறக்காம பேட்டெண்ட் வேற பண்ணீட்டாங்க.. அதுல ரெம்ப கெட்டியாச்சே..

ஆனா ரெம்ப நாட்களும் காசும் செலவாகிடுச்சு..

அப்புறம் யோசிச்சாங்க.. அட நம்ம ரஸ்யாகாரங்க கூட விண்வெளிக்கு போயிருக்காங்களே.. அவங்க கிட்ட கொஞ்சம் ஷோ விடலாம் என அவங்க கிட்ட எல்லா பிரசண்டேஷ்ன்லாம் கொடுத்துட்டு பந்தாவா கேட்டாங்கலாம் ... ' நீங்க எப்பிடி நோட்ஸ் எடுக்கப் போறீங்க? வேனும்ன்னா இந்த டெக்னாலஜிய காசு கொடுத்து வாங்கிக்கங்க " ன்னு தூண்டில் போட்டதும் அவங்க சொன்ன பதில கேட்டு அமரிக்காக்காகாரங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சாம்..

என்ன சொல்லியிருப்பாங்க .. எனி கெஸ் ?

Wednesday, March 29, 2006

தடா முடா ராய்க்கல் .... மரம்புடிச்சு.

.. மசா பந்து ..தண்ணீர் தரை ..அடி ஜான்.. டாம் டூம் .. மேடு பள்ளம்.. உதவி.. கிராப் ..நொண்டி.. ஒளிஞ்ச விளையாட்டு.. ஏழு கல்.. குதிரை.. ராஜாராணீ .. ஒளிச்சுக முழிச்சுக .. தொட்டு விளையாட்டு .. கண்ணாமூச்சி .. கொல கொலயா.. சீட்டு (கல்) ..சீட்டு (அடிச்சு).. குண்டு .. பம்பரம் .. கில்லி .. பல்லாங்குழி.. அஞ்சுகல்.. தாயம். பரமபதம்..நம்பர் பார்த்து ... புக் க்ரிகெட்..

இந்த விளையாட்டுகளையெல்லாம் எத்தனை பேர் விளையாண்டிருக்குறீர்கள் என தெரியாது .. ஆனால் இது மாதிரி வேறு விளையாட்டுகள் .. வேறு பெயரில் விளையாண்டிருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தைப் பற்றி ரெம்ப யோசித்ததின் பக்கவிளைவு இது..

இப்போது பொடுசுகள் பெரும்பாலும் கார்ட்டூன் சேனலிலும் கம்ப்யூட்டர்/வீடியோ கேம்களிலும் அதிக நேரம் செலவிடுவதாகவே நினைக்கிறேன் .. கண்களைக் கெடுத்துக் கொண்டு உடல் பெருப்பதும் வாடிக்கையாகிவிட்டது..

வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் ஒரு விதத்தில் பத்து பதினைந்து வருடங்கள் முன்பிருந்த விளையாட்டுகள் இப்போது மறைந்தே விட்டன என நினைக்கிறேன்..

பழைய விளையாட்டுகள் பற்றி சில வரிகள் பகிர்ந்து கொள்கிறேன்.. நீங்கள் இதை வேறு பெயரில் கூட விளையாடியிருக்கலாம்..

மசா பந்து ..கொஞ்சம் டேஞ்சரஸ் தான் .. ரெண்டு டீம் . ஒரு டீம்ல குறைந்தது 4 பேர்.. பந்த எடுத்து அடுத்த டீம் மேல அடிக்கனும் .. ரெம்ப அடி படாதமாதிரியான பந்து தான்.. அந்த டீம் கைல பந்து கிடச்சுடுச்சுனா ..ஓடி ஒளிஞ்சு தப்பிக்கனும்


தண்ணீர் தரை .. ஒரு வட்டம் அது தான் தண்ணீர்.. வெளில தண்ணீர்... யாரு சிக்கியோ அவங்க தண்ணீர், தரை இல்லைன்னா தண்ணீர்த்தரை ( வட்டத்துல ஒரு கால் .வெளிய ஒரு கால்) ன்னு சொல்வாங்க ... அதுக்கு தகுந்த மாதிரி குதிக்கணும்.. மாறினா அந்த ஆள் சிக்கி..

அடி ஜான்.. கோலி குண்டோ .. கல்லோ .. யூஸ் பண்ணலாம் .. கால்ஃப் மாதிரி :) .. அடுத்தவன் கல்ல முதல்ல வீசிடுவான் .. ரெண்டாவது ஆள் அதை அடிக்க ட்ரை பண்ணலாம் .இல்லைன்னா அந்தக் கல்லுக்கு ஒரு ஜான் பக்கத்துல கொண்டு போய் நிருத்தி மறுபடியும் அடிக்க ட்ரை பண்ணலாம்.. எவ்வளவு தூரம் தள்ளீட்டு போறமொ அவ்வளவு தூரம் அந்த ஆள் நொண்டனும்

தடா முடா ராய்க்கல்... கொஞ்சம் ஜாக்கிரதையா விளையாடனும்.. ஆளுக்கொரு குச்சி வச்சிருக்கனும்.. யார் சிக்கியோ அவங்க குச்சி கீழ கிடக்கும் .. அடுத்தவங்க அவங்க குச்சிய எதாவது கல் மேல ஊன்றி இருக்கனும் . .. சிக்கியான ஆள் ஏமாறும் போது அவன் குச்சிய தள்ளிவிடனும்.. தள்ள ட்ரை பண்ணும் போது தொட்டு விட்டால் அவுட்..

மரம் புடிச்சு .. தென்னந் தோப்பு என்றால் .. மரமே . இல்லைன்னா .. ஜன்னல் தான் மரம் ... இத விளையாட அருகருகே ஜன்னல் இருக்கும் வீடுகள் வேண்டும்..

டாம் டூம் .. யாரது ... பேயது .என்ன வேண்டும்... நகை வேண்டும் .. என்ன நகை .. கலர் நகை... என்ன கலர்? . இந்த கேள்விக்கு சிக்கியானவன் எதாவது ஒரு கலர சொல்லீட்டு தொட ஒடி வருவான் ... அவன் வர்ரதுக்குள்ள அந்த கலரைத் தொட்டுடனும் ....

புக் கிரிக்கெட் ....க்ரூப் ஸ்டடில இத விளையாடத ஆளுயாராவது இருப்பாங்களா என்ன ;)

மேடு பள்ளம்.. இது தண்ணீர் தரை மாதிரியே ... நீண்ட திண்ணை இருக்கும் போது விளையாடலாம்...

உதவி.. கிராப் ..நொண்டி.. ஒளிஞ்ச விளையாட்டு.. ஏழு கல்.. குதிரை.. ராஜாராணீ .. ஒளிச்சுக முழிச்சுக .. தொட்டு விளையாட்டு .. கண்ணாமூச்சி .. கொல கொலயா.. சீட்டு (கல்) ..சீட்டு (அடிச்சு).. குண்டு .. பம்பரம் .. கில்லி .. பல்லாங்குழி.. அஞ்சுகல்.. தாயம். பரமபதம்..நம்பர் பார்த்து ... இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச விளையாட்டுத் தானே..

உங்க வீட்டு பொடுசுகளுக்கும் சொல்லிக் கொடுத்து விளையாட வைங்க.. :)

Tuesday, March 28, 2006

பிண்ணனி இசையற்று இனிக்கும் சில பாடல்கள் (ஒலி வடிவில்)

நிலாவே வா...

அன்பென்ற மழையிலே..

பூவே பூச்சூடவா ..

இந்தப் பாடல்கள் என் தங்கை ஆர்த்தி பாடியது.

நான் பாடி கேட்டுத் தான் ஆகனும் என அடம்பிடித்தால் யார் காப்பாற்றமுடியும் உங்களை.
இதோ இங்கே கிளிக்குங்கள். அன்று கொஞ்சம் வாய்ஸ் சரியில்லை ..அனுசரித்துக் கொள்ளுங்கள்.


சுகா

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 6 (விடை)

கேள்வி இங்கே


அஜித் , விஜயைப் பார்த்து "நீ வேணும்ன்னா என்ன பின்னால இருந்து அடிச்சிருக்கலாம் .. ஆனா உன் மவுஸு எங்கிட்ட வந்துடுச்சு பார்த்தியா ! ?? !"

விஜய் "!!!??.. ஏன் இப்பிடி ஆயிடுச்சு இவருக்கு" என யோசித்துக் கொண்டே ..சரி எதுக்கும் எதாவது பதிலுக்கு பேசி வைப்போம் .. நம்ம படத்துலயெல்லாம் தேவப் பட்டா பேசுறோம் " மவுஸு உங்கட்ட இருக்குங்க்றக்காக ரெம்ப ரவுஸு விடாத ... ஆடியன்ஸு எப்பவும் எனக்குத்தான் ..." என அங்கே இல்லாத கேமராவை பழக்கதோசத்தில் தேட

ஒளிந்திருந்து கேட்ட கவுண்ட்ஸின் காதில் ரத்தம் வந்து கொண்டிருந்தது.

சென்னைத் தொலைக்காட்சி நிலையம்

கொஞ்ச நாள் முன்பு என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு போயிருந்தபோது HDTV யில் இரண்டு வெவ்வேறு சேனல்கள் ஒடிக்கொண்டிருந்தது... கொஞ்சநேரம் ரசித்துவிட்டு ..பின் வீட்டுக்கு வரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன்.. அந்தகாலத்துல (!) முதல் தடவையா டீவி வாங்கியது நியாபகம் வந்தது.. . அப்புறம் என்ன..மலரும் நினைவுகள் தான்..

சின்ன வயதில் சேட்டிலைட் டீ.வி இல்லாமல் போனது தான் எவ்வளவு சந்தோசம் என இப்போ நினைக்க முடிகிறது.. மாநில மொழித்திரைப்படங்களின் வரிசையில் பல மாதங்களுக்கொரு முறை தமிழ்ப் படம் .. அதற்கிருக்கும் வரவேற்பே தனிதான்..

நாங்கள் டீவி வாங்கியபோது சென்னைத்தொலைக்காட்சி நிலையம் ஆரம்பித்த புதிது.. டீவி வந்த முதல் நாளே ..'முதல் மரியாதை' (மாநில மொழி வரிசையில்)..'சாது மிரண்டால்' என இரண்டு படங்கள்.. செம லக்கி.. எங்க முதல் டீவி பேரு என்ஃபீல்ட்.. அது புல்லட் சைஸ்லதான் இருக்கும் .. நல்ல டீவி..என்ன..அப்பப்ப கொஞ்ச்சம் உதைக்க வேண்டி இருக்கும் ..

சித்ரமாலா ன்னு ஒரு ப்ரோகிராம்ல வர்ர ஒரு தமிழ் பாட்டுக்காக அத்தனை மொழிப் பாட்டையும் பொறுமையா பார்க்க வேண்டி இருந்தது.. இப்ப 5 செகண்ட் எதும் நல்லா இல்லைன்னா .. இருக்கவே இருக்கு ரிமோட்...

ஒலியும் ஒளியும் போடர டைம்ல வீட்டுல நடக்க இடம் இருக்காது..ஊர் பொடுசுக வீட்டுக்குள்ள நிறைஞ்சிருக்கும்.. இப்ப ம்யூசிக்குக்கு தனி சேனலே இருக்கு.. அதுல வேற "டெடிக்கேஸ்னே டெடிக்க்கேஸன் " தான்..

" ஹலோ ... நான் கருமத்தம்பட்டீலிருந்து ராமசாமி பேசுறேன் ... ஒரு பாட்டு டெடிகேட்டு பண்ணனும்... யாருக்கா? ....என் பையன் ..மெட்ராஸ்ல வேலைல இருக்கான்..அவனுக்கு தான்..... இந்த "ஏன் பிறந்தாய் மகனே" பாட்டு போடுங்க.. அவனுக்கு ரெம்ப பிடிக்கும் "

இதைக் கேட்ட பின் தான் பையனுக்கு அனுப்ப மறந்த மணியார்டர் நியாபகம் வரும்..

மணியார்டரை அனுப்புன பிறகு 'கேட்டதும் கொடுப்பவனே..கிருஷ்ணா கிருஷ்ணா.." என டெடிகேட் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை..

காம்பயர்கள் வேறு சில சமயம் என்ன பேசுவது எனத் தெரியாமல் எதயாவது கேட்டுவிட்டு பாவமாக சமாளிப்பார்கள்..

"ஹலோ .. இப்ப பேசுறது யாரு ?"

"சித்ரா"

"இதுக்கு முன்னால பேசுனது ...யாரு?"

"எங்க அண்ணி.."

" அப்புறம் ..சொல்லுங்க சித்ரா.. நீங்க வீட்டுல ஒரே பொண்ணா..?"

"அதிருக்கட்டும் ... நீங்க தான் இப்ப ஸ்டேஸன்ல இருக்கற ஒரே லூஸா ? எங்க அண்ணி கூட பேசீட்டு ஒரே பொண்ணான்னு கேக்குறீங்கே..அண்ணன் இல்லாம அண்ணி யெப்படி.. ஹிஹீ.. "

"ஹீ ஹீ .. அது வந்து .." ( மனதிற்குள் .."யாருப்பா அங்கே..கால கட் பண்ணு.ப்ளீஸ்.")

"நேயர்களே .. அந்தத கால் கட்டானதினால .. அவங்களுக்கு பிடிச்ச பாட்டு உங்களுக்காக"

அப்புறம் கைப்புள்ள மாதிரி புலம்புவார்கள் என நினைக்கிறேன் "எத்தனை .. நேரந்தான் போரடிக்காத மாதிரியே மூஞ்சிய வெச்சிக்கிறது... கொஞ்சம் பேசி முடிஞ்சதும் பாட்டை கேட்குறானே ...வெச்சிடுவான்னு நெனச்சேன் .. அவன் என்னடான்னா .. பக்கத்துல இருந்த அண்ணன் கிட்ட கொடுக்க .. பதனஞ்சு நிமிஷம் ..அறு அறு ன்னு அறுத்தான் ... அறுத்துட்டுப் போங்கடான்னு விட்டுட்டேன்.."

டைரக்டர் " என்னது விட்டுட்டியா.."

"ஊஊம் .. ஆமாம் .. அறுக்கும் போது ஒருத்தன் சொன்னான் .. எவ்வளவு அறுத்தாலும் போரடிக்காதமாதிரி ..சிரிச்சுட்டே இருக்கா .. இவ ரெம்ப நல்லவவவவவ...ன்னு சொன்னான்"


இன்னொரு விஷயம்.. யாராவது தேசியத் தலைவர்கள் மறைந்து விட்டால் ஊரே சோகத்திலிருக்கும்.. அதிலும் அவர் மறைந்தது வெள்ளி சனி யென்றால் அளவு கடந்த சோகம் தான்.. சென்னைத் மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதால் கூடுதம் துக்கம்.. வயலின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என நினைக்கிறேன்.. 24 மணி நேரமிம் மூன்று நாட்களுக்கு அதேதான்..

சென்னைத் தொலைக்காட்சி நிறுவனத்தின் நாடகங்கள்.. கண்டிப்பாக இப்பத்தைய மெகாசீரியல்களுக்கு பரவாயில்லை... என்ன .. ஒரே செட் .. ஒவ்வொரு ஆயுத பூஜைக்கும் லைட்டாக டச்சப் செய்வார்கள் ..மற்றபடி பரவாயில்லை தான்.

இப்போது உள்ள மெகாசீரியல்கள் போல் "அந்நிநியாத்துக்கு அப்பாவி, எதையும் தாங்கும் இதையம், சகுனி கத்துக்கொள்ள வேண்டிய அளவிற்கு சூழ்ச்சி செய்யும் வில்லி/வில்லன்" என்ற பாத்திரங்களை மட்டும் கொண்டதில்லையே.. என்ன நன்மை இருக்கிறதோ இல்லையோ கிளிசரின் ஃபேக்ட்ரிக்கு மட்டும் கொண்டாட்டம் தான்..

பரமார்த்த குரு கதைகள், சிலந்தி வலை, லேடீஸ் ஹாஸ்டல், ஜீபூம்பா என பல நல்ல நாடகங்களுமிருந்தது. பாலச்சந்தரின் நாடகம் "இந்த வீணைக்குத் தெரியாது .. அதை செய்தவன் யாரென்று" என்று டைட்டில் பாடல் கூட வரும்.. பெயர் மறந்துவிட்டது .. அதுவும் நல்ல நாடகம் தான்..

வயலும் வாழ்வும், மனைமாட்சி, கொஞ்சம் நில்லுங்கள் ..உழைப்பவர் உலகம் ..இதில் முன்னோட்டத்தில் அடுத்தவார திரைப்படப் பேரைச் சொல்லுவார்களெனப் பார்த்தால் ..அதற்கு முந்தைய வாரம் எதோ "ஹாலிவுட் படம்" போட்டது போல "அடுத்த வாரம் ஞாயிறு 5 மணிக்கு தமிழ் திரைப்படம்" என்று முடிப்பர்.. வெட்டியாக போய்விடும்..

பின் கேவிள் டீவி வந்தது.. தினம் ஒரு தமிழ் பட கேசட் போட்டு குஷிப்படுத்தினார்கள்.. பின் மாலையில் மட்டும் "சன் டீவியின் தமிழ் மாலை" வந்தது..

மெல்ல மெல்ல வளந்து இப்பொது விஸ்வரூபமெடுத்து வாழ்க்கையில் பெரும்பங்காகிவிட்டது..

Monday, March 27, 2006

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 6

கொஞ்ச நாட்களுக்கு முன்பு எழுதியது.. இப்போது தொடர்கிறேன்.

முந்தைய பாகங்கள் : ஒன்று , இரண்டு , மூன்று , நான்கு, ஐந்து
======================

டெனிஸில் காபி குடித்து விட்டு ஆபீஸுக்குள் நுழையும் போது மாலை 5 மணி ஆகியிருந்தது.

கவுண்டமணியும் செந்திலும் ராமராஜனிடம் குழைந்து குழைந்து பேசிக் கொண்டிருந்தார்கள்."என்னமோ போப்பா.. எப்பிடித் தான் இப்பிடியெல்லாம் டிசைன் பன்னறியோ.. அதுலயும் இன்னிக்கு மீட்டிங்ல போட்டியே ஒரு ஸ்லைடு அடடடடா..ஸ்லைடுன்னா அது ஸ்லைடு...சும்மா மஞ்சக் கலர்ல ஜிகு ஜிகுன்னு...ஹும்.. மத்த பயலுகளும் வெச்சிருக்கானுகளே ஸ்லைடுன்னு.. செத்தவங் கையில வெத்தலைய குடுத்த மாதிரி..." என்ற படி செந்தில் பக்கம் திரும்பி

" என்றா சொல்ற மண்டையா..?" எனக் கேட்க"அக்காம்ணே .. அண்ணன் ஸ்லைடு மாதிரி வருமா.." என செந்திலும் ஒத்து ஊதினார்..

" உங்குளுக்கு புரியுது.. புரிய வேண்டியவங்களுக்கு புரியலையே... அது சரீ... என்ன என்னைக்குமில்லாத திருநாளா ரெண்டு பேரும் ஜோடியா வந்து ஒரேடியா ஐஸ் வைக்கறீங்க... என்ன விஷயம்..." ராமராஜன்"

அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா... இந்த மண்டையன் என் சைக்கில ஓசி வாங்கீட்டுப் போயி முல்லுமேல உட்டு பஞ்சர் பண்ணீட்டு வந்துட்டான் ...அதான் இன்னைக்கு ஒரு நாளைக்கு வீட்டுல ட்ராப் பண்ணீட்டேன்னா உனக்கு புண்ணியமாப் போகும்.." கவுண்டமணி முடிக்க

"அக்காம்ணே.." அன அனத்தினார் செந்தில்கவுண்டமணி செந்தில் பக்கம் திரும்பி .." என்ன ஒக்காம்ணே... பண்றதயும் பண்ணீ போட்டு.. அக்காம்ணே ... அக்காம்ணே ன்னு முக்கீட்டு இருக்கே... உன்னால நான் பாரு எப்பிடிக் கெஞ்சீட்டிருக்கேன்னு.."

ராமராஜன் " சரி சரி உடுங்க .. மானஸ்தனத் திட்டாதீங்க....அப்புறம்...வக்கிப்புல்லு விக்கற வெலைக்கு வீட்டுக்கெல்லாம் வந்து உடமுடியாது... போற வழில எங்காவது இறக்கிவிடுறேன்.. அப்பிடியே நடந்து போய்க்கங்க.."

கவுண்டமணி மனதிற்குள் "எப்பிடியும் இன்னமும் கொஞ்சம் ஐஸ் வச்சு வீட்டு வரைக்கும் போயிடலாம்" என நினைத்து "நீங்க எப்பிடி சொன்னாலும் ஓகே தானுங் தம்பி" என்று கூறி அங்கிருந்து கிளம்பினார்கள்.

எதிரே சுந்தர்ராஜனும் சத்யராஜும் வர சுந்தர்ராஜனை ஓரக்கன்ணால் பார்த்துவிட்டு சத்யராஜை நோக்கி " ஏங்க பிரதர்... எங்களயெல்லாம் காபி குடிக்க கூப்புட மாட்டீங்குளா... தண்ணியடிச்சுட்டு சைதைத் தமிழரசிக்காக ஊர்கடையெல்லாம் ஒரு வழி பண்றதுக்குனா மட்டும் நாங்க வேணும்... இதுக்கெல்லாம் மீட்டிங்ல கவுந்தடிச்சுட்டு தூங்குற ஆளத் தான் கூப்புட்டுட்டு போவீங்களா.."

சுந்தர்ராஜன் முறைத்துக்கொண்டே அங்கிருந்து நகர " அப்பிடியெல்லாம் இல்ல பிரதர் .. சுகன்யா டீச்சர் இந்த ஆளு வீட்டுக்கு பக்கத்து வீடு.. அதுகட்ட ஜாவா கத்துக்க ஒரு அறிமுகம் வேணும்ன்னு தான்.."

'அடங் கொண்ணியா .. ஜாவா கத்துக்கிற மூஞ்சியப் பாரு... நீ என்ன கத்துக்கப்போறீயோ இல்லியோ.. அது இப்ப கராத்தே கத்து வெச்சிருக்குது தெரிஞ்சுக்கோ.."

அதற்குள் ராமராஜன் கையில் சாட்டையும் பால்கேனுமாய் வந்து கவுண்ட்ஸின் கையில் திணித்து " ஃபாலோ மீ" என சொல்லி விட்டு வேகமாக முன்னே நடக்க...

கவுண்ட்ஸ் ஸ்லோ மோஷனில் செந்தில் பக்கம் திரும்பி முறைக்க, செந்தில் புரிந்து கொண்டு பவ்யமாக அந்த பால்கேனை வாங்கிக் கொண்டு முன்னால் நடந்தார்.

கவுண்ட்ஸும் " வர்றெம் பா" என சத்யராஜிடம் டாடா காட்டிவிட்டு பின்னாலேயே போனார்.

பார்க்கிங்லாட்டில் ராமராஜனின் வண்டியில் கோவை சரளா அமர்ந்திருந்தது கொஞ்ச தூரத்திலேயே தெரிந்தது...செந்தில் " யக்கா.." என ஓட முயல கவுண்டமணி செந்தில் சட்டையைக் கொத்தாகப் பற்றி "அடடா.. பாசப்பறவைக தாம்போ... கொஞ்சம் அடங்கு" என்று சொல்லி ராமராஜனுக்கு ஐஸ் வைப்பதற்காக

" ஹோய் ..தம்பியோட புது வண்டில எதுக்கு உக்கார்ந்து அழுக்கு பண்ணுற..ஓடிப்போ" எனக் கத்த

"உக்கும் .. ஒசில சவாரிக்கு வந்துட்டு பேசற பேச்சப் பாரு.. நான் எதுக்கு உக்கார்ந்துட்டிருக்கேன்னு அவரயே கேளு" என ராமராஜனைக் காட்டிவிட்டு கழுத்தை ஒடித்துத் திருப்பிக்கொள்ள

" ஏண்ணே.. வாயக்குடுத்து வாங்கிக்கட்டிக்கிறீங்க.. நாங்க சித்திரகனிக்கு கரகாட்டம் ஆட பெர்க்ளி ஸ்டூடண்ஸ்க்கு ட்ரெயினிங் குடுக்கத் தான் சேர்ந்து போறோம்" ராமராஜன்


"இல்லப்பா .. இந்த வண்டி மண்டையன் அந்த அம்முணி நீயு நான்.. இந்தக் காம்பினேஷன் பிரச்சனையாவே இருக்குமேன்னு யோசிக்கறேன்.."

'அதெல்லாமொன்னுமுல்ல கம்முனு வாங்க ' என வண்டியை ஸ்டார்ட்! செய்து ' இந்தாடி கப்பக் கெழங்கே..' பாட்டை சத்தமாக வைத்து ஓட்ட ஆரம்பித்தார்... ' ஐத்தலக்கா ஐத்தலக்கா ஐத்தலக்கா ஐ' என குஷியாய் கூடவே பாடிக்கொண்டி வந்தவர்கள்

" என்னண்ணே ..ரோட்டுல டயர் ஒண்ணு ஓடீட்டிருக்கு" என செந்திலின் அலறல் கேட்டு என்னவென்று பார்ப்பதற்குள் வண்டி குடை சாய்ந்தது..

"நான் அப்பவே சொன்னேனேப்பா.. " எனக் கதறிக் கொண்டே கீழேவிழுந்தார் கவுண்ட்ஸ்.

சில நாட்களுக்குப் பிறகு...தன் க்யூபில் அமர்ந்து மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தார் கவுண்டமணி.

செந்தில் அந்தப்பக்கம் வர " டே தம்பி ..இங்க வாப்பா.." என அழைக்க .."என்ன இன்னைக்கு ஒரே கொஞ்சலா இருக்கு" என நினைத்துக் கொண்டே " என்னண்ணே.. " எனக் கேட்டுக்கொண்டே வர..

"அட .. ஒண்ணுமில்லப்பா ... இந்தா இங்க இருக்கற புது சிஸ்டமெல்லாம் கொண்டு போயி லேப் ல வெச்சுட்டு வந்துடு ..செரியா..' எனக் கொஞ்ச செந்திலும் உள்ளே இருந்த ஸிஸ்டத்தை தாவிக் கொண்டு க்யூபை விட்டு நகர்ந்தார்..

செந்தில் வெளியே சிறிது தூரம் போயிருந்த நிலையில் க்யூபை விட்டு எட்டிப் பார்த்து.." தம்பீ .. அப்பிடியே அந்த லேப்ல தேவையில்லாம எதாவது லைட் எரிஞ்சாலும் ஆஃப் பண்ணீட்டு வந்துடும்மா.. கரண்ட் பில் கட்டியே இந்த க்வாட்டர் போனஸ் போயிடும்பா.." என பவ்யமாகக் கூற..

"சேரிண்ணே.." என நல்ல பையனாக லேப்க்கு விரைந்தார்.கொஞ்ச நேரம் போனது.

அஜித் மாட்யூலும் விஜய் மாட்யூல்லயும் யெப்பவும் ப்ரச்சினைதான்.. ரெண்டும் இண்டகரேட்டே ஆகமாடீங்குதே ..என தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தார் கவுண்டமணி.

தப தப என ஆட்கள் ஓடி வரும் சத்தம் கேட்க .. க்யூபிற்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். செந்திலை, வடிவேலுவும் இன்னும் சிலரும் அடிப்பதற்கு துரத்திக் கொண்டு வந்தனர். டக்கென க்யூபை விட்டு எழுந்து அவர்களைத் தடுத்து

"அட கொழந்தப் பயனப் போட்டு ஏம்பா இப்பிடி தொரத்தீட்டு வர்ரீங்க" என அடைக்கலம் கொடுக்க..

வடிவேலு.. " என்னது .. இவனா கொழந்தப் பயன் .. இவனேனே... " என அடிக்க முயல லாவகமாக விலக்கினார் கவுண்ட்ஸ்.

"ஏய் .. இங்க நான் இருக்கும் போது அவனை அடிக்க மத்தவங்கள விடுவனா.." என முறைக்க செந்தில் " என்ன இது டபுள் மீனிங்ல பேசறாரு" என திருதிருவென முழித்தார்.

ஒருவழியாக வடிவேலுவை அனுப்பி வைத்துவிட்டு " என்றா பன்னுன... அவனே ஒரு டென்ஸன் பார்ட்டி அவன்கிட்ட போயி என்னத்தடா பண்னினே.."

"இல்லண்ணே .. நீங்க லேப்ல சிஸ்டத்தை வெக்க சொன்னீங்களா... " என இழுக்க

"கீழ கீது போட்டு ஒடச்சிட்டையா .." என அலற

'இல்லண்ணே ... பத்திரமாத் தான் வெச்சேன்... அப்புறமென்ன சொன்னீங்க" செந்தில்

"என்றா சொன்னேன்" கவுண்ட்ஸ்

"சும்மா எரியற லைட்டெல்லாம் ஆஃப் பண்ண சொன்னீங்கல்ல.."

'ஆமா .. அதிலென்னடா பிரச்சினை... "

"நானும் எல்லா ட்யூப் லைட்டையும் ஆஃப் பண்ணினேன்... கெளம்பலாம்ன்னு பார்த்தா.. லேப் முழுக்க சின்ன சின்ன டிஸ்கோ லைட்ட போட்டு வெச்சிருந்தாங்க ... அது எதுக்கு தண்டத்துக்குன்னு அதையும் ஆஃப் பண்ணீட்டு வந்தா ... வெளிய வரும் போது பார்த்த கைப்புள்ள அடிக்க வந்துட்டான்..."

" டே .. இரு இரு ...லேப் ல எதுக்குடா டிஸ்கோ லைட்டு போட்டு வெச்சிருந்தான் அவன்... அவன் ரவுசு தாங்கலடா... "

" ஆமாண்ணே ... அதுலயும் பாருங்க ... அழகா நம்மூருல கயிறு மாதிரி இருக்குமில்லனே... இந்தப் பய பாருங்க ..டப்பா டப்பா வா வாங்கி வெச்சிருக்கான் ... அதுல வேற ஏதோ சிஸ்கோ , இண்டெல் ன்னு எழுதியிருக்கு .. ஹீ ஹீ ஹீ" என சிரிக்க

கவுண்ட்ஸ்க்கு ஒரு நிமிஷம் மயக்கமே வந்துவிட்டது ...நா தழுதழுக்க ' டே மண்டையா .... உனக்கு என்ன பாவம்டா பண்ணினேன்...ஏண்டா இப்பிடி சோதிக்கற.... ரவுட்டர் சர்வர்லாம் உனக்கு டிஸ்கோ லைட்டாடா... " என அருகிலிருந்த மவுஸை எடுத்து அடிக்க முயலநழுவி

" நீங்க தானே .. எரியர லைட்டயெல்லாம் அணைக்கச் சொன்னீங்க" என கத்திக் கொண்டே தப்பியோட

கவுண்ட்ஸ் எரிந்த மவுஸ் மிகச் சரியாக அந்த நடந்து போய்க் கொண்டிருந்த அஜித் தலையில் லேண்ட் ஆனது..

இதைப்பார்த்த கவுண்ட்ஸ் ஒரு க்யூபில் மறைவாக பதுங்க..

அஜித் ஸ்லோமோஷனில் திரும்ப

அங்கே தூரத்தில் சிரித்த படி விஜய் கையில் கீபோர்டுடன் வந்து கொண்டிருந்தார்.

பக்கத்தில் வந்ததும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு அஜித் விஜையை ஒரு கேள்வி கேக்க ... ஆடியன்ஸோடு கவுண்ட்ஸ் டென்சனாகிவிட்டார்...

என்ன கேள்வி என சிறப்பாக கெஸ் பண்ணுபவர்களுக்கு பரிசு :)

Sunday, March 26, 2006

யாரோ .. யார் யாரோ..

யாரோ ..யார் யாரோ வந்து நமது பதிவைப் பார்க்கிறார்கள்.. கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்.. புதிதாகவும் பதிவிடுகிறார்கள் .. அனைவரைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாகத்தான் இருக்கிறது.. இந்த ஆவலைத் தீர்த்து வைக்குமிடமாகவே இந்த தமிழ்மணத்தின் நட்சத்திர இடம் இருக்கிறது என நினைக்கிறேன்..


இந்த வாரம் தமிழ்மண விண்ணோக்கி என் பக்கம் பார்த்திருக்கிறது... எனக்கு சந்தோஷம் தான்.. உங்களுக்கு எப்படியோ ? என்னைப் பொறுத்தவரை வலைஞர்கள் அனைவருமே சந்தோஷத்தையே அளிக்கிறார்கள் . பலர் வலைப்பதிவிடும் போது.. சிலர் வலைப்பதிவிடாத போது...


