Friday, December 16, 2005

வில்வ மர ஐதீகமும் விவகாரமான பக்தர் கூட்டமும்...

இது ஒரு உண்மைச் சம்பவம். இந்த பதிவு இதை நினைவுபடுத்திவிட்டது.

ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டிலிருந்து அனைவரும் ஒரு தனியார் அமைப்பு மூலமாக நவகிரக சுற்றுலா சென்றிருந்தோம். அதில் ஒரு பகுதியாக நல்ல செழிப்பான கிராமங்களின் நடுவே அமைந்துள்ள சந்திரன் கோவிலுக்கு காலை பத்து மணியளவில் சென்றடைந்தோம்.

நாங்கள் சென்ற நேரம் பார்த்து எங்களுக்கு முன்னால் பேருந்தில் வந்த ஒரு பக்தர்கள் கூட்டம் தரிசனம் செய்து கொண்டிருந்தது. நாங்கள் பிரகாரத்துக்கு வெளியே வரை நீண்டிருந்த வரிசையில் நின்று மிகமெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தோம். ஊர்ந்து ஊர்ந்து ஸ்தல விருட்சம் என்று ஒரு சிறிய மரமும் ஒரு மூர்த்தியும் இருந்த திண்ணை அருகில் வந்து நின்றோம். எங்கள் வரிசைக்குப் பிறகு வேறொரு பேருந்தின் கூட்டமும் சத்தமும் சேர்ந்து கொண்டன.

கூட இருந்த அண்ணன் பொறுமை இழந்திருந்தார். என்ன பண்ணுவது எனத் தெரியாமல் அந்த வில்வமர இலைகளைக் கிள்ளிக் கொண்டிருந்தார். பின்னால் இருந்த பெரியவர் எதற்கு இலையைப் பறிக்கிறாய் என்றதற்கு 'இந்த இலையைப் பறித்து இந்த மூர்த்தியின் தலையில் வைத்து வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்றொரு ஐதீகமாம்..' என கொஞ்சம் சிரத்தையாகவே சொல்லிவிட்டார். பின்னால் ஒரு பெண்மணியும் இதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

கூட்டம் நகர ஆரம்பித்திருந்தது. ஒருவழியாக பிரகாரத்தை சுற்றி கடவுளைத் தொழுது வெளியே வந்து அமர அரைமணிக்கு மேலாகியிருந்தது. கூட்டம் குறைந்திருந்த வேளையில் சிறிது நடை பயின்று வந்து அந்த மரம் இருந்த இடத்தை அடைந்தால் அதிர்ச்சி. கைக்கு எட்டிய தூரம் வரையில் அந்த சிறிய மரத்தில் இலையே இல்லை. மூர்த்தியைப் பார்த்தால் இலைக் குவியலில் மூழ்கிவிட்டார்.

இதை பேருந்தில் சொல்லி அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தோம். உண்மையில் இப்போது இச்சம்பவம் பல பாடங்களை எனக்குச் சொல்லிக்கொடுக்கிறது. இவை குறித்து நான் எண்ணுவதை ஏற்கனவே எழுதிவிட்டேன். இன்னொரு கதையிலும் கூட.

No comments: