Saturday, December 31, 2005

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 2

முதல் பாகம் இங்கே..

சிவாஜி கேட்டதும் கவுண்டமணி, "அன்னைக்கு என்ன நடந்துச்சுனாங்கையா..." என பிளாஸ்பேக்கை எடுத்துவிட எந்த சிரமமுமில்லாமல் அறையிலிருந்த அனைவரும் ஒரு கொசுவர்த்தி சுருள் சுருள டைம் மெஷினில் பயணம் செய்து அந்த நாளை அடைந்தனர்.

கவுண்டமணி எதோ ப்ரொகிராமை ஒப்பன் சோர்ஸ்ஸில் இருந்து காப்பியடித்துக் கொண்டிருக்க அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த செந்தில் பவ்யமாக "அண்ணே.. எப்பிடின்ணே... இவ்வளவு வேகமா கோடிங் முடிக்கறீங்க..?" என்றார்.

"டே..மண்டையா.. அதெல்லாம் தனித்திறமைடா... இங்க பாரு இந்த கீபோர்டுல கசகசன்னு எத்தனை கீ ன்னு.. அழகா காபி பேஸ்ட் டுனு ரெண்டு பட்டண் பத்தாது...."

"அண்ணே .. சூப்பர்னே.."

" டே.. இதெல்லாம் போயி எல்லார்கிட்டயும் சொல்லனும்டா.. அண்ணன் ஒரு வல்லவரு நல்லவரு .. கோடிங்ல ஒரு புலின்னு.. குறிப்பா நம்ம டாக்குமெண்டேசன் டீம் இருக்கே அங்கே போய் சொல்லணும்... என்ன புரிஞ்சுதா..?.. ம்ம்...நான் என் அறிவுக்கு இந்தியாவுல இண்டியன் பேங்க்ல வேலை செய்ய வேண்டியவண்டா..ம்ஹும்..இங்கபாரு இந்த நாசமா போன நாசாவுக்கு கோடெலுத வேண்டியிருக்கு.."

"அக்காம்ணே.." என செந்தில் சிரித்துக் கொண்டே செந்தில் முன்னால் வர..

" டே.. ரெம்ப முன்னால வராத.. அந்த பவர் பட்டன்ல காலு பட்டுடுச்சுனா..எல்லாம் போச்சு.." என்று சொல்லி முடிப்பதற்குள்..

ஈ என சிரித்துன் கொண்டே " இந்த பட்டனையாண்ணே.." என அழுத்த ஸிஸ்டம் பட்டென அஃப் ஆனது..

"என்னண்ணே.. ஆஃப் ஆயிடுச்சு" என ஆச்சர்யமாய் கேக்க

"டேய் .. வைரஸ் வாயா.." என்ற படி மௌஸைத் தூக்கி அடிக்க வந்த கவுண்ட்ஸிடம் இருந்து தப்பித்து ஓடினார் செந்தில்.

மீண்டும் கொசுவர்த்தி சுருள் ரிவர்ஸில் சுற்ற கான்ஃபரன்ஸ் ரூமுக்கு வந்தனர்.

" என்ன மிஸ்டர் செந்தில் இதெல்லாம் கொஞ்சம் ஓவராப் படலை.. நல்ல நாள்ளயே வேலைய முடிக்கமாட்டார்.. இதுல நீங்க வேற..பார்த்து நடந்துக்குங்க.." என்றபடி அடுத்த ஐட்டத்திற்கு தாவினார் சிவாஜி.

" மிஸ்டர் வடிவேலு, லேப் செட்டப் எல்லாம் எப்பிடி போகுது.. ? லேப்ல இருக்கற எக்யூப்மெண்ட் ஷிப்டிங் மெஸின்ல உக்கார்ந்துட்டு.. அஸிஸ்டெண்ட்ஸைத் தள்ளச் சொல்லி ஆபிஸ் எல்லாம் சுத்திவந்து மெரட்டுறீங்களாம்.. என்ன பழக்கம் இது..?"

வடிவேலு " அய்யா.. இதெல்லாம் ஒரு கெட்டப்புக்கு தான்யா.. இல்லேன்னா அவனவன் லேபுக்குள்ள வந்து வயர கியர புடுங்கி போட்டுடாறானுக.." என்று வழிய..

"வயரு சரி.. அது என்ன கியரு.. நீ என்ன பல்லவன் பஸ்ஸா ஓட்டீட்டு இருக்க" என குரல் ஒன்று கேட்க.. வடிவேலு "ஆஹாஹா..நீ இங்கே தான் இருக்கிறயா " என்று மனசுக்குள் சத்தமாக நினைத்துக் கொண்டே திரும்ப..

வேற யாரு அங்க..லேப்டாப்பில் மறைந்திருந்த முகத்தை நிமிர்ந்தபடி பார்த்திபன்..

அப்புறம் என்ன நடக்குதுன்னு அப்புறம் சொல்லறேன்..

அடுத்த பாகம் இங்கே
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Friday, December 30, 2005

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி -1

சீரியஸாவே எழுதறீங்களே என நண்பர்கள் சிலர் அங்கலாய்க்க.. புத்தாண்டில் உங்களைச் சிரிக்க வைக்க ஏதோ என்னாலான முயற்சி..

2010-இல் சினிமா துறை நொடித்துப் போனதால் தமிழ் நடிகர்கள் சிலர் தமிழ்நாட்டின் விலைவாசியைத் தாங்கமுடியாமல் இலவசமாகக் கிடைக்கும் அமரிக்க விசாக்களை வாங்கிக் கொண்டு கலிஃபோர்னியா கடலோரமாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கின்றனர்.

முதல் பிராஜக்டாக அவர்களுக்கு நாசாவின் ஏவுகணை சம்பந்தமான ஏதோ ஒரு ப்ராஜெக்ட் தான் கிடக்கிறது. லோ பட்ஜெட் என்பதால் சீஈஓ ஏவிம் சரவணன் சிறிது தயங்கினாலும் வேறு யாரும் நம்மை நம்பிப் பிராஜக்ட் தரப்போவதில்லை என்ற எதார்த்ததை உணர்ந்து ஓகே சொல்கிறார்.

வைஸ் பிரசிடண்ட் சிவாஜியைக் கூப்பிட ப்யூன் லூஸ் மோகனை அனுப்புகிறார். லூஸ் மோகன் தனக்கே உரிய பாணியில் கூப்பிட டென்ஸனாகி நிமிர்கிறார். விஷயத்தை கேட்டு யாஹூவில் ச்சேட் செய்து கொண்டிருந்த விண்டோவை மூடிவிட்டு, தங்கப்பதக்கம் ஸ்டைலில் பீடு நடை போட்டு சீஈஓ ரூமுக்குள் நுழைகிறார் வீபீ ஸௌத்ரி.

ஏவிஎம்சரவணன் " வாங்க மிஸ்டர் சௌத்ரி, ஒரு நல்ல விஷயம். நமக்கும் கூட ஒரு பிராஜக்ட் கிடைச்சிருக்கு.. எல்லாம் நீங்க ஜாயின் பண்ணின நேரம் தான்..'

சிவாஜி " தேங்க்யூ சார்.."

சரவணன் " ஒரு கெட்ட விஷயம் கூட இருக்கு ...எப்பிடி சொல்லறதுன்னு தான் தெரியலை"

சிவாஜி " பிளீஸ் டெல் மீ சார்.." என்று சீரியஸ் ஆகிறார்.

"விஷயம் என்னன்னா இந்த பிராஜக்ட நீங்க தான் கைட் பண்ணனும்.. வேற வழியேயில்லை.. எத்தனை மாசம் தான் யாஹுவை ஸ்டடி பண்ணறென்னே சம்பளம் வாங்குவீங்க.. எல்லாரும் பென்ச்லதான் இருப்பாங்க..ஆனா நீங்க கிங் ஸைஸ் பெட்ல யில்ல இருந்துட்டு இருக்கீங்க.."

"ஹ..." டக் என நிலைகுலைந்து விழப் போய் சரவணன் வந்து பிடிப்பதற்குள் பேலன்ஸ் செய்து ஸ்டெடியாகிறார். அதிர்ச்சியில் உறைந்துபோய் எதுவும் பேசாமல் அபௌட்டனின் திரும்பி தலையை நிமிர்த்தி பீடு நடை போட்டு வெளியேறி தன் அறைக்கு செல்கிறார்.

அவர் ஸ்ட்ரேடஜி ரெடி பண்ணுவதற்குள் நாம் கம்பெனியை ஒரு வலம் வருவோம்.

ஆபிஸில் நுழைந்தவுடன் முதல் தரிசனம், ரிஷப்ஷனில் 'கோவை சரளா' ... கொஞ்சம் அதிகமாகவே லிப்ஸ்டிக் ஜிகினா போட்டுக்கொண்டு பெர்க்ளி யுனிவர்சிட்டிக்கு கேம்பஸ் இண்டர்வியுக்கு வரச்சொல்லி சில ஸ்டூடண்ட்ஸ் கெஞ்சியதை கேட்டுக்கொண்டே அவர்கள் கொடுத்த ப்ரோட்சரை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நம்மைப் பார்த்ததும் " அட .. வாங்க தம்பி .. " என வரவேற்று "ஒரு நிமிசம் கூட குமுதம் விகடன் படிக்க விட மாட்டீங்குறாங்க ..இந்த பசங்க... என்னை மெட்ராஸ்ல மேக்ரோஹார்டுல கூப்பிட்டாக... கோயமுத்தூர்ல கோவிந்தாடெக்ல கூப்பிட்டாக..என் கெரகம் இங்க வந்து வேலை செய்ய வேண்டியிருக்கு.." என புலம்ப ஆரம்பிக்க..

அவரிடம் இருந்து தப்பித்து உள்ளே சென்று முதல் க்யூபில் எட்டிப்பார்த்தால் "ப்ப்ப்ர்ர்ர்ர்ர்...... என்ன தம்பி சொல்லீட்டு வரக்கூடாதா.. ஏடாகூடமாகிடப் போகுது..' என சௌண்டு விட்டார் அக்கௌண்டெண்ட் வெண்ணிற ஆடை மூர்த்தி.

சரியென அடுத்த க்யூபிற்கு செல்வதற்குள், ஒரு கையில் சாட்டைவாருடன் மறு கையில் பால் கேன் சகிதம் 'வணக்கம்னே..' என்ற படி ராமராஜன் கடந்து சென்றார். இவர்தாம் இங்கே கிராபிக்ஸ் ஸ்பெஸலிஸ்ட்..

அடுத்தது ஒரு இரட்டை க்யூப்.... உள்ளே எட்டிப் பார்த்தால், எதற்கோ செந்திலை எட்டி உதைப்பதற்காக காலை ஓங்கிக் கொண்டிருந்தார் கவுண்ட்ஸ். டெஸ்ட் அண்ட் டெவளப்மெண்ட் என்ஜினியர்களாம்.

நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்ரர் வடிவேலு கத்திக் கொண்டிருந்தது லேப்-ஐயும் தாண்டி கேட்டதால் உள்ளே எட்டிப்பார்த்தால்... " ஊஊஊ... ஏண்டா உயிர வாங்குறீங்க.... அமைதியா வேலையப்பாருங்கடா அப்பிரசண்ட்டுகளா.." என யாரையோ விரட்டிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே சிவாஜி ஸ்டேட்டஸ் மீட்டிங்க்கு அழைப்பு விடுக்க அனைவரும் கான்ஃபரன்ஸ் ஹாலில் ஆஜர்.

சிவாஜி பேச ஆரம்பிப்பதற்குள் கேப்டன் விஜயகாந்த் எழுந்து " இங்கே கூடியுள்ள லட்சோப லட்சம் தமிழ் நெஞ்சங்களே.." என ஆரம்பிக்க.. " மிஸ்டர் விஜயகாந்த்.. பழைய நியாபகமா.. இது நம்ம பிராஜக்ட் மீட்டிங்" என கடித்தார் சிவாஜி. அசடு வளிந்து கொண்டே அமைதியானார் டீம் லீடரான கேப்டன்.

"ராமராஜன் .. பிரஸண்டேஸனை ப்ரொஜக்ட் பண்ணுங்க" என்றார் சிவாஜி.

"ஆத்தா மகமாயி.." என்ற படி ஆன் செய்ய .. கண்ணைக் கூசும் மஞ்சள் வெளிச்சம்.. அனைவருக்கும் கண்குருடாகிவிட்ட உணர்வு.. கொஞ்ச நேரத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டு ஸ்கிரீனைப் பார்த்தால்..வெளீர் மஞ்சள் பேக்ரௌண்டில் சிவப்பு எழுத்துகள் மின்னின..

"அய்யோ... என்ன இது ராஜன்.. இப்பிடி ஒரு கலர்ல.." என சிவாஜி கடுப்படிக்க..

"மங்களகரமா இருக்கட்டுமேன்னுதான்........." என இழுத்தார்.

" ஆமா.. அப்பிடியே தேங்கா பழத்தையும் கொண்டு வந்துடுங்கய்யா.. அவனவனுக்கு சம்பளத்தையே காணோம்..இதுல இது வேற" என முணுமுணுத்தார் கவுண்ட்ஸ்.

"சைலன்ஸ்ஸ்ஸ்" கத்தினார் சிவாஜி..

கூளிங்கிளாஸ் போட்டுக் கொண்டு சிலைடைப் பார்த்தபடி ஒவ்வோரு ஏக்ஸன் அயிட்டத்தையும் ட்ரேக் செய்ய ஆரம்பித்தார் வீபீ.

" மிஸ்டர் ரஜினி, எப்பத் தான் ரிலீஸ் பண்ணுவீங்க டிசைன் டாக்குமெண்டை.." சிவாஜி கேட்க

" எப்ப வரும் எப்பிடி வரும்ன்னு தெரியாது..ஆனா வர வேண்டிய நேரத்துல கரீக்டா வரும்" என்றபடி பென்சிலைத் தூக்கிப் போட்டு வாயில் பிடித்தார் ரஜினி.

" இதுக்கொன்னும் கொறைச்சலில்லை.. ஒரு மாசமா இதே பதில் தான்.. ரெம்ப ஃபோர்ஸ் பண்ணினா..ரிஸைன் பண்ணீட்டு ரிஸுகேஷ் போறேன்னு சொல்லுறீங்க..ம்ஹூம்..ப்ளிஸ் சீக்கிரமா முடிக்கப் பாருங்க" என்று அலுத்துக் கொண்டே அடுத்த அயிட்டத்திற்கு தாவினார்.

"நெக்ஸ்ட் அயிட்டம்.. சத்யராஜ், உங்க மாட்யூல்ல ஏகப்பட்ட கோடிங் இஸ்யூஸ் இருக்கு போல..மணிவண்ணன் கம்ப்ளெய்ன் பண்ணுறார்..என்ன விஷயம்"

சத்யராஜ் "என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீங்குறேங்களே" என இழுக்க..

"உங்க கேரக்டர் புரியலைன்னு யார் அழுதா.. கோடிங் புரிய மாட்டீங்குதே..அதுக்கென்ன பதில்.."

"..ம்ம் நான் ந்ல்ல படிச்சுட்டு வந்து வெனும்னா எழுதறேன்.. அதுக்கு ரேகா இண்ஸ்டிட்யூட்ல ட்ரெய்னிங் அரேஞ் பண்னுறீங்களா.." என வளிந்தார் சத்யராஜ்..

" என்ன .. பாட்டு பாடீட்டே மணல்ல ப்ரொக்கிராம் எழுதி பிராக்டீஸ் பண்ணலாம்னு ஐடியாவா....இதுக்கெல்லாம் இங்கே பட்ஜெட் இல்லை..ஒழுங்கா எழுத ட்ரை பண்ணுங்க" சிவாஜி


"சரி அடுத்த அயிட்டம்ஸ் பாக்கறதுக்கு முன்னாடி .. வேற முக்கியமான இஸ்யூஸ் எதாவது இருக்கா" சிவாஜி


" அய்யா.. இந்த ஹார்டிஸ்க் தலையன் தொந்தரவு தாங்க முடியலையையா..வேற டெஸ்ட் இஞ்சினியர்கிட்ட என் மாட்யூலை குடுங்கையா.." என அலறினார் கவுண்டமணி.

" பிஹேவ் யுவர் செல்ஃப்.. என்ன பிராப்ளம்?" சிவாஜி

அடுத்த பதிவில் அந்த பிராப்ளம்..

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Thursday, December 29, 2005

தோல்விகள் பழகு

கடலில் ஒரு துளி நீராய் திளைத்திருந்தேன் நான்

ஆதவன் ஒரு நாள் எனை எரிக்க
எரிக்கப் பறக்கும் பினிக்ஸ் பறவையாய் இல்லையேயென
நான் தோற்றுப்போய் ஆவியுமானேன்

அஹா..வான் வழி பயணம் இனிதோ இனிது
என் தோல்வியே தேனாய் இனித்தது
கடலாய் கழிந்த காலத்தை கடிந்து கொண்டே
மேகமாகி வான் வழியே ஊர்வலம் போனேன்

குளிர்த் தென்றல் எனைத் தீண்ட சிலாகித்து
நொடிப் பொழுதில் உருகி விட்டேன்..
புவியெனை ஈர்க்க மழையென மாறி
மண்ணோக்கி வீழ்ந்தேன் நான்..
மீண்டுமோர் வீழ்ச்சி !

மீழ்வேனாயென மயங்கிச் சில நொடிகிடந்தேன் நான்
மண்ணின் மணமும் மலர்போல் படுக்கையும்
உயிர் கொடுத்தது எனக்கு..

கடலலை மறந்தேன்
வான்வெளி மறந்தேன்.
மண்ணினில் தவழ்ந்தேன் குழந்தை போல..

கடலாகி நிறமற்றிருந்தேன்
வானாகி உருவற்றிருந்தேன்
மண் சேர்ந்து மணம் பெற்றேன் நிறம் பெற்றேன்

அருவியாய் காட்டறாய் ஒடையாய்
பீடு நடை போட்டு வந்த என்னை
வேரால் உறிஞ்சி வஞ்சித்தானே விதைக் கள்ளன்

தோற்பது தான் என் பிறவிக் கடனா
தோற்க நான் என்றும் தோற்றதில்லையே

விதை சேர்ந்துறங்கினேன் சில காலம்
விழித்த பொழுதினில் விழிநோக்க வழியில்லை
வழியின்றி விதை கிழித்தேன்
மண் பிழந்தேன்
சிறு வித்தாகி தலை நீட்டி கதிர் நோக்கிய அந்நொடியில்
அடியேன் அடைந்தேன் சொர்க்கத்தை

உருவாக வாய்ப்பளித்த விதையோனை வாழ்த்தி
வளர்ந்து மரமுமானேன்
மரமழிக்க மரம் கொண்டு வரும்
வருங்கால மனிதப் பிணமொன்று வருதல் கண்டேன்

மனம் வருந்த மனமில்லை
தோற்பது புதிதல்ல எனக்கு
உண்மையில் நான் தோற்றதென்பதுமில்லை
எல்லாம் தோற்றப்பிழையன்றி வேரில்லை
தோல்வியெனக்கு புது உரு கொடுக்கும் வாய்ப்பு
வாய்ப்பை வாழ்த்தாமல் வருந்துவானேன்
எனைக் கடலில் இருந்து மேலே அனுப்பிய
தோல்விகள் எனது படிக்கற்கள்

வெற்றியோ ஒரு போதை..
என்னை ஒரே இடத்தில் இருத்திவிடுகிறது..
என் தோல்வி,
தோற்கடிக்கப் பட்டதால் இழந்த வெற்றியை விட பெரிய வெற்றியை
நோக்கி பயணிக்க வைத்திருக்கிறது
பயணிப்பதும் பயணித்த இலக்கை அடைவதும்
என் கையிலேயே..

சில சமயம் எனக்கு இலக்குகளே இருந்ததில்லை
இலக்குகளை உணர்ந்ததில்லை
ஆனால் மாற்றங்களை ஏற்றுக் கொண்டேன்
மாற்றங்கள் சில சமயங்களில் ஏற்றங்களாயின
ஏற்றங்களிலிருந்த போதும் மாற்றங்கள் அழைத்தன

மிக கடினமான முடிவெடுக்க வேண்டிய தருணங்கள்
கஷ்டத்தில் இருக்கும் போது
மாற்றங்களை அரவணைக்க துணிவு தேவையில்லை
மாற்றங்களே தேவைகளாகும் தருணங்களவை

வென்ற பிறகும் வசதிகளில் திழைக்கும் போதும்
மாற்றம் கொள்ளத் துணிவதே துணிவு

வாழ்க்கைக்கு இலக்கொன்றை கொண்டோரின் துணிவு

ஏற்றுக் கொண்ட மாற்றங்கள் எமாற்றங்களை
அளித்தாலும் ஏற்றுக் கொள்ளும் துணிவு

தோல்விகள்.. அனுபவங்கள்
கற்றுத் தருபவை
அடையாளம் காட்டுபவை
எல்லைகளை வரையறுப்பவை
உடனிருப்போரை தோலுரித்துக் காட்டுபவை
ஓய்விற்கு ஒய்வு கொடுப்பவை
தோல்விகள்.. அவமானங்களல்ல
வழிகாட்டும் அடையாளங்கள்

வெற்றிகள் போதை..
போதையின் களிப்பு
வெற்றிப் போதையின் தெளிவே தோல்வி
இதை அடையாதவர்களில்லை

தவிர்ப்பவர்கள் முன்னேறமுடியாது
தவிப்பர்கள் மீழமுடியாது
தாங்குபவர்கள் முன்னேற்றத்தை தவிர்க்க முடியாது

தோல்விகள்.. மறந்திருந்திருந்த பலதை..
கண்ணீர்ச்சுவையை
அவமானங்களின் பதைபதைப்பை
ஏளனப் பேச்சுக்களை
அதை ஏற்க மனமின்று செய்த வாதாட்டங்களை
அவ்வாதட்டங்கள் வெறும் நேரவிரயமென்பதை
வெற்றிக் களிப்பில் மார் நிமிர்த்தி பீடு நடைபோடையில்
பணிந்து வணங்க மறந்த முகங்களை
என மறந்த பலதை நியாபகப்படுத்தும் மருந்தே தோல்வி
தவறுகளை வலிக்கத் திருத்தும்
தோல்விகள் எனது ஆசிரியர்
காலம் முழுக்க படிக்கப் பட வேண்டிய
பாடம் எனது தோல்விகள்
பாடங்கள் எனது வளர்ச்சிக்கு
வளர்ச்சியே எனது வெற்றி
தோல்விகள் எனது வெற்றிகள் !

Monday, December 26, 2005

சுனாமியின் நினைவலைகளும் பேரலைகளாகவே....

















மனிதம் அழியும் போது
மதங்கள் வேறுபடுவதில்லை

வழிமுறைகள் வேறெனினும்
பிரார்த்தனைகள் ஒன்றுதான்..

நெஞ்சை உருக்கும் படங்கள் தினமணியிலும் தினமலரிலும்
அவற்றில் இருந்து எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.

~சுகா

Saturday, December 24, 2005

நானறிந்த கடவுள் - 2

முதல் பாகம் இங்கே..

கடவுள்.. சில சமயம் வாழ்க்கையையே வெறுக்கவும் செய்திருக்கிறார். சாதாரண நாட்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் குலதெய்வம் கோவில். வருடத்திற்கொரு முறை வரும் விஷேச தினங்களில் கூட்டம் நிரம்பி வழியும். பூசாரி முணுமுணுத்துக் கொண்டே அனைவரின் தேங்காய் பழங்களை வாங்கி உடைப்பதற்குள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட எலியைப்போல வேர்த்து விறுவிறுத்து கையைக் குவித்தபடி வேண்டியதில் ஒன்று மட்டுமே நினைவிற்கு வருகிறது. ' பூஜை சீக்கிரமாக முடியவேண்டும் கடவுளே' என்பது தான்.

நெடுந்தொலைவில் உள்ள கோவில்களில் பெரியவர்கள் எதாவது வேண்டிக்கொண்டால் அதிலும் ஒரு அவஸ்தையே.. அதிகாலையில் எழுப்பி தூக்கக் கலக்கத்திலே குளிக்கவைத்து கிளம்பும் பொழுதுகளில் சில உற்சாகமாக இருந்தாலும், தூக்கத்திலிருந்து எழுப்பிவிடப்பட்ட சமயங்களில் கடவுள் மேல் கடும்கோபம் வந்திருக்கிறது. இருந்தாலும் தூக்கம் தெளிந்த சில மணித்துளிகளிலேயே பயணத்தின் உற்சாகம் தொற்றிக் கொள்வதால் கோபம் மறைந்துவிட்டிருக்கிறது.

பேருந்துப் பயணத்தின் களைப்பு , கோவில் கூட்ட நெரிசல் மீண்டும் காலையின் கோபத்தை நினைவுபடுத்தினாலும் கட்டிக் கொண்டுவந்த புளிசாதத்தின் வாசத்தில் அது காணாமல் போயிருக்கிறது. அனைவரும் சுற்றி அமர்ந்து, கிடைக்கும் பாத்திரத்தில் அல்லது கையில் உருண்டையாக வாங்கி உண்ணும் நேரத்தில் கடவுள் அளித்த அமிர்தமாகவே இருந்திருக்கிறது. அந்த நினைவுகள் இப்போதும் இனிக்கிறது..
" இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் " என்ற பிரபந்த வ்ரிகளே நினைவுக்கு வருகின்றன.

இந்தப் பயணங்களிலெல்லாம் கோவிலில் இருந்த சில மணித்துளிகளில் கூட கடவுளின் நினைப்பைவிட வெளியே விற்கும் பொம்மை மற்றும் பிரசாதத்திலேயே கவனமதிகமிருந்தது..

சிறுவயதில் பக்தி விஷயத்தில் மிகத்தெளிவாகவே இருந்ததாக உணர்கிறேன். தேவைகள் வரும் போது.. அதாவது தேர்வுகள் வரும் போது பக்தி சிறிது அதிகமாக இருந்தது என் நெற்றியைப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். தேர்வுகளின் விடுமுறையில் விடுமுறைக்குச் சென்ற பக்தி, திருத்திய விடைத்தாள்களுடன் ஆசிரியர் நுழையும் போது திரும்பிவந்திருக்கிறது.

'எப்பிடியாவது..எண்பதுக்கு மேல வந்திடனும்பா' என்ற வேண்டுதலின் முதல் வார்த்தை 'எப்பிடியாவது' என்பது கிட்டத்தட்ட எல்லா வேண்டுதல்களிலிம் இருந்திருக்கிறது.

நம்மால் முடியாத வழிகள் , நெளிவு சுழிவுகள் கடவுளுக்குத் தெரியும் என்ற அபார நம்பிக்கை கொண்டிருந்த காலமது.

உயர்நிலைப் பள்ளியின் இறுதி ஆண்டினில் இந்த நம்பிக்கை சிறிது தளர ஆரம்பித்தது. பொதுத் தேர்வுக்கு தயாராக ஆசிரியர்கள் சொன்ன அறிவுரைகளில் ' உன்னைத் தவிர வேறு யாரும் உன் வெற்றி தோல்விக்கு காரணமாக முடியாது' என்ற சாரம் மேலோங்கியிருந்தது. அரசமரப் பிள்ளையாரை மறக்கவில்லை எனினும் , சுற்றி வந்து தோப்புக் காரணம் போடாமல் , சைக்கிளில் போகும் போதே இரண்டு கையையும் கூப்பி ஒரு வணக்கம் போட்டுவிட்டு மாலை வகுப்பிற்கு போயிருக்கிறேன்.

கடவுள் நம்பிக்கை இருந்த போது அவரை நினைத்ததை விட இப்போது அதிகமாக நினைப்பதாகவே உணருகிறேன்.

இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது எழுத..

Friday, December 23, 2005

நானறிந்த கடவுள் - 1

எத்தனை வயதில் கடவுள் பக்தி தோன்றியது என நினைவில்லை. நான் கவலைப் படும்போதெல்லாம் கடவுளை விட்டுவைத்ததில்லை என்று மட்டும் நன்றாக நியாபகம் இருக்கிறது.

சின்ன வயதில் கடவுள் ஒரு வித பயத்தையும் பாதுகாப்பையுமே அளித்திருந்ததாக உணருகிறேன்.

சின்ன வயதில் இருட்டில் தனியாக போக நேர்ந்தால், நாயொன்று நடந்து போகும் நம்மை ஒரு மாதிரி பார்த்தால் இதயத்துடிப்பை விட அதிகமாக கடவுள் பேரை சொல்லிக் கொண்டே கடந்ததை எண்ணிப் பார்க்கிறேன். எப்படியிருந்தாலும் வீட்டு வாசலோடு கடவுளை கழட்டிவைத்து விட்டே சென்றிருக்கிறேன்.

குறிப்பாக பள்ளியின் பரிட்சை நேரங்களில் மட்டும் பக்தர்கள் பலரைக் கொண்டிருக்கும் அரச மரத்தடி பிள்ளையாரின் குறுகிய கால பக்தர்களில் ஒருவனாக இருந்திருக்கிறேன். கனவில் பரிட்சையின் கேள்வித்தாள் வருவதாக சக மாணவன் கூறக்கேட்டு நானும் பலவகையிலும் முயற்சித்திருக்கிறேன். கனவுகளுக்காக செலவிட்ட நேரத்தில் படித்திருந்தால் இன்னும் நிறைய மதிப்பெண் பெற்றிருக்கலாமோ என இப்போது நினைக்கிறேன்.

கூடைப்பந்து விளையாடப் போகையிலும் பிள்ளையாரை ஒரு நிமிடம் பார்த்துச் சென்ற போதெல்லாம் அவரின் வரம் நிறைய முறை எங்களை நிறைய முறை ஜெயிக்க வைத்திருப்பதாகவே உணருகிறேன். அவர் கொடுத்த வரமெல்லாம் தன்னம்பிக்கை தானோ.

கருவறையின் முன்பு நின்று வேண்டும் போதெல்லம் கூடியமான வரை சுய நலமான வரங்களையே கேட்டதாக உணருகிறேன். ஆசிரியர் ஒருவர் அறிவுரை கூற "எல்லாரும் நல்லா இருக்கணும்" என்பதையும் என் வேண்டுதல்களில் பின்னாளில் சேர்த்துக்கொண்டேன். இந்த விஷயத்தில் என் போலவே பலர் இந்த வரியை மட்டும் வாய்விட்டு வேண்டுவதைக் கேட்டிருக்கிறேன். " எல்லாரும்ன்னா , திருடன் அயோக்கியர்கள் கூடவா? அவங்க நல்லா இருந்துட்டா நாம இருக்க முடியுமா?" தோன்றியது. அதுவும் இன்னொரு கேட்க மறந்த கேள்வியாயிற்று.

பரிட்சைத்தாளில் மேலே 'உ' போட்டு 'முருகன் துணை' என எழுதித் தான் துவங்கிக் கொண்டிருந்தேன். உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர்க்கு பிடிக்காத காரணத்தால் நிறுத்த வேண்டியதாய்ப் போயிற்று. ஆரம்பப் பள்ளியிலிருந்தபோது இருந்த சில வேண்டுதல்களும் உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற பிறகு சிறிது மாறிவிட்டிருந்தன. பதிலே எழுதாத கேள்விகளுக்கும் மதிப்பெண் வரவேண்டும் என்ற வேண்டுதல்கள் கொஞ்சம் மாறி, " ஆண்டவா..இந்த கேள்விக்கு பதிலை ஆசிரியர் மேலோட்டமாக பார்த்தே தான் மதிப்பிட வேண்டும் " என்ற அளவிற்கு மாறியிருந்தது. கொஞ்சம் எதார்த்தமாகிவிட்டிருந்தது என்று கூடச் சொல்லலாமோ..

வெள்ளிக்கிழமைக் கூட்டுப் பிராத்தனைகளுக்கு பூப்பறிப்பதில் ஒரு போட்டியிருக்கும். ஆரம்பப் பள்ளியுல் இருக்கும் போது சாமிக்கு அலங்காரம் செய்யும்போது ஒவ்வொரு பூவுடனும் ஒரு வரம் வேண்டப்பட்டிருக்கும். உயர்நிலைப்பள்ளிக்கு சென்ற போது வரங்களைவிட இதற்குக் கிடைக்கும் ஒய்வு நேரங்களும் அதில் நண்பர்களுடனான விளையாட்டுமே சிறிது முக்கியமாகப் பட்டது.

வயது ஆக ஆக கடவுளைக் கடமைக்காகக் கும்பிட நேர்ந்ததையும் நினைத்துப் பார்க்கிறேன். பள்ளிப் பேருந்து போவதற்குள் பிடிக்கவேண்டும் என்ற அவசரத்தில் எந்த வரத்தையும் வேண்டாமலும் சிலசமயம் திருநீறை அணிந்து சென்றிருக்கிறேன். என்ன தான் வயது தன்னம்பிக்கையைக் கூட்டினாலும் பரிட்சைகள் என்னை பலமுறை பழைய அரச மரத்தடிக்கு இழுத்துச் சென்றிருக்கின்றன.

இப்போது நினைத்துப் பார்த்தால், நான் என் தேவைக்கும் திறமைக்கும் அதிகமாக ஆசைப் படும்போதெல்லாம் பக்தி மார்க்கமாக இருந்திருக்கிறேன் என்றே உணருகிறேன். கண்டிப்பாக வெற்றி பெருவேன் என்று நினைத்த சில காரியங்களில் கடவுளைக் கண்டி கொள்ளாமல் விட்டதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

பண்டிகைக்காலங்கள் எனது பக்திக் கோலத்தின் பொற்காலங்கள். சுண்டல் , கொழுக்கட்டைகளுக்காக அப்படி பக்தி மயமாய் திரிந்தேனா..இல்லை கடவுள் பயமா.. நினைவுபடுத்தினால் கொழுக்கட்டையே ஜெயிக்கிறது.

பொங்கல் என்றால்... முந்தைய இரவில் விடிய விடிய வாசல் கோலம் போடுவதும் அடுத்த நாளின் கரும்பு மற்றும் சக்கரைப் பொங்கலின் சுவையும் தான் நினைவிலிருக்கிறது. கதிரவனுக்கு படைக்கும் போதும் என் கண்கள் பானையின் நெய் வழியும் பொங்கலையே பார்த்திருந்தன. கடவுள் பொங்கலுக்கு அடுத்தபடியே.

இதெல்லாம் சிறுவயதில்.. ,கல்லூரி வேலை என்று வந்த பிறகு என்ன மாற்றங்கள் ? தொடர்ந்து எழுதுகிறேன்.

Tuesday, December 20, 2005

'கடவுள்கள் இல்லையடி பாப்பா'

'சாதிகள் இல்லையடி பாப்பா 'என பாரதி பாடியபோது எனக்கு இரண்டு விதமாக எண்ணத் தோன்றியது.

பாப்பாவைப் பார்த்து பாரதி பாடிய காரணம் என்ன? இந்த 'வளர்ந்த' மனிதர்க்கு உரைத்தலால் ஒரு பயனுமில்லை; வளரும் சமுதாயத்திற்காவது எதாவது புரிகிறதா என முயற்சி செய்திருப்பாரோ... அல்லது சாதிகள் விசயத்தில் நாமனைவருமே 'பாப்பா' போலவே பக்குவப்பட்டிருப்பதை எண்ணிப் பாடியிருப்பாரோ எனத் தோன்றியது.

இப்போது இன்னொன்றும் எண்ணத்தோன்றுகிறது. இன்னும் சிலகாலம் பாரதி இருந்து தமிழ் மணத்தில் எழுதியிருந்தால்

சாதிகள் இல்லையடி பாப்பா!- குலத் தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம் நீதி, உயர்ந்தமதி கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்!- தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்வயிர முடையநெஞ்சு வேணும்;- இது வாழும் முறைமையடி பாப்பா.

என்பதற்குப் பதிலாக இப்படி எழுதியிருப்பாரோ..

கடவுள்கள் இல்லையடி பாப்பா!- இறைத்
தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்
நீதி, உயர்ந்தமதி கல்வி - பண்பு

நிறைய உடையவர்கள் மேலோர்.
உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்!- மதம்

வெறும் அடையாளந்தானறிதல் வேணும்வயிர
முடையநெஞ்சு வேணும்;-
இது வாழும் முறைமையடி பாப்பா.

Friday, December 16, 2005

வில்வ மர ஐதீகமும் விவகாரமான பக்தர் கூட்டமும்...

இது ஒரு உண்மைச் சம்பவம். இந்த பதிவு இதை நினைவுபடுத்திவிட்டது.

ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டிலிருந்து அனைவரும் ஒரு தனியார் அமைப்பு மூலமாக நவகிரக சுற்றுலா சென்றிருந்தோம். அதில் ஒரு பகுதியாக நல்ல செழிப்பான கிராமங்களின் நடுவே அமைந்துள்ள சந்திரன் கோவிலுக்கு காலை பத்து மணியளவில் சென்றடைந்தோம்.

நாங்கள் சென்ற நேரம் பார்த்து எங்களுக்கு முன்னால் பேருந்தில் வந்த ஒரு பக்தர்கள் கூட்டம் தரிசனம் செய்து கொண்டிருந்தது. நாங்கள் பிரகாரத்துக்கு வெளியே வரை நீண்டிருந்த வரிசையில் நின்று மிகமெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தோம். ஊர்ந்து ஊர்ந்து ஸ்தல விருட்சம் என்று ஒரு சிறிய மரமும் ஒரு மூர்த்தியும் இருந்த திண்ணை அருகில் வந்து நின்றோம். எங்கள் வரிசைக்குப் பிறகு வேறொரு பேருந்தின் கூட்டமும் சத்தமும் சேர்ந்து கொண்டன.

கூட இருந்த அண்ணன் பொறுமை இழந்திருந்தார். என்ன பண்ணுவது எனத் தெரியாமல் அந்த வில்வமர இலைகளைக் கிள்ளிக் கொண்டிருந்தார். பின்னால் இருந்த பெரியவர் எதற்கு இலையைப் பறிக்கிறாய் என்றதற்கு 'இந்த இலையைப் பறித்து இந்த மூர்த்தியின் தலையில் வைத்து வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும் என்றொரு ஐதீகமாம்..' என கொஞ்சம் சிரத்தையாகவே சொல்லிவிட்டார். பின்னால் ஒரு பெண்மணியும் இதைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

கூட்டம் நகர ஆரம்பித்திருந்தது. ஒருவழியாக பிரகாரத்தை சுற்றி கடவுளைத் தொழுது வெளியே வந்து அமர அரைமணிக்கு மேலாகியிருந்தது. கூட்டம் குறைந்திருந்த வேளையில் சிறிது நடை பயின்று வந்து அந்த மரம் இருந்த இடத்தை அடைந்தால் அதிர்ச்சி. கைக்கு எட்டிய தூரம் வரையில் அந்த சிறிய மரத்தில் இலையே இல்லை. மூர்த்தியைப் பார்த்தால் இலைக் குவியலில் மூழ்கிவிட்டார்.

இதை பேருந்தில் சொல்லி அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தோம். உண்மையில் இப்போது இச்சம்பவம் பல பாடங்களை எனக்குச் சொல்லிக்கொடுக்கிறது. இவை குறித்து நான் எண்ணுவதை ஏற்கனவே எழுதிவிட்டேன். இன்னொரு கதையிலும் கூட.

Thursday, December 15, 2005

'யார் நீங்கள்?' சுலபமான கேள்வி இல்லையா..

இதே கேள்வியை அறிமுகம் இல்லாத ஒருவர், அடையளாம் தெரியாத இடத்தில் வைத்து என்னைக் கேட்டால் முதலில் என்ன நினைக்கத் தோன்றுகிறதோ அதுவாகவே நான் இருக்கிறேன்.

இந்த கேள்வி புதிதல்ல தினமும் எதிர் கொள்கிறேன். ஏதேதோ பதில் சொல்கிறேன்.

சிலமுறை வெறும் பெயரை மட்டும் சொல்லியிருக்கிறேன். அது வெறும் அடையாளக் குறியீடு என்று உணர்ந்திருக்கிறேன்.

நானும் கணிப்பொறியாளனே... நானும் கோயமுத்தூர் தாங்க.. என வேலையையும் ஊரையும் அடையாளமாக அதிகம் உபயோகப்படுத்தி இருக்கிறேன்.

சிலவேறு இடங்களுக்கு பயணிக்கும் போது அடையாளங்கள் அகன்றிருக்கின்றன. கோவை ..தமிழ்நாடாகி .. இந்தியாவாகி இருக்கிறது. அடையாளங்கள் அகலமாகும் போது குறுகிய அடையாளத்தைப் பயன்படுத்திப் பலரைத் தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தியிருப்பதை எண்ணி வெட்கப்படத் தோன்றுகிறது.

இன்னும் சில இடங்களில்.. 'நான் இங்க அவரைப் பார்க்கவந்தேன்.. அதைச் செய்ய வந்தேன் .." என சொல்லியிருக்கிறேன்.. கேட்ட கேள்விக்கு தவறான பதில் என்றாலும் இந்த கேள்வியே தவறு என சமாதனப்பட்டிருக்கிறேன். உண்மையில் இந்த கேள்விக்கு விடை அப்போது எனக்கு தெரியாது, அது எனக்கு தெரியாதென்பதையும் அறியவில்லை.

'நான் ஓவியன்..' 'நான் பள்ளியின் மாணவர் தலைவன்'.. 'கூடைப்பந்து விளையாட்டு வீரன்' 'நான் ஒரு முற்போக்காளன்'... என கைத்தொழில், பதவி, திறமை, சிந்தனை எதையும் விட்டுவைத்ததில்லை நான். ஒருவேளை இவைதாம் ஒருவர் போற்றிப் பாதுகாக்கவேண்டிய அடையளங்களோ என அதைத் தக்கவைக்க படாதபாடு பட்டிருக்கிறேன்.

இதுபோன்றே 'நானும் தமிழனே..' 'நான் பாரதியின் ரசிகன்'.. 'எனக்கு அரசியல் பிடிக்காது' .. மொழி, விருப்பு வெறுப்புகளும் என்னை வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டின. இதனால் நான் பல பல நன்மைகளும் சில தீமைகளும் அடைந்திருக்கிறேன் என ஒப்புக்கொள்கிறேன்.

எதற்கிந்த அடையாளங்கள்.. விடை .. உலகறிந்த உண்மை.. 'சுயநலம்' . இதை மறுப்பவர் எவரேனும் இருக்கிறீர்களினில் ஒரு வார்த்தை எழுதுங்கள். உங்களிலிடம் இருந்து நான் கற்க வேண்டியுள்ளது.

சுயநலம் தவறல்ல. அது சுயநலம் என்பது தெரியாமலிருப்பது தவறு. 'எது தவறு?' உன் தேவைக்கல்லாமல் உனக்கே தெரியாமல் அடுத்தவர்களைப் பாதிப்பது.

அடையாளங்களைக் காக்க நாம் எடுக்கும் முயற்சிகள் நிச்சயமாய் வேறு ஒரு அடையாளத்தைப் பாதிக்கிறது. விளைவு தமிழ்மண வாசகர்களுக்கு சொல்ல வேண்டிவதில்லை. விளைவு விவாதங்கள். விவாதங்களால் புதிதாக பலவற்றை கற்றுக் கொள்ளலாம் என்பதும் உண்மையே.

காந்தியோ, பெரியாரோ, ஹிட்லரோ, பகத்சிங்கோ அல்லது தெரசாவோ யாராயினும் அடையாளங்களை தேடிப்போனவர்களாகத் தோன்றவில்லை. அடுத்தவர்களால் தரப்படும் அடையாளங்களே நிலைக்கின்றன.

நாம் நமது அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ள எவ்வளவு முயற்சித்தாலும் அடுத்தவர்கள் என்ன நினைகிறார்கள் என்பதே அடையாளமாக அமைகிறது. முயற்சிகள் போராட்டமாகி புதிய அடையாளங்களை ஏற்படுத்திவிடிகின்றன.

அனால் ஒன்று .... சுயத்தைத் தேடும் ஒருவன் அடையாளங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. 'நான் யார்' என தனக்குத் தெரியாது என்பதைப் பற்றியோ அது அடுத்தவர்களுக்குத் தெரியத் தேவையில்லை என நினைப்பதைப் பற்றியோ வெட்கப்படுவதில்லை.

சுகா

Wednesday, December 14, 2005

கண்களை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்

இது ஏதும் தத்துவத்தைப் பற்றிய பதிவல்ல. ஒரு மாறுதலுக்கு அறிவியல். உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றுவதை கண்கூடாக கண்டு ரசியுங்கள். இந்த படங்கள் மற்றும் பதிவுகள் அனைத்துமே இந்த அருமையான தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. தமிழாக்கம் மட்டுமே என் கைவண்ணம்.

இவை அனைத்துமே நம் கண்களில் உள்ள குருட்டுத் தானத்தைப் (Blind Spot) பற்றியும், இந்தக் குறைபாட்டை நம் மூளை எப்படி சாமர்த்தியமாக சரிசெய்ய முயற்சிக்கிறது என்பதைப் பற்றியுமே. இதைச் செய்து பார்ப்பதும் மிக எளிதே.

சோதனைகளின் முடிவில் உள்ள இணைப்பின் (Applet) வழியாக உங்கள் கண்ணின் குருட்டுத்தானத்தைத் துல்லியமாக அறிந்து கொள்ளமுடியும்.

சோதனை 1 :

இடது கண்ணை மட்டும் மூடியபடி வலதுகண்ணால் இடதுபுறம் உள்ள (+) குறியைப் பார்த்தபடி திரையை நோக்கி நகர்க. திரைக்கும் கண்ணுக்கும் அரை அடி இருக்கும் போது (0) கருப்புப்புள்ளி மாயமாக மறைவதைக் கவனியுங்கள். இதில் மூளைக்குப் பெரிதாக வேளை ஏதுமில்லை. ஆனால் அடுத்ததில்...



சோதனை 2 : (மூளையின் சமாளிப்பு)

அதே செய்முறை தான். படம் தான் வேறு. இந்த முறையும் குருட்டுத்தானத்தில் புள்ளி மறைகிறது. ஆனால்...

குருட்டுத் தானத்தில் புள்ளி மறைந்த இடம் மஞ்சள் நிறத்தில் நிறைந்திருப்பதைக் கவனிக்க. சுற்றியும் மஞ்சள் இருப்பதால் அதுவும் மஞ்சளாகத்தான் இருக்க வேண்டும் என மூளை யூகம் செய்து தவறான தகவலைச் சேகரிப்பதை அறிக. நாமும் இன்ன பிற விஷயங்களிள் இவ்வாறாகவே யூகித்து முடிவெடுக்கிறோம் அல்லவா !

சோதனை 3 ( நிறம் மட்டும் தானா..)

செய்முறையில் மாற்றமில்லை. கீழே உள்ள படத்தில் கவனிக்க.


கோடு போட்டால் ரோடு போடுவதைப் போல தெரியாத இடத்தில் கோடு தான் இருக்கும் என மூளை முடிவு செய்வதைப் பாருங்கள்.

சோதனை 4 : ( கடைசி சமாளிப்பு)

மொசைக் தரையில் ஏதேனும் தவறவிட்டு விட்டு நெடுநேரம் தேடியவர்களுக்கு சமர்ப்பணம் :)


உங்கள் கண்ணை சோதித்துக் கொள்ள இங்கே சொடுக்கவும். இதற்கு Java தேவை.

நீங்கள் இந்த பயிற்சியை செய்து கொண்டிருக்கும் போது வேறு யாராவது ஒரு மாதிரியாக பார்க்கப் போகிறார்கள். கவனமாக இருங்கள் :)

சுகா

Tuesday, December 13, 2005

கேட்க மறந்த கேள்விகள்...

அம்மா முதலில் சொன்ன போது பயமாகத்தான் இருந்தது. இரவில் வீட்டை விட்டு வெளியே போனால் பூச்சாண்டி வந்துவிடுவான் என்றதும் இரண்டு கொம்பு, நீளமான நாக்கு கோரைப்பற்களென நானாக கற்பனை செய்து கொண்ட நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். வருடங்கள் சில ஓடியதும் கடைக்கு சாமன் வாங்கிவர தனியே அனுப்பிய போதே கேட்டிருக்க வேண்டும்.. "பூச்சாண்டி நம்ம தொகுதி சட்டமன்ற உறுப்பினராகி விட்டாரா.. இனி இந்தப் பக்கம் வரமாட்டாரா என.." மறந்துவிட்டேன்.

பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும் என்றதால் அடிக்கடி கனவில் கே ஆர் விஜயா அவர்கள் பெரிய திரிசூலத்துடனும் நிறைய சாம்பிராணி புகை நடுவே வந்து பயமுறுத்தினார். குடும்ப அட்டைக் கணக்கெடுக்க வரும்போது பாட்டி மேலே இருக்கிறார் என அப்பா கையைக் காட்டினாலும் மாடி அறையை அல்லவா காண்பித்தார். என்னிடம் ஆறுமாதம் முன்பு சொல்லியழும்போது அதற்கு மேலேயே அல்லவா காண்பித்தார். அது பற்றிக் கேட்டிருக்கலாம். ஏனோ தோன்றவில்லை.


சாதிகள் இல்லையென கோணார் உரையில் படித்தபோது ஏதோ கேட்க தோன்றியது.

பத்தாம் வகுப்புப் படிக்கும்போது புகைப் பிடித்ததற்காக நண்பனை அடித்த ஆசிரியரை ஒரு நாள் பெட்டிக்கடையில் பார்த்தபோது "மாணவர்களுக்கு இந்தப் பழக்கம் வரக்கூடாது என்பதற்காக அனைத்தையும் நீங்களே பிடித்துவிடலாம் என முடிவெடுத்துவிட்டீர்களா" என கேட்டிருக்கலாம்.

இன்றுவரை கேட்க மறந்த கேள்விகள் உருத்துகின்றன; கேட்க மறந்து கொண்டிருக்கும் கேள்விகள் சிரிக்கின்றன. நல்லவேளை இணையம் வந்தது. இதில் தொடுப்போம் கேள்விக் கணைகளை என ஆறுதலடைகின்றேன்.

சின்ன குழந்தைகளாக நாமிருந்த போது தோன்றும் கேள்விகள் வளர்ந்ததும் தோன்றுவதில்லை. இந்த வயது குழந்தைகளை கேள்விகள் பல கேட்க வைத்து மெகா தொடர்களின் இடைவேளைகளில் பதில் சொல்லவும் முயற்சிக்க வேண்டும், இல்லையெனில் வளர்ந்து பெரியவனாகி வலைப்பூக்களில் எழுதி மானத்தை வாங்கிவிடுவான் என பயமிருக்கவேண்டும் :)

Sunday, December 11, 2005

உரைநடை அல்லாததெல்லாம் கவிதை தானோ?

எனக்கு சந்தேகமாக இருந்தது, ஒருவேளை நான் எழுதுவது கவிதையாக இருக்குமோ என. சரி இதை உடனே நிவர்த்தி செய்துகொள்ளலாம் என நான் எழுதியதை ஒரு இணைய தளத்துக்கு மின்னஞ்சல் செய்தேன். அட, கவிதை பக்கத்தில் பிரசுரித்து விட்டார்கள். நானும் கவிஞனாகிவிட்டேனோ என சந்தோசப்படும் வேளையில் மீண்டும் ஒரு சந்தேகம். ஒருவேளை எனது மின்னஞ்சலில் கவிதை என குறிப்பிட்டிருந்ததால் தான் அதை கவிதை பக்கத்தில் பதிவேற்றினார்களா, இப்போதெல்லாம் கவிஞர்களுக்கு இணையாக தமிழ்தளங்களும் பெருகிக் கொண்டிருக்கிறது. தானியக்க முறையில் பதிவேற்றிவிட்டார்களா? இன்னொரு சோதனையும் செய்துவிடுவோம் என இன்னொரு மின்னஞ்சல்; இந்த முறை அனுப்பியதை 'இது கவிதை' எனக் குறிப்பிடவில்லை. அட.. இந்தமுறையும் கவிதைப் பக்கத்திலேயே வலையேற்றம். இருந்தாலும் எனக்கு உடன்பாடில்லை. சிறிது ஆராயலாம்.

மரபுக்கவிதை.. இது பற்பல இலக்கணங்களை வைத்து படைப்பின் வடிவத்தையும் கருத்துக்களின் தன்மையையும் வரையறுக்கிறது. சிலசமயங்களில் வடிவத்திற்காக வார்த்தைகள் விகாரமாகின்றன, சில பல இடங்கலிள் தொக்கிநிற்கின்றன. எளிதில் புரிந்துகொள்ளுவது சிரமம். பலவகையிலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும் வசதியையும் தருகிறது. இந்த வசதிகள் நடைமுறை வாழ்க்கையில் எனக்கு சில சமயம் உபயோகமாகவும் இருந்திருக்கிறது.

ஒருமுறை என் தங்கையை தாயார் சனியனே என திட்டிவிட, அவளைச் சமாதானப்படுத்த ஔயாரைத் துணைக்கழைத்து 'சனி நீராடு' என அவர் சொன்னாரல்லவா 'சனி' என்றால் குளிர்ச்சி..அதனால் அம்மா உன்னை 'குளிர்ந்தவளே' என புகழ்ந்திருக்கிறார் என்றேன். இந்த விளக்கத்தைக் கேட்பதற்கு நான் அம்மாவிடம் இன்னமும் கொஞ்சம் திட்டே வாங்கியிருக்களாம் என அம்மாவிடமே ஓடிவிட்டாள். எப்படியோ சங்கத் தமிழ் தங்கையை சமாதானம் செய்துவிட்டது.

இன்றுவரை திருவள்ளுவரின் முதல் குறளே சர்ச்சையில் அல்லவா உள்ளது.

மரபுக்கவிதை எழுதுவது பெரிய திறமை தான். வெறும் இலக்கணம் மட்டுமெனில் நாம் மரபுக்கவிதைவடிக்க மென்பொருளே எழுதிவிடலாம். தமிழ் மென்பொருள் எழுத இங்கே ஆர்வமிகுந்தோர் பலருண்டு. இலக்கணத்தோடு சொல்லவந்த கருத்தையும் அல்லவா சொல்லவேண்டும். அது தான் சிரமமே. அதிலும் அழகிற்கு அழகு கூட்ட அணியிலக்கணமுண்டு. இருக்கிறதோ இல்லையோ குறவஞ்சி கூறும் சந்திரகாந்தக்கல் குறித்த வர்ணனை அழகுதான்.

மரபுக்கவிதைகள் சொல்லவந்த கருத்துக்களைவிட சொல்வோர் சொல்வன்மையையே எடுத்துக்காட்டுவதாக தோன்றுகிறது.

புதுக்கவிதை .. மரபுக்கவிதை அல்லாத உரைநடை போல் நீண்ட அடிகள் அல்லாத அல்லது உரைநடை எனக் குறிப்பிடப்படாத எல்லாம் புதுக்கவிதைகள் தானோ என நினைத்திருக்கிறேன். 'புது' என்ற வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததோ .. இலக்கணம் ஏதும் தனியாக இல்லாத்தால் 'புது' என்பது கருத்துக்களுக்குத் தானோ என்று தோன்றுகிறது.

புதுக்கவிதை புதுமையான கருத்துக்ககளைக் கொண்ட 'கவிதை'. சரி அது என்ன கவிதை? உரைநடைக்கும் கவிதைக்கும் என்ன வித்யாசம்? கவிதை என்பது இசை அமைக்க தோதுவான வடிவமா?

நானும் கவிதை எழுதுகிறேன் என எதுகை மோனைகளைத் தேடியதுண்டு. ஏற்ற வார்த்தைகள் இருந்த போதும் எதுகையைத் தேடினால் அது கருத்தை மழுப்பிவிடாதா? இன்னும் பல பல கேள்விகள் தோன்றுகின்றன.

ஓவிய முறைகளில் நவீன ஓவியங்கள் என்பன மிகச்சில கோடுகளிலேயே காட்ட வந்த காட்சியைச் சித்தரிக்கும் முயற்சி. அதுபோல் புது கவிதையும் சொல்லவந்த கருத்தைச் சிக்கனமாக சொல்லுவது என்பதே நான் தற்போது நினைத்துக் கொண்டிருப்பது. வலையேற்றம் செய்தவர்களும் அதே அடிப்படையில் தான் நினைத்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.

Thursday, December 08, 2005

அந்த பூனைக் கதை !?

சென்ற வலையேற்றத்திற்கு காரசாரமாக வந்த பதில்களுக்கு இணையாக அந்த பூனைக்கதையையும் கேட்டு சில நண்பர்கள் தனிமடல் அனுப்பி இருந்தனர். அவர்களையாவது திருப்திப் படுத்தலாமே :)

பல வருடங்களுக்கு முன் ஒரு ஆச்சாரமான அந்தணர் வாழ்ந்துவந்தார். அவர் வருடா வருடம் மார்கழி மாதம் பெரிய அளவில் பலரையும் அழைத்து பூஜை செய்வது வழக்கம்.

அவர்கள் வளர்த்தும் வீட்டு பூனை ஒன்று எப்போதும் ஆசாரத்தில் குறுக்கே மறுக்கே திரிந்து கொண்டே இருக்கும். பூஜை நாட்களில் பூஜைக்கு இடைஞ்சலாக இருக்ககூடாது என்பதற்காக பூஜை ஆரம்பிக்கும் போது முதல் வேலையாக தன் பையனை அழைத்து அந்த பூனையை தூணில் கட்ட சொல்லுவார். பையனுக்கு அது எதற்காக என புரியவில்லை , இருந்தாலும் தந்தை சொன்னால் அதில் அர்த்தமிருக்கும் என சொன்னபடி செய்தான்.

வருடங்கள் ஒடின. பெரியவர் காலமாகிவிட்டார். அந்த பையன் இன்றும் தந்தை வழியே மார்கழி பூஜை நடத்துகிறான். பூனையும் தூணில் உரசியபடி யோசித்துக் கொண்டிருக்கிறது "நான் பாட்டுக்கு நாலாவது தெருவில் திரிந்து கொண்டிருந்தேன், வழக்கம் போல இந்த வருடமும் பையனை அனுப்பி என்னை புடித்துக் கொண்டுவந்து கட்டிவிட்டார்கள்.. என்னை இவர்கள் வளர்த்துவதும் இல்லை..ஏதோ அலர்ஜியாம்.. நானும் இவர்கள் வீட்டுப் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.. ஏன் எனக்கு மட்டும் இந்த நாளில் இப்படி நடக்கிறது' என. பூனைக்குப் பக்கத்தில் அப்பாவை பயபக்தியோடு பார்த்துக்கொண்டு எதையும் யோசிக்காமல் சிறுவன் நிற்கிறான்.

Sunday, December 04, 2005

தமிழினி மெல்லச் சாகும்

சில வாரங்களாக தமிழ் வலைபூக்களின் சோலைகளிள் அதிக நேரத்தைக் களித்துக் கொண்டிருக்கிறேன். வலைப்பதிவுகளின் தரத்தையும் எண்ணிக்கையையும் அவை பதிவேறும் வேகத்தையும் பார்த்தால் தமிழினி மிக மிக மெல்லவே சாகும் எனத் தோன்றுகிறது. தமிழ் அழிகிறதே என அழுபவர்கள் கண்களைத் துடைத்துக் கொள்ளலாம். தமிழ்க்காவலர்கள் சிறிது ஓய்வெடுக்கலாம்.

சில சமயம் மொழிகளின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப் படுகிறதோ எனத் தோன்றுகிறது. மொழிகளின் அவசியமே மறக்கப்பட்டு மொழிகளே ந்மது முக்கியத் தேவை என எண்ண ஆரம்பித்துவிட்டோமோ என்றும் தோன்றுகிறது.

என்னைப் பொறுத்தவரை மொழி ஒரு ஊடகம். சக மனிதர்களுடன் தேவைகளை உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள உதவும் ஊடகங்களிள் ஒன்று. பேசப்படும் எழுதப்படும் எந்த மொழிகளுமே ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கிவிட்டவை. சிலமுறை பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் திணறும் வேளைகளில் அந்த வரையறைக் கயிறுகளின் நீளத்தை உணர்கிறோம்.

மைதானத்தின் நடுவே ஒரு ஆப்பில் கட்டப்பட்ட மாட்டினைப்போல் ஒரு பரப்பில் மேய்ந்து கொண்டிருப்பதாக உணர்கிறேன். இதில் எந்த மைதானம் பார்ப்பதற்கு அழகாக உள்ளது; எது மேய்வதற்கு சுவையாக உள்ளது என்பது போல மொழிகளை ஒப்பிட்டு சர்ச்சைகள் செய்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. நமது தேவைகள் பசியாறுவது. அதைத் தவிர வேறு என்ன முக்கியம்.

மொழியைக் காக்க வேண்டிய தேவை என்ன? தக்கன தப்பிப் பிழைக்கும் என டார்வின் சொன்னது மொழிக்கு பொருந்தாதா? இதில் மொழிக்கு காவல் காக்க தேவை என்ன? தேவை தகவல் பறிமாற்றம் .. அது சரியாக நடக்கும் போது ஊடகத்தின் மேலிதற்கு இவ்வளவு அக்கறை.. அதுவும் சக மனிதர்களைப் பழிக்கும் அளவுக்கு..

மொழிகளைக் காப்பதால் மனிதர்களுக்கு இடையே பிரிவினையையோ காழ்ப்புணர்ச்சியையோ எற்படுமேயாயின் கண்மூடித்தனமான அந்தப் பற்று எதற்கு. பிறமொழிக் கலப்பை ஒரு குற்றமாக பார்க்கவேண்டிய தேவையில்லையே.. நமது தேவை தகவல் பரிமாற்றம். அது நடந்து கொண்டிருக்கும் வரை நமது மொழி காப்பு பணிகள் தேவையில்லை.


குறிப்பிட்ட மொழி ஒன்று வளர்ந்தால் என்ன பயன்? அழிந்தால் என்ன இழப்பு? பூனையைக் கட்டி வைத்துக் கொண்டு அந்தணர் ஒருவர் பூசை செய்த கதை போல் குறிக்கோள்களைச் சில சமயம் மறந்து செய்முறைகளைச் செவ்வனே செய்வதில் ஆர்வம் காட்டுகிறோமோ எனத் தோன்றுகிறது.

மொழிப்பற்று என்ற கற்பூர வாசனையை நுகர்வதை விட கழுதையகவே இருந்துவிட்டுப் போகலாமோ எனத் தோன்றுகிறது.

~சுகா

Thursday, November 24, 2005

சுயம் எனும் யாகம்

குழந்தை நான்
கண் விழித்தேன்
பளீரென வெளிச்சம்
இருளன்றி இன்னொன்று
பெரிதாக உருத்தவில்லை

அன்னையின் முத்தம்
நெற்றியில் ஈரம்
அது தவிர வேறொன்றும் தோன்றவில்லை

சுற்றிலும் அசைவுகள்
சத்தக் குழப்பங்கள்
நாட்டமில்லை எதிலும் எனக்கு

என் பயமெல்லாம்
எங்கிருந்தோம்..எங்கே இருக்கிறோம் என்பதே

சுற்றியிருந்த தடுப்புச் சுவரெங்கே
தேடுதென் கரங்கள்

காலிலும் ஏதும் இடரவில்லை
இப்படி ஒரு வெறுமையா

இது என்ன மாற்றம்...
பிடிக்கவில்லை எனக்கு

இதன் எதிரொலிப்பு
என் தொண்டையின் நரம்புகளில்

இது என்ன புது உணர்ச்சி
பசியா..இதுவரை இருந்ததில்லையே

தொப்புள் கொடியற்ற வயிற்றின் எரிச்சல்
என் வாய் வழியே வலியாக...

தேவைகள் தீர்கின்றன..
இமை மூடி முன்பிருந்த இடம் போலே உணர்கின்றேன்

எனக்கு தெரிந்ததெல்லாம்
நான்...
என் தேவைகள்..

எனக்கு தேவையெல்லாம்
என் தேவைகளின் தீர்வுகள்..
அது தவிர வேறொன்றும் நான் அறியேன்

வேர்களின் நீர் தேடல் போல்
விகல்பமில்லாத தேடல்

இது என் தேவைகளின் தேடல்
என தைரியமாக கத்தி அழும் தேடல்

இந்த தேடல்களைத் தவிர
எனக்கு வேறொன்றும் முக்கியமில்லை
என அகங்காரமான தேடல்

இதில் எனக்கு அவமானமேதுமில்லை
அது பற்றி நான் அறிந்ததில்லை
அறிய தேவையில்லை

தேவைகளைத் தீர்ப்பவர் பற்றி எனக்கு அக்கரையில்லை
இருந்தாலும் அது என் தேவைகளைத் தீர்ப்பதற்கே

பாசம் பற்றி தெரியவில்லை
இது நான் வாழும் உலகம்
இந்த கருவரைக்குள் இன்னொருவரை பார்த்ததில்லை

தேவைகள் தீர்கின்றன..
புதிய தேவைகள் வளர்கின்றன..

தேவைகளின் தீர்வுகள் எப்போதும் சுலபமாக கிடைப்பதில்லை
தீர்வுகளுக்கும் தேவைகள் உண்டு போல..
என்னிடம் இருந்து எதையோ எதிர்பார்க்கின்றன..
நான் தேவைகளை மதிக்கின்றவன் ..
நான் வாய் விரித்து கண் சுருக்கி குரல் கொடுத்தல் தேவை அவர்க்கு
அழகிய சிரிப்பென்று கொஞ்சி பின் என் தேவை தீர்க்கின்றனர்

சுயநலம் நான்...
வருத்தப் படுவதுமில்லை
என்னை யாரும் வருத்தப்படுத்துவதுமில்லை
வயதெனக்கு காப்பு

வருடங்கள் ஓட
மாற்றங்கள்..
மாறி மாறி மாற்றங்கள்

புதிய வார்த்தைகள் .. விளக்கங்கள் .. வரையறைகள்
இவையெல்லாம் தேவையற்றிருந்தேன்..

பாசம் நட்பு கற்பு கரிசனம் நாகரிகம்
ஒழுக்கம் கடமை உரிமை அன்பு பெருமை
கௌரவம் கட்டுப்பாடு வரைமுறை பண்பாடு.. என
வார்த்தைகள் தீர்வதில்லை ..
விளக்கங்கள் ஓய்வதில்லை

இவ்வரையறைகள்
தேவைகளில் ஊடுருவி
மழுப்புகின்றன

தேவைகளையே மறக்கின்றேன்..எனினும்
தேடல்களை விடுவதில்லை

தேவைகள் துவங்கிய தேடல்களே
காலத்தால் தேவைகளாகின்றன..

இது தானா பரிணாமம்
இது தானா வளர்ச்சி

வளர்ச்சிகள் வளர்ந்து
என் தேவைகளையும் பிறர் நிர்ணயிக்கும்
கொடுமைகள் காண்கிறேன்..

ஒடிக் கொண்டே இருப்பது வாழ்க்கையாகிறது
என் வேகம் எனக்கு மதிப்பளிக்கிறது
அந்த மதிப்பு எனக்கு முக்கியம்
என் தேவைகளின் தீர்வுகளுக்கு முக்கியம்
தேவைகளை மறந்தாலும் தீர்வுகளை மறக்கவில்லை

இது சக்கர வியுகம்
மீள்வதெப்படி..
குழந்தை இடமிருந்து கற்க வேண்டும்

பசியென்றால் நாகரிகம்
பார்க்காமல் கை கால்களை
உதைத்து அளும் குழந்தையிடம்
படிக்க வேண்டிய பாடம் அது

தானன்றி தரணியிலே உள்ளதெலாம்
தனித்தே இருக்கட்டுமெனும்
'சுயம்'

~சுகா

Monday, September 26, 2005

விரதங்கள் பலவிதம்

அரசியல் ஆதாயம் வேண்டி
சாகும் வரை உண்ணா விரதம்
செத்ததில்லை இதுவரை 'தலைவர்கள்'

ஆகாரம் ஏதுமின்றி
உண்ணும் வரை சாகா விரதம்
பிழைக்குமா இந்த தெருவோர சிசுக்கள்

~சுகா

Wednesday, September 14, 2005

தோல்விகள் பழகு

கடலிள் ஒரு துளி நீராய் திழைத்திருந்தேன் நான்
ஆதவன் ஒரு நாள் எனை எரிக்க
எரிக்கப் பறக்கும் பினிக்ஸ் பறவையாய் இல்லையேயென நான் தோற்றுப்போய் ஆவியுமானேன்

அஹா..வான் வழி பயணம் இனிதோ இனிது
என் தோல்வியே தேனாய் இனித்தது
கடலாய் கழிந்த காலத்தை கடிந்து கொண்டே
மேகமாகி வான் வழியே ஊர்வலம் போனேன்

குளிர்த் தென்றல் எனைத் தீண்ட சிலாகித்து
நொடிப் பொழுதில் உருகி விட்டேன்..
புவியெனை ஈர்க்க மழையென மாறி
மண்ணோக்கி வீழ்ந்தேன் நான்..
மீண்டுமோர் வீழ்ச்சி !

மீழ்வேனாயென மயங்கிச் சில நொடிகிடந்தேன் நான் மண்ணின் மணமும் மலர்போல் படுக்கையும்
உயிர் கொடுத்தது எனக்கு..
கடலலை மறந்தேன்
வான்வெளி மறந்தேன்.
மண்ணினில் தவழ்ந்தேன் குழந்தை போல..

கடலாகி நிறமற்றிருந்தேன்
வானாகி உருவற்றிருந்தேன்
மண் சேர்ந்து மணம் பெற்றேன் நிறம் பெற்றேன்
அருவியாய் காட்டறாய் ஒடையாய்
பீடு நடை போட்டு வந்த என்னை
வேரால் உறிஞ்சி வஞ்சித்தானே விதைக் கள்ளன்
தோற்பது தான் என் பிறவிக் கடனா
தோற்க நான் என்றும் தோற்றதில்லையே

விதை சேர்ந்துறங்கினேன் சில காலம்
விழித்த பொழுதினில் விழிநோக்க வழியில்லை
வழியின்றி விதை கிழித்தேன்
மண் பிழந்தேன்
சிறு வித்தாகி தலை நீட்டி கதிர் நோக்கிய அந்நொடியில் அடியேன் அடைந்தேன் சொர்க்கத்தை உருவாக வாய்ப்பளித்த விதையோனை வாழ்த்தி
வளர்ந்து மரமுமானேன்

மரமழிக்க மரம் கொண்டு வரும்
வருங்கால மனிதப் பிணமொன்று வருதல் கண்டேன்
மனம் வருந்த மனமில்லை
தோற்பது புதிதல்ல எனக்கு
உண்மையில் நான் தோற்றதென்பதுமில்லை
எல்லாம் தோற்றப்பிழையன்றி வேரில்லை
தோல்வியெனக்கு புது உரு கொடுக்கும் வாய்ப்பு
வாய்ப்பை வாழ்த்தாமல் வருந்துவானேன்

எனைக் கடலில் இருந்து மேலே அனுப்பிய
தோல்விகள் எனது படிக்கற்கள்
வெற்றியோ ஒரு போதை..
என்னை ஒரே இடத்தில் இருத்திவிடுகிறது..

என் தோல்வி, தோற்கடிக்கப் பட்டதால்
இழந்த வெற்றியை விட பெரிய வெற்றியை
நோக்கி பயணிக்க வைத்திருக்கிறது
பயணிப்பதும் பயணித்த இலக்கை அடைவதும்
என் கையிலேயே..

சில சமயம் எனக்கு இலக்குகளே இருந்ததில்லை
இலக்குகளை உணர்ந்ததில்லை
ஆனால் மாற்றங்களை எற்றுக் கொண்டேன்
மாற்றங்கள் சில சமயங்களில் ஏற்றங்களாயின
ஏற்றங்களிலிருந்த போதும் மாற்றங்கள் அழைத்தன
மிக கடினமான முடிவெடுக்க வேண்டிய தருணங்கள்

கஷ்டத்தில் இருக்கும் போது
மாற்றங்களை அரவணைக்க துணிவு தேவையில்லை
மாற்றங்களே தேவைகளாகும் தருணங்களவை

வென்ற பிறகும் வசதிகளில் திழைக்கும் போதும்
மாற்றம் கொள்ளத் துணிவதே துணிவு
வாழ்க்கைக்கு இலக்கொன்றை கொண்டோரின் துணிவு
ஏற்றுக் கொண்ட மாற்றங்கள் எமாற்றங்களை
அளித்தாலும் ஏற்றுக் கொள்ளும் துணிவு

தோல்விகள்.. அனுபவங்கள்
கற்றுத் தருபவை
அடையாளம் காட்டுபவை
எல்லைகளை வரையறுப்பவை
உடனிருப்போரை தோலுரித்துக் காட்டுபவை
ஓய்விற்கு ஒய்வு கொடுப்பவை
தோல்விகள்.. அவமானங்களல்ல
வழிகாட்டும் அடையாளங்கள்

வெற்றிகள் போதை..
போதையின் களிப்பு
வெற்றிப் போதையின் தெளிவே தோல்வி
இதை அடையாதவர்களில்லை
தவிர்ப்பவர்கள் முன்னேறமுடியாது
தவிப்பர்கள் மீழமுடியாது
தாங்குபவர்கள் முன்னேற்றத்தை தவிர்க்க முடியாது

தோல்விகள்.. மறந்திருந்திருந்த பலதை..
கண்ணீர்ச்சுவையை
அவமானங்களின் பதைபதைப்பை
எளனப் பேச்சுக்களை
அதை எற்க மனமின்று செய்த வாதாட்டங்களை
அவ்வாதட்டங்கள் வெறும் நேரவிரயமென்பதை
வெற்றிக் களிப்பில் மார் நிமிர்த்தி பீடு நடைபோடையில்
பணிந்து வணங்க மறந்த முகங்களை
என மறந்த பலதை நியாபகப்படுத்தும் மருந்தே தோல்வி

தவறுகளை வலிக்கத் திருத்தும்
தோல்விகள் எனது ஆசிரியர்
காலம் முழுக்க படிக்கப் பட வேண்டிய
பாடம் எனது தோல்விகள்
பாடங்கள் எனது வளர்ச்சிக்கு
வளர்ச்சியே எனது வெற்றி
தோல்விகள் எனது வெற்றிகள் !

Monday, August 01, 2005

வழிநடைப்பயணம்

வழிநடைப்பயணம்
------------------------

இது ஒரு நீண்ட பயணம்
துவங்கிய இடம் தெரியும்
சேருமிடம் தெரியாது ஆனால்
சேருமிடம் பற்றி பல கற்பனைகள் உண்டு

தேவைகள் இந்த பயணத்தை துவக்கின
தேவைகள் பயணத்தை வழிநடத்துகின்றன.
தேவைகளை நிறைவு செய்து கொண்டே
பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது

பழைய தேவைகள் நிறைவாகும் வேகத்தை விட
புதிய தேவைகள் உருவாகும் வேகம் அபரிமிதம்
சில நேரம் பயணத்துக்காக தேவைகளா, இல்லை
தேவைகளுக்காக பயணமா என குழம்புகிறேன்

தேவைகள் கூடுகின்றன, வேகமாக பயணிக்கிறேன்
வேகமாக பயணிக்கிறேன், தேவைகள் கூடுகின்றன
தேவைகளை நிறைவு செய்து கொண்டு
பயணித்துக் கொண்டே இருக்கிறேன்

சில வருடங்களாக பயணத்தை வழிநடத்துபவனாக உள்ளேன்
என்னுடன் பயணம் செய்வோர் என் பயணத்திற்கு வித்திட்டோர்
மற்றும் என்னுடன் பிறந்தோர், சில வருடங்களில்
தங்கள் வழியை தேர்ந்தெடுக்க இருப்போர்

வழிநடத்துவதின் சுமைகள் சுகமானவை
மற்றவர் வழியை பின்பற்றும் உல்லாசத்தை விட சுகமானவை
வழிநடத்தியோரின் வலிகளை உணர்த்துபவை
வழிகள் வலிகளையும் வலிகள் வழிகளையும் நிர்ணயிக்கின்றன

பாலைவனத்தின் ஒட்டகம் உண்ணும் காய்ந்த முட்புதர்கள்
சிலவேளை அதன் கடினமான உதடுகளை கிழித்து விடும்
உதட்டோர உதிரச்சுவையை முட்களின் சுவையாக ரசித்து உண்ணும்
ஒட்டகம் போலே இச்சுமைகள் எனக்கு சுகமாகத்தான் இருக்கின்றன

என்னை வழிநடத்தியவர்கள் வலிகளை நான் அறிந்திருந்தேன்
அந்த வலிகள் என்னுள் உண்டாக்கிய வலிகளை
அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. இப்போது அவர்கள் என் பின்னால்
நான் அவர்களுக்கு காட்டுவது வழிகளை மட்டுமே வலிகளையும் அல்ல


பயணம் தொடரும்...

Monday, June 06, 2005

திருக்குறள் - சிறு திருத்தம்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மக்களைச்
சான்றோர்எனக் கேட்ட தாய்.

மாற்றினேன் 'மகனை' மக்களென்று
நிரைநேர் நேர்நேர் ஆயினும்
பொருள் நேர் ஆனது காண்.

-சுகா.

Tuesday, May 31, 2005

மழைக் குடை

சூரியச் சாரல் காக்க
குடை பிடித்தது
கோடை மழை

-சுகா

Thursday, May 26, 2005

நிழல்

கோடாரிகளும்
உறங்கிக் கொண்டிருந்தன
மர நிழலிள்..

Monday, May 23, 2005

முமுமூடி
-சுகா

யானை எப்படா வரும் என பரபரப்பாக காத்திருந்தேன். அது எப்பத் தான் நேரத்துக்கு வந்துச்சு என அலுத்தபடி வேகமாக கையை காலை ஆட்டிக் கொண்டே கடையின் உள்ளே திரும்பிப் பார்த்தேன். தூரத்தில் யானை கையை ஆட்டியபடி வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு வழியா வந்துடுச்சுப்பா என பெருமூச்சு விட்டபடி நானும் பதிலுக்கு கையை ஆட்டினேன். அது வந்து சேருவதற்குள்ளேயே கடைக்கு பின்புறம் உள்ள காலியிடத்தை நோக்கி நகர்ந்து அங்கிருந்த திண்ணையில் “அப்பாடா” என அமர்ந்தேன்.

மணிக்கணக்கில் நின்று ஆடிக் கொண்டிருந்ததால் உட்கார்ந்த இடத்தை சொர்க்கமாக உணர்ந்தது இடுப்பு. “உஸ்ஸ்..” என பெருமூச்சு விட்டுக் கொண்டே தலையில் மாட்டி இருந்த கரடி முகமூடியை கழட்டினேன். சித்திரை அனல் காற்றும் கூட இதமாய் முகத்தை வருடியது. கண்களை மூடி அண்ணார்ந்து பார்த்தபடி கொஞ்ச நேரம் முகத்தை காய வைத்தேன். வியர்த்து வியர்த்து முகம் வெந்து விட்டது போலிருந்தது. முகத்தில் ஊறியது போக நெற்றியில் மீதமிருந்த வியர்வையை அழுந்த துடைத்துக் கொண்டே கையிலிருந்த கரடி தலையை பார்த்தேன்.

அட சாமீ.. இதை தலையில மாட்டிக்கிறத விடவும் பெரிய தண்டனை உலகத்தில இருக்கா என்ன? புதுசா தலைல போடும் போது மெதுமெதுன்னு நல்லா இருக்கும்.. ஆனா ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷத்துலயே வேர்க்க ஆரம்பிச்சுடும். அதுக்கப்புறம் நரக வேதனை தான்… ஹூம்… ஆனாலும் இந்த தலையப் பார்த்து சந்தோசப் படரவங்களும் இருக்கத்தான் செய்றாங்க… இந்த வேசத்துல இருந்தா பொடுசுக வந்து கை கொடுக்குதுக கூட சேர்ந்து போட்டோ கூட எடுத்துக்குதுக. சில சுட்டி பசங்க வாலைப் புடிச்சு இழுத்து வெளையாடுதுக. அட.. பொடுசுக கூட வர்ற பெரியவங்களும் கூட சில சமயம் பொடுசுகளோடு பொடுசாகிடறாங்க. என்னமோ போங்க.. நாம படற கஷ்டம் அவங்களுக்கு எப்படி தெரியப் போகுது..அவங்களப் பொருத்தமட்டும் நான் எப்பவும் சிரிச்சுட்டே விளையாடிட்டிருக்கற புஸு புஸு கரடிக் குட்டி. இந்த கொழுகொழு பொம்மைக்குள்ள ஈர்க்குச்சி மாதிரி இருக்கற என்னை எத்தனை பேருக்குத் தான் தெரியும்?


ஆனா ஒண்ணுங்க.. என்னால நெஜ முகத்த வெச்சு செய்ய முடியாத ஒண்ணை இந்த கரடித்தலைல பண்ண முடியுது. தினமும் எத்தன பேரத்தான் சந்தோசப் படுத்துது இந்த பொம்மத் தலை. சின்னவங்க பெரியவங்க யாரா இருந்தாலும் பார்த்த உடனே டக்குனு சிரிக்க வெச்சுடுது. எத்தன பேரால இது முடியும். நான் பசில இருக்கறனோ எரிச்சல்ல இருக்கறனோ அத எல்லாம் வெளிய காட்டாம எல்லாருக்கும் பிடிச்சமாதிரில்ல இருக்க முடியுது.. என் நெஜ முகத்த பாக்குறவங்க என்ன சிடுமூஞ்சி தொட்டாசிணுங்கின்னுள்ள சொல்றாங்க. இப்பிடி முகமூடி போட்டாவது மத்தவங்கள சந்தோசப்படுத்த முடியுதே. இத நா சேவையா ஒண்ணும் செய்யறதில்ல..எல்லாம் வயித்துப் பொழப்புக்குத்தான்.

இருந்தாலும் இந்த வேலையில ஒரு திருப்தி இருக்குங்க. ஏன்னா..எனக்காவது முகமூடி போடுறதுதான் வேலையே.. ஆன எத்தனை பேர் அவங்க செய்யற வேலைய காப்பாத்திக்கவே முகமூடி போடுறாங்க. இப்பிடி முகமூடி போடுரத தப்புன்னு சொல்லல.. அதப்பத்தி ஆராய்ச்சி செய்யற எண்ணமும் இல்ல..ஏன்னா இதுக்கு ரொம்ப நியாயமான காரணம் கூட இருக்கலாம். சந்தோசப்படற மாதிரியோ களப்பா இருக்கற மாதிரியோ யாரோ சொல்ரத கவனிச்சு கேக்கற மாதிரீயோன்னு யாரோ திருப்திக்காக எவ்ளோ முகமூடிகள போட வேண்டிருக்கு.. இந்த முகமூடியை நியாயப்படுத்த நாகரீகம், கௌரவம், சம்பிரதாயம் ன்னு எவ்வளவோ விசயங்களும் இருக்கு. ஆனாலும் இது எவ்ளோ கஷ்டம்ன்னு தெரியுங்களா..இந்த துணியால நெஜ முகத்த மறைக்கும்போது கூட எரிச்சலோ, சந்தோசமோ துணி முகத்துக்குள்ளயாவது காட்டிக்க முடியுது. ஆன துணியில்லாம முகமூடி போட முயற்சி செய்யும்போது அந்த வசதி கூட கிடையாதுங்களே. துணி முகமூடியால வேர்க்க மட்டும் தான் செய்யுது ஆனா அதில்லாம நடிக்கும் போது மனசே வெறுத்து போகுதே..

எத்தன தடவ சிரிக்கற மாதிரி வருத்தமா இருக்கற மாதிரி யாரையோ பார்க்காத மாதிரி எற்கனவே தெரிஞ்ச விசயத்துக்கு ஆச்சர்யப்படற மாதிரின்னு விதம் விதமா நடிச்சிருப்பேன். அதெல்லாம் என்ன முகமூடி தானே ! எவ்வளோ நேரம் மாட்டீட்ருக்க வேண்டீருக்கு..ஒரே ஒரு கரடி மூஞ்சியத்தான் நாள் முழுக்க போட்டிட்ருக்கறது எவ்வளவோ மேல். ஆனா நெஜ முகத்த மணிக்கு மணி, நிமிசத்துக்கு நிமிசம் மாத்த வேண்டி இருக்கே..என்ன பண்ணறது.. சொந்தபந்தத்துல இருந்து குடும்பம் குழந்த குட்டி ன்னு எல்லார்கிட்டயும் ஒரு நேரம் இல்லன்னாலும் ஒரு நேரம் முகமூடி போட வேண்டி இருக்கே..ஆபீஸ் வேல நேரத்துல கேக்ககவே வேணாம் , கரடி பொம்ம சிரிப்போடத் தான் மேனேஜர பார்க்க வேண்டிருக்கு..கண்டபடி திட்டலாம்னு தோணும் போது கூட ஈன்னு இளிச்சுட்டு அசடு வழிஞ்சுட்டுள்ளங்க வரவேண்டிருக்கு.

முடியலைங்க.. பொழப்புக்காக முகமூடி மாட்டிக்கிறதோட கஷ்டநஷ்டம் கூட பெருசாத் தெரியலை..அப்பப்ப கழட்டி காத்து வாங்குனா பழகி போயிடுது. ஆனா இந்த நெஜ முகத்த படாதபாடுத்தறது தான் என்னால முடியல. அதனால இந்த முகமூடிய கழட்டி வெச்சு பழகிட்டேங்க. நான் இப்பிடித்தான்னு நெஜ முகத்தை காட்ட முயற்சி செய்யறேங்க. நாலு பேருக்கு புடிக்கல. சிடுமூஞ்சின்னு கொரங்குன்னு திட்றாங்க. சில பேரு பழகிட்டாங்க. அவங்க கூட பழகறது எனக்கு நெஜ சந்தோசமா இருக்கு. ரோட்டோரம் விக்குற அந்த முகமூடிய வாங்கீட்டு போயி வருத்தமா இருக்கற நேரத்துல போட்டுக்கிட்டு சந்தோசமா காமிச்சு சுத்தி இருக்கற பொடுசுகள சந்தோசப்படுத்தறதுண்டு. அதுக நெஜ முகத்துல கலகலன்னு சிரிக்கறத பார்த்தா நமக்கும் சந்தோசமாகிடுதுங்க. இப்பிடியே ஒடுதுங்க வாழ்க்கை. சரி எனக்கு நேரமாச்சு , யானைய அனுப்பணும். நான் கெளம்பறேன்.

சிறிது நேரம் களித்து, வாசலில் ஆடியபடி நான் கரடித்தலைக்குள் நெஜ முகத்தில சிரிச்சுட்டே முகமுகமூடி மனிதர்களை வரவேற்றுக் கொண்டிருந்தேன்.

Wednesday, April 13, 2005

பண்டிகைக்கு காத்திருக்கும் சாமியில்லையா...

"பால் மழைக்கு காத்திருக்கும் பூமியில்லையா...
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமியில்லையா..."

காதுகளில் இனிமையாக ஒலித்தது... சாமி மட்டுமா காத்திருக்கிறது, நானும் கூடத்தான்...

பண்டிகை பரபரப்பை ரசிப்பத்ற்காக மட்டுமல்ல. பல நாளாக விட்டுப் போயிருக்கும் நண்பர்கள் தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளவும் தான்.
பண்டிகை அன்று தொடர்பு கொள்வதில் இரண்டு நன்மைகள் உண்டு.
ஒன்று, எடுத்த உடனே திட்டு வாங்க வேண்டியதில்லை. இன்னொன்று,
எந்த விசயத்திலிருந்து ஆரம்பிப்பது என குழம்பத்தேவையில்லை,
வாழ்த்துக்களுடன் தொடங்கலாம்..

இன்று என் புத்தாண்டை, ஒரு நூறு பேருக்கு வாழ்த்துக்களுடன் துவங்கி
உள்ளேன்... நூற்றி ஓருவராக உமக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

~சுகா

Tuesday, April 05, 2005

பாரதி வழியில்...

தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி பிறர்
வாடப் பல செயல்கள் செய்து மனம்
வாடித் துன்பமிக உழன்று நரை
கூடிக் கிழப் பருவமெய்திக் கொடுங்
கூற்றுக் கிரையென பின்மாயும் சில
வேடிக்கை மனிதரைப் போலே நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ !