Tuesday, October 17, 2006

கட்டங்களும் சில கோளங்களும்...

பிறந்ததும் நாம் வளர்வதும் நாம்
ஆனால் வாழ்க்கை...
சில கட்டங்களும்
அதில் அடைப்பட்ட கோளங்களிலும்

நெருப்புக்கு தேவைப்படாத
சிக்கிமுக்கிக் கற்கள்..
ஒலி வேகப்பயணத்துக்குக் கூட
தேவைப்படாத சக்கரங்கள்...
சிரிக்கின்றன
மரத்தடியில் கை நீட்டி அமர்ந்திருப்பவரைக் கண்டு

செயற்கை இதயமும் , இறந்து பிறந்த கண்களும்
ஏளனம் செய்கின்றன எழுத்தாலும் எண்ணாலும் தன்
விதியை ஆராயும் மதியைக் கண்டு

பயங்களும் குழப்பங்களும்
வாய்ச் சாதுர்யக்ககாரர்களின்
சாமர்த்தியத்திற்கு பரிசாகின்றன..

கேள்விகள் அவமதிக்கப்பட்டு
பரிகாரங்கள் பதிலாகும் கேலிகள்
பரவசப்படுத்துகின்றன கோமாளிகளை

பஞ்சாங்கப் பக்கங்கள்..
கண்டறிந்த தோஷங்கள்
மிச்சப்படுத்துகின்றன பலரின்
திருமணச் செலவை

எதையும் ஆராயும் ஆறறிவு கூட ..
கூண்டில் வீசப்படும் சில
பொட்டுக் கடலைகளுக்கு
விலை போகிறது

மனிதன் குறுக்கே போக..
விரட்டப்படும் பூனைகள்
விழுந்து விழுந்து சிரிக்கின்றன
விதி பற்றிய பயமேதுமின்றி

ஆயிரம் காலத்துப் பயிருக்கும்
பத்தாயிரம் காலத்துப் பஞ்சாங்கங்கங்கள்
வக்காலத்து வாங்கப்படுகின்றன..

பின்னே இனிக்குமென
விழுங்கப்படும் கசக்கும் விஷங்களைப்
பார்த்துக் கைகொட்டி சிரிக்கின்றன
முதுநெல்லிக் கனிகள்

கணிணிகளை வாங்கக்கூடப்
பார்க்கப்படும் நல்ல நேரங்கள் கண்டு
நாள்காட்டிகளையும் நகைக்கின்றன

வாரும்..
பகுத்தறிவுப் புத்தகத்தின்
முருகன் துணையாய்
வாழ்வோம்..