Friday, December 28, 2007

பயணங்களும் .. பாடங்களும் - 1

நீண்ட பயணம் இது…
வழிகள் மிகவும் பழக்கமாகி விட்டன
வழித்துணைக்கெனெ வழிகளே எனக்காக

பயணங்கள் இனிது
எதிர்ப்படும் எதார்த்தங்கள் சுவையானவை
ரசிக்க வைக்கின்றன..

இரயில் பயணத்தின் சன்னலோர நினைவுகள் கூட..
காற்று வீசாக் கோடையின்
மதிய நேரக் கால்நடைப் பயணத்தில்
கேசத்தைக் கொஞ்சம் கலைத்துச் செல்கின்றன..

பயணங்களின் அலுப்பைத் தீர்ப்பது கூட
அதன் நினைவுகளாகவே இருப்பது
ஆச்சர்யமாயிருக்கிறது..

வேகமான பயணங்கள்
பெரும்பாலும் ரயிலிருக்கைகளில்..

கடக்கப்படும் எதையும் முழுதாகக் காட்டாமலே
கூட்டிச் சென்று விடுகிறது..
காணக் கிடைத்ததென்னவோ
தூரத்தில் ரயிலை நோக்கி நகரும்
சில பனைமரங்களும்
அதைப் பற்றிப் பாடம் நடத்திய
பள்ளி ஆசிரியரின் நினைவு தாம் என்றாலும்
ரயிலோடு சேர்த்து
பழைய நினைவுகளும்
காண்பதை மறைத்துக்
கண்டதை காட்டிக்கொண்டிருந்து விடுகிறது

அடுத்த தண்டவாளத்தில்..
சட்டென எதிரே செல்லும் ரயில்..
நினைவுகளைக் கிழித்துக்
கொஞ்சம் கலவரப்படுத்தி விடுகிறது
திடுக்கிட்டுத் திரும்பி..
அருகே அமர்ந்திருப்போரைப் பார்க்கையில்
கொஞ்சம் அசடு வழியவேண்டியிருக்கிறது

அழகான கைக்குழந்தை ஒன்று ..
என்னையே கவனித்து கொண்டிருந்ததைக் கூட
அப்போது தான் பார்க்கமுடிகிறது..

எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்ததோ
பனைமரத்தைப் பார்த்துக் கொண்டு
என்னை உதாசீனப்படுத்தினாயோ என
பாரதி மீசையோடு என்னை
முறைப்பதுபோல் தோன்றியது

கண்ணை சிமிட்டிக் கொஞ்சம் சிரிப்பூட்ட
தன் பொக்கை வாயை அழகாகக் காட்டிச் சிரிக்கிறது
பனைமரமும் பள்ளிவாத்தியாரும்
பறக்கிறார்கள் நினைவிலிருந்து..

“நல்ல வெயில் இல்ல தம்பி” என
நெற்றியில் துண்டை ஒற்றியபடி
எதிரில் அமர்ந்திருந்த பெரியவர் கேட்க..
கவனிப்பிற்குக் காத்திருந்த இன்னொரு குழந்தை..
ஏதோ குத்தியது சுருக்கென்று..
மனிதர்கள் ..
இரத்தமும் சதையுமான இயற்கை..
அமோதித்துக் கொண்டே பேச்சைத் தொடங்கினேன்..

எதிர்பார்ப்புகளேதுமற்ற விசாரிப்புகள்
ஏதேனும் வார்த்தைகளில் தொடர்பைத்
தேடி மேலும் பேச விழையும் மனம்..
சிரமமில்லாமல் பரிமாறப்படும் சிரிப்புகள்..
அடுத்த ரயில் எதிரே போனதைக் கூட
கவனிக்கவே இல்லை .. இந்தமுறை

வகுப்பு முடிந்து செல்லும்
ஆசிரியரைப் போல சென்று கொண்டிருக்கிறது..
அந்த வண்டி..

இதுவரை கன்னத்தில்
லேசான துருவுடன் அழுந்தி
அதன் அச்சை மட்டும் பதித்திருந்த
சன்னல் கம்பிகளின்
வழியாக தென்றலும் கசிகிறது

பயணங்கள் பாடங்களைத் தர
தவறுவதே இல்லை…
பாடங்கள் மறக்கப்பட்டாலும்
அதை மன்னித்துவிடும்
நல்ல ஆசிரியரின் புன்னகையோடு..
மீண்டும் பாடங்களைச் சொல்லித்தர
தயங்குவதே இல்லை பயணங்கள்..

தொடரும்.. பயணங்களும்… பாடங்களும்…
சுகா

4 comments:

Thekkikattan|தெகா said...

ஆஹா, அசத்தலான ரயில் வண்டி அனுபவ மூட்டை... எல்லோருக்குமே இப்படித்தான் பயணம் தொட்டு எண்ணவோட்டம் அமையுமா :-).

அடிக்கடி எழுதுங்க, சுகா!

கப்பி பய said...

+++

அருமை!

Suka said...

நன்றி தெகா..

Suka said...

நன்றி Mr கப்பி :)