Tuesday, January 24, 2006

கவிதை கேட்டால் தங்கம் வெல்லலாம்..



என் கவிதைகள்
உருவாக்குவது
ரசிகர்களை விட
அதிகமான
ஓட்டப்பந்தய வீரர்களையே

சுகா :)

Wednesday, January 18, 2006

ஓவியப் பிரியர்களுக்காக -2

பென்சில் ஓவியம் ஒன்று படிப் படியாக உருவான விதம் இங்கே
http://pencilsketch.blogspot.com/2006/01/how-i-sketched-it-1.html

சுகா

Monday, January 16, 2006

நானறிந்த கடவுள் - 4

எனக்குப் பல விஷயங்கள் புரிவதற்கு முன்பே பழகிப்போயிருந்தன. பழக்கப் படுத்தியவர்கள் நம் நம்பிக்கைக்குரியவர்களாதலால் கேள்விகள் கேட்டு விளங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்ததில்லை. சிறிய வயதில் நம் தேவைகள் சிறியது. கவனம் அதில் மட்டுமே. மற்றவைகளை ஆராயத் தோன்றியதில்லை. சிலவற்றை சடங்காகச் செய்து முடித்து அடுத்த நொடியினில் அதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் அடுத்த பிடித்த வேலைக்குத் தாவ முடிந்தது.

இளங்கன்று பயமறியாது. வளர்ச்சி ஒரு வித பயத்தையே நமக்குள் விதைக்கிறது. நிகழ்காலத்தைப் பற்றியே எண்ணி ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவிட்டுக்கொண்டிருந்த குழந்தையின் நிலை மாறி, பள்ளி படிப்பு பட்டம் என குறிக்கோள்கள் தோன்றத் தோன்ற எதிர்காலத்தைப் பற்றிய பயத்தில் நிகழ்காலம் கழிய ஆரம்பித்தது. பயம் என்பது கூட தவறான வார்த்தைப் பிரயோகமாய்த் தோன்றலாம். எதிர்காலத்திற்கு எப்பேர்ப்பட்ட திட்டங்களைத் தீட்டி செயல் படுத்துவோர்க்கும் கூட அவர்களின் ஆசைகளும் ஆசைகளை நிறைவேற்றும் காரணிகளைப் பற்றிய பயங்களே திட்டங்களாகத் தீட்டப்படுகின்றன.

பயம்... மிக நல்ல உணர்ச்சி. தனிமனிதனைச் சமுதாயமாக மாற்றுவதும் அதுவே. உயிர் அருமையானது. போனால் திரும்ப வரப் போவதில்லை இந்த உண்மையை அறிந்தது ஒருவகை வளர்ச்சியே. உயிரைக் காப்பது குறித்த பயம் அனைவருக்குமிருந்தது. பொதுவான விஷயங்கள் இணைப்பது இயல்புதானே. பொதுவான இயல்பிருந்தாலும் இதிலேது திருப்தி. அனைவரும் ஒரு விதமே.. அதே உடலமைப்பு .. அதே பயம். இது போததே..

தேவை ஒரு காப்பு.. என் உயிரைக் காக்க ஒரு சக்தி.. மூளையின் பிழவுகள் அதிகமாயின.. தன் பசியை மட்டுமே அறிந்திருந்த மனிதன்... எப்படியோ வாய்வழியே வயிற்றுக்கு உணவளிக்கும் வித்தையைக் கற்றிருந்தான்.. தேவைகளைத் தீர்த்துக் கொள்வதில் மனிதனைவிட புத்திசாலி வேறேதும் இல்லை என அவனே பின்னாளில் பிதற்றினான்.. வயிற்றுக்கு உணவளித்தவனுக்கு நீர் , நெருப்பு காற்று பிற மிருகங்கள் மனிதர்களிடமிருந்து காக்க மாபெரும் சக்தி ஒன்று தேவைப் பட்டது.. நிலத்தடியே குழங்குபோல அது சுலபமாகக் கிடைக்காது என்பது அப்போதே புரிந்திருந்தது.. அந்தச் சக்தியின் தேவை ஏக்கமாக மாறியது.. ஏக்கம் தீர வழியேதுமில்லாததால் .. ஏக்கங்களும் பொதுவாகின..

ஏக்கங்கள் பழகியியும் போயிருந்தன.. மனிதனே குகை பிடித்து .. நெருப்பைக் கண்டுபிடித்துத் தன் பயங்களில் சிலதைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தான்.. பழைய கவலைகள் மறந்தாலும் புதிய பயங்கள் தோன்றிய வண்ணமேஇருந்தன.. புதிய பயங்கள் பழைய ஏக்கங்களைத் தக்கவைத்துக் கொண்டிருந்தன .. மனிதனின் வாரிசுகள் மனிதனின் ஏக்கப் பிதற்றல்களை கவனித்துவந்தன.. காரணங்கள் புரியாமல் காரியங்கள் கற்றுக் கொண்டன...வாரிசுகளுக்கு வாரிசுகள் வந்தன.. காரியங்களுக்கு காரணங்கள் தேவைப்படும் காலம் வந்தது. ஏக்கப் பிதற்றல்கள் வழிபாடுகளாயின.. தோனுமிடமெல்லாம் சக்திகள் தோன்றின .. கடவுள்கள் ஆயின... புரியாதவைகளெல்லாம் புனிதங்கள் ஆயின. கண்ணுக்குத் தெரியாதவைகளில்லாம் தெய்வங்கள் ஆயின..

மனிதனுக்குப் பிடித்திருந்தது.. கடவுளைப் படைத்ததை உணராமல் கடவுளால் படைக்கப்பட்டோமென நம்புவது பிடித்திருந்தது. தனைக் காக்கச் சக்தியொன்று உண்டு எனும் நம்பிக்கை அவனுக்கு அமைதியைக் கொடுத்தது. கிழங்குகளைத் தேடி அலைந்த நாட்களில் சில விஷக் கிழங்குகள் அவனுக்கு அளித்த மயக்கம் அவனது மற்றபயங்களைப் போக்கிய மயக்கம் பிடித்திருந்தது...அவன் இறந்து கொண்டிருப்பதைக்கூட அவனால் உணராமல் அவனால் அந்தக் கிழங்கை ரசிக்கமுடிந்தது.

மூன்றாம் உலகப் போரென்று ஒன்று வந்தால் அதிலிருக்கும் பிரிவுகள் இந்த மாயையின் பக்கவிளைவுகள் என்பதை மறப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. என் தேவைகளைச் செய்ய உழைத்துவிட்டு உழைப்பின் பயன் கிடைக்காமல் போனாலென்னவாகும் என்ற பயத்தை நீக்கும் என் புண்ணியங்கள் பிடித்திருக்கிறது. சிலவேளைகளில் உழைக்கவும் தோன்றாமல் பலனை மற்றும் எதிர்நோக்க வழியமைத்த வழிபாடும் நிம்மதியே. செய்வன செவ்வனே செய்யாமல் பலனற்றுப் போனால் என் துரதிருஷ்ட்டம் எனக்கு ஆறுதலளிக்கிறது. கண்ணயரும் வேளையிலே காப்பாற்ற ஒருவன் இருக்கின்றான் என்ற போதை தூக்கமாக எனக்கு இனிக்கிறது.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோ ம் நடலையல்லோம்
எமாப்போம் பிணியறியோம்..."!

சுகா

Saturday, January 14, 2006

மதிப்பிற்குரிய ஓர் எதிரி..

அமோக வெற்றிகள்
உற்சாகக் கரகோஷங்கள்
சுகம் தானெனிலும்

சூழும் நட்பும்
அதனால்சூடும் நகைப்பும்
இனிமை எனினும்

சுலபமாகத் தீரும்பிரச்சனைகள்
நிம்மதிதான் ஆனாலும்
ஏதோ குறையுண்டெனஉணர்வதேன்

சிரித்த முகங்களும்
சிரிக்க வைக்கும் வார்த்தைகளும்
சிறிதே சலிப்பதேன்..

தனிமையில்
இனிமை நினைவுகள்
வழக்கமானதே..ஒரு குறையோ

குளிர்த் தென்றல் இதமென்றால்
கோடை வெயிலும்
வழியும் வியர்வையும்
நிழல் தேடும் விழிகளும்
இலையுதிர்த்த மரங்கள் எதிர்ப்பட நோகும் மனமும்
இவைதானே
என்னைஇயக்குவது..
இயக்கற் பலன் அருமையெனில்
இயக்குவதும் அருமையின் அருமைதானே..

கோபமென்றொன்று
அது தள்ளும் அட்ரினலின்
நாவினடியினில் புளிப்புச் சுவை
மறந்தே விட்டேனோ

நீண்ட வாதங்களும்
நட்பின் முகமூடி தொலைத்த பட்டவர்த்தனைகளும்
ஆவேசக் குமுறல்களும்
அலட்சிய வார்த்தைகளும்
அந்நொடியில் வலித்தாலும்
அதுவும் ஒரு சுவைதானே

திரும்பத் திரும்பத் தோன்றும் காட்சிகளும்
தூக்கம் தொலைக்கும் நினைவுகளும்
நினைக்கக் கலங்கும் கண்களும்
இமைக்க மறக்கும் இமைகளும்
துடித்துச் சிவக்கும் முகமும்
பதில் தரப் பொருமும் உள்ளமும்
புயலாய் வெளிவரும் பெருமூச்சும்
லட்சியங்களை கருத்தறிக்கும் மூளையும்
இதனால் நான் படும் பாடும்
தனியொரு சுகம் தானே..

இச்சுகம் புதிதல்ல..இருப்பினும்
இதைமீண்டும் அனுபவிக்கத் தேவை
மதிப்பிற்குரிய ஓர் எதிரி

சுகா

Tuesday, January 10, 2006

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 5

முந்தைய பதிவுகள் : ஒன்று , இரண்டு , மூன்று & நான்கு

மீட்டிங் முடிந்ததும் அனைவரும் தூக்கக் கலக்கத்தில் அறையைவிட்டு வெளியேறினர்.

அறையின் ஒரு மூலையில் லேப்டாப்பிற்குள் தலையை விட்டு கிட்டத்தட்ட ஒருமணி நேரமாக எந்த அசைவுமில்லாமல் அமர்ந்திருந்த சுந்தர்ராஜன் , யாரோ முதுகைத் தட்டுவதை உணர்ந்து
" யா..யா.. ஐ அக்ரி வித் யூ " என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்தவர், அறை வெரிச்சோடி இருப்பதைப் பார்த்துத் திகைத்தபடி திரும்ப..

அங்கே சத்தமேஇல்லாமல் வாய் மீது கையை வைத்தபடி நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தார் சத்யராஜ்.

சத்யராஜ் சிரித்துக் கொண்டே "எதுக்கு இதெல்லாம்... இல்ல எதுக்கு இதெல்லாம்ன்னேன் ..யார் என்ன சொல்றாங்கன்னே தெரியாது... அதுக்குள்ள 'யா யா...' ன்னு அக்ரி பண்ணறீங்களா..."

சுந்தர்ராஜன் " இல்லபா.. டீப் பா மூழ்கி டீபக் பண்னீட்டு இருந்தேன்... அதாதான்...."

"அடடா... இருகூர்ல பொட்டிக்கடை வெச்சிருந்த காலத்திலிருந்து உங்களைத் தெரியும்.. இப்ப எதுக்கு இந்த மழுப்பல்.. ம்ம்ம்... அட சாமீ... மீட்டிங்ல தூங்கறவங்க நெறயா பேரப் பாத்திருக்கேன்... ஆனா தூங்கிக் கிட்டே மீடிங்க்கு வந்து மீட்டிங் முடிஞ்சது கூடத்தெரியாமத் தூங்குற ஒரே ஆளு..." என்ற படி ரெண்டு கையையும் நீட்டி சுட்டிக்காட்டுகிறார்..

" என்ன பண்றது ..இந்தியாவில இருந்திருந்தா ஜோசியகாரன், பாகவதரு வாத்து மேய்க்கறதுன்னு கவுரவமா இருக்கலாம் .. இங்க பாரு என்ன பேசுறம் எதுக்கு பேசுறம்ன்னே தெரியாது ஆனா ரெம்ப பேசி உசுர வாங்குறானுக...இப்பிடி பன்ணுன தூக்கம் வராம என்ன செய்யும்.. இந்த லட்சணத்துல ஏஎம்சில சதிலீலவதி ஸெகண்ட்ஸோ வெற..அதனாலத் தான்.."

" சரி சரி வாங்க .. வெளிய போயி காப்பி குடிச்சுட்டு வரலாம்" என அவரைக் கிளப்பிக் கொண்டு வெளியே போக,

ஆபிஸ்...மீட்டிங் என ஒரே போரடித்ததால் நானும் அவர்கள் பின்னாலயே போனேன்..

அறையை விட்டு வெளியே வந்ததும் எங்கிருந்தோ சுவற்றில் ஊர்ந்துவந்த செக்யூரிடி டிடக்டர் இவர்கள் மீது இன்ஃப்ரா ரெட் லைட் அடித்துப் பரிசோதித்தது..

சுந்தர்ராஜன் " அட ..இதொரு தொந்தரவு கண்ணுக்குள்ள லைட் அடிச்சுக்கிட்டு.. ஆதிகாலத்திலயே இருக்காங்க..இந்தியாவுல பாத்தியா எவ்வளவு அட்வான்ஸ்டு டெக்னாலஜீஸ் வந்துடுச்சுனு"

"அட நீங்க வேற .. இங்க சில கம்பெனில அந்த காலத்து ஸ்வைப் கார்டெல்லாம் வெச்சிருக்காங்களாமா.... சரி சரி நடையக் கட்டுங்க ..கடைய சாத்திடப் போறான்.." சத்தியராஜ்.

வெளியே துள்ளிக் குத்தபடி சத்யராஜ் வர கடந்து சென்ற அமரிக்கப் பெண் ஒன்று " வணக்கம்.. சௌக்கியமா..?" என கேட்டபடி சிரித்துக் கொண்டே கடந்து சென்றது.

பின்னால் வந்த சுந்தர்ராஜன் " ஒசரமா இருந்தா மரியாதையே தனி தாம்பா.." என அங்கலாய்க்க

சிர்த்துக் கொண்டே " நீங்க வேற.. பாண்டியராஜன் இங்க இருந்தாலும் இப்பிடித்தான் தனி கவனிப்பு இருக்கும்.. நாம இந்தியன் சிட்டிஜன் இல்லையா.. அதனாலத் தான் தனி மரியாதை ..வேற ஒன்னுமில்ல.. உங்களுக்கு வயசும் ஆகிப்போச்சு... பத்தாதக்கு சீப்பா கிடைக்குதேன்னு ப்ளேசரை போட்டுட்டு சுத்தீட்டு இருக்கீங்க... ஒரு $200 டாலர் அதிகமாப் போனாப் போகுதுன்னு போத்தீஸ் போயி இந்தமாதிரி கலர் லுங்கி, மைனர் சட்டை, கழுத்துக்கு கர்ச்சீப் ன்னு வாங்க வேண்டியது தான.. எப்பப்பார்த்தாலும் டார்கெட்டு வால்மார்ட்டுன்னு.. அட சே" அலுத்துக் கொள்ள

சுந்தர்ராஜன் " நீ பேசுவப்பா .. ..அப்பிடி இப்பிடின்னு மேக்கப் போட்டு எள ரத்தமாவே ஆகிட்ட.. நானெல்லாம் இன்னியும் கொஞ்ச நாள்ள இந்தியா போனாத்தான் உண்டு.. இரநூறு டாலர்ன்னு சொல்லீட்டே அது 5 ருபாய்ல்லயா.. ருபாக் காசோட மதிப்புதெரியாம ஆடீட்டு இருக்கே..ஆடு ஆடு"

" சரி சரி பொலம்பாதீங்க.. வாங்க வசந்த பவன்க்கு போலாம் .. போயி இட்லி வட காபிய ஒரு கட்டு கட்டலாம்.."

" நேத்து தான சரவணபவனுக்கு கூட்டீட்டு போன.. இன்னைக்கு ஒழுங்கா இங்கத்த கடை எதாவதுக்கு போறோம் சீப்பா முடிக்கறோம்... டெனிஸ் ல சாம்பார் சூப்பரா இருக்கும் தெரியுமில்ல... "

"உங்க கூட வந்ததிற்கு ... " என புலம்பிக் கொண்டே டெனிஸ்ஸுக்குள் நுழைய,

நான் கொஞ்ச நேரம் ஊர் சுற்றிப் பார்த்து அப்புறம் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன்.

கிட்டத்தட்ட சில வருடங்களிலேயே மாபெரும் மாற்றங்கள்... எரிபொருள் பற்றாக்குறை உலகப் பொருளாதாரத்தையே ஒரு புரட்டு புரட்டி இருந்தது. பொருளாதர மாற்றம் கலாச்சாரப் பரிமாற்றத்தையும் எந்த சிரமமுமில்லாமல் நிகழ்த்தியிருந்தது.

கிட்டத் தட்ட இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பிருந்த சூழல் இப்போது இங்கே..

நடைபாதைக் கடைகளில் நைக் அடிடாஸ் ஷூஸ் விற்றுக் கொண்டிருந்த பையன் தமிழிலேயே அழைக்க.. சிரிப்புடன் மறுத்து கடந்து சென்றால்..

அங்கே மசாலா மண மணக்க பேல் பூரி விற்றுக் கொண்டிருந்தார் "பூரி ராஜா" என அடையாளமிட்ட சட்டை அணிந்தபெண். பர்கர் கிங் இன் லேட்டஸ்ட் ச்செயின் ஆஃப் தெருவோரக்கடைஸ்.. இதில் அவர்களுக்கு நல்ல லாபம் போல..

சத்யராஜ் பேச்சில் பசி எனக்கும் ஒட்டிக் கொண்டிவிட சாப்பிட நினைத்து பாக்கெட்டில் தேடினால் இந்திய நாணயமே இருந்தது.. 'வி அக்செப்ட் இண்டியன் மனி' என எழுதி இருந்ததைப் பார்த்து 'அப்பாடா' என பேல் பூரி ஆர்டர் செய்தேன்.

லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. அப்படியே ரோட்டில் பார்த்தால் பத்து சைக்கிள் ட்ரேக்குகளும், இரண்டு லைட் ரெயில் ஒரு கார் ட்ரேக்கும் மீடியனின் இரு புறமும் இருந்தன. இங்கே கார்களைப் பார்ப்பது அரிது தான்.

சன் டீவியில் கேட்ட போது பில்கேட்ஸ் புதிதாக எதோ மாருதி காரை இம்போர்ட் செய்திருப்பதாகவும் அதில் எதோ வரிப் ப்ரச்சனை என்றும் ரீஜினல் நியூஸில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன செய்ய மாருதி , டாடா காரெல்லாம் வாங்கினால் பிரச்சனை வராதா யோசித்துக் கொண்டிருக்கும் போது..

" சூடான பேல் பூரி ரெடி" சொல்லிய படி தட்டை நீட்ட..
பாக்கெட்டில் இருந்த ஒரு ருபாய் நாணயத்தைக் கொடுத்தேன்.. "ஒரு ருபாய்... இந்தாருங்கள் மிதி ஐம்பது டாலர்கள்" எனக் கொடுக்க

இந்தப் பெண் மீதியை 'மிதி' என்கிறதே டோடெல் பரிட்சை எழுதியிருக்காது போல என நினைத்துக் கொண்டே நம்ம ஆட்களைப் பார்க்க டெனிஸ் நோக்கி நகர்ந்தேன்.

இதற்கும் கலிஃபோர்னியாவில் தான் தமிழ் பேசும் அமரிக்கர்கள் அதிகமாம். வியப்பாக இருந்தது.

Friday, January 06, 2006

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 4

முந்தைய பதிவுகள் : ஒன்று , இரண்டு & மூன்று

சிவாஜி அடுத்த அயிட்டத்துக்கு செல்வதற்கு முன் அறையைப் பார்வையிட்டார். ப்ரொக்ரரமர் கமல் மிஸ்ஸிங். செல் ஃபோனில் கூப்பிட்டு வரச்சொன்னார்.

கமல் என்ன மூடில் இருந்தாரோ .. பாடிக் கொண்டே உள்ளே வந்தார்.

"கோடிங் பாதி ...டிஃபெக்ட் பாதி கலந்து செய்த கலவை தான்..
வெளியே ஃபீச்சர் உள்ளே டிஃபக்ட்.. விளங்க முடியா டிசைனிங் தான்...
டிஃபக்டை கொன்று டிஃபக்டை கொன்று.. ஃபீச்சர் வளர்க்கப் பார்க்கின்றேன்..
ஃபீச்சர் கொன்று ஃபீச்சர் கொன்று டிஃபக்ட்டு மட்டும் வளர்கிறதே.."

சிவாஜி பாட்டைக் கேட்டு சிரித்துக் கொண்டே " என்ன மிஸ்டர் கமல், இந்த வார ஸ்டேட்டஸ பாட்டாவே படிச்சுட்டீங்க போல.." என குணா ஸ்டைலில் கேட்க கமல் அசடு வழிந்தார்.

"கமல்.. ஐ நோ யூ ஆர் அ வெரி டேலண்ட்டட் ப்ரொகிராமர்.. உங்க கிட்ட என்ன ப்ராப்ளம்னா.. ஒவ்வொரு பிராஜக்ட்லயும் புது லாங்வேஜ் தான் ட்ரை பண்ணுவேன்னு அடம் புடிச்சு அப்பிடியே பண்ணியிருக்கீங்க.. இங்க ஸ்கெட்யூல் ஸ்லிப் ஆகி லாஸ் ஆகிட்டிருக்கே... அதப் புரிஞ்சுக்குங்க" என ஸீரியஸாகிறார்.

