Tuesday, January 03, 2006

நானறிந்த கடவுள் - 3

காலையில் சுப்ரபாதமும், சூலமங்களம் சகோதரிகளின் கந்த சஷ்டி கவசமும் கேட்கும் போது மனம் அடையும் அமைதிக்கு இணையேது. எம் எஸ்ஸின் 'குறையொன்று மில்லை..' யைக்கேட்கும் போது மறைமூர்த்தி கண்ணனைக் கற்பனை செய்து கண்களை மூடி மெய்மறக்காதவர் எத்தனை பேர். ஆயிரம் குறைகள் இருந்தாலும் இப்பாடலைக் கேட்கும் தருணங்களில் அந்தக் குறைகள் நுனிப்புல் பனித்துளியாய் சுவடற்று மறையும் மாயமென்ன?

கூட்டுப் பிரார்த்தனை வகுப்பில் 'தேனினிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே..' எனப் பாடும் போதும் 'அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே தேடிவரும்' என பாடும்போதும் நான் வேறு எதையும் பற்றி நினைத்ததில்லை. வெயில், வீட்டுப் பாடம், வகுப்புத்தேர்வு என அப்போது இருந்த பெரிய கவலைகள் இறைவனைத் துதிக்கும் அந்த நொடியில் இருந்ததில்லை. இத்தனை வசதிகளைத் தரும், அற்புதங்களை நிகழ்த்தும், மனதை அமைதிப் படுத்தும் கடவுளை ஆராயத்தேவையென்ன?

சிறு குழந்தைகளின் வழிகாட்டியாக இருக்க கடவுளைவிடத் தகுதியானது வேறேதும் உண்டா? "பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும்" என்று சொல்வதைவிட குழந்தையை பொய் சொல்லாமல் தடுக்க சுலபமான வழியேதும் உண்டா? நம் விளக்கத்தைப் புரிந்து கொள்ளும் மூளை வளர்ச்சியும் இருக்காது. அனைத்தையும் தெரிந்த, அனைத்தையும் கண்காணிக்கும் ஒரு கண்டிப்பான ஆசிரியராகவே கடவுளை சிறுவயதில் உணர்ந்துள்ளேன். இத்தகைய நல்வழிப்படுத்தும் சக்தியை ஆராய்ந்து வாழ்க்கையின் பொன்னான தருணங்களை வீண் செய்வானேன்?

இத்தனை கேள்விகள் மனதினில் ஓடினாலும் ஒரு சில நெருடல்கள்.

நாம் மனதை அமைதிப் படுத்தும், கவலைகளை மறக்கச் செய்யும் அனைத்தையும் அற்புதங்கள் என்று ஒப்புக் கொண்டு அதன் வழிநடக்க விரும்புவதில்லை. அப்படியில்லையெனில் இன்று ஒப்பியமும், இதர போதைப் பொருட்களும் கடவுளை விட பெரிய சக்தியாயிருக்கும். கடவுளை இவற்றுடன் ஒப்பிட முடியாது ஏனெனில் அதற்கு ஒரே காரணம் தான். பக்கவிளைவுகள்.. போதைப் பொருட்கள், வாழ்வின் நிம்மதிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுபோல் தோன்றினாலும் அது ஆயுளைக் குறைக்கும் பக்கவிளைவையும் அல்லவா கொண்டிருக்கிறது. நமக்கு ஆயுள் மிக முக்கியம், நமது வாழ்நாளின் ஒவ்வொரு நொடியிலும் அதை உணர்கிறோம். போதைப் பொருளின் போதை அந்த உணர்வையே அளித்துவிடும். அழிவுப்பாதையெனத் தெளிவாக உணர்ந்தும் நம்மை அதே பாதையில் செலுத்தும் வல்லமை அதற்குண்டு.

இதையே வேறு மாதிரியாகக் கூறினால், மனிதனின் ஆயுளை குறைக்கும் எதுவும் மனித குலத்திற்கு நல்லதல்ல. அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்லுபவை பல அது அழிவுப்பாதை என்ற உண்மையை சாமர்த்தியமாக மறைக்கின்றதோ எனத் தோன்றுகிறது. மனிதனை நல்வழிப் படுத்துவதற்காகத் தோன்றிய மதங்களும் சாதிகளும் பிரிவினைகளை உருவாக்கி போராட்டங்களை, போர்களை உருவாக்கி கூட்டம் கூட்டமாக அழிக்க ஆரம்பித்தால், அதை உணர்ந்து கொள்ள முயல்வது தவறா? இந்த மதங்களின் சாதிகலின் அடிப்படை கடவுள் தானோ? இது மறக்கப்பட்டால் போராட்டங்களும் போர்களும் குறையுமோ? தீவிரவாதிகளும் அவர்களைத் தேடுரவாதிகளின் அளவிற்கே நியாயமான கடவுள் நம்பிக்கை உள்ளவர்தாமோ?

குழந்தைகளாக இருந்தபோது வழிகாட்ட வந்த கடவுளே வளர்ந்து 'பக்குவப்பட்ட' பின் பிரிவினைக்கும் அழிவிற்கும் வழிவகுப்பதைப் பார்த்தால்,
"கடவுளும் கற்று மற" என்றே எண்ணத் தோன்றுகிறது.

6 comments:

G.Ragavan said...

இல்லை சுகா. அப்படியில்லை சாதி/மத வேறுபாடுகள் பாராட்டுகின்றவர்கள் தங்களுடைய நலனுக்காகக் கடவுளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.

கடவுள் நம்பிக்கை என்பது இருந்தே தீரும். கடவுளைக் கற்று ஏன் மறக்க வேண்டும். கற்க கசடற. பொதுவாகவே தமிழ்ச் சமய நூல்கள் சாதி/மத வேறுபாடுகளைப் பாராட்டியதில்லை.

மணியன் said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது. மதம் 'மதமாய்' தலைக்கேறும் போது கடவுளே வேண்டுமா எனத் தான் தோன்றுகிறது. கண்ணனும் கந்தனும் நாம் உருவாக்கியவர்கள்தானென்று தெளிந்தாலும் சிறுவயதிலிருந்து நம்மோடு பழகிய தோழர்களாக காணும்போது அவர்களைப் பிரிய மனமில்லை. முக்கியமாக வாழ்வில் தனிமைப்படும்போதெல்லாம் அந்த எல்லாம்வல்ல தோழர்கள் பக்கத்திலிருந்தால் கிடைக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் மதிப்பிற்கரியது.நமது முன்னோர்கள் கடவுளை உருவமாகவும், அருவமாகவும், உருவருமாகவும் உங்களுக்கு பிடித்த வகையிலே அமைத்துக் கொள்ள சுதந்திரம் கொடுத்தும், தாங்கள் கண்டதே கோலம் என்று சாமிகளுக்குள்ளேயே பேதம் கண்டு அலையும் மாந்தரை கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லைதான்.
என்னைக் கேட்டால் ஆன்மிகம் தனிமனிதனுக்கானது; அவன் எப்படி வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வேண்டிக்கொள்ளட்டும். மதம் என்னும் போதைதான் தேவையில்லை.

G.Ragavan said...

சரியாகச் சொன்னீர்கள் மணியன். அதனால்தான் "குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்" என்று கூறியிருக்கின்றார் அருணகிரி. சுகா, கூட்டிக் கழிச்சி பாருங்க. எல்லாம் சரியா வரும்.

Suka said...

வருக ராகவன் ..
வருக மணியன் ..

உங்கள் பொறுமைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி.

உங்கள் இருவரின் கருத்துக்களும் நன்று. சிந்திக்கிறேன், பிறகு எனக்குத் தோன்றுவதை பகிர்ந்துகொள்கிறேன்

வாழ்த்துக்களும் வணக்கங்களும்..
சுகா

jeevagv said...

//இத்தகைய நல்வழிப்படுத்தும் சக்தியை ஆராய்ந்து வாழ்க்கையின் பொன்னான தருணங்களை வீண் செய்வானேன்?//
"சாமி கண்ணைக்குத்தும்" என்று சொன்னாதால்தானே, இப்போது நீங்கள் "யாரிந்த சாமி?" என்ற தேடலில் இறங்கி இருக்கிறீர்கள்..!

கடவுள் என்பது தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய பொருள்.
சொல்லிப்புரிவதில்லை கடவுள்!
//இந்த மதங்களின் சாதிகலின் அடிப்படை கடவுள் தானோ?...//
கடவுள் வேறு, மதம் வேறு.
கடவுளுக்கு மதம் தேவையில்லை, ஆனால் மதத்திற்கு கடவுள் தேவைப்படுகிறது.

Suka said...

நன்றி ஜீவா !

தேடுதல் நிற்கப் போவதில்லை. கடவுளால் தான் மதம் தோன்றியது என்றே கருதுகிறேன்.

கடவுள், மதம் மட்டுமில்லாமல் இன்ன பிற விஷயங்களில் மாற்றுக் கருத்துக் கொண்டோருக்கிடையேயான போராட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இந்தப் போராட்டங்களில் ஒருவன் நிரூபிக்க நினைப்பது தன்னையும் தன் திறமையையுமே தவிர மதத்தையோ கடவுளையோ அல்லது வேறு எதோ ஒன்றையோ அல்ல என்றும் தோன்றுகிறது.

நன்றி
சுகா