Sunday, December 04, 2005

தமிழினி மெல்லச் சாகும்

சில வாரங்களாக தமிழ் வலைபூக்களின் சோலைகளிள் அதிக நேரத்தைக் களித்துக் கொண்டிருக்கிறேன். வலைப்பதிவுகளின் தரத்தையும் எண்ணிக்கையையும் அவை பதிவேறும் வேகத்தையும் பார்த்தால் தமிழினி மிக மிக மெல்லவே சாகும் எனத் தோன்றுகிறது. தமிழ் அழிகிறதே என அழுபவர்கள் கண்களைத் துடைத்துக் கொள்ளலாம். தமிழ்க்காவலர்கள் சிறிது ஓய்வெடுக்கலாம்.

சில சமயம் மொழிகளின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப் படுகிறதோ எனத் தோன்றுகிறது. மொழிகளின் அவசியமே மறக்கப்பட்டு மொழிகளே ந்மது முக்கியத் தேவை என எண்ண ஆரம்பித்துவிட்டோமோ என்றும் தோன்றுகிறது.

என்னைப் பொறுத்தவரை மொழி ஒரு ஊடகம். சக மனிதர்களுடன் தேவைகளை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள உதவும் ஊடகங்களிள் ஒன்று. பேசப்படும் எழுதப்படும் எந்த மொழிகளுமே ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கிவிட்டவை. சிலமுறை பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் திணறும் வேளைகளில் அந்த வரையறைக் கயிறுகளின் நீளத்தை உணர்கிறோம்.

மைதானத்தின் நடுவே ஒரு ஆப்பில் கட்டப்பட்ட மாட்டினைப்போல் ஒரு பரப்பில் மேய்ந்து கொண்டிருப்பதாக உணர்கிறேன். இதில் எந்த மைதானம் பார்ப்பதற்கு அழகாக உள்ளது; எது மேய்வதற்கு சுவையாக உள்ளது என்பது போல மொழிகளை ஒப்பிட்டு சர்ச்சைகள் செய்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. நமது தேவைகள் பசியாறுவது. அதைத் தவிர வேறு என்ன முக்கியம்.

மொழியைக் காக்க வேண்டிய தேவை என்ன? தக்கன தப்பிப் பிழைக்கும் என டார்வின் சொன்னது மொழிக்கு பொருந்தாதா? இதில் மொழிக்கு காவல் காக்க தேவை என்ன? தேவை தகவல் பறிமாற்றம் .. அது சரியாக நடக்கும் போது ஊடகத்தின் மேலிதற்கு இவ்வளவு அக்கறை.. அதுவும் சக மனிதர்களைப் பழிக்கும் அளவுக்கு..

மொழிகளைக் காப்பதால் மனிதர்களுக்கு இடையே பிரிவினையையோ காழ்ப்புணர்ச்சியையோ எற்படுமேயாயின் கண்மூடித்தனமான அந்தப் பற்று எதற்கு. பிறமொழிக் கலப்பை ஒரு குற்றமாக பார்க்கவேண்டிய தேவையில்லையே.. நமது தேவை தகவல் பரிமாற்றம். அது நடந்து கொண்டிருக்கும் வரை நமது மொழி காப்பு பணிகள் தேவையில்லை.


குறிப்பிட்ட மொழி ஒன்று வளர்ந்தால் என்ன பயன்? அழிந்தால் என்ன இழப்பு? பூனையைக் கட்டி வைத்துக் கொண்டு அந்தணர் ஒருவர் பூசை செய்த கதை போல் குறிக்கோள்களைச் சில சமயம் மறந்து செய்முறைகளைச் செவ்வனே செய்வதில் ஆர்வம் காட்டுகிறோமோ எனத் தோன்றுகிறது.

மொழிப்பற்று என்ற கற்பூர வாசனையை நுகர்வதை விட கழுதையகவே இருந்துவிட்டுப் போகலாமோ எனத் தோன்றுகிறது.

~சுகா

19 comments:

Anonymous said...

நீங்கள் இன்னும் தெரிந்துக்கொள்ளவேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதுதான் நான் அறிந்துக்கொண்ட செய்தி.

மற்றபடி இங்கே உங்களுக்கு நிறைய சப்போர்ட் கிடைக்கும்.

இதேபோல நாட்டுப்பற்று மற்றும் குடும்பபற்றைபற்றியும் உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

Edwin said...

இதேபோல நாட்டுப்பற்று, மதப்பற்று மற்றும் குடும்பபற்றைபற்றியும் உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

மற்றபடி இங்கே உங்களுக்கு நிறைய சப்போர்ட் கிடைக்கும்.

ஜோ / Joe said...

நல்ல நுனிப்புல் மேய்ச்சல்

சிகிரி said...

நீங்களும்தான் சாகப்போகிறீர்கள் :) ஆயினும் உங்களில் உங்களுக்கு ஒரு பாசம் உண்டில்லையா? அதேபோலத்தான் தமிழ் சாகுதோ இல்லையோ தமிழர்கள் தமிழை நேசிக்கிறார்கள். அவ்வளவுதான்.

முத்துகுமரன் said...

மொழியின் அழிவு அந்த இனத்தின் அழிவிற்கான தொடக்கம் என்பதை தாங்கள் அறியவில்லையோ...

அல்லது அறிந்திருந்தும் அறியாதது போல் இருக்கிறீர்களா?

Anonymous said...

முட்டாள் தனமான பதிவு

சுரேஷ் கண்ணன் said...

அன்புள்ள சுப்ரமணியன் கார்த்திகேயன்,

நல்ல பதிவு. ஆனால் ஆரம்பப் பத்தியில் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை வளர்ச்சியைப் பற்றி கூறிவிட்டு 'தமிழினி மெல்லச் சாகும்' என்பது முரணாக இல்லை? வளரும் தொழில்நுட்பத்தோடு இயைந்து போகும் எந்த மொழியும் வளர்ச்சிப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கும்.

என்றாலும் நீங்கள் சொல்ல வந்தததின் ஆதாரமான கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மொழியை அறிவுப்பூர்வமாக அல்லாமல் வெறும் உணர்ச்சிப்பூர்வமாக அணுகுபவர்களே இங்கு அதிகம். இவர்களால் அந்தந்த மொழியின் வளர்ச்சிக்கு எந்த பயனுமில்லை. நீங்களே குறிப்பிட்ட மாதிரி மொழி என்பது ஒரு தொடர்பு சாதனமே என்கிற ஆதார நோக்கத்தை உணராமல் அதை தாயோடும் உயிரோடும் மண்ணோடும் சம்பந்தப்படுத்தி அதை உச்சியில் வைத்து உருப்பட விடாமல் ஆக்கி விட்டார்கள்.

ஆனால் மொழி என்பது ஒரு குழுவின் அடையாளம் என்பதும், தன் அடையாளத்தை இழக்க எந்த குழுவும் சம்மதிக்காது என்பதும், ஏதாவது ஒரு அடையாளத்தோடுதான் - விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் - நாம் வாழ வேண்டியிருக்கிறது என்பதையும் நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

ராம்கி said...

Good effort. Keep it up!

மோகன்தாஸ் said...

//மொழிப்பற்று என்ற கற்பூர வாசனையை நுகர்வதை விட கழுதையகவே இருந்துவிட்டுப் போகலாமோ எனத் தோன்றுகிறது.//

அந்த பழமொழி கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை. பழமொழியை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். உங்களின் நுனிப்புல் அறிவு விளங்குகிறது. உங்களுக்கான பதில் நீங்கள் குறிப்பிட்ட அந்த பாரதியின் பாடல் வரிகளிலேயே கிடைக்கும்.

சிங். செயகுமார். said...

