Thursday, June 15, 2006

அரியவை ஆறு !

வெங்கட்ரமணி இணைக்க ... இதோ எனக்குப் பிடித்த ஆறு..

1) கல்லூரியின் பரிட்சைகளை முடித்து விட்டு களைத்துப்போய் கோடை காலத்தின் மதிய வெயிலில் உருகிக் கொண்டே வண்டியில் வீட்டுக்குச் செல்லும் போது .. பெரிய காய்ந்த வயலின் நடுவே இருக்கும் அரசமரமும் அதன் கீழ் அகன்ற திண்ணையும்.. இன்றைக்கும் நினைத்தால் ஏங்க வைக்கும் சொர்க்கம்... (அந்த திண்ணையில் யாராவது படுத்திருந்தால்.. நான் விடும் பெருமூச்சின் வெப்பத்திலே அவர் வெந்து விட்டிருப்பார்)

2) கோடையிலே பெய்யும் திடீர்மழை.. ஜன்னல் மழையில் ஆசிரியர்கள் கூட பாடம் நடத்தாமல் ஃப்ரீயாக விடுவது.. பள்ளி விட்டவுடன், நிமிடம் தவறினால் கூட ஏதோ உலகம் அழிந்துவிடுவது போன்ற அவசரத்தில் .. நனைந்து கொண்டே சைக்கிளில் வீட்டுக்கு வருவது.. எதிர் காற்றோடு முகத்தில் அறையும் செல்ல ஊசிகள் தனி சுகம் ...வீடு சேர்ந்ததும், சூடான போண்டாக்களும் காபியும் பின் நண்பர்களுடனான ராஜாராணி விளையாட்டும் .. தோணியில் தண்ணீர் பிடிப்பதும்.. மீளாத சொர்க்கம் போலும்..

3) குளிர்காலத்தின் காலைத் தூக்கம்.. இழுக்க இழுக்க வளரும் போர்வைக்கு ஒரு கண்ணன் கிடைத்தால் தேவலை.. பல் விளக்கிவிட்டு காபி குடிப்பது நல்ல பழக்கம் தான் ..இருந்தாலும்..

4) சனிக்கிழமை அதிகாலைகளில் இந்திராநகரிலிருந்து இரண்டு பைக்குகள் கிளம்பி கனகபுரா ரோட்டையோ, மைசூர் ரோட்டையோ தேய்க்க ஆரம்பிக்கும்.. பெங்களூரில் செகண்டு கியர்க்கு மேல் போக முடியாத அந்த பைக்குகள் கிராமத்துச் சாலைகளில் விதிகளைக் கொஞ்சம் விளையாடுவது தனிசுகம்.. சனிக்கிழமை கூட பள்ளி போல .. லிப்ட் சிறுவர்கள் தாவிக்கொள்ள இலவசமாய்க் கிடைத்த பொதுசேவை வாய்ப்பு ஒரு ஸ்பெஷல் சுகம்..

5) நண்பர்களிடம் வெட்டி அரட்டை.. பில்கேட்ஸ் கடன் கேட்டாரே செக் அனுப்பிட்டயா என அரம்பித்து 100% அக்மார்க் வெட்டியாய் முடியும் அரட்டைகள்

6) ரயில் நிலையம் ... கோவை செல்லும் போது வெள்ளிக்கிழமைகளின் சாயங்காலத்தில் .. சரவணபவன் காஃபியோடு காத்திருக்கும் சென்னை செண்ட்ரல் .. இதைப் பற்றி ஒரு தனிபதிவே எழுதலாம் :)


இணைக்க விரும்புவது
===============
1)Unmai
2)வெற்றி
3)SK
4)கப்பி பய
5)மணியன்
6)ஸ்ருசல்

Wednesday, June 14, 2006

எனது புதிய பென்சில் ஓவியம் -2


ஏற்கனவே ப்ளாக்கரில் ஏற்றியது காணாமலே போய்விட்டது. என் மற்ற ஓவியங்கள்

Monday, June 05, 2006

தோல்விகள் பழகு

கடலிள் துளி நீராய் திழைத்திருந்தேன்
ஆதவன் ஒரு நாள் எனை எரிக்க
எரிக்கப் பறக்கும் பினிக்ஸ் பறவையாய் இல்லையேயென
தோற்றுப்போய் ஆவியுமானேன்

அஹா..வான் வழி பயணம் இனிதோ இனிது
தேனாய் இனித்தது தோல்வி
கடலாய் கழிந்த காலத்தை கடிந்து கொண்டே
மேகமுமாகி ஊர்வலம் போனேன் வான் வழியே

குளிர்த் தென்றல் எனைத் தீண்ட
சிலாகித்து உருகி விட்டேன் நொடிப் பொழுதில்..
புவியெனை ஈர்க்க மழையென மாறி
மண்ணோக்கி வீழ்ந்தேன் நான்..
மீண்டுமோர் வீழ்ச்சி !

மீழ்வேனாயென மயங்கிக்
கிடந்தேன் சில நொடிகள்
மண்ணின் மணமும்
மலர்போல் படுக்கையும்
உயிர் கொடுத்தது எனக்கு..

கடலலை மறந்தேன்
வான்வெளி மறந்தேன்.
மண்ணினில் தவழ்ந்தேன்
குழந்தை போல..

கடலாகி நிறமற்றிருந்தேன்
வானாகி உருவற்றிருந்தேன்
மண் சேர்ந்து மணம் பெற்றேன்
செந்நிறம் பெற்றேன்

அருவியாய்.. காட்டறாய்.. ஒடையாய்
பீடு நடை போட்டு வந்த என்னை
வஞ்சித்தானே விதைக் கள்ளன்
வேரால் உறிஞ்சி

தோற்பது என் பிறவிக் கடனா
தோற்க நான் என்றும் தோற்றதில்லையே

விதை சேர்ந்துறங்கினேன் சில காலம்
விழித்த பொழுதினில்
விழிநோக்க வழியில்லை
வழியின்றி விதை கிழித்தேன்..
மண் பிழந்தேன்..

சிறு வித்தாகி
தலை நீட்டி
கதிர் நோக்கிய
அந்நொடியில் அடைந்தேன் சொர்க்கத்தை

உருவாக வாய்ப்பளித்த
விதையோனை வாழ்த்தி
வளர்ந்து மரமுமானேன்

மரமழிக்க மரம் கொண்டுவரும்
வருங்கால மனிதப் பிணமொன்றைத் தூரத்தில் கண்டேன்

மனம் வருந்த மனமில்லை
தோற்பது புதிதல்ல எனக்கு
உண்மையில் நான் தோற்றதென்பதுமில்லை
எல்லாம் தோற்றப்பிழையன்றி வேறில்லை

தோல்வியெனக்கு புது உரு கொடுக்கும் வாய்ப்பு
வாய்ப்பை வாழ்த்தாமல் வருந்துவானேன்

எனைக் கடலில் இருந்து மேலே அனுப்பிய
தோல்விகள் எனது படிக்கற்கள்
வெற்றியோ ஒரு போதை..
என்னை ஒரே இடத்தில் இருத்திவிடுகிறது..

என் தோல்வி, தோற்கடிக்கப் பட்டதால்
இழந்த வெற்றியை விட பெரிய வெற்றியை
நோக்கி பயணிக்க வைத்திருக்கிறது

பயணிப்பதும் பயணித்த இலக்கை அடைவதும்
என் கையிலேயே..

சில சமயம் எனக்கு இலக்குகளே இருந்ததில்லை
இலக்குகளை உணர்ந்ததில்லை
ஆனால் மாற்றங்களை ஏற்றுக் கொண்டேன்
மாற்றங்கள் சில சமயங்களில் ஏற்றங்களாயின
ஏற்றங்களிலிருந்த போதும் மாற்றங்கள் அழைத்தன
மிக கடினமான முடிவெடுக்க வேண்டிய தருணங்கள்

கஷ்டத்தில் இருக்கும் போது
மாற்றங்களை அரவணைக்க துணிவு தேவையில்லை
மாற்றங்களே தேவைகளாகும் தருணங்களவை

வென்ற பிறகும் வசதிகளில் திழைக்கும் போதும்
மாற்றம் கொள்ளத் துணிவதே துணிவு
வாழ்க்கைக்கு இலக்கொன்றை கொண்டோரின் துணிவு
ஏற்றுக் கொண்ட மாற்றங்கள் எமாற்றங்களை
அளித்தாலும் ஏற்றுக் கொள்ளும் துணிவு

தோல்விகள்.. அனுபவங்கள்
கற்றுத் தருபவை
அடையாளம் காட்டுபவை
எல்லைகளை வரையறுப்பவை
உடனிருப்போரை தோலுரித்துக் காட்டுபவை
ஓய்விற்கு ஒய்வு கொடுப்பவை
தோல்விகள்.. அவமானங்களல்ல
வழிகாட்டும் அடையாளங்கள்

வெற்றிகள் போதை..
போதையின் களிப்பு
வெற்றிப் போதையின் தெளிவே தோல்வி
இதை அடையாதவர்களில்லை
தவிர்ப்பவர்கள் முன்னேறமுடியாது
தவிப்பர்கள் மீழமுடியாது
தாங்குபவர்கள் முன்னேற்றத்தை தவிர்க்க முடியாது

தோல்விகள்.. மறந்திருந்திருந்த பலதை..
கண்ணீர்ச்சுவையை
அவமானங்களின் பதைபதைப்பை
எளனப் பேச்சுக்களை
அதை எற்க மனமின்று செய்த வாதாட்டங்களை
அவ்வாதட்டங்கள் வெறும் நேரவிரயமென்பதை
வெற்றிக் களிப்பில் மார் நிமிர்த்தி பீடு நடைபோடையில்
பணிந்து வணங்க மறந்த முகங்களை
என மறந்த பலதை நியாபகப்படுத்தும் மருந்தே தோல்வி

தவறுகளை வலிக்கத் திருத்தும்
தோல்விகள் எனது ஆசிரியர்
காலம் முழுக்க படிக்கப் பட வேண்டிய
பாடம் எனது தோல்விகள்
பாடங்கள் எனது வளர்ச்சிக்கு
வளர்ச்சியே எனது வெற்றி
தோல்விகள் எனது வெற்றிகள் !

குறிப்பு : இது ஒரு மறுபதிவு.

Friday, June 02, 2006

கைப்புள்ள @ NBA



சங்கப்பலகைல இடம் இல்லாததால இங்க பிரசுரிக்க வேண்டியதா போச்சு.

இதைப்பத்துன கமெண்ட்ரி வந்துகிட்டே இருக்கு .. இன்னமும் சில படங்களோட.