கமல் "ஸார்.. ஐ அண்டர்ஸ்டேண்ட்... வெப் பேஜ் டிசைனிங்க அசம்ப்ளி லாங்குவேஜ்ல டெவளப் பண்ண ஆரம்பிச்சது எனக்கே கொஞ்சம் ஓவராத் தான் படுது.. ஐ வில் கரக்ட் இட்.."

சிவாஜி " ஒகே.. நெக்ஸ்ட்.. டாக்குமெண்டேசன் ப்ராக்ரஸ்.." என்று சொல்லிக் கொண்டே டாக்குமெண்டேஸன் லீட் மணிரத்ணத்தைத் தேடுகிறார்.

மணிரத்ணத்தைப் பார்த்து சிவாஜி " மணி , உங்க டாக்குமெண்டைப் பார்த்தேன்.. என்ன இப்பிடி கைட் பண்ணி இருக்கீங்க.. இதப் பாருங்க.." என ஒரு பிரிண்ட் அவுட்டைக் கொடுக்கிறார்.

அதில்
" நுழை..
கீழே போ..
அமுக்கு
"என மூன்றே வரிகள் இருந்தன..

சிவாஜி தொடர்ந்து " நம்ம பிராடக்ட்டோட கம்ப்ளீட் டாக்குமெண்டேசனே இவ்வளவு தானா.. இதுக்கு உங்களுக்கு த்ரீ மந்த்ஸ் டைம் , த்ரீ டீம் மெம்பர்ஸ் வேற.... நீங்க உங்க படத்துக்கு டயலாக் எழுதற நியாபகத்திலயே இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. பிளீஸ் டேக் கேர் ஆஃப் ஆல் தீஸ்" என நீளமாக பேசி முடிக்க

"எஸ்" என மணிரத்ணம் சொல்லியதும் .. " ஹூம்.. " என பெருமூச்சு விட்டார் சிவாஜி.

"மிஸ்டர் விஜயகாந்த், சொல்லுங்க உங்க டெஸ்டிங் டீம் ஸ்டேட்டஸை" என சிவாஜி கேட்டது தான் தாமதம். விஜயகாந்த் இருக்கையிலிருந்து எழுந்து சென்று ப்ரொஜக்டர் முன்னால் போய் நின்று எந்த டாக்குமெண்டையும் பார்க்காமல் முழங்க ஆரம்பித்தார்.

" நம்ம பிராடக்ல மொத்தம் 10 மாட்யூல்
அதுல வொர்க் ஆகுற நெலமைல இருக்குறது வெறும் 2 மாட்யூல்ஸ் தான்
அதுல ஒண்ணு நீங்க பார்த்தீங்களே அந்த டாக்குமெண்டேசன் ..

சராசரியா ஒரு மாட்யூல்ல 2500 லைன்ஸ் ஆஃப் கோட்
அதுல 2450 லைன்ஸ் கமெண்ட் மட்டும்
மீதி 50 லைன் கோடிங்ல இன்னைக்கு தேதில இருக்கற ப்ரயாரிட்டி ஒன் டிஃபக்ட் மட்டுமே 124

ஒரு டெஸ்ட் இஞ்சினியர் டிஃபக்ட் ஃபைல் பண்ணரதுக்கு செலவிடற டைம் மட்டும் ஒருநாளைக்கு 7 மணி நேரம்..
டிஃபக்ட் பைல் பண்ணரதயே ஆட்டொமேட் பண்ணினா நாம சேமிக்கற நேரம் ஒரு நாளைக்கு ஒரு இஞ்சினியருக்கு 7 மணி நேரம்"

என அடுக்கிக் கொண்டே போனவரை இடைமறித்தார் சிவாஜி. " போதும் .. விஜய்காந்த் போதும்...ரெம்ப தேங்க்ஸ் .. எப்பவுமே ஒரு வார்த்தை பேச வேண்டிய இடத்துல நூறு வார்த்தை பேசரது நீங்க மட்டும் தான்.. ஒய் டோண்ட் யூ ஹெல்ப் மணிரத்னம் இன் டாக்குமெண்டேஸன்.."

"ஐ வில் ட்ரை ஸார்" விஜயகாந்த்.


சிவாஜி டெவளப்பர் இளைய தளபதி விஜயின் பக்கம் திரும்பி " மிஸ்டர் விஜய்.... பார்த்தீங்களா எவ்வளவு டிஃபக்ட்ஸ்ன்னு ..வாட் ஹெப்பண்ட்"

டெவளப்மெண்ட் இஞ்சினியர் விஜய் பூவே உனக்காக கிளைமேக்ஸ் நியாபகத்திலயே "ஸார்... சிலபேருக்கு டிஃபக்ட்ங்கறது ரோஜாப் பூ மாதிரி... ஃபிக்ஸ் பண்ணீட்டா.. திரும்பி வராது....ஆனா சில பேருக்கு அதுவே ரோஜாச்செடி மாதிரி... ஒன்னை ஃபிக்ஸ் பண்ணினா... இன்னொன்னு புதுசா முளைக்கும்... இன்ஃபேக்ட்... சில சமயம் ஒரு பூவைப் பறிச்சா..அதனால ஒம்பது பூக்களும் கூட பூக்கும்... என் மாட்யூல் இரண்டாவது ரகம்" என முடிக்க.

சிவாஜி " இன்னைக்கு எல்லாரும் டயலாக் மூடுலய இருக்கீங்கபோல..ஆனா உருப்படியா எதும் இல்ல... மிஸ்டர் ரஜினி , யூ மே வாண்ட்டு அட்வைஸ் சம்திங் டூ விஜய் டூ ஃபிக்ஸ் ஹிஸ் ரோஜா...ஸாரி.. டிஃபக்ட்ஸ்"

ரஜினி " ப்ரொகிராமர்னா... அறிவு வேணும் அதிகபிரசங்கித்தனம் இருக்கக் கூடாது...
கூகுல் இருக்கனும் வேற எதுவுமிருக்கக் கூடாது...
சொந்தமா பணம் சம்பாதித்து பெங்களூருல வீடு வாங்க நினைக்கிற டெக்கியும்..
சொந்தமா ப்ரொகிராம் எழுதி சாஃப்ட்வேர் டெவளப் பண்ண நினைக்கிற ப்ரொகிராமரும் உருப்பட்டதே இல்ல"

ஏண்டா கேட்டொமென நினைத்து அடுத்த அயிட்டத்திற்கு தாவினார்.

" நீட் டு கம் அப் வித் அ லோகோ அண்ட் ஸ்லோகன் ஃபார் த ராக்கெட் லாஞ்சிங் சாஃப்ட்வேர்....ஸோ டீம் எனி சஜஸன்ஸ்" என சிவாஜி கேட்டதும்

ராமராஜன் " ஸார்.. எங்க ஊரு பசுமாடு பேச்சியோட படம் போடலாம் ஸார் ரெம்ப ராஸியாயிருக்கும்" என்றதும்

சத்யராஜ் நக்கலாக.. " ஆஹா.. நாமென்ன சித்தூர் பால்கோவாவா விக்கப்போறோம்.. என்ன ராமராஜன் அமரிக்கா வந்தாலும் அம்மாபேட்டை நியாபகத்துலயே இருக்கீங்க... "

விஜய் ' ஹார்ட் ஸிம்பல லோகோவா போட்டு .. இந்த ராக்கெட் காதலவிட உயர்வான இடத்துக்கும் போகும்ன்னு போட்டா நல்லா இருக்குமில்ல.."

"காதல்..ரோஜா இதெல்லம் உட்டு வெளிய வாங்க பிளீஸ்.."சிவாஜி

எதுவும் உருப்படியாக அமையாததால் சிவாஜி மீட்டிங்கை முடிக்க அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.


அடுத்த பாகம் இங்கே

Tuesday, January 03, 2006

தமிழ் நடிகர்களின் சாஃப்ட்வேர் கம்பெனி - 3

முதல் பதிவும், இரண்டாம் பதிவும் இங்கே...

பார்த்திபனைப் பார்த்ததும் சிவாஜி"ஓ.. பார்த்திபன் நீங்க இங்கதான் இருக்கீங்களா.. உங்களைக் கேக்கணும்ன்னு நினைச்சேன்... உங்க ஆஃபிஸ் முன்னால மட்டூம் ஏன் தமிழ்ல 'உள்ளே வெளியே' ன்னு போர்டு வெச்சிருக்கீங்க..?"

பார்த்திபன் " தமிழ வளர்க்கத்தான் சார்" என்று நெளிய

வடிவேலு கடுப்பாகி " வளர்த்துட்டாலும் .." என்று அழுத்துக் கொண்டார்

" பை த பை .. பார்த்திபன், நம்ம அவுட்டிங்க்கு கேம்ஸ் ப்ரிபேர் பண்ண சொல்லியிருந்தனே..என்ன ஆச்சு" என்ற சிவாஜியை இடைமறித்து வடிவேலு அவசர அவசரமாக

" சார்.. இதுவா சார் இப்ப முக்கியம் ..கிரிட்டிகள் இஸ்யூஸ் தானே டிஸ்கஸ் பண்ணீட்டு இருந்தீங்க..ஐ ஹேவ் எ வெரி வெரி கிரிட்டிகள் இஸ்யு நௌ.. கேளுங்க சார் பிளீஸ்" என மிரட்டலில் ஆரம்பித்து கிட்டத்தட்ட அழுகையில் முடித்தார்.

"மிஸ்டர் வடிவேல், ப்ளிஸ் பீ பேஷண்ட். " என்று சிவாஜி கடிக்கும் போது வடிவேலுவைப் பார்த்து நக்கலாகச் சிரித்தார் பார்த்தீபன். பின்னர் சிவாஜி பக்கம் திரும்பி

" எஸ் ஸார்.. எல்லா விளையாட்டும் ரெடி.. கில்லி, மங்காத்தா ன்னு செமையா பிரிபேர் பண்ணியிருக்கேன்" என்றதும்

சிவாஜி " என்ன பார்த்தீபன் .. எல்லாரும் விளையாடரற மாதிரி எதாவது ரெடி பண்ணுங்க. லாஸ்ட் டைம் ராமராஜன் கிட்ட குடுத்தா அவர் மாடு எருமை சம்பந்தமாவே சொல்லீட்டு இருந்தார்ன்னு இந்த தடவை உங்க கிட்ட குடுத்தா இப்பிடி சொதப்பரீங்களே..ப்ளிஸ் டீஸண்ட்டா எதாவது ரெடி பண்ணுங்க"

பார்த்தீபன் " எஸ் ஸார்".

சிவாஜி "ஒ கே.. இப்ப சொல்லுங்க வடிவேலு. வாட்ஸ் த இஸ்யூ"

வடிவேலு பார்த்தீபனைக் காட்டி "இவரோட இம்சை தாங்க முடியல சார்" அன்னைக்கு என்ன நடந்துதுன்னா என மீண்டும் கொசுவர்த்தியைச் சுழற்றுகிறார்..

பிளாஸ் பேக்கில் , லேப் வாசலில் வடிவேலு " இந்த வேலைய பாக்குறதுக்கு அரண்மனைக்கு பெயிண்ட் அடிக்கவே போயிருக்கலாம் போல.." என்று முணுமூணுத்தபடியே ஒரு ப்ரிண்ட் அவுட்டை ஒட்டிக் கொண்டிருந்தார்.

அந்த வழியே வந்த பார்த்தீபன் அதில் எழுதி இருந்ததை உரக்கப் படித்தார் " டோண்ட் டிஸ்டர்ப் த லேப் ஸிஸ்டம்ஸ் ஹியர்"

படித்துவிட்டு "சார் என்ன இது..? " எனக் கேட்க வடிவேலு அவ்ர் ஸ்டைலில் அழுத்தம் திருத்தமாக படித்துக் கான்பித்தார்.

பார்த்தீபன் " இத இங்க தானே ஒட்டி இருக்கீங்க .. இந்தியாவிலயா ஒட்டிருக்கீங்க.. எதுக்கு 'ஹியர்' ..தேவையில்லாம " என்றதும்

" ஆமாமில்ல.." என சொல்லி நாக்கை கடித்துக்கொண்டு "ஆமாம்..ஆமாம்" என சொன்னபடி ஓடிப்போய் புதிய பிரிண்ட் அவுட்டுடன் வந்து " இப்ப ஓ கே தான.." என்றதும்

" அது என்ன லேப் ஸிஸ்டம்ஸ் ? அப்ப அடுத்தவங்க ஸிஸ்டம் லாம் டிஸ்டர்ப் பண்ணலாமா..? நீதான் செந்திலை வச்சு கவுண்ட்ஸ் அண்ணன் சிஸ்டத்தை டிஸ்டர்ப் பண்ணுனயா..?" என பார்த்தீபன் மாட்டியதும்

"வேணாம்பா ..வேணாம்பா.. அவரு செந்திலுக்கு பதிலா எதுக்கெடுத்தாலும் என்னை உதைக்க ஆரம்பிச்சுடுவாருப்பா.. உனக்கென்ன அந்த வார்த்தைய எடுக்கணும் அவ்வளவு தானே.. ஒரே நிமிசம்.." என்று பறந்தவர் "டோண்ட் டிஸ்டர்ப் ஸிஸ்டம்ஸ் " என பிரிண்ட் அவுட் எடுத்து வந்து

"இப்பத் தான் ரத்ன சுருக்கமா அழகா இருக்கு இல்லே.." என்று அதை ஒட்டியதும் நழுவ முயன்றவர்

" இல்ல.. " என்ற பார்த்திபபின் ஒற்றைச் சொல்லால் தடுக்கியபடி திரும்பினார் வடிவேலு..

" லேபுக்குள்ளே ஸிஸ்டம்ஸ் இல்லாம என்ன மெகாசீரியல் ஸூட்டிங்கா நடக்கும்...எதுக்கு இந்த ஸிஸ்டம்ஸ் " என பார்த்திபன் கேட்க

பிரிண்ட் அவுட்டில் ஸிஸ்டம்ஸ் என்பதை மட்டும் கிழித்து மீதியை ஒட்டியபடி "இப்ப திருப்தி தானே .. கெளம்பறது.." என கடுப்பானார் வடிவேலு.

அப்போது அந்த வழியே போன ப்ரொகிராம் மேனஜர் வினுச்சக்கரவர்த்தியின் தலையை படாரென பார்த்திபன் தட்ட..கடுப்பாகி அவர் திரும்பி பார்த்திபனை முறைக்க..

"அப்பாடி.. மாட்டிகிட்டான் பாரு' என மனதில் நினைத்தபடி அந்தபிரிண்டவுட்டை ஒருகையில் பிடித்தபடி திரும்பி வேடிக்கை பார்த்தார்.

பார்த்திபன் குழந்தை போல பவ்யமான குரலில்" சாரி சார்.. அட்மின் வடிவேலு தான் 'டோண்ட் டிஸ்டர்ப்' ன்னு அவர் வாசல்ல மட்டும் எழுதிப்போட்டிருக்கறார்.. அதனாலத் தான் மத்தவங்களை டிஸ்டர்ப் பண்ணலாமோன்னு டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன் சார்" என முடிக்க..

" ர்ர்ர்" என பல்லைக் கடித்தபடி பார்த்திபனை நோக்கி வந்து " எல்லாம் இவனால தான்" என அந்த பிரிண்டவுட்டை கிழித்து போட்டபடி வடிவேலு தலையில் நறுக்கென கொட்டு வைத்துவிட்டு கிழம்பினார்.

"ஊஊஊ.." வடிவேலு அழுது முடிப்பதுக்குள் பார்த்திபன் எஸ்கேப்.

பிளாஸ் பேக் முடியும் சமயத்தில் சிவாஜி சிரிப்பதைக் கேட்டு கடுப்பாகி ஒரு லுக் விட்டார்.

சிவாஜி சுதாரித்துக் கொண்டு " பார்த்தீபன் .. என்ன விளையாட்டு இது.. பாருங்க அவர் எவ்வளவு ஃபீல் பண்ணறார்ன்னு" என்ற படி அடுத்த அயிட்டத்திற்குத் தாவினார்.

அடுத்தபாகம் இங்கே

நானறிந்த கடவுள் - 3

காலையில் சுப்ரபாதமும், சூலமங்களம் சகோதரிகளின் கந்த சஷ்டி கவசமும் கேட்கும் போது மனம் அடையும் அமைதிக்கு இணையேது. எம் எஸ்ஸின் 'குறையொன்று மில்லை..' யைக்கேட்கும் போது மறைமூர்த்தி கண்ணனைக் கற்பனை செய்து கண்களை மூடி மெய்மறக்காதவர் எத்தனை பேர். ஆயிரம் குறைகள் இருந்தாலும் இப்பாடலைக் கேட்கும் தருணங்களில் அந்தக் குறைகள் நுனிப்புல் பனித்துளியாய் சுவடற்று மறையும் மாயமென்ன?

கூட்டுப் பிரார்த்தனை வகுப்பில் 'தேனினிமையிலும் ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே..' எனப் பாடும் போதும் 'அல்லாவை நாம் தொழுதால் சுகம் எல்லாமே தேடிவரும்' என பாடும்போதும் நான் வேறு எதையும் பற்றி நினைத்ததில்லை. வெயில், வீட்டுப் பாடம், வகுப்புத்தேர்வு என அப்போது இருந்த பெரிய கவலைகள் இறைவனைத் துதிக்கும் அந்த நொடியில் இருந்ததில்லை. இத்தனை வசதிகளைத் தரும், அற்புதங்களை நிகழ்த்தும், மனதை அமைதிப் படுத்தும் கடவுளை ஆராயத்தேவையென்ன?

சிறு குழந்தைகளின் வழிகாட்டியாக இருக்க கடவுளைவிடத் தகுதியானது வேறேதும் உண்டா? "பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும்" என்று சொல்வதைவிட குழந்தையை பொய் சொல்லாமல் தடுக்க சுலபமான வழியேதும் உண்டா? நம் விளக்கத்தைப் புரிந்து கொள்ளும் மூளை வளர்ச்சியும் இருக்காது. அனைத்தையும் தெரிந்த, அனைத்தையும் கண்காணிக்கும் ஒரு கண்டிப்பான ஆசிரியராகவே கடவுளை சிறுவயதில் உணர்ந்துள்ளேன். இத்தகைய நல்வழிப்படுத்தும் சக்தியை ஆராய்ந்து வாழ்க்கையின் பொன்னான தருணங்களை வீண் செய்வானேன்?

இத்தனை கேள்விகள் மனதினில் ஓடினாலும் ஒரு சில நெருடல்கள்.

நாம் மனதை அமைதிப் படுத்தும், கவலைகளை மறக்கச் செய்யும் அனைத்தையும் அற்புதங்கள் என்று ஒப்புக் கொண்டு அதன் வழிநடக்க விரும்புவதில்லை. அப்படியில்லையெனில் இன்று ஒப்பியமும், இதர போதைப் பொருட்களும் கடவுளை விட பெரிய சக்தியாயிருக்கும். கடவுளை இவற்றுடன் ஒப்பிட முடியாது ஏனெனில் அதற்கு ஒரே காரணம் தான். பக்கவிளைவுகள்.. போதைப் பொருட்கள், வாழ்வின் நிம்மதிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுபோல் தோன்றினாலும் அது ஆயுளைக் குறைக்கும் பக்கவிளைவையும் அல்லவா கொண்டிருக்கிறது. நமக்கு ஆயுள் மிக முக்கியம், நமது வாழ்நாளின் ஒவ்வொரு நொடியிலும் அதை உணர்கிறோம். போதைப் பொருளின் போதை அந்த உணர்வையே அளித்துவிடும். அழிவுப்பாதையெனத் தெளிவாக உணர்ந்தும் நம்மை அதே பாதையில் செலுத்தும் வல்லமை அதற்குண்டு.

இதையே வேறு மாதிரியாகக் கூறினால், மனிதனின் ஆயுளை குறைக்கும் எதுவும் மனித குலத்திற்கு நல்லதல்ல. அழிவுப் பாதைக்கு எடுத்துச் செல்லுபவை பல அது அழிவுப்பாதை என்ற உண்மையை சாமர்த்தியமாக மறைக்கின்றதோ எனத் தோன்றுகிறது. மனிதனை நல்வழிப் படுத்துவதற்காகத் தோன்றிய மதங்களும் சாதிகளும் பிரிவினைகளை உருவாக்கி போராட்டங்களை, போர்களை உருவாக்கி கூட்டம் கூட்டமாக அழிக்க ஆரம்பித்தால், அதை உணர்ந்து கொள்ள முயல்வது தவறா? இந்த மதங்களின் சாதிகலின் அடிப்படை கடவுள் தானோ? இது மறக்கப்பட்டால் போராட்டங்களும் போர்களும் குறையுமோ? தீவிரவாதிகளும் அவர்களைத் தேடுரவாதிகளின் அளவிற்கே நியாயமான கடவுள் நம்பிக்கை உள்ளவர்தாமோ?

குழந்தைகளாக இருந்தபோது வழிகாட்ட வந்த கடவுளே வளர்ந்து 'பக்குவப்பட்ட' பின் பிரிவினைக்கும் அழிவிற்கும் வழிவகுப்பதைப் பார்த்தால்,
"கடவுளும் கற்று மற" என்றே எண்ணத் தோன்றுகிறது.