கானமுயல்கள் சிரிக்கின்றன
யானை பிழைத்த வேல் ஏந்திக் கந்திய
கைகளைக் கண்டு
பல சின்னஞ்சிறு கதைகளும்
கேட்கப்படாமலே போக
அடைக்கின்றன காதுகளும்
பசியோ..
பசியில்லை ஆடுகளுக்கு
தீராப் புல்தரை..
நிமிர்ந்தறியாத கழுத்துமட்டும்
உறுத்துகிறது
ஆனாலும் புல்சுவை அதிகம்
புல் வளர்ப்பது புலி என்பது
தெரிய வாய்ப்பில்லை
நிமிர்தல் பாவம்..
சொன்னது கீதை
கீதையின் பக்கங்களிலும்
புலியின் உரோமங்கள்
தீராப் புல்தரை தீர்ந்தாலும்
நிமிராதது கழுத்து
புல்தரை தீர்ந்தது விதியால்..
முன்செய் பாவங்களால்
நிமிர்தல் பெரும் பாவம்..
பாவம் தருவது தீரும் புல்தரை
தீரும் புல்தரை மீண்டும் வேண்டாம்
பாவ நிமிர்தலிலும்
சாவது மேல்
புலிகளின் போதனை
கைமேல் பலன்
ஆடுகள் சுவைதான்
புலி உண்ணுமா புல்லை
மேயும் போதும்
பேசிக் கொள்கின்றன
நிமிர்வதைப் பற்றிய
பாவக் கதைகளை
நிமிர்தல் சிரமம்
நிமிர்தல் பயம்..
குனிதல் சுகம்
குனிதலில்...
தீரும் புல் ஒன்றே பயம்
தீரும் புல் பாவத்தால்
நிமிர்தலே பாவம்
மை தீர தீர
கீதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றன
புலிகள்
சுகா
2 comments:
வணக்கம் சுப்பிரமணியம்
நீங்கள் எதை நிணைத்து இதை எழுதினீர்கள் என எனக்கு தெரியவில்லை
நான் போராட திராணியற்று முடங்கிப்போகும் மனிதர்களை குறிப்பதாக நிணைக்கின்றேன்
ஆனால் கவிதை மிக அர்புதம்
நன்றி இராஜராஜன்.
சில முக்கியமான விசயங்களின் தவறான பாதிப்பைப் பற்றி அறிந்திருந்தும் அதைப்பற்றிக் கேள்வி கூட கேட்க தயங்கி முன்னோர் வழிகளை கடிவாளம் கட்டிக் கொண்டு பின்பற்றுபவர்களைக் குறித்தே எழுதினேன். போராட வேண்டும் என்பது கூட அவசியமில்லை. சில விசயங்களில் என்ன செய்கிறோம் என தெரிந்து செய்யுங்களேன் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாட தான் இது.
நன்றி
Post a Comment