கோயம்புத்தூர் காரரே நாலாம் கிளாஸ் படிச்சவனே தத்தக்க பித்தக்கன்னு எனக்கும் இங்கிலீஸ் தெரியும்னு தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்து கொல்ராங்க, நெரைய படிச்ச அறிவு ஜீவிகள் உள்ள இந்த தமிழ்மனத்தில் அழகான தமிழில் அவர்களின் பதிவுகள் பார்க்கும்போது மனசுக்கு எவ்வளவு ஆனந்தமா இருக்கு தெரியுமா? இதுல எல்லா பதிவும் மேஞ்சிட்டென்னு ஒரு சேதி .எண்ணங்னா நியாயம்?
இது போன்ற உங்களின் பதிவுகள் நிறைய எதிர் பார்க்கிறேன்

Anonymous said...

மொழி வந்து காலச்சாரத்தின் சின்னம், மொழியை அழியவிட்டால் நமது கலாச்சாரத்தை அழியவிட்டதாய் சமம்!!!
ஒண்றும் இல்லா விடயத்துக் கெல்லாம் போராடுகிறார்கள் (எ+கா இந்த கண்றாவி கற்பு விவகராம்) தமிழ்மொழி பற்றிய அக்கறை தமிழ்நாட்டில உண்மையில் எத்தன அரதியல்வாதிகளிடம் இருக்கு?

கீதா said...

தமிழ்த்தாய் (மகாகவி சுப்பிரமணிய பாரதி)

ஆதிசிவன் பெற்று விட்டான் -
.........
......
.....
........

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்ககளின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசை யெனக் கெய்திட லாமோ!
சென்றி டுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

தந்தை அருள்வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

Suka said...

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி. இந்த தலைப்பை தேவையில்லாமல் மிகைப்படுத்த தேர்ந்தெடுத்துவிட்டேனோ என்று உணர்கிறேன். இருந்தாலும் இவ்வளவு பேரின் கவனத்தை ஈர்த்து தங்கள் கருத்துதளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது என எண்ணும் போது மகிழ்ச்சியாகவே உள்ளது.

உங்கள் கருத்துகளில் இருந்தும் நான் அறிந்து கொள்ளுவது எராளம். பகிர்ந்து கொள்ளுவதிம் நோக்கமே மற்றவர் கருத்துகளையும் அறிந்து படிப்பினைகளைப் பெருவது என கருதுகிறேன்.

பலர் கூறியுள்ளது போல் இது நுனிப்புல் மேய்ச்சல் தான். இப்போது தான் பசிக்க ஆரம்பித்திருக்கிறது; மேய ஆரம்பித்துள்ளேன். எனவே கருத்துகள் அதிக பிரசங்கித்த்னமாக தோன்றினால் பொருத்துக் கொள்ளுங்கள். இங்குள்ளவர்களின் அனுபவங்களைப் பார்க்கும் போது நான் இன்னமும் கற்றுக்குட்டி தான்.

உணர்வு பூர்வாக பார்க்காமல் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து நல்வழிப் படுத்தினால் உபயோகமாகவும் இருக்கும். எனக்கு நல்ல மாணவனாக மற்றவர்களின் தகுந்த கருத்துகளை ஏற்றுக் கொள்ளுவதே விருப்பம்.

நன்றி
சுகா

சந்தோஷ் aka Santhosh said...
This comment has been removed by a blog administrator.
சந்தோஷ் aka Santhosh said...

உங்களின் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனால் உங்கள் திறமையை நல்ல காரியத்திற்காக பயன்படுத்தும் முயற்சி பாராட்டத்தக்கது.

சந்தோஷத்துடன்
சந்தோஷ்

Suka said...

தலைப்பினைப் பற்றி
==================

இந்த தலைப்பினில் நான் அழுத்தமாக கூற வந்தது 'மெல்ல' என்பதையே. நண்பர்கள் பலர் பாரதியின் பதிலளித்திருந்தனர். 'மெல்ல தமிழினி சாகும்' என்பதனோடு 'தமிழினி மெல்லச் சாகும்' என்பதை ஒப்பிட்டுருந்தனர். பாரதி கூற வந்தது அறிவுரை. நான் சொல்ல வந்தது சிலாகிப்பு.

என்னைப் பொருத்தவரை 'பல்லாண்டு வாழிய' என்பதற்கும் 'மெல்லச் சாகட்டும்' என்பதற்கும் வித்யாசமில்லை. பிந்தையது என்னுடைய பாணி எனக் கொள்க. கூற வந்த கருத்து இது தான் என்பதை முதல் பத்தியில் எழுதியிருந்தேன்.

கடந்த சில வருடங்களாக கணினியுலகில் தமிழ் பலமைல்கல்களை கடந்துள்ளது. தமிழ் இணையம், வலைப்பூக்கள் ..ஏன் தமிழ் லைனக்ஸ் என பற்பலவற்றிலும் மேலோங்கி வருவதால் தமிழ் இனி 'மெல்லவே' சாகும்.

சாவு எனக்குமுண்டு. அதை மறுப்பதால் மறப்பதால் மறைப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை. அது நிதர்சணம். எதார்த்தங்களைப் பகிர்ந்து கொள்ள முகமூடிகள் தேவையில்லை என்பது கருத்து.

மறுமொழிகள்
===========

சிகிரி,
தமிழை நேசிக்க முடியுமா? தமிழ் மூலமாக வேண்டுமானால் நேசிக்கமுடியும். நான் அதை வரவேற்கிறேன்.

முத்துக்குமரன்,
மொழி இனம் என்பவை மனிதர்களை ஒன்றுபடுத்த மனிதர்களாள் உண்டாக்கப்பட்டவை. ஒன்றுபடுத்துவதின் நோக்கம் தற்காப்பு. அதில் தவறேதுமில்லை. இந்த நோக்கம் மறக்கப்படும் வேளைகளில் மொழி அல்லது இனமே அழிக்கும் ஆயுதமாக மாறுகிறது என்பதே நான் கூறவந்தது.

சுரேஷ் கண்ணன்,
தலைப்பு பற்றி நான் சொல்லவந்ததைப் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். தினமும் அணியும் முகமூடிகள் தவிர்த்து பட்டென பேசிவிடும்போது சிறிது விவகாரமாகவே போய்விடிகிறது என உணர்கிறேன் :)
மொழி இனம் எல்லாம் வெறும் அடையாளங்களே. அவை தனித்துவம் பெற நடத்தும் போராட்டங்கள் போர்கள் எல்லாம் அழிவிற்கே. வரலாறுகள் காட்டுவது இவை முடிவிலியென்று. நான் நம்புவது நம் பரிணாம வளர்ச்சியையே.

சிங்.செயக்குமார்,
நான் மேய்ந்தது தமிழ்மணத்தில் ஒரு சதவீதம் கூட இருக்காது :) நான் கூறவந்தது, பேசும்/எழுதும் மொழிகளை விட பார்க்கும் உணரும் மொழிகள் தெளிவானவை, அவற்றில் நீங்கள் நிணைப்பதை மிகச்சரியாக பகிர்ந்துகொள்ள சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதே.


அனைவர் கருத்துக்களுக்கும் நேரத்துக்கும் நன்றி.

Anonymous said...

//சாவு எனக்குமுண்டு. அதை மறுப்பதால் மறப்பதால் மறைப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை.//
சாவு உங்களுக்கு உண்டு. உண்மை. ஆனால் உங்களை எப்படித் தமிழுடன் ஒப்பிட முடியும்? தமிழுக்குச் சாவு என்றும் இருக்கப்படாது என்பதே அனைவரினதும் விருப்பம்.

Suka said...

விருப்பங்களும் விளைவுகளும் வேறல்லவா. நான் உங்கள் விருப்பத்தினை மதிக்கிறேன். தமிழ் வாழ வேண்டுவோர் உண்மையில் தமிழால் பிறரோடு மனிதம் பாராட்ட விரும்புவோர் என்றே கருதுகிறேன்.

நன்றி

ஜீவா (Jeeva Venkataraman) said...

நல்ல கட்டுரை, நல்ல கருத்து. ஓங்கிப் பிடியுங்கள் உங்கள் தீபத்தை, பட்டொளி வீசி பரவட்டும், எட்டுத்திக்கும்!