Saturday, December 29, 2007

பயணங்களும் பாடங்களும் - 2

பயணங்கள் பல திக்கிலும் இருக்கின்றன..
இலக்குகளை நோக்கி இடம் பெயர்வதும் ஒன்று..
கல்வியின் பயணம் அறிவின் பாதையில்..
பொருளாதாரப்பாதையின் பயண விளைவாக
செல்வத்தின் வளர்ச்சி..
சிலரின் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்வது
அமைதியின் பாதையில்..
இரசிப்புத்தன்மையின் பயணத்தின் இலக்கோ
எதையும் ரசிக்கப் பழகும் பக்குவத்தில்..
என பயணங்கள் பலபல திக்கிலும்..
எனினும் அனைத்துப் பயணத்திலும்
கையில் கடிகாரம்.. பயணத்திற்கேற்றவாறு..
மணிகளை, மணித்துளிகளைக் காட்டிக் கொண்டு சில
நாள்..வாரம் ..மாதமென சில..
வருடங்கள் மட்டுமேயென சில வித்தியாசமாக..

பயணங்களின் வாசனைகளும் பலபல...
சில ரசிக்க வைக்கின்றன..
சில முகம் சுழிக்க வைக்கின்றன..
சிலவற்றை நாம் கவனித்ததேயில்லை..
நமக்குப் பிடிப்பவை சில
அருகிலிருப்போருக்குப் பிடிப்பதில்லை..
அது சிலநேரம் கவலைப்படுத்துகிறது
சில நேரம் சந்தோசப்படுத்துகிறது..
எப்படியும் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன...

பெரும்பாலும் பயணங்கள்
பலரோடே இருக்கின்றன..
பலருடையேயான பயணங்கள்
இதமானவை பலநேரங்களில்..
பலர் சென்று பக்குவப்பட்ட பாதைகள்
வழியில் பார்க்கும் புதிய பாதைகள்
ஓர் இனம் புரியா ஆவலைத் தூண்டுகின்றன..

நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும்
பயன்பாடதிகமில்லாமல் பளபளக்கும் சாலைகள்..
அவற்றின் பயணிப்பயையும் இலக்கையும் பற்றிய கற்பனைகள்
கிளர்ச்சியடைய வைக்கின்றன..
சாலைகள் நொடிகளில் கடக்கப்பட்டாலும்
அவற்றின் நினைவுகளும்
பயணிக்க வேண்டிய ஆவலும்
இரகசியமாய் புதைகின்றன மனதிற்குள்..

தனிமையின் பயணங்கள்..
வித்தியாசமானைவை…
சிறிது பயத்தையும் .. ஆவலையும் கலந்து தருபவை..
தனித்துப் பயணிப்பது பெருமையாய் இருந்தாலும்
பாதைகளின் பயமுட்கள்
நம்பிக்கையில் தைக்கின்றன சிலசமயங்களில்

தனித்த பாதையின் வளைவில்
திடீரென இடர்ப்படும் சில மனிதர்கள்..
ஊக்கமாகி உரமாகின்றனர் சில சமயங்களில்..
இருந்தாலும் பாதையின் அடுத்த பிரிவுகளில்
அவர்களின் காலடியற்ற கிளையை
தேர்வு செய்ய விழைகிறது மனம் ..

காலச் சக்கரத்தின் சுழற்சியில்..
இத்தனிப் பயணங்களின்
சிறு காயங்களும் களைப்பும்
தூரத்தில் ஏதேனும் ஒரு தலையைத்
தேட வைக்கின்றன...

பலரோடிணைந்த பயணங்களின்
பக்கத்திருக்கையின் மனிதர்களில் இனியவர்களை
நினைவுபடுத்துகிறது அந்த எதிர்பார்ப்புகள்..

அடுத்த பாதைப் பிரிவினில்
காலடித்தடம் பதிந்த பாதையில்
பதிக்கிறேன் பாதங்களை..
இன்னும் சிறிது நேரத்தில்
பலரோடிணைந்த பயணம்..

இம்முறை அருகிலமர்வோரை
ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்..
சன்னல் நோக்கி பார்க்க மனம் விழைவதில்லை..
இதோ வந்துவிட்டார்..
ஆச்சர்யம் .. இவரோடு ஏற்கனவே பயணித்திருக்கிறேன்..
மகிழ்ச்சியாக.. இதமாக..
புன்னகைப் பரிமாற்றத்தில்
அவருக்கும் மகிழ்ச்சியெனப் புரிகிறது..

தனிவழிகளின் வேதனைகள் சற்றே
மறக்கப்பட ஆரம்பிக்கின்றன..
வார்த்தைகளாக அன்பு பரிமாறப்பட
பேசியதேதும் நினைவில் நிறுத்தப்படாமல்
பேச்சு மட்டும் தொடர்கிறது..
பயணத்தின் வேகம்
கொஞ்சம் பேச்சைக் குறைக்கிறது..

சன்னலின் பார்வைகள்
பனைமரங்களையோ..
குதூகலிக்கவைக்கும் ஆலமரங்களையோ காட்டினாலும்
மனம் பேசியதிலேயே லயிக்கிறது..
துணையொன்றின் தேவையைப்
புரியவைக்கிறது..

பயணத்தில் நான் பெரும்பாலும் தூங்குவதில்லை..
என் தோளில் திடீர்க் கனம்..
என் தோளோடு சாய்ந்திருந்த
அவரது தூக்கத்தைக் கவனிக்கிறேன்..
மூடிய கண்கள்
ஒரு நம்பிக்கையைக் காட்டுகின்றன..
இப்போது அசையாமலிருக்க விழைகிறேன்..


சுகா

1 comment:

அகரம் அமுதா said...

திரு சுகா அவர்களுக்கு என் வலைப்பக்கமான வெண்பா எழுதலாம் வாங்க வலையில் வெண்பா விளையாட்டைத் துவங்கியுள்ளேன். தாங்கள் தங்கள் பேராதரவைத் தந்து ஈற்றடிக்கு வெண்பா எழுதி ஆதரிக்குமாறு வேண்டுகிறேன் நன்றி