சென்ற வெள்ளியன்று என்றுமில்லாத அதிசயமாக என் அலுவலகம் அமைந்துள்ள ஸ்காட்ஸ் வேலியில் பனிப் புயல் வீச, வழக்கமாகச் செல்லும் ஹைவே 17 கடும் பனிப்பொழிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. அலுவலகத்திலேயே கிட்டத்தட்ட சிறை வைக்கப்பட்டோம்.
வேலை செய்யத் தோன்றாததால் இணையத்தில் எதையோ தேடப் போய் சந்திரமுகி விடீயோ பாடல் கிடைத்தது. பார்க்கலாமென பார்க்க ஆரம்பித்த போது , அருகிலிருந்த ஜெர்மன் நண்பர் என் கணிணியிலிருந்து வந்த இசை கேட்டு அருகில் வந்து என்ன பார்க்கிறாயயென கேட்க 'எங்கள் மொழிப்படம்' எனச் சொல்ல மனிதர் ரெம்ப ஆர்வமாகிவிட்டார். நானும் அவரும் கொஞ்சம் நல்லவே பழக்கம்; அலுவல் தவிர நேரமிருக்கும் போது மற்ற விஷயங்களையும் பேசுவோம். உரிமையாக நானும் பார்க்கிறேன் என அருகில் அமர்ந்துவிட்டார்.
"என்னடா வம்பாப் போச்சு" என யோசிப்பதற்குள் முதல் கேள்விக்கணை " இது தான் உங்கள் இந்திய மொழியா ?"
"எங்களுக்கு இந்திய மொழி என்று எதுவுமில்லை. கிட்டத்தட்ட 26 மொழிகள் இருக்கிறது. அதில் இது தமிழ் என்றேன்'
"26 ஆ .. " வாயைப் பிழந்தவர் "எல்லாம் வெவ்வேறு உச்சரிப்பு வடிவங்கள் தானே ?" என்றார்.
"தனித் தனி எழுத்து வடிவம் கொண்ட முழுமையான மொழிகள்" எனச் சொல்ல ஆடிப்போய் விட்டார்.
எனக்கு ஒரு மொழிதான் தெரியும் என்று கூற "மற்ற மொழியினரோடு எப்படிப் பேசுவாய்" என்றார். தேசிய மொழி தெரியவில்லை எனினும் ஆங்கிலத்தில் சமாளிக்கலாம் எனக் கூறக் கேட்டு ஆச்சிரியமானவாறு கணிப்பொறியின் திரையைப் பார்த்தவர் கொஞ்சம் பயந்துவிட்டார்.
ஜோதிகா ..ரா ரா பாட்டுக்கு ஆடிக்கொண்டிருக்க .. "இது என்ன ?" என்பது போல் என்னைப் பார்க்க
'கதையை' கொஞ்சம் விளக்கினேன். சீரியஸாகக் கேட்டவர் கொஞ்ச நேரம் தொடர்ந்து ரசித்து (??!)பார்த்தார். நான் வெளியே எட்டிப் பார்க்க மழை விடவே இல்லை..
ஒருவழியாக அதிக கேள்விகளின்றி அந்தப் பாட்டு முடிந்தது. "மல்டிபில் பர்சனாலிட்டி டிஸார்டரில் இப்படியெல்லாம் கூட ஆகுமா!" என்ற ஆச்சர்யத்தோடு என்னைப் பார்த்தார்.
அடுத்து "கொக்கு பற பற .." என கும்பலாக ஆட மனிதருக்கு ரெம்பப் பிடித்துவிட்டது. "இது என்ன .. இவர்களுக்கும் மல்டிபில் பர்சனாலிட்டி டிஸார்டரா" என கேட்க
"இன்னமும் கொஞ்ச நேரம் இது தொடர்ந்தால் எனக்கு கூட அது வந்துவிடும்... எங்க டேன்ஸ் உங்களுக்கு டிஸார்டராப் படுதா" என நினைத்துக் கொண்டே .. " இது ஒரு யதார்த்தமான நடனம்.. சந்தோசமாக இருப்பதால் இப்படி ஆடி பாடி மகிழ்கிறார்கள்" என்றேன்
" ஆடைகள் வித்யாசமாக இருக்கிறது .. இந்திய உணவகத்துக்கு போகும் போது கூட இப்படிப் பட்ட உடைகளை அணிந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். பளபள வென அழகாக இருக்கும். இதை அணிவதில் ரெம்ப நேரம் செலவாகும் போல " என்றார்.
"அது பட்டாடை.. கட்டுபவர்களுக்கு நேரமும், கட்டுபவர்களைக் கட்டுபவர்களுக்கு பணமும் அதிகம் செலவாகும்" என சொல்லிவைத்தேன். என்ன புரிந்ததோ புரிந்தது போல் புன்னகைத்தார்.
"பாடலுக்கு என்ன அர்த்தம்" என்ற கேள்விக்கு பாடலை அப்படியே மொழி பெயர்த்தால் எதோ கொக்கு கோழி என டெனிஸ் மெனு போலாகிவிடும் என்பதால் அதன் அர்த்தத்தை(!) சொன்னேன்.
அந்த நேரத்தில் ஒரு வழியாக ஹைவே 17 சரியாகி விட்டது என தகவல் வர அவரிடமிருந்து தப்பித்தேன்.
வீட்டுக்கு செல்லும் போது யோசித்துக் கொண்டே போனேன். நமது திரைப்பட சண்டைக்காட்சிகள் , மரத்தைச் சுற்றிக் கொண்ட டூயட், ஆக்ரோஷமான பன்ச் டயலாக், உருக்கும் செண்டிமெண்ட் காட்சிகளையெல்லாம் இவர்களுக்கு புரியவைக்க முடியுமா !
எனக்கு கூட பழைய படங்களில் ... ஹரிதாஸ் காலத்துப் படங்களில் 'தண்ணீர் வேண்டும்' என்பதைக் கூட மகாலிங்க பாகவதர் ஸ்ருதி சுத்தமாக கணீரெனப் பாடுவதைக் கேட்டால் அட இப்படியும் கூட தண்ணீர் கேட்பார்களா எனத்தோன்றுகிறது; அந்த ஜெர்மன்காரர் சந்திரமுகியைப் பார்த்து என்ன நினைத்தாரோ !
~சுகா
14 comments:
//"அது பட்டாடை.. கட்டுபவர்களுக்கு நேரமும், கட்டுபவர்களைக் கட்டுபவர்களுக்கு பணமும் அதிகம் செலவாகும்" என சொல்லிவைத்தேன். என்ன புரிந்ததோ புரிந்தது போல் புன்னகைத்தார்.\\
Humourous, short and to the point, very good.
Sridhar
:) Thanks
SuKa
:-))))
//அடுத்து "கொக்கு பற பற .." என கும்பலாக ஆட மனிதருக்கு ரெம்பப் பிடித்துவிட்டது. "இது என்ன .. இவர்களுக்கும் மல்டிபில் பர்சனாலிட்டி டிஸார்டரா" என கேட்க..//
கொஞ்சம் யோசித்துப் பார்த்ததில், அவர் கேள்வி சரிதானோ என்ற் தோன்றியது. இதைப் படித்துவிட்டு மனசார சிரித்தேன் :-)
"அந்த ஜெர்மன்காரர் சந்திரமுகியைப் பார்த்து(நம்மைப் பற்றி, நம் படங்கள் பற்றி ) என்ன நினைத்தாரோ !! :-(
:-))
வாங்க துளசி, ஹரிஹரன், தருமி முத்து.
தருமி,
உங்கள் கவலை எனக்குமிருந்தது. ஆனால் நாம் இப்படி கூட்டமாக கொண்டாடுவதும், வண்ணமயமான படப் பதிவும் அவர்க்கு மிகவும் பிடித்திருந்தது.. ஆச்சர்யமாகவுமிருந்தது.
பலதரப்பட்ட கலாச்சார மனிதர்களின் பார்வையில் பார்க்கும் போது சில முக்கியமான நிறை குறைகளை உணரமுடிகிறது.
அடுத்த முறை நான் 'நரசிம்மா' பார்க்கும் போது அவர் வந்து எட்டிப் பார்க்காமலிருந்தால் சரி. ;)
வாழ்த்துக்கள்
சுகா
//இன்னமும் கொஞ்ச நேரம் இது தொடர்ந்தால் எனக்கு கூட அது வந்துவிடும்... // பார்த்துட்டு வந்து நிறைய பேருக்கு ஆச்சுன்னு கேள்விபட்டேன்!
வெளிகண்ட நாதரே..
ரெண்டு படம் (அந்நியன்) ஒரே நேரத்துல ஒரே மாதிரி வந்ததாலக் கூட இப்படி இருக்கலாம்.
ஆனா அந்நியன் மாதிரி HTML படிச்சுட்டு அந்த மாதிரி க்ராபிக்ஸ் வெப்சைட் கிரியேட் பண்ண முடியுன்னா .. இந்த டிஸார்டர் வந்தாலும் பரவாயில்லையே ;)
சுகா
இல்ல சார்...உங்க கருத்துல இருந்து நான் கொஞ்சம் மாறுபடுறேன்... நமது கலாசாரத்தின் தொடக்கத்தை கொஞ்சம் கிளரிப்பார்த்தால்(சுமார் மன்னராட்சி காலத்தில்), அப்போதைய நிகழ்வுகள் அத்தனையும் கலைவடிவமாக நிலைபடுத்தப்பட்டிருப்பதை பார்க்கலாம்... அதன்பிறகு எல்லாம் கலைகளும் ஒருமுகப்படுத்தப்பட்டு, ஆடல்பாடல் மட்டும் முக்கியமான உணர்ச்சி வெளிப்பாடாக அமைந்தது...(நடிப்பு, ஆடல், பாடல் அளவுக்கு மற்ற கலைகள் வளரவில்லை. அதை கவனித்தீர்களா?)
ஆரம்பத்தில், தமிழ் சினிமா வரலாற்றில் இப்படித்தான் ஆடல், பாடல், மிகைப்படுத்துதல்(அழகுணர்ச்சிக்காக) ஒரு உணர்ச்சி வெளிப்பாடாகத்தான் தோன்றியிருக்கவேண்டும்...(சினிமாவில் வரும் நியாயமான சோகப்பாடல்களை பாருங்கள். நிஜ வாழ்வில் சோகத்தின்போது அப்படியா பாடிக்கொண்டிருக்கிறோம்?)
நமக்கு எல்லாம் அப்படியாக போய்விட்டது... நமது தமிழ்சினிமாவின் அடையாளம் அது... (வெளிநாட்டில், பிரமாண்ட செலவு இல்லாமல் அவர்கள் ஆங்கிலப்படம் எடுக்கமாட்டார்கள். அப்படி எடுத்தால் ஓடாது)
அடுத்த தடவை, ஜெர்மன் நண்பருக்கு தைரியமாக பெருமையாகவே சொல்லுங்கள்... "Just they are expressing their emotions in the form of dance!" என்று. (அது அபத்தமாக இருந்தாலும். நரசிம்மாவுக்கும் உணர்ச்சியிருக்காதா? ;-))
நாமளும் அதைவிட பெரிதாக சிந்திக்கமுடியாது.
வாங்க கார்த்திகேயன் ..
//
ஒருமுகப்படுத்தப்பட்டு, ஆடல்பாடல் மட்டும் முக்கியமான உணர்ச்சி வெளிப்பாடாக அமைந்தது...(நடிப்பு, ஆடல், பாடல் அளவுக்கு மற்ற கலைகள் வளரவில்லை. அதை கவனித்தீர்களா?)
//
உண்மை தான். ஆடல் பாடலோடு நாடகமும் நம் உணர்ச்சிகளோடு நெருங்கிய தொடர்புடைய கலைகள் தாம். மெகா சீரியல் ரசிகர்களைக் கேட்டால் நாடகம்(நடிப்பு) தான் சிறந்த கலை என்பர் :)
//
..(சினிமாவில் வரும் நியாயமான சோகப்பாடல்களை பாருங்கள். நிஜ வாழ்வில் சோகத்தின்போது அப்படியா பாடிக்கொண்டிருக்கிறோம்?)
//
சந்தோசமோ துக்கமோ .. சில தருணங்களிள் தமது சூழ்நிலைகளை நாம் பார்த்த சினிமாவோடு pattern matching செய்து நம் மூளை சில பாடல்களை பிண்ணனி இசையாக இசைப்பதை உணர்ந்திருக்கிறீர்களா..
சந்தோசமான தருணங்களின் இனிய (முடிந்தால் பொருத்தமான) பாடலை முனுமுனுக்கிறோம்... அதே பாடலை அந்த கதாநாயகன் அளவிற்கு சத்தமாய்ப் பாடினால் நமது மகிழ்ச்சி அருகிலிருப்பவர்க்கு துக்கமாகலாம். (S.P.B க்கு இது பொருந்தாது :) )
//
(வெளிநாட்டில், பிரமாண்ட செலவு இல்லாமல் அவர்கள் ஆங்கிலப்படம் எடுக்கமாட்டார்கள். அப்படி எடுத்தால் ஓடாது)
//
நானும் அப்படி நினைத்திருக்கிறேன். "உலகத்தைக் காப்பற்றுவதைத் தவிர வேறு படமே எடுக்க மாட்டார்களா" என்று.
பின்னர் தெரிந்து கொண்டது என்னவென்றால் பிரம்மாண்டமான படங்கள் மட்டுமே நம் நாட்டில் வெளியாகின்றன. மற்றபடி லோ பட்ஜெட் படங்களும் நன்றாக இருந்தால் இங்கே நன்றாகவே ஓடுகின்றன.
//
அடுத்த தடவை, ஜெர்மன் நண்பருக்கு தைரியமாக பெருமையாகவே சொல்லுங்கள்... "Just they are expressing their emotions in the form of dance!" என்று. (அது அபத்தமாக இருந்தாலும். நரசிம்மாவுக்கும் உணர்ச்சியிருக்காதா? ;-))
//
ஆஹா... யோசித்துபாருங்கள் நரசிம்மாவில் கை நகத்தை விஜயகாந்த் கடித்துத் துப்பும் காட்சிக்கு ""Just they are expressing their emotions" என்று சொன்னால் என் க்யூப் பக்கமே வரமாட்டார். நானும் கொஞ்சம் எமோசனலாகி அவர் கையை கடித்துவிட்டால் :))
//
நாமளும் அதைவிட பெரிதாக சிந்திக்கமுடியாது.
//
நமது சினிமாவும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.. ஹீரோ ஹீரோயின் கள் இப்போது டூயட் காட்சிகளில் மரத்தை சுற்றி ஆடி மரத்தை உலுக்காததால் எவ்வளவு மரங்கள் நன்றி சொல்கின்றன.. யோசியும் :)
வாழ்த்துக்கள்
சுகா
வாவ்.. இப்பிடி ஒரு படமா :)) கண்டிப்பாக இந்த விரிவாக்கத்தை விட கதை சிறியதாக இருக்கும் என எனது அனுபவம் சொல்கிறது :))
அந்த விரிவாக்கம் என்ன, உண்மை ?
சுகா
நரசிம்மா பாடி ஆடினால் தப்பு இல்லீங்கனுதான் சொல்ல வர்றேன்.
ஆனால், நகத்தை கடித்து துப்புவது எல்லாம் கொஞ்சம் ஓவர். உங்க ஜெர்மன் நண்பருக்கு "No comments"னு சொல்லிவைங்க. வேற என்ன செய்யறது? ("Just he is showing his anger in the form of.."னு சொன்னீங்கனா அவ்ளோதான் உங்க க்யூப் என்ன நீங்க இருக்கிற திசைக்கே வரமாட்டார்கள்)
நிஜத்தில் அமைதியாக முணுமுணுப்பதை திரையில் சத்தமாக பாடுகிறார்கள் என்பதுதான் என் கருத்தும். கதையோடு பொருந்தாத பாடல்களுக்கு நானும் எதிரிதான்... ('அழகி'யில்கூட ஒரு பாட்டு அப்படி வருமே. இப்போ பிரபலமாயிருக்கிற 'வாளமீன்' பாடலையாவது கொண்டாட்டம்னு சொல்லிக்கலாம்)
"டூயட் பாடாமல் விட்டால், மரங்களெல்லாம் நன்றி சொல்லும்". நல்ல நகைச்சுவை.
(சீரியல்காரர்களை விடுங்கள்.சுயமாக ஒரு சமூக நோக்குள்ள கதையை காட்டமாட்டார்கள்...எங்கோ ஒன்றிரண்டு இடங்களில் நடக்கும் சில விஷயங்களை கோர்த்து, காட்சிகள் அமைத்து, TRP மேல் பழியைப்போட்டு அநியாயம் பண்ணுகிறார்கள். இதற்கே HTML தெரிஞ்ச ஒரு அந்நியன் வரவேண்டும்)
நரசிம்மாவை விடமுடியவில்லையே..
"எகிப்து ராணி" பாட்டின் வரிகளைத்தவிர வேறு நகைச்சுவைப் பாட்டைக் கேட்டதே இல்லை ;)
"என் மீசையில் உள்ள முடி .. எல்லாம் யானை முடி" ..எப்படித் தோன்றுகிறது..இப்படி யோசிக்க :))
//
கதையோடு பொருந்தாத பாடல்களுக்கு நானும் எதிரிதான்...
//
பார்த்து உங்களுக்கு எதிரிகள் அதிகமாவிடப் போகிறார்கள். இப்போது பெரும்பாலான படங்களில் இந்தப் பாடல்கள் சகஜம் தானே..
//இதற்கே HTML தெரிஞ்ச ஒரு அந்நியன் வரவேண்டும்)
//
:))
சுகா
Post a Comment