மேடையில் சும்மா அமர்வதே ஒரு குடைச்சல் .. அதுவும் பேச வேண்டுமென்றால் ... அதிலும் தலைப்பே எதுமின்றி பேச வேண்டுமென்றால்?
சரி .... எப்படியும் கொஞ்சமாவது படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்க, முடிந்தவரை முயலவேண்டியது தான் ... முயற்சி தானே வாழ்க்கை..
இருந்தாலும் இந்த பதிவு மட்டும் கொஞ்சம் சொந்தக்கதை.. ;)




நான்கரை ஆண்டுகளிலேயே என் தொந்தரவு தாங்க முடியாமல் பள்ளியில் சேர்க்க .. பத்தாண்டுகள் இராஜலக்ஷ்மி உயர்நிலைப் பள்ளியில் படிப்பு... கோவை திருச்சி சாலையில் உள்ள இந்தப் பள்ளி பாரம்பரியம் மிக்கது ... என் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் தான் .. என் தந்தைக்கும் ... என் தங்கைக்கும் ... கடைசி வரை அவர் பாஸ் செய்யவே இல்லை (Just kidding .. அருமையான ஆசிரியர்) 94 இல் பத்தாவது முடித்தபிறகு இன்றும் கோவை செல்லும் போது ஆசிரியர்களை சந்திப்பேன் .. கற்றுக் கொள்ள வேண்டியது மட்டும் என்றும் தீராது போல..
(இந்த பதிவு மூலம் முன்னாள் மாணவர்கள் தொடர்பு கிடைத்தால் மகிழ்ச்சி)

என் ஓவிய ஆர்வத்திற்கு வித்திட்டவர் சாலமன் என்ற ஆசிரியர். ஓவிய வகுப்புகளுக்கு நாங்கள் அதிகம் பயப்படுவோம்... கலர் பாக்ஸ் , ப்ரஸ் கொண்டு வரவில்லை எனில் மண்டி தான் :( அவர் எனது முதல் Inspiration.. ஆனால் இதற்கு மற்ற பாடங்களுக்கு இணையான முக்கியத்துவம் தரப் பட்டது... அதே போல் ஆறாம் வகுப்பிலிருந்தே வாழ்க்கைக் கல்வி(Life Oriented Education) என்ற வகுப்பில் மர வேலை செய்ய சொல்லிக் கொடுத்தனர்... இன்று நினைத்துப் பார்த்தால் அந்த வகுப்புகள் எவ்வளவு முக்கியமெனப் படுகிறது.. எனக்குத் தெரிந்து இப்போதெல்லாம் பொதுத்தேர்விற்கு மட்டும் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. கொஞ்சம் இந்த விஷயங்களுக்கும் முக்கியத்துவம் தந்தால் பிற்காலத்தில் சிறிது நல்ல உபயோகமாக இருக்கும்.. ஓவியம் வரையதே மனத்திற்கு இதமானது தான் ... வண்ணக் கலவைகளும் தூரிகைகளின் வெவ்வேறு patternகளும் ஒருவித போதைதான் :)

பெரிய வசதியான பள்ளிகளில் படிப்பதை விட மற்ற பள்ளிகளில் படிப்பது, படிப்பைத் தவிர பல விஷயங்களைக் கற்றுத் தருவதாகவே உணர்கிறேன். ஆசிரியர்களைத் தவிர வேறு வேலைக்கு ஆட்கள் குறைவாக இருப்பதால், மாணவர்களே செய்ய வேண்டிவரும்.. சுதந்திர தின, குடியரசு தின, ஆண்டு விழா, விளையாட்டு விழாவின் பொறுப்புகள் வழக்கமான படிப்புச்சுமைக்கு நல்ல மாற்று மருந்து.. ஓடியாடி வேலை செய்யும் போது இருக்கும் பரபரப்பும் , மாலையில் எல்லாம் ஓய்ந்த பிறகு இருக்கும் களைப்பும் சுகமே... பின்னாட்களில் மென்பொருள் துறை தான்கதியென முன்பே தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் வேலை அதிகம் செய்திருக்கலாம் ... :)

பள்ளி, கல்லூரி முடித்து சென்னைக்கு முதல் வேலைக்கு வந்தது கொஞ்சம் நெர்வஸான அனுபவம். தனியே முதலில் ரயிலில் பயணம் செய்து வீட்டில் போட்டுக் கொடுத்த மேப் படி சென்ட்ரலிலிருந்து சஃப் வே வழியே வெளியே வந்து வா.ஊ.சி நகர் போக பஸ்டேண்டிற்கு வந்த போது 71 அங்கே நிற்குமா என சந்தேகம். யாரைக் கேட்கலாம் என யோசித்து டீசண்டாக உடையணிந்த ஒருவரிடம் "எங்க .. இங்க 71 நிக்குங்களா" என்ற போது அவர் தமிழில் முதல் முறையாக 'ங்' என்ற எழுத்தை கேட்பவர் போல் மேலும் கீழும் பார்த்துவிட்டு 'ம்' என்றார்.. டக் கென 71 வர அதை நோக்கி நகர " அத்து செவன் ஜே பா" என்றார்...ஹீ ஹீ என வழிந்தாலும் அவர் கேட்காமலே உதவியதால் உடனே சென்னையை பிடித்துப் போயிற்று.

அண்ணாநகர், வெஸ்ட் மாம்பலம் அப்புறம் கோயம்பேடு கேம்ஸ் வில்லேஜ் என நான்காண்டுகளில் மூன்று மாற்றங்கள்.. எங்கே மாறினாலும் மாறாதது சரவணபவன் சாப்பாடு .. "நீங்க புதுசுங்களா" என சர்வர்களைப் பார்த்துக் கேட்குமளவிற்கு அடிக்கடி விசிட். வெஸ்ட் மாம்பலத்தில் கவனித்தது ..மாடுகளுக்குத் தான் ரைட் ஆஃப் வே போல... ராமராஜன் இங்கே இருந்திருப்பாரோ !!

கொஞ்ச நாள் பெங்களூர் வாசம், பின் இங்கே கலிஃபோர்னியாவின் சேன் உஸேவிலிருந்து ஸ்காட்ஸ் வேலிக்கு ஹைவே 17 ஐ தேய்க்கிறேன். அருமையான இயற்கை எழில் கொஞ்சும் சாலை. வளைவுகள் கொஞ்சம் அதிகம்.. வண்டி ஓட்டும் போது இயற்கையை ரசிக்க முடியாது.. சாலையில் அதிக கவனம் தேவை..

'வானம் எனக்கொரு போதிமரம்' என்பது வெகு உண்மை .. உலகின் சிறந்த ஒவியர் வானமென்பதை நிரூபிக்கும் விதத்தில் இங்கே தினம் தினம் மேகத்தின் ரசிக்கும்படியான பல pattern கள் இங்கே .. சில வளைவுகளின் பள்ளத்தாக்குகளைப் பார்த்தால் காலடியே மேகங்கள் படர்ந்திருப்பதைக் காணலாம்.. கொடைக்கானல் போலிருக்கும்

இப்போதைக்கு இவ்வளவே .. இந்த வாரம் இனிய வாரமாகட்டும்.

வாழ்த்துக்கள்,

சுகா

(கொஞ்சம் சொற்களுக்கு தமிழ் வார்த்தை தட்டுப்படவில்லை.. மன்னிக்கவும்.. உங்களுக்கு தெரிந்து, தெரிவித்தால் மகிழ்ச்சி)

Monday, March 13, 2006

விநாச காலே விபரீத 'பக்தி' !?!

இன்னுமொரு நகைச்சுவை செய்தி

http://dailythanthi.com/article.asp?NewsID=244791&disdate=3/13/2006&advt=2

//
கோவை அருகே பரபரப்புவிநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழுவதாக பரபரப்புபக்தர்கள் திரளாக வந்து தரிசனம்
துடியலூர்,மார்ச்.13-
கோவை அருகே விநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழுவதாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரளான விநாயகர் பக்தர்கள் அங்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்கள்.
விநாயகர் சிலை
கோவையை அடுத்த துடியலூர் சேரன் காலனியை சேர்ந்தவர் ராஜன். இவர் பெட்டிக்கடை நடத்துகிறார். இவரது மனைவி மாலினி. இவர் புத்தக கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராஜனும், மாலினியும் சேர்ந்து ஒரு மாதத்துக்கு முன்பு எருக்கம்பூ தண்டை வைத்து புதிய விநாயகர் சிலை ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
மாலினி ஆஞ்சநேயர் வழிபாட்டில் தீவிரம் கொண்டவர். அவர் தினமும் ஆஞ்சநேயருக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் ஆஞ்சநேயர் படத்துக்கு அருகில் இருந்த விநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழுந்து கிடந்ததை மாலினி பார்த்தார். விநாயகர் சிலைக்கு மேலே எப்படி திருநீர் விழுகிறது என்று அதிர்ச்சியடைந்த மாலினி உடனடியாக விநாயகர் சிலையை சுற்றி விழுந்து கிடந்த திருநீரை அகற்றினார்.
திருநீர் விழுந்ததாக பரபரப்பு
அதன்பிறகும் சில மணி நேரத்திற்குள்ளாகவே மீண்டும் விநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழுந்து கிடந்தது. இதைப்பார்த்ததும் மாலினி தனது கணவர் ராஜனிடம் நடந்ததை சொன்னார். இருவரும் ஆச்சரியப்பட்டனர். இதையடுத்து எருக்கம்பூ விநாயகருக்கு இருவரும் பூஜைகள் செய்தனர்.
விநாயகர் சிலையில் இருந்து திருநீர் விழும் தகவல் அந்த பகுதி மக்களிடையே பரவியது. உடனே அக்கம்பக்கத்தினர் பெண்களும், ஆண்களும் திரண்டு வந்தனர். விநாயகர் சிலையை சுற்றி விழுந்து கிடந்த திருநீரை மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து தரிசனம் செய்தனர். இந்த சம்பவம் துடியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி மாலினி கூறியதாவது:-
விநாயகரின் லீலை
நான் ஆஞ்சநேய பக்தை. எங்கள் வீட்டில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து நான் தினமும் வழிபடுவேன். ஒரு நாள் எருக்கம்பூ தண்டினால் நானும் என் கணவரும் சேர்ந்து விநாயகர் சிலை செய்தோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு என் கனவில் விநாயகர் வந்து `நான் இருக்கும்போது எப்படி ஆஞ்சநேயருக்கு பூஜை செய்கிறீர்கள். நாளை காலை பாருங்கள்' என்று கூறினார்.
மறு நாள் காலையில் விநாயகர் சிலை மேலே திருநீர் விழுந்து பரவி கிடந்தது. நான் ஏதோ ஞாபகத்தில் திருநீரை அகற்றிவிட்டேன். அதன் பிறகும் சிறிது நேரத்தில் விநாயகர் சிலை மீது திருநீர் விழுந்து கிடந்தது. அதுமட்டுமின்றி சிலை அருகில் வைக்கப்பட்டு டம்ளரில் வைக்கப்பட்டு இருந்த இளநீரையும் காணவில்லை.
அதனால் இது விநாயகரின் லீலைகள் என்று நாங்கள் நினைக்கிறோம். அன்று முதல் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். இது பற்றி இயற்பியல் பேராசிரியர் திருமூர்த்தியிடம் கேட்டபோது `விநாயகர் சிலையில் திருநீர் விழுவது என்பது இயற்கைக்கு முரணாக இருக்கிறது. ஒரு வேளை எருக்கம்பூ தண்டு பவுடராக மாறுகிறதா என்று தெரியவில்லை. இது பற்றி நேரில் பார்த்து ஆராய்ந்தால் தான் தெரியும்' என்றார்.

//


சிறப்பு பூஜைகளிருக்கட்டும் மேலே ஒரு விட்டம் ரெம்ப உழுத்துப் போகியிருக்கிறது போல அதனால் ஜாக்கிரதையாக இந்த பூஜைகளைச் செய்யட்டும்

சுகா

Sunday, March 12, 2006

ஒரு ஜெர்மன்காரர் , நான் மற்றும் சந்திரமுகி

சென்ற வெள்ளியன்று என்றுமில்லாத அதிசயமாக என் அலுவலகம் அமைந்துள்ள ஸ்காட்ஸ் வேலியில் பனிப் புயல் வீச, வழக்கமாகச் செல்லும் ஹைவே 17 கடும் பனிப்பொழிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. அலுவலகத்திலேயே கிட்டத்தட்ட சிறை வைக்கப்பட்டோம்.

வேலை செய்யத் தோன்றாததால் இணையத்தில் எதையோ தேடப் போய் சந்திரமுகி விடீயோ பாடல் கிடைத்தது. பார்க்கலாமென பார்க்க ஆரம்பித்த போது , அருகிலிருந்த ஜெர்மன் நண்பர் என் கணிணியிலிருந்து வந்த இசை கேட்டு அருகில் வந்து என்ன பார்க்கிறாயயென கேட்க 'எங்கள் மொழிப்படம்' எனச் சொல்ல மனிதர் ரெம்ப ஆர்வமாகிவிட்டார். நானும் அவரும் கொஞ்சம் நல்லவே பழக்கம்; அலுவல் தவிர நேரமிருக்கும் போது மற்ற விஷயங்களையும் பேசுவோம். உரிமையாக நானும் பார்க்கிறேன் என அருகில் அமர்ந்துவிட்டார்.

"என்னடா வம்பாப் போச்சு" என யோசிப்பதற்குள் முதல் கேள்விக்கணை " இது தான் உங்கள் இந்திய மொழியா ?"

"எங்களுக்கு இந்திய மொழி என்று எதுவுமில்லை. கிட்டத்தட்ட 26 மொழிகள் இருக்கிறது. அதில் இது தமிழ் என்றேன்'

"26 ஆ .. " வாயைப் பிழந்தவர் "எல்லாம் வெவ்வேறு உச்சரிப்பு வடிவங்கள் தானே ?" என்றார்.

"தனித் தனி எழுத்து வடிவம் கொண்ட முழுமையான மொழிகள்" எனச் சொல்ல ஆடிப்போய் விட்டார்.

எனக்கு ஒரு மொழிதான் தெரியும் என்று கூற "மற்ற மொழியினரோடு எப்படிப் பேசுவாய்" என்றார். தேசிய மொழி தெரியவில்லை எனினும் ஆங்கிலத்தில் சமாளிக்கலாம் எனக் கூறக் கேட்டு ஆச்சிரியமானவாறு கணிப்பொறியின் திரையைப் பார்த்தவர் கொஞ்சம் பயந்துவிட்டார்.

ஜோதிகா ..ரா ரா பாட்டுக்கு ஆடிக்கொண்டிருக்க .. "இது என்ன ?" என்பது போல் என்னைப் பார்க்க
'கதையை' கொஞ்சம் விளக்கினேன். சீரியஸாகக் கேட்டவர் கொஞ்ச நேரம் தொடர்ந்து ரசித்து (??!)பார்த்தார். நான் வெளியே எட்டிப் பார்க்க மழை விடவே இல்லை..

ஒருவழியாக அதிக கேள்விகளின்றி அந்தப் பாட்டு முடிந்தது. "மல்டிபில் பர்சனாலிட்டி டிஸார்டரில் இப்படியெல்லாம் கூட ஆகுமா!" என்ற ஆச்சர்யத்தோடு என்னைப் பார்த்தார்.

அடுத்து "கொக்கு பற பற .." என கும்பலாக ஆட மனிதருக்கு ரெம்பப் பிடித்துவிட்டது. "இது என்ன .. இவர்களுக்கும் மல்டிபில் பர்சனாலிட்டி டிஸார்டரா" என கேட்க

"இன்னமும் கொஞ்ச நேரம் இது தொடர்ந்தால் எனக்கு கூட அது வந்துவிடும்... எங்க டேன்ஸ் உங்களுக்கு டிஸார்டராப் படுதா" என நினைத்துக் கொண்டே .. " இது ஒரு யதார்த்தமான நடனம்.. சந்தோசமாக இருப்பதால் இப்படி ஆடி பாடி மகிழ்கிறார்கள்" என்றேன்

" ஆடைகள் வித்யாசமாக இருக்கிறது .. இந்திய உணவகத்துக்கு போகும் போது கூட இப்படிப் பட்ட உடைகளை அணிந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். பளபள வென அழகாக இருக்கும். இதை அணிவதில் ரெம்ப நேரம் செலவாகும் போல " என்றார்.

"அது பட்டாடை.. கட்டுபவர்களுக்கு நேரமும், கட்டுபவர்களைக் கட்டுபவர்களுக்கு பணமும் அதிகம் செலவாகும்" என சொல்லிவைத்தேன். என்ன புரிந்ததோ புரிந்தது போல் புன்னகைத்தார்.

"பாடலுக்கு என்ன அர்த்தம்" என்ற கேள்விக்கு பாடலை அப்படியே மொழி பெயர்த்தால் எதோ கொக்கு கோழி என டெனிஸ் மெனு போலாகிவிடும் என்பதால் அதன் அர்த்தத்தை(!) சொன்னேன்.

அந்த நேரத்தில் ஒரு வழியாக ஹைவே 17 சரியாகி விட்டது என தகவல் வர அவரிடமிருந்து தப்பித்தேன்.

வீட்டுக்கு செல்லும் போது யோசித்துக் கொண்டே போனேன். நமது திரைப்பட சண்டைக்காட்சிகள் , மரத்தைச் சுற்றிக் கொண்ட டூயட், ஆக்ரோஷமான பன்ச் டயலாக், உருக்கும் செண்டிமெண்ட் காட்சிகளையெல்லாம் இவர்களுக்கு புரியவைக்க முடியுமா !

எனக்கு கூட பழைய படங்களில் ... ஹரிதாஸ் காலத்துப் படங்களில் 'தண்ணீர் வேண்டும்' என்பதைக் கூட மகாலிங்க பாகவதர் ஸ்ருதி சுத்தமாக கணீரெனப் பாடுவதைக் கேட்டால் அட இப்படியும் கூட தண்ணீர் கேட்பார்களா எனத்தோன்றுகிறது; அந்த ஜெர்மன்காரர் சந்திரமுகியைப் பார்த்து என்ன நினைத்தாரோ !


~சுகா

Wednesday, March 08, 2006

நகைச்சுவை நேரம்.. ??!!

ஆச்சர்யமாக இருக்கிறது, பக்தியின் சக்தி :)

தினத் தந்தியின் செய்தி : http://dailythanthi.com/article.asp?NewsID=243711&disdate=3/8/2006

பூமிக்குள் இருந்து சிலை தோன்றியதாக பரபரப்பு
ராயபுரம், மார்ச்.8-


கொருக்குப்பேட்டை அம்மன் கோவிலில் பூமிக்குள் இருந்து சிலை தோன்றியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த கோவிலுக்கு பொதுமக்கள் படையெடுத்தனர்.
அம்மன் கோவில்
சென்னை கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் முதல் தெருவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரும் அவரது மனைவி கிரிஜாவும் இந்த கோவிலை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்டி பூஜை செய்து வருகிறார்கள்.
நேற்று பகல் 12 மணி அளவில் வழக்கம் போல் பூஜை செய்வதற்காக கிரிஜா கோவிலை திறந்தார். அப்போது தரையில் அம்மன் வடிவில் புதிதாக ஒரு மண் சிலை கிடந்ததை கண்டார். பூட்டி இருந்த கோவிலுக்குள் எப்படி அம்மன் சிலை வந்தது என்று தெரியாமல் அவர் திகைத்தார். பூமிக்குள் இருந்து அந்த சிலை தோன்றி இருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.
பொதுமக்கள் குவிந்தனர்
இதுபற்றி கிரிஜா அக்கம் பக்கத்தினரிடமும் உறவினர்களிடமும் பக்தி பரவசம் பொங்க கூறினார். இந்த செய்தி அந்தப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. கோவில் முன்பு ஆண்களும், பெண்களும் திரண்டனர். நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அந்த அம்மன் சிலையைப் பார்த்து வணங்கினார்கள்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

==============================

இந்த செய்தியைக் கேட்டு நிச்சயமாக அந்த சிலையைக் கோவிலினுள் தெரியாமல் விசிய சிறுவன் அதே ஊரில் ஏதேனும் ஒரு மூலையில் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பான் :)

சுகா

Sunday, March 05, 2006

"பூவே ..பூச்சூடவா..." ஒலிவடிவம்

இதுவும் என் தங்கை ஆர்த்தியின் பாடல். எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.

சிறிது ஒலி வடிவ மாற்றம் செய்தது இது. பூவே பூச்சூடவா...

அசல் பாடல் இங்கே பூவே பூச்சூடவா..

சுகா

Wednesday, March 01, 2006

ஒலி வடிவில் ஒரு பதிவு..

அன்பென்ற மழையிலே..


இது என் தங்கை ஆர்த்தி பாட நான் என் மடிக் கணிணியில் பதிவு செய்தது. சிறிது ஒலி வடிவமாற்றம் செய்தது மட்டுமே என் சொந்த சரக்கு :)

சுகா