Sunday, August 06, 2006

ரயில் நிலையம்...

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத இடம்.. உள்ளே நுழைந்ததும் நமக்கும் ஏதோ ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. நேரம் எவ்வளவு இருந்தாலும் கொஞ்சம் வேகமாகவே நகரத் தூண்டுகிறது. நெரிசலில் வளைந்து வளைந்து ஊடுருவி செல்கிறேன்..

ஊருக்குச் செல்லும் நாட்களில் சில மணிகள் முன்னதாகவே சென்றுவிடுவது வழக்கம். எனக்கு அலுப்பாகாத விஷயங்களில் ரயில் நிலையமும் ஒன்று.. அதிக ஆளில்லாத ஒரு பிளாட்பாரத்தில் அமர்ந்து சாவகாசமாய் வேடிக்கை பார்ப்பது தனி சுகம்.

பரபரப்பாக நகரும் ஆட்கள்.. வியாபாரிகளின் கலவையான சத்தம்.. வந்து சேர்ந்த ரயிலிலிருந்து இறங்கும் களைத்த ஆட்களும் அவர்களின் களைக்காத பரபரப்பும்.. நெரிசலில் வளைந்து நெளிந்து வேகமாகச் செல்லும் விலாங்கு மனிதர்களும்..பாரங்களின் சிரமங்கள்..பேரங்களின் வெற்றி, தோல்விகள்.. நொடிக்கு நொடி மாறும் காட்சிகள்.. மனிதர்கள் ..அவர்களின் பேச்சுகள் பாவங்கள்...

பெரிய மேடையில் அரங்கேறும் ஒரு எதார்த்தமான நாடகம் போல.. இங்கு யாரும் கதாநாயகர்கள் இல்லை..நாயகிகள் இல்லை.. கதையும் இல்லை.. முடிவும் இல்லை..ஆனால் காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை.. நாயகர்கள் ஜெயிப்பதைப் பார்த்துப் புளித்துப் போன எனக்கு ...யூகிக்க முடியாத ..காட்சிகளுக்கு காட்சி வித்யாசமான ஒரு படத்தை அளித்தது போல்... எனக்காக மட்டுமே தயாரித்து அளித்தது போல் ஒரு திருப்தி. அனைத்தையும் மேலாண்மை செய்யும் ஒரு கடவுள் போல ஒரு திருப்தி.. கொஞ்சம் சேடஸ்டிக் திருப்தியும் கூட..

எனது நேரமும் வருகிறது. நான் மேடைக்கு வரும்போதும் எங்கிருந்தோ பார்க்கும் பார்வையாளர்களின் பார்வை முதுகில் உறைக்கிறது.

ரயிலில் தொற்றி ஜன்னல் வளியே பார்க்கும் போது.. சிலவேளைகளில்.. பரபரப்பான பிளாட்பாரத்தின் நடுவில் அமர்ந்து உணவைப் பரிமாறி சாவகாசமாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வீடுவாசல் இல்லாதாரைப் பார்க்கும் போது.. கொஞ்சம் பொறாமையாய் இருக்கிறது. அந்த நொடியிலேயே ஒரு பொருளாதார மாற்றம் வந்து அவர்களையும் என்னைப்போல் ஏதாவது பரபரப்புக்கு ஆளாக்கமுடியாதா..

பிளாட்பாரப் பெஞ்சுகளின் ஒய்யார பிச்சைக்காரர்களின் அரங்கநாதர் படுக்கையும், இரும்புப் பெட்டிகளை நோக்கிய அலட்சியப் பார்வையும் என்னைச் சில சமயம் கேலி செய்கிறது. அதிலிருந்து தப்பிக்க எத்தனிக்கிறேன்.

ரயில் நகரும் நேரத்துக்கான விசில் ஏதோ சில சத்தங்களை அடக்கிவிட்டது போலிருக்கிறது. ஜன்னல் கம்பிகளில் சேர்ந்திருந்த கைகள் கொஞ்சம் இறுக்கமாகி பின் தளர்கின்றன. தன்னிச்சையாய் கால்கள் நகர்கின்றன. இலக்கு வரை நீண்ட ப்ளாட்பாரமும் இதே வேகத்தில் நகரும் ரயிலும் அமைதியாய்க் கேட்கப்படும் வரங்களாகின்றன. அதிகமாகும் வேகம் கால்களை நிறுத்தி கையை மட்டும் அசைக்க வைக்கிறது. அந்த நொடியில் பயணத்தின் அநாவசியத்தை நினைக்கத் தோன்றுகிறது.

மெதுவாக நகரத் தொடங்கிய ரயிலை நோக்கிய கையசைப்புகள் .. வாயிலில் இருந்து தலை மறையும் வரை பார்த்து அசைக்கப் படும் கைகளும் ஏதோ பேசிக்கொள்கின்றன போலும்.

எனக்காக அசையாத கைகளாயிருந்தாலும் , அவை எப்படியோ எனக்காக அசைக்கப்பட்ட கைகளை நியாபகப்படுத்தி விடுகின்றன. நியாபகம் சிலவேளைகளில் கண்ணின் ஒரத்தில் லேசான ஈரத்தையும் விட்டுச்செல்கிறது. ரயில் செல்லக் கலையும் கூட்டத்திற்கு முன்பே அந்த ஈரமும் காய்ந்துவிடுகிறது. கலைந்து செல்லும் கூட்டத்தில் சிலவேளை இருக்கையில் அந்த ஈரம் காய இன்னும் சிறிது நேரமாயிருப்பதை உணர்கிறேன்.

5 comments:

Anonymous said...

ரொம்ப casualah நடப்பதை ரசித்து ருசித்து சொன்ன விதம் மிகவும் அருமை.

ம்ம்ம்ம்......வேடிக்கை பார்ப்பது - அதன் சுகமே தனி தான்.

வெற்றி said...

சுகா,
படிக்கச் சுவைத்திடும் வண்ணம் சொல்லியுள்ளீர்கள்.

//எனக்கு அலுப்பாகாத விஷயங்களில் ரயில் நிலையமும் ஒன்று.. அதிக ஆளில்லாத ஒரு பிளாட்பாரத்தில் அமர்ந்து சாவகாசமாய் வேடிக்கை பார்ப்பது தனி சுகம்.//

உண்மைதான் சுகா, சில இடங்கள் எத்தனை முறை சென்றாலும் சலிக்காது.

Suka said...

நன்றி அனானி ..

நன்றி வெற்றி...

சுகா

வடுவூர் குமார் said...

எழுதுவது ஒரு கலை தான்.
இதை படித்தபிறகு "நிச்சயம்" ஒத்துக்கொள்கிறேன்.

Suka said...

நன்றி வடுவூர் குமார்.. கொஞ்சம் பழைய பதிவு அது :) உங்கள் மறுமொழியை நூற்றுக் கணக்கான ஹாப்லாக் விளம்பரங்களிடையே தொலைத்துவிட்டேன். மன்னிக்கவும்

சுகா