Saturday, December 24, 2005

நானறிந்த கடவுள் - 2

முதல் பாகம் இங்கே..

கடவுள்.. சில சமயம் வாழ்க்கையையே வெறுக்கவும் செய்திருக்கிறார். சாதாரண நாட்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் குலதெய்வம் கோவில். வருடத்திற்கொரு முறை வரும் விஷேச தினங்களில் கூட்டம் நிரம்பி வழியும். பூசாரி முணுமுணுத்துக் கொண்டே அனைவரின் தேங்காய் பழங்களை வாங்கி உடைப்பதற்குள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட எலியைப்போல வேர்த்து விறுவிறுத்து கையைக் குவித்தபடி வேண்டியதில் ஒன்று மட்டுமே நினைவிற்கு வருகிறது. ' பூஜை சீக்கிரமாக முடியவேண்டும் கடவுளே' என்பது தான்.

நெடுந்தொலைவில் உள்ள கோவில்களில் பெரியவர்கள் எதாவது வேண்டிக்கொண்டால் அதிலும் ஒரு அவஸ்தையே.. அதிகாலையில் எழுப்பி தூக்கக் கலக்கத்திலே குளிக்கவைத்து கிளம்பும் பொழுதுகளில் சில உற்சாகமாக இருந்தாலும், தூக்கத்திலிருந்து எழுப்பிவிடப்பட்ட சமயங்களில் கடவுள் மேல் கடும்கோபம் வந்திருக்கிறது. இருந்தாலும் தூக்கம் தெளிந்த சில மணித்துளிகளிலேயே பயணத்தின் உற்சாகம் தொற்றிக் கொள்வதால் கோபம் மறைந்துவிட்டிருக்கிறது.

பேருந்துப் பயணத்தின் களைப்பு , கோவில் கூட்ட நெரிசல் மீண்டும் காலையின் கோபத்தை நினைவுபடுத்தினாலும் கட்டிக் கொண்டுவந்த புளிசாதத்தின் வாசத்தில் அது காணாமல் போயிருக்கிறது. அனைவரும் சுற்றி அமர்ந்து, கிடைக்கும் பாத்திரத்தில் அல்லது கையில் உருண்டையாக வாங்கி உண்ணும் நேரத்தில் கடவுள் அளித்த அமிர்தமாகவே இருந்திருக்கிறது. அந்த நினைவுகள் இப்போதும் இனிக்கிறது..
" இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் " என்ற பிரபந்த வ்ரிகளே நினைவுக்கு வருகின்றன.

இந்தப் பயணங்களிலெல்லாம் கோவிலில் இருந்த சில மணித்துளிகளில் கூட கடவுளின் நினைப்பைவிட வெளியே விற்கும் பொம்மை மற்றும் பிரசாதத்திலேயே கவனமதிகமிருந்தது..

சிறுவயதில் பக்தி விஷயத்தில் மிகத்தெளிவாகவே இருந்ததாக உணர்கிறேன். தேவைகள் வரும் போது.. அதாவது தேர்வுகள் வரும் போது பக்தி சிறிது அதிகமாக இருந்தது என் நெற்றியைப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். தேர்வுகளின் விடுமுறையில் விடுமுறைக்குச் சென்ற பக்தி, திருத்திய விடைத்தாள்களுடன் ஆசிரியர் நுழையும் போது திரும்பிவந்திருக்கிறது.

'எப்பிடியாவது..எண்பதுக்கு மேல வந்திடனும்பா' என்ற வேண்டுதலின் முதல் வார்த்தை 'எப்பிடியாவது' என்பது கிட்டத்தட்ட எல்லா வேண்டுதல்களிலிம் இருந்திருக்கிறது.

நம்மால் முடியாத வழிகள் , நெளிவு சுழிவுகள் கடவுளுக்குத் தெரியும் என்ற அபார நம்பிக்கை கொண்டிருந்த காலமது.

உயர்நிலைப் பள்ளியின் இறுதி ஆண்டினில் இந்த நம்பிக்கை சிறிது தளர ஆரம்பித்தது. பொதுத் தேர்வுக்கு தயாராக ஆசிரியர்கள் சொன்ன அறிவுரைகளில் ' உன்னைத் தவிர வேறு யாரும் உன் வெற்றி தோல்விக்கு காரணமாக முடியாது' என்ற சாரம் மேலோங்கியிருந்தது. அரசமரப் பிள்ளையாரை மறக்கவில்லை எனினும் , சுற்றி வந்து தோப்புக் காரணம் போடாமல் , சைக்கிளில் போகும் போதே இரண்டு கையையும் கூப்பி ஒரு வணக்கம் போட்டுவிட்டு மாலை வகுப்பிற்கு போயிருக்கிறேன்.

கடவுள் நம்பிக்கை இருந்த போது அவரை நினைத்ததை விட இப்போது அதிகமாக நினைப்பதாகவே உணருகிறேன்.

இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது எழுத..

7 comments:

jeevagv said...

இப்படியும் இருக்கலாம் அல்லவா?
கடவுள் என்பது 'ஒரு வெளிப்பாடு' என்பதாக?
கடவுளை நீங்கள் கேட்கும்போது, உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வது போல?
வெள்ளத்தனைய-தானே மலர் நீட்டம்?

Suka said...

ம்ம்ம்.. 'வெளிப்பாடு' என்றால்..என்னால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லையே..மன்னிக்கவும்.

//உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வது போல?//

உங்களுடன் ஒத்துப்போகிறேன். இதையே தான் தெளிவாகவே உணர முயற்சிக்கிறேன். முடிந்தால் கடவுள் என்ற மேலுறையை கழட்டிவிட்டு உள்ளேயுள்ள சுயத்தை அறிய முயற்சிக்கிறேன்.

சைக்கிள் ஓட்டும்போது கையை விட்டுவிட்டு தெருப்பிள்ளையாருக்கு வணக்கம் செலுத்துவதும், பெரும்பாலும் போக்குவரத்தை கவனித்துவிட்டு பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே..அல்லவா?

நம்மால் முடிந்த செயல்களுக்கு கடவுளைக் கூப்பிடுவதில்லை. ..அடடா அடுத்த பதிவினை இங்கே பதிக்க ஆரம்பித்துவிட்டேன் :) தொடர்ந்து படியுங்கள், உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்

சுகா

jeevagv said...

சுயத்தை உணரும்போது, சுயமும் கடவுளும் வேறல்ல என்று உணர்வோம் என்கிறது வேதாந்தம்.

அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் சுகா!

Suka said...

கொஞ்சம் இடைவேளை விட்டு விட்டேன். :) இன்று எழுதுகிறேன்.

நன்றி
சுகா

பூங்குழலி said...

//முடிந்தால் கடவுள் என்ற மேலுறையை கழட்டிவிட்டு உள்ளேயுள்ள சுயத்தை அறிய முயற்சிக்கிறேன்.//

சுகா, கிட்டத்தட்ட நீங்கள் கடவுளை நெருங்கிவிட்டீர்கள்.

நீங்கள் சொல்லியிருக்கவேண்டியது ,

"முடிந்தால் தெய்வம் என்ற மேலுறையை கழட்டிவிட்டு உள்ளேயுள்ள கடவுளை அறிய முயற்சிக்கிறேன்."

கடவுள் = கடவு + உள்

கடவு = தோண்டுதல்

நன்றி.
பூங்குழலி

Suka said...

நன்றி பூங்குழலி.

தெய்வம், கடவுள் என்பதற்கு நம் வழக்குத் தமிழில் ஒரே அர்த்தமெனினும் நீங்கள் குறிப்பிட்டது அதன் நுட்பமான அர்த்தத்தை வெளிக்கொணர்கிறது. கட உள் என்றால் எதைக் கடக்கவேண்டும், எதற்காக, என்ன எதிர்பார்க்கிறோம், அந்த எதிர்பார்ப்பின் அதற்கான முயற்சிகளின் தற்போதைய தேவை என்ன? கேள்விகளுக்கு பஞ்சமில்லை..விடைகளைத்தேடுவோம்.

நன்றி
சுகா

G.Ragavan said...

சுகா, கடவுள் என்பது அனைத்தையும் கடந்தும் அனைத்திற்கும் உள்ளும் இருப்பது.

இந்தக் கடவுளை உணர்ந்தவர்கள் வாக்கைக் கேளுங்களேன்.

யானோ மனமோ எனை ஆண்டவிடம் தானோ பொருளாவது சண்முகனே

அதாவது இறைவன் என்பது யானோ? என்னுடைய மனம் என்னும் எண்ணமோ? இல்லை இறைவன் என்னை ஆட்கொண்ட இடங்களாகக் கருதும் திருக்கோயில்களோ? இத்தனையையும் தாண்டி மெய்ப்பொருளாக இருப்பது சண்முகமே (இறைவன்) என்று கூறுகின்றார் அருணகிரி. இது பற்றி இன்னும் நிறைய சொல்லலாம்.