Monday, July 17, 2006

மீண்டும் மழை...

கோடையிலே மழையைப் பற்றிய கற்பனை கூட இதமாகத் தான் இருக்கிறது. பூமிக்கு வேண்டிய நீரெல்லாம் வானின்று பெய்யாமல் ஊற்றாகவே வந்துவிடும் இயற்கை நிகழ்வாக இருந்திருந்தால் அதை இந்த அளவிற்கு ரசித்திருப்போமா என்ன..

எங்கோ முதலில் பெய்து மண்வாசனையை மணியோசையாக்கிப் பின் வரும் பெருமழை.. பிடித்த விருந்தினர் வருகையறிவிப்புப் போல் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது அனைவருக்கும்.

சற்றும் எதிர்பார்க்காத மழைக்கு ரசிகர்கள் இன்னும் அதிகம். கருத்த வானம் மழையின் கனத்தை அறிவித்தாலும் .. சுழற்றியடிக்கும் காற்று கலைத்துவிடுமோ மேகங்களை என்று மனமும் கனக்கிறது.

சட சட வென துளிக்க , நினைவுக்கு வரும் கொள்ளைப்புறத்துத் துணிகள் மொட்டைமாடி வடாம்கள் அவற்றை அள்ளிவரச்சொல்லி அனுப்பப்படும் பொடுசுகள் அனைவருக்குமே பரபரப்புத் தான்..

மாலை மழைக்குப் புண்ணியம் அதிகம்.. அனைவரும் வீடு சேர்ந்திருந்தால், அன்றைக்கும் மழையைப் பார்க்கமுடியாத குடைகளைத் தவிர வேறுயாருக்கும் வருத்தமிருக்காது. வாங்க மறந்திருந்த கடலைமாவு புண்ணியத்தில் குடும்பத் தலைவர்கள் கையால் குடைகள் ஜென்ம சாபல்யம் அடைவதும் உண்டு.

குடைக்குள் என்னதான் ஒடுங்கி நடந்தாலும் காற்றால் சுழற்றியடிக்கப் படும் மழையின் சீண்டல் ரசிக்கத்தான் படுகிறது. தலையில் பாலித்தீன் பைகளுடன் ரோட்டில் செல்லும் சைக்கிள்காரர்களைப் பார்க்கப் பொறாமையாய் கூட உள்ளது.

மைக் கருப்பாய் கழுவப்பட்ட சாலைகளின் ஓரத்தில் தேங்கியிருக்கும் செந்நீர், கழுவப்பட்ட பேருந்துகளால் சல்லென தெறிக்கப் பட சிலவேளை சுள்ளென கோவப்படுவோரும் உண்டு.. வீடு சேர்கையில் அவர்களையும் குளிர்வித்துவிடுகிறது மழை.

கால இயந்திரம் என்பது மழைதானோ என்று கூட தோன்றுவதுண்டு. மழையைப் பார்க்கையில் மழையைப் பார்த்த ரசித்த அனைத்துத் தருணங்களும் மழையாகவே கொட்டிச் செல்கிறது. மனதின் பின்னோக்கிய பயணத்தை மழையை நோக்கிய வெறித்த பார்வை சொல்கிறது.

ஒரு பதினைந்து அடி அகலச்சாலை. சாலையின் இருபுறமும் திண்ணையோடு இருக்கும் வரிசை வீடுகள். தெரு விளக்கு ஏதுமின்றித் திண்ணையில் எரியும் குண்டு மின்விளக்குகள். அந்த மின்விளக்கொளியில் தங்கக் கம்பிகளாய் ஒளிரும் மழைத் துளிகள்.

வீட்டுப் பாடத்தை சீக்கரம் முடித்துத் தண்ணீரில் கப்பல் விட , குப்புறப் படுத்துக் கொண்டு விரலை விட்டு எண்ணி கணக்கை விரைவாய் முடித்துக் கொண்டிருக்கும் பொடுசுகள்.

மின் இணைப்பு துண்டாவதற்குள் சமையலை முடித்துவிட எண்ணினாலும் மழை ரசிக்கப் படுவதால் கொஞ்சம் சாவகாசமாகவே அறியப்படும் காய்கறிகள்.

பேசுவதற்கு கூட பெரிதாய் ஏதும் இருப்பதில்லை. பேச்சுக்கள் ஆரம்பித்தாலும் சுருக்கென முடிகின்றன. மழைதான் பேசுகிறது..மழழை போல். ஏதும் புரிவதில்லை எனினும் அதை இடைமறிக்க யாருக்கும் விருப்பமிருப்பதில்லை.

உதடுகள் குவித்து ஆற்றப் படும் சூடான தேனீரின் ஆவி தேனீரை விட சுவையானது. தீராத தேனீர்க் கோப்பைகளும் நிரம்பாத வயிறும் நிற்காத மழையும் காலச் சக்கரத்தையே நிறுத்திவிடக் கூடியவை.

இரண்டு நாள் கழித்துச் சரி செய்ய, முகட்டைப் பார்த்து ஓட்டுச் சந்துக்களை மனத்தில் இருத்திவிடும் தந்தை. ஈரச் சாக்கும் நிரம்பிய பாத்திரங்களையும் பரிசளித்து விட்டு மழை விடைபெறுகிறது. பிடித்த விருந்தினர் பெரிய பரிசேதும் அளிக்க வேண்டுமென்பதில்லையே.

மழை சிலவேளைகளில் மனதையும் கழுவிவிடுகிறது. கனத்த மேகத்தைக் கொட்டித் தீர்ப்பது போல் நம்மையும் கொட்ட வைத்துவிடுகிறது. நாமும் மழை போல் ஒரு இயற்கை நிகழ்வுதான் என்றும் உணர்த்திவிடுகிறது.

மழை வந்த போதிருந்த ஆர்ப்பாட்டமேதுமின்றி செல்கிறது. அதுவும் ஏனோ சோகமாவது போல் தோன்றுகிறது. மீதமிருக்கும் துளிகளை உதிர்த்து மழை போலாக்க முயல்கிறது வாசல் மரம். பாயில் படுக்கும் போது கூட லேசாக ஈரம் படிந்த போர்வையில் இன்னமும் மழை வாசம் இருப்பது போலிருக்கிறது.

17 comments:

நாமக்கல் சிபி said...

//கோடையிலே மழையைப் பற்றிய கற்பனை கூட இதமாகத் தான் இருக்கிறது.//

ஆமாம் சுகா! கோடை மழை வித்யா நல்ல நடிகைதான்!

Suka said...

கோடைமழை வித்யாவா..
சிபி.. என்ன இது ..

மழைய பத்தி சொன்னா உங்க கற்பனை எங்கயோ போகுது :) ஹும் செரியில்லை..

என்ன..உங்க ப்ளாகோஸ்பியர்ல சூரியன் மறையறதே இல்லையா.. :)

சுகா

செல்வநாயகி said...

////மழை வந்த போதிருந்த ஆர்ப்பாட்டமேதுமின்றி செல்கிறது. அதுவும் ஏனோ சோகமாவது போல் தோன்றுகிறது. மீதமிருக்கும் துளிகளை உதிர்த்து மழை போலாக்க முயல்கிறது வாசல் மரம். பாயில் படுக்கும் போது கூட லேசாக ஈரம் படிந்த போர்வையில் இன்னமும் மழை வாசம் இருப்பது போலிருக்கிறது.////

nalla varunanai.

Suka said...

நன்றி செல்வநாயகி.

கப்பி | Kappi said...

நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க..

மழைல நனைஞ்ச திருப்தி சுகா....

Thekkikattan|தெகா said...

//வீட்டுப் பாடத்தை சீக்கரம் முடித்துத் தண்ணீரில் கப்பல் விட , குப்புறப் படுத்துக் கொண்டு விரலை விட்டு எண்ணி கணக்கை விரைவாய் முடித்துக் கொண்டிருக்கும் பொடுசுகள்//

:-))

padikka padikka sugamana Ezhuthu Ummudaiyadhu.

Padithen Rasithen. Nandri.

Suka said...

நன்றி Mr.கப்பி :).. கடைசி வரைக்கும் உங்க பேர சொல்லவே மாட்டீங்க போல :)

Suka said...

வாங்க தெகா.. நன்றி

மழையைப் பற்றி எப்படி எழுதினாலும் சுகமாகத்தான் இருக்கும். நான் கண்டு அனுபவித்த காட்சிகளின் தொகுப்பு தானிது. அதை நினைத்த ஏக்கப் பெருமூச்சுத் தான் எழுத்து வடிவத்தில் இங்கே.

கதிர் said...

சுகா,

//மின்விளக்கொளியில் தங்கக் கம்பிகளாய் ஒளிரும் மழைத் துளிகள்.//

//ஈரச் சாக்கும் நிரம்பிய பாத்திரங்களையும் பரிசளித்து விட்டு மழை விடைபெறுகிறது//

நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. அழகான நினைவுகளை கிளப்பி விட்ட மாதிரி ஒரு பீலிங்.

அன்புடன்
தம்பி

கதிர் said...

சுகா,

//மின்விளக்கொளியில் தங்கக் கம்பிகளாய் ஒளிரும் மழைத் துளிகள்.//

//ஈரச் சாக்கும் நிரம்பிய பாத்திரங்களையும் பரிசளித்து விட்டு மழை விடைபெறுகிறது//

நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க. அழகான நினைவுகளை கிளப்பி விட்ட மாதிரி ஒரு பீலிங்.

அன்புடன்
தம்பி

Suka said...

(சற்றே தாமதமான) நன்றி தம்பி.

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல வர்ணணை..
வாழ்த்துக்கள்.

Suka said...

நன்றி சிறில்..

கோடைல எழுதுனத குளிர் காலத்துல படிச்சிருக்கீங்க.. :)

இப்ப கூட இங்க மழை பெய்துட்டிருக்கு.. :)

சுகா

சிறில் அலெக்ஸ் said...

இப்பத்தான் மழை தலைப்பு வந்துருக்கு.

:)

Suka said...

மழை கூட நானும் வந்துடறேன்.. :)

Ayyanar Viswanath said...

மழை எப்பவுமே அழகான நினைவுதான்..

நாமக்கல் சிபி said...

திரும்பவுமா?

கோடை மழை வித்யா இன்னமும் நடிக்குறாங்களா?

நல்ல நடிகை!