Tuesday, May 02, 2006

தேடல்..வித்யாசப்படுதல்.. கனவுகள்..இதுதானே வாழ்க்கை

சிறுவன் ஒருவனுக்கு கனவுகள் பெரிது. அதனால் பெரிய பிரச்சினை ஏதும் இல்லாத அவனது அன்றாட வாழ்க்கையைத் தவிர்க்கிறான்.

தனது லட்சியப் புதையலைத் தேடி அடைவதே வாழ்வதன் பொருள் என மனஉறுதி கொள்கிறான். அதற்காக அவன் தேர்வு செய்தது ஊர் ஊராய்ச் செல்லும் ஆடு மேய்க்கும் தொழிலை.

தேடல் என்பது லட்சியங்கள் மெய்ப்படுமாறு காணும் கனவுகளைப் போல் சுலபமானதல்ல. அவன் செல்லும் பாதைகளில் பற்பல சோதனைகள்.

விரக்தி அடையச் செய்யும் பாலைவனப் பயணக் களைப்பு ஒரு வித சோதனை என்றாலும் அனைத்துச் சோதனைகளும் உடல் உறுதியை மட்டுமே குறிவைப்பதில்லை.

வழியில் சந்திக்கும் பெண்ணின் காதல் வடிவில் ஒன்று. அழகிய பாலைவனச்சோலையில் அமைய வாய்ப்புள்ள அமைதியான அருமையான வாழ்க்கையைப் பற்றிய ஆசையைத் தூண்டும் இதுவும் ஒரு சோதனையே. முந்தைய சோதனையைவிட இது வீரியமானது. வலிகளைக் காட்டி பயமுறுத்தாமல் இன்பங்களைக் காட்டி மயக்குவது. வாழ்க்கையின் லட்சியமே இதுதானோ என்றுகூட திசை திருப்பவைப்பது.

இத்தகைய சோதனையைக் கடக்கும் மனவலிமை அவனிடம் இருந்தது. அழகிய பெண்ணையும் அருமையான வாழ்க்கையையும் உதறி மீண்டும் ஒரு நெடிய பயணத்தை... இலக்கு இருக்கும் தூரமறியாப் பயணத்தை அவனால் தொடர முடிந்தது.

தேடல்கள் சில வேளை வெறும் அலுப்பை மட்டுமல்லாது சில பாடங்களையும் கற்றுத் தருகின்றன. அந்தப் பாடங்களுக்குப் பரிசாக பலரின் லட்சியங்களையும் பெற்றுள்ளன. அந்தப் பாடங்களை நம் