Monday, January 16, 2006

நானறிந்த கடவுள் - 4

எனக்குப் பல விஷயங்கள் புரிவதற்கு முன்பே பழகிப்போயிருந்தன. பழக்கப் படுத்தியவர்கள் நம் நம்பிக்கைக்குரியவர்களாதலால் கேள்விகள் கேட்டு விளங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்ததில்லை. சிறிய வயதில் நம் தேவைகள் சிறியது. கவனம் அதில் மட்டுமே. மற்றவைகளை ஆராயத் தோன்றியதில்லை. சிலவற்றை சடங்காகச் செய்து முடித்து அடுத்த நொடியினில் அதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் அடுத்த பிடித்த வேலைக்குத் தாவ முடிந்தது.

இளங்கன்று பயமறியாது. வளர்ச்சி ஒரு வித பயத்தையே நமக்குள் விதைக்கிறது. நிகழ்காலத்தைப் பற்றியே எண்ணி ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவிட்டுக்கொண்டிருந்த குழந்தையின் நிலை மாறி, பள்ளி படிப்பு பட்டம் என குறிக்கோள்கள் தோன்றத் தோன்ற எதிர்காலத்தைப் பற்றிய பயத்தில் நிகழ்காலம் கழிய ஆரம்பித்தது. பயம் என்பது கூட தவறான வார்த்தைப் பிரயோகமாய்த் தோன்றலாம். எதிர்காலத்திற்கு எப்பேர்ப்பட்ட திட்டங்களைத் தீட்டி செயல் படுத்துவோர்க்கும் கூட அவர்களின் ஆசைகளும் ஆசைகளை நிறைவேற்றும் காரணிகளைப் பற்றிய பயங்களே திட்டங்களாகத் தீட்டப்படுகின்றன.

பயம்... மிக நல்ல உணர்ச்சி. தனிமனிதனைச் சமுதாயமாக மாற்றுவதும் அதுவே. உயிர் அருமையானது. போனால் திரும்ப வரப் போவதில்லை இந்த உண்மையை அறிந்தது ஒருவகை வளர்ச்சியே. உயிரைக் காப்பது குறித்த பயம் அனைவருக்குமிருந்தது. பொதுவான விஷயங்கள் இணைப்பது இயல்புதானே. பொதுவான இயல்பிருந்தாலும் இதிலேது திருப்தி. அனைவரும் ஒரு விதமே.. அதே உடலமைப்பு .. அதே பயம். இது போததே..

தேவை ஒரு காப்பு.. என் உயிரைக் காக்க ஒரு சக்தி.. மூளையின் பிழவுகள் அதிகமாயின.. தன் பசியை மட்டுமே அறிந்திருந்த மனிதன்... எப்படியோ வாய்வழியே வயிற்றுக்கு உணவளிக்கும் வித்தையைக் கற்றிருந்தான்.. தேவைகளைத் தீர்த்துக் கொள்வதில் மனிதனைவிட புத்திசாலி வேறேதும் இல்லை என அவனே பின்னாளில் பிதற்றினான்.. வயிற்றுக்கு உணவளித்தவனுக்கு நீர் , நெருப்பு காற்று பிற மிருகங்கள் மனிதர்களிடமிருந்து காக்க மாபெரும் சக்தி ஒன்று தேவைப் பட்டது.. நிலத்தடியே குழங்குபோல அது சுலபமாகக் கிடைக்காது என்பது அப்போதே புரிந்திருந்தது.. அந்தச் சக்தியின் தேவை ஏக்கமாக மாறியது.. ஏக்கம் தீர வழியேதுமில்லாததால் .. ஏக்கங்களும் பொதுவாகின..

ஏக்கங்கள் பழகியியும் போயிருந்தன.. மனிதனே குகை பிடித்து .. நெருப்பைக் கண்டுபிடித்துத் தன் பயங்களில் சிலதைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தான்.. பழைய கவலைகள் மறந்தாலும் புதிய பயங்கள் தோன்றிய வண்ணமேஇருந்தன.. புதிய பயங்கள் பழைய ஏக்கங்களைத் தக்கவைத்துக் கொண்டிருந்தன .. மனிதனின் வாரிசுகள் மனிதனின் ஏக்கப் பிதற்றல்களை கவனித்துவந்தன.. காரணங்கள் புரியாமல் காரியங்கள் கற்றுக் கொண்டன...வாரிசுகளுக்கு வாரிசுகள் வந்தன.. காரியங்களுக்கு காரணங்கள் தேவைப்படும் காலம் வந்தது. ஏக்கப் பிதற்றல்கள் வழிபாடுகளாயின.. தோனுமிடமெல்லாம் சக்திகள் தோன்றின .. கடவுள்கள் ஆயின... புரியாதவைகளெல்லாம் புனிதங்கள் ஆயின. கண்ணுக்குத் தெரியாதவைகளில்லாம் தெய்வங்கள் ஆயின..

மனிதனுக்குப் பிடித்திருந்தது.. கடவுளைப் படைத்ததை உணராமல் கடவுளால் படைக்கப்பட்டோமென நம்புவது பிடித்திருந்தது. தனைக் காக்கச் சக்தியொன்று உண்டு எனும் நம்பிக்கை அவனுக்கு அமைதியைக் கொடுத்தது. கிழங்குகளைத் தேடி அலைந்த நாட்களில் சில விஷக் கிழங்குகள் அவனுக்கு அளித்த மயக்கம் அவனது மற்றபயங்களைப் போக்கிய மயக்கம் பிடித்திருந்தது...அவன் இறந்து கொண்டிருப்பதைக்கூட அவனால் உணராமல் அவனால் அந்தக் கிழங்கை ரசிக்கமுடிந்தது.

மூன்றாம் உலகப் போரென்று ஒன்று வந்தால் அதிலிருக்கும் பிரிவுகள் இந்த மாயையின் பக்கவிளைவுகள் என்பதை மறப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. என் தேவைகளைச் செய்ய உழைத்துவிட்டு உழைப்பின் பயன் கிடைக்காமல் போனாலென்னவாகும் என்ற பயத்தை நீக்கும் என் புண்ணியங்கள் பிடித்திருக்கிறது. சிலவேளைகளில் உழைக்கவும் தோன்றாமல் பலனை மற்றும் எதிர்நோக்க வழியமைத்த வழிபாடும் நிம்மதியே. செய்வன செவ்வனே செய்யாமல் பலனற்றுப் போனால் என் துரதிருஷ்ட்டம் எனக்கு ஆறுதலளிக்கிறது. கண்ணயரும் வேளையிலே காப்பாற்ற ஒருவன் இருக்கின்றான் என்ற போதை தூக்கமாக எனக்கு இனிக்கிறது.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோ ம் நடலையல்லோம்
எமாப்போம் பிணியறியோம்..."!

சுகா

No comments: