Friday, December 23, 2005

நானறிந்த கடவுள் - 1

எத்தனை வயதில் கடவுள் பக்தி தோன்றியது என நினைவில்லை. நான் கவலைப் படும்போதெல்லாம் கடவுளை விட்டுவைத்ததில்லை என்று மட்டும் நன்றாக நியாபகம் இருக்கிறது.

சின்ன வயதில் கடவுள் ஒரு வித பயத்தையும் பாதுகாப்பையுமே அளித்திருந்ததாக உணருகிறேன்.

சின்ன வயதில் இருட்டில் தனியாக போக நேர்ந்தால், நாயொன்று நடந்து போகும் நம்மை ஒரு மாதிரி பார்த்தால் இதயத்துடிப்பை விட அதிகமாக கடவுள் பேரை சொல்லிக் கொண்டே கடந்ததை எண்ணிப் பார்க்கிறேன். எப்படியிருந்தாலும் வீட்டு வாசலோடு கடவுளை கழட்டிவைத்து விட்டே சென்றிருக்கிறேன்.

குறிப்பாக பள்ளியின் பரிட்சை நேரங்களில் மட்டும் பக்தர்கள் பலரைக் கொண்டிருக்கும் அரச மரத்தடி பிள்ளையாரின் குறுகிய கால பக்தர்களில் ஒருவனாக இருந்திருக்கிறேன். கனவில் பரிட்சையின் கேள்வித்தாள் வருவதாக சக மாணவன் கூறக்கேட்டு நானும் பலவகையிலும் முயற்சித்திருக்கிறேன். கனவுகளுக்காக செலவிட்ட நேரத்தில் படித்திருந்தால் இன்னும் நிறைய மதிப்பெண் பெற்றிருக்கலாமோ என இப்போது நினைக்கிறேன்.

கூடைப்பந்து விளையாடப் போகையிலும் பிள்ளையாரை ஒரு நிமிடம் பார்த்துச் சென்ற போதெல்லாம் அவரின் வரம் நிறைய முறை எங்களை நிறைய முறை ஜெயிக்க வைத்திருப்பதாகவே உணருகிறேன். அவர் கொடுத்த வரமெல்லாம் தன்னம்பிக்கை தானோ.

கருவறையின் முன்பு நின்று வேண்டும் போதெல்லம் கூடியமான வரை சுய நலமான வரங்களையே கேட்டதாக உணருகிறேன். ஆசிரியர் ஒருவர் அறிவுரை கூற "எல்லாரும் நல்லா இருக்கணும்" என்பதையும் என் வேண்டுதல்களில் பின்னாளில் சேர்த்துக்கொண்டேன். இந்த விஷயத்தில் என் போலவே பலர் இந்த வரியை மட்டும் வாய்விட்டு வேண்டுவதைக் கேட்டிருக்கிறேன். " எல்லாரும்ன்னா , திருடன் அயோக்கியர்கள் கூடவா? அவங்க நல்லா இருந்துட்டா நாம இருக்க முடியுமா?" தோன்றியது. அதுவும் இன்னொரு கேட்க மறந்த கேள்வியாயிற்று.

பரிட்சைத்தாளில் மேலே 'உ' போட்டு 'முருகன் துணை' என எழுதித் தான் துவங்கிக் கொண்டிருந்தேன். உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர்க்கு பிடிக்காத காரணத்தால் நிறுத்த வேண்டியதாய்ப் போயிற்று. ஆரம்பப் பள்ளியிலிருந்தபோது இருந்த சில வேண்டுதல்களும் உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற பிறகு சிறிது மாறிவிட்டிருந்தன. பதிலே எழுதாத கேள்விகளுக்கும் மதிப்பெண் வரவேண்டும் என்ற வேண்டுதல்கள் கொஞ்சம் மாறி, " ஆண்டவா..இந்த கேள்விக்கு பதிலை ஆசிரியர் மேலோட்டமாக பார்த்தே தான் மதிப்பிட வேண்டும் " என்ற அளவிற்கு மாறியிருந்தது. கொஞ்சம் எதார்த்தமாகிவிட்டிருந்தது என்று கூடச் சொல்லலாமோ..

வெள்ளிக்கிழமைக் கூட்டுப் பிராத்தனைகளுக்கு பூப்பறிப்பதில் ஒரு போட்டியிருக்கும். ஆரம்பப் பள்ளியுல் இருக்கும் போது சாமிக்கு அலங்காரம் செய்யும்போது ஒவ்வொரு பூவுடனும் ஒரு வரம் வேண்டப்பட்டிருக்கும். உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற போது வரங்களைவிட இதற்குக் கிடைக்கும் ஒய்வு நேரங்களும் அதில் நண்பர்களுடனான விளையாட்டுமே சிறிது முக்கியமாகப் பட்டது.

வயது ஆக ஆக கடவுளைக் கடமைக்காகக் கும்பிட நேர்ந்ததையும் நினைத்துப் பார்க்கிறேன். பள்ளிப் பேருந்து போவதற்குள் பிடிக்கவேண்டும் என்ற அவசரத்தில் எந்த வரத்தையும் வேண்டாமலும் சிலசமயம் திருநீறை அணிந்து சென்றிருக்கிறேன். என்ன தான் வயது தன்னம்பிக்கையைக் கூட்டினாலும் பரிட்சைகள் என்னை பலமுறை பழைய அரச மரத்தடிக்கு இழுத்துச் சென்றிருக்கின்றன.

இப்போது நினைத்துப் பார்த்தால், நான் என் தேவைக்கும் திறமைக்கும் அதிகமாக ஆசைப் படும்போதெல்லாம் பக்தி மார்க்கமாக இருந்திருக்கிறேன் என்றே உணருகிறேன். கண்டிப்பாக வெற்றி பெருவேன் என்று நினைத்த சில காரியங்களில் கடவுளைக் கண்டி கொள்ளாமல் விட்டதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

பண்டிகைக்காலங்கள் எனது பக்திக் கோலத்தின் பொற்காலங்கள். சுண்டல் , கொழுக்கட்டைகளுக்காக அப்படி பக்தி மயமாய் திரிந்தேனா..இல்லை கடவுள் பயமா.. நினைவுபடுத்தினால் கொழுக்கட்டையே ஜெயிக்கிறது.

பொங்கல் என்றால்... முந்தைய இரவில் விடிய விடிய வாசல் கோலம் போடுவதும் அடுத்த நாளின் கரும்பு மற்றும் சக்கரைப் பொங்கலின் சுவையும் தான் நினைவிலிருக்கிறது. கதிரவனுக்கு படைக்கும் போதும் என் கண்கள் பானையின் நெய் வழியும் பொங்கலையே பார்த்திருந்தன. கடவுள் பொங்கலுக்கு அடுத்தபடியே.

இதெல்லாம் சிறுவயதில்.. ,கல்லூரி வேலை என்று வந்த பிறகு என்ன மாற்றங்கள் ? தொடர்ந்து எழுதுகிறேன்.

4 comments:

[ 'b u s p a s s' ] said...

மிகவும் நன்றாக உள்ளது உங்கள் எழுத்து. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

Suka said...

கொஞ்சம் வளவள என்று தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். என்ன செய்ய.. கொஞ்சம் உணர்வு பூர்வமான விஷயம்.

வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி, 'buspass'

சுகா

jeevagv said...

நல்ல தொடக்கம், தொடரட்டும்!

Suka said...

நன்றி ஜீவா.

சுகா