Thursday, August 16, 2007

நவீன ஓவியங்கள்

நளாயினி அவர்களின் இந்தப் பதிவில் முதல் மறுமொழியில் ஒரு அனானி அந்த புகைப்படம் புரியவில்லை என்றும் புரியாததால் தான் அது நவீன ஓவியமா என உண்மையாகவே அங்கலாய்த்திருந்தார். அந்த அனானியின் நிலையில் நானும் இருந்திருக்கிறேன்.. நம்மில் பலரும் இருக்கலாம்.. எனவே நவின ஓவியம் குறித்த எனது எண்ணத்தை பகிர இந்த பதிவு.



மனம் அழுத்தமாக உள்ள சமயங்களில் எப்போதாவது புல்லாங்குழலின் இதமான இசையைக் கேட்டதுண்டா.. அந்த இசை நமது சுவாசம் போல் நம்மையுமறியால் உள்ளே சென்று நரம்புகளில் இதமாக ஊடுருவுகிறது.. அந்தப் புல்லாங்குழலின் இசை நமக்கு எதையும் குறிப்பாக உணர்த்துவதில்லை என்றாலும் அது மனதை இதமாக தாலாட்டுகிறது..

ஒவ்வொருவரையும் அவரவரின் அமைதியான இதமான கற்பனை சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்கிறது. அந்த சொர்க்கம் அவரவரின் கற்பனையில்... கோடைகாலத்தின் சாலையோர ஆலமரத்தடியாக இருக்கலாம்..அல்லது மரங்களடர்ந்த உயர்ந்த மலையோன்றின் சிகரத்தின் மயங்கிய மாலையாக இருக்கலாம்.. கேட்பவர்களை அந்த இசை ஆட்கொள்கிறது..




அதுவே ..கண்ணதாசனின் சோககீதத்தை தத்துவப் பாடலைக் கேட்கும் போது அதன் அர்த்தம் பொதிந்தவரிகள், சில வேளைகளில் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.. ஆழமான அந்த வார்த்தைகளின் தேர்வு நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

வைரமுத்துவின் அடர்த்தியான உவமேயங்கள்.."முகிலினங்கள் அலைகின்றன முகவரிகள் தொலைந்தனவோ.." போன்ற கற்பனைகள் .. பாடுபொருள் பற்றிய கேட்பவரின் கற்பனைகளுடனேயே கவிஞரின் திறமையையும் மெச்சி சிலாகிக்க வைக்கின்றன.




நவீன ஓவியங்கள் முன்னால் சொன்ன இசைக்கு ஒப்பானவை. அர்த்தம் என குறிப்பாக ஏதும் இருப்பதில்லை. ஆனாலும் அதை அனுபவிப்பதில் தவறில்லை. ஓவியரின் கண்கொண்டு பார்க்க வேண்டியதில்லை ஆனாலும் அந்த வண்ணக் கலவைகள் மீட்டும் நுண்ணிய இசையைக் கண்கொண்டு கேளுங்கள்.. அவை புதிர்களல்ல தீர்வு காண்பதற்கு .. ஓவியரின் மனநிலையையும் கருப்பொருளின் ஆழத்தையும் கற்பனை செய்து பாருங்கள்..அமைதியான சூழ்நிலையில் சில ஓவியங்கள் இசையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். உணர்வுகளை ஆட்கொள்ளவே படைக்கப் படுவதால் பெரும்பாலும் பிரம்மாண்டமான அளவில் படைக்கப்படுகின்றன இவை.




ரெப்ரஸண்டேஸனல் ஓவியங்கள் , கவிதைகளுக்கு ஒப்பானவை. அர்த்தங்கள் வெளிப்படை.. பார்ப்பவர் அனைவருக்கும் ஒரேவிதமான விருந்து. பெரும்பாலும் ஓவியரின் திறமைகள் மதிப்பிடப்படுகின்றன அல்லது ஒப்பிடப்ப்டுகின்றன. ஓரிரு தடவைகளுக்கு மேல் பார்க்க மனம் அவ்வளவாக விளைவதில்லை.. எத்தனை முறை பார்த்தாலும் ஒரே பொருள் தான்.. ஒவ்வொரு முறையிலும் முன்பு பார்க்க மறந்த நுண்ணிய பொருள்களை திறனைக் கண்டு வேண்டுமானால் வியக்கலாம்.

சில இயற்கை காட்சிகளின் ஓவியங்கள் உங்களை ஆட்கொள்ளலாம். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டலாம், இருந்தாலும் அவை ஏக்கத்தின் தாக்கமாக இருக்கலாமே தவிர புதிய உணர்வுகளைத் தூண்டும் வாய்ப்புகள் குறைவு.




நவீன ஓவியங்கள் ஒவ்வொரு முறை பார்த்தாலும் ஒரு புதிய உணர்வை தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தாக்கமும் ஓவியரின் கருப்பொருளை நோக்கி நகர்த்துகின்றது ரசிகர்களை.

நவீன ஓவியத்தை அதனை வடிக்கும் திறன் கொண்டு எடைபோட வேண்டாம்; அது ஏற்படுத்தும் தாக்கம் கொண்டு எடை போடுங்கள்.

பொதுவாக சில ஓவியங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன, சில மனதினைத் தாக்குகின்றன. அனைவருக்கும் ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்த தேவையில்லை. இசை போன்றவை இவை.. அடுத்தமுறை நவீன ஓவியங்களை பார்க்கும் போது கண்ணைமூடி அவற்றின் வண்ணக்கலைவையை கற்பனை செய்து பாருங்கள் ; உங்களை ஆச்சர்யப்படுத்தலாம் அவற்றின் தாக்கம்.


மணிக்கணக்கில் வரையப்பட்டு நிமிடக்கணக்கில் எடைபோடப்படும் ரெப்ரஸண்டேஸனல் ஓவியங்களுக்கு மத்தியில் , வருடக் கணக்கில் சிந்திக்க/அனுபவிக்க வைக்கும் நவீன ஓவியங்கள் இப்போது பிரபலமாவதில் ஆச்சர்யமேதுமில்லை.




எனக்குத் தெரிந்த சுமாரான நவீன ஓவியர் திருவாளர் இயற்கை.. மேகக் கூட்டங்களிலும்.. வனத்திடை சூரிய ஒளியின் நிழல்களிளேயும் என பல இடங்களில் வரைந்து தள்ளுகிறார். அவற்றில் சில ரசிக்கவும் படுகின்றன.





ஓவியங்களைப் பற்றி எழுதுவது போல் ஓவியங்களுக்கு செய்யும் துரோகம் எதுவுமில்லை. ஆதலால் சில நவீன ஓவியங்கள் பார்வைக்கு.






மூலம் : http://www.yessy.com/




மூலம் : http://www.artlex.com/ArtLex/f/images/futur_balla.lampada_xlg.jpg








சுகா

12 comments:

Anonymous said...

உங்கள் கருத்து சரி. ஆனால் அதிக விலை
என்று


மதிப்பிடுகிறார்களே! அது தான் புரியவில்லை.

Suka said...

விலை பற்றி எனக்கு தெரியவில்லை. அப்படி நவீன ஓவியங்கள் அதிக விலை என்றால் எனக்கும் அது ஏனென புரியவில்லை.

சில சமயம் கலைப் பொருள் வியாபாரிகளின் விளம்பரம் கூட சாதாரண ஓவியத்தின் விலையையும் அதிகப் படுத்திவிடும்.

நன்றி

Thekkikattan|தெகா said...

சுகா,

இது, இதுதான் நான் சொன்ன சுகா, இம்பூட்டு எழுத்தையும், அப்பப்ப கவிதையும், படமும் வரைந்து அசத்தும் சுகாவைக் காணவில்லையென்றால் சும்மாவா... எனக்கும் அலுத்திருக்கிறது சுகா, மொத்தமாக 16 மாதங்கள்தான் என் வீட்டாண்டை காமிக்குது நான் இந்தப் பக்கம் தலையை காமித்தது போல. இருந்தாலும் பதிவெலுத ஆரம்பித்தது அக்டோபர் 2005.

இருந்தாலும் நல்லா எழுதுறவங்களை டக்குன்னு பார்க்க முடியாம போறது என்னவோ மாதிரி இருக்கு. இனிமே விடாம எழுதுங்க.

அசத்தல் நடை, மீண்டும் ரசித்துப் படித்தேன்.

Suka said...

மிக்க நன்றி தெகா, உங்கள் வார்த்தைகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்திருக்கின்றது. எனக்கும் எழுதுவது நல்ல வடிகாலாக இருக்கும் என நினைக்கிறேன்.. மீண்டு(ம்) நன்றி உங்களுக்கு..
சுகா

கப்பி பய said...

welcome back thala :)

Suka said...

ஆஹா..வாங்க Mr.கப்பி :-) நன்றி..

சுகா

நளாயினி said...

இன்று தான் இதை வாசிக்க கிடைத்தது. நவீன ஓவியம் பற்றிய மிக ஆழமான கருத்தை வெளிப்படுத்திèயிருக்கிறீர்கள். மனதுக்கு சந்தோசமாக உள்ளது. என்னையுமறியாமல் ஏதோ ஒரு இசை என்னுள் தாவிய அனுபவம் பெற்றேன்.

Suka said...

நன்றி நளாயினி..

ரசிகன் said...

முழுசா புரியல்லைனானும்.., உங்க நவின தொடர்ந்து பாத்தாக்கா....நமது மூளைஆழ்மனதின் எண்ணங்களோடு கம்பேர் செஞ்சு பாக்குது..ஏதோ சலனம் தோனுது.

ஆனா ரொம்ப பாத்தா நல்லா தூக்கம் வருது..[கண் அசதியாலன்னு நெனக்கிறேன்..] ஹிஹி...
நல்ல பதிவு.

பாரதிய நவீன இளவரசன் said...

//எனக்குத் தெரிந்த சுமாரான நவீன ஓவியர் திருவாளர் இயற்கை.. மேகக் கூட்டங்களிலும்.. வனத்திடை சூரிய ஒளியின் நிழல்களிளேயும் என பல இடங்களில் வரைந்து தள்ளுகிறார். அவற்றில் சில ரசிக்கவும் படுகின்றன.//

நீங்கள் சரியாகச் சொன்னீர்கள்.

காலைக் கதிரவன் உதிக்கும் தருணத்திலும், அதற்கு சில கணங்கள் முன்பாகவும் காட்சிதரும் அந்த கீழ்வானம் தரும் நிறக்கலவைகள் நிறைந்த அற்புத படைப்பை இயற்கையைத்தவிர யார்தான் தர இயலும்? Nature is art இல்லையா...இதற்குப் பல உவமானங்களும் உவமேயங்களும் உண்டு...பலரைக் கவிஞராகவும், ஓவியராகவும், கலைஞராகவும் மாற்றியிருக்கிறது இயற்கை.

Suka said...

நன்றி ரசிகன்..

Suka said...

நன்றி பாரதீய இளவரசன்..