Tuesday, December 13, 2005

கேட்க மறந்த கேள்விகள்...

அம்மா முதலில் சொன்ன போது பயமாகத்தான் இருந்தது. இரவில் வீட்டை விட்டு வெளியே போனால் பூச்சாண்டி வந்துவிடுவான் என்றதும் இரண்டு கொம்பு, நீளமான நாக்கு கோரைப்பற்களென நானாக கற்பனை செய்து கொண்ட நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். வருடங்கள் சில ஓடியதும் கடைக்கு சாமன் வாங்கிவர தனியே அனுப்பிய போதே கேட்டிருக்க வேண்டும்.. "பூச்சாண்டி நம்ம தொகுதி சட்டமன்ற உறுப்பினராகி விட்டாரா.. இனி இந்தப் பக்கம் வரமாட்டாரா என.." மறந்துவிட்டேன்.

பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும் என்றதால் அடிக்கடி கனவில் கே ஆர் விஜயா அவர்கள் பெரிய திரிசூலத்துடனும் நிறைய சாம்பிராணி புகை நடுவே வந்து பயமுறுத்தினார். குடும்ப அட்டைக் கணக்கெடுக்க வரும்போது பாட்டி மேலே இருக்கிறார் என அப்பா கையைக் காட்டினாலும் மாடி அறையை அல்லவா காண்பித்தார். என்னிடம் ஆறுமாதம் முன்பு சொல்லியழும்போது அதற்கு மேலேயே அல்லவா காண்பித்தார். அது பற்றிக் கேட்டிருக்கலாம். ஏனோ தோன்றவில்லை.


சாதிகள் இல்லையென கோணார் உரையில் படித்தபோது ஏதோ கேட்க தோன்றியது.

பத்தாம் வகுப்புப் படிக்கும்போது புகைப் பிடித்ததற்காக நண்பனை அடித்த ஆசிரியரை ஒரு நாள் பெட்டிக்கடையில் பார்த்தபோது "மாணவர்களுக்கு இந்தப் பழக்கம் வரக்கூடாது என்பதற்காக அனைத்தையும் நீங்களே பிடித்துவிடலாம் என முடிவெடுத்துவிட்டீர்களா" என கேட்டிருக்கலாம்.

இன்றுவரை கேட்க மறந்த கேள்விகள் உருத்துகின்றன; கேட்க மறந்து கொண்டிருக்கும் கேள்விகள் சிரிக்கின்றன. நல்லவேளை இணையம் வந்தது. இதில் தொடுப்போம் கேள்விக் கணைகளை என ஆறுதலடைகின்றேன்.

சின்ன குழந்தைகளாக நாமிருந்த போது தோன்றும் கேள்விகள் வளர்ந்ததும் தோன்றுவதில்லை. இந்த வயது குழந்தைகளை கேள்விகள் பல கேட்க வைத்து மெகா தொடர்களின் இடைவேளைகளில் பதில் சொல்லவும் முயற்சிக்க வேண்டும், இல்லையெனில் வளர்ந்து பெரியவனாகி வலைப்பூக்களில் எழுதி மானத்தை வாங்கிவிடுவான் என பயமிருக்கவேண்டும் :)

2 comments:

Anonymous said...

Good one muchi... - thathu

Suka said...

நன்றி