Sunday, August 27, 2006

சமூகம்

மக்களால் மக்களுக்காக ..
பண்பட்ட வாழ்க்கைக்கெனவாய்..
வாழையடி வாழையாய் விதிமுறைகள்

யார் வகுத்தது .. யாருக்காக வகுத்தது இந்த விதிமுறைகள் ?
கேள்விகள் .. பரவாயில்லை
விதிமுறைகளைப் பற்றிய கேள்விகள் ..ம்ஹும்

வல்லான் வகுத்தது வரலாறு மட்டுமா..
விதிமுறைகள் ?
போதும் என்னும் பொன் செய்யும் மருந்தைப் பொது ஜனத்துக்கு போதித்து
பொன் சேர்த்தது யாரோ ?
ஊரோடு ஒத்து வாழ ஊருக்கு அறிவுரை செய்து அதையே கொண்டு
நாடு பிடித்தது யாரோ ?

போதனைகள் என்றுமே போதிப்பவர்க்கல்ல
அப்படி இருந்திருந்தால் அவர்களால் போதிக்கமுடியாது
அவர்கள்...அரியணைகள்
அரியணைகள்... விதிப்பவை
விதிப்பவைகளை மதிப்பவைகளை மாயையாய் மதிப்பவைகள்
விதிப்பவைகளை மிதிப்பவைகளை அவமதிப்பவை ..முளையிலேயே அழிப்பவை

கேள்விகள் கேட்கத்துணிபவன்..
தனித்திருக்கப்படுகிறான்
கேட்கத் துணியாதவர்களின் கேள்வி ஞானமெல்லாம்
கேள்வியாய் ..கேலியாய்.. அவன் மீது.

அந்த தனிமை ஒரு மலைமுகடு
அவனால் அனைத்தையும் பார்க்கமுடிகிறது...
அவன் மீது கேட்கப்படும் கேள்விகள்
அவனை இன்னும் தெளிவாக்குகிறது...
விடைகள் தேவையில்லாத கேள்விக் கணைகள் அவை
ஆனால் அவனுக்கு விடைகள் கிடைக்கின்றன..

சில அவனுக்கு தெரிந்திருக்கின்றன..
சில அவனால் தேடி தெரிந்து கொள்ளபடுகின்றன.
தேடித் தெரியும் வரை ..அவனுக்கு விடை தெரியாதென்பதாவது தெளிவாகத் தெரிகின்றது.

விடையின் அறியாமை அவனுக்கு தேடலையும்..
அந்த அறியாமையை அறிந்தமை அவனுக்கு தெளிவையும் பரிசளிக்கிறது.

கேள்விகள் மட்டுமே கேட்கத் தெரிந்த தருமிகளின் அண்மை
வேகமாக வளர்த்துகிறது அவனை...
அவர்களின் பச்சாதாபம் அவனுக்கு கேளிக்கையாகிறது

திருவாளர் பொதுஜனத்தின் மனசாட்சி..
ஹும்..தெளிவு .. பெரிய தெளிவு... யாருக்குத் தேவை
ஊர் சுகம் .. ஒத்து வாழ்தல் சுகம்
கேள்விகள் அநாவசியம் .. யார் கண்டார்..அதன் விடைகள் விதிகளுக்கு எதிராகக் கூட இருக்கலாம்..
விதிகள் வெகு அவசியம்...
ஆமாமாமம்... விதிகள் வெகு அவசியம்

ம்..என்ன ..வாழ்க்கை கொஞ்சம் அலுப்பாயிருக்கிறதே ..
அதனாலென்ன..கேள்வி கேட்பவன் யாராவது கிடைக்காமலா போய்விடுவான்..
நம் கேள்விகளைத் தயார்செய்து கொள்ளலாம்.

முன்னோர் சொன்னதை எதிர்த்து எப்படி அவன் கேட்கத் துணிந்தான் ..
ஏன் கேட்டான் .. என்ன கேட்டான் ..
ம் ... அவன் கேட்டதும் சரிதானோ...
அட ஆண்டவா... யோசிக்கிறேனே..
தப்பு .. தப்பு...

விதிமுறைகள் விளக்க வகுப்பு எடுக்கவேண்டும்...
எந்த வகுப்பு எடுக்கலாம்..?
புதிய 'வித்தியாசமான' திரைப்படங்கள் பார்ப்போமா ?
ஆன்மீக வகுப்பேதும் போவோமா..?
பண்பாட்டுக் காவலர்களின் படைப்பேதும் படிப்போமா ?
உறவுகளின் பெருமை சொல்லும் நாடகங்கள் களிப்போமா ?
அகராதிகள் படிப்போமா ...
நம்மவர்களோடு அவனைப் பற்றி உரையாடுவோமா ?
ஆஹா... அதுதான் சரி.
சுவாரஸ்யம் அதுதான்...

ஏனித்தனை கேள்விகளவனிடம்..
அகராதிகள் படித்ததில்லையா அவன்...
அர்த்தங்கள் தெளிவுதானே...
இதிலென்ன சந்தேகம்... பொல்லாத சந்தேகம் ..
அர்த்தங்களைப் பற்றி எப்படி கேள்விகள் .. சே
கால விரயமது...
காலத்தை உபயோகமாய் கழிப்போம்..
அனைவரையும் போல் ..
இனிய உலகை ரசிப்போம் ..
பிடித்ததை செய்வோம்..
ஒவ்வொரு நொடியையும் அணுவணுவாய் ரசிப்போம்..

No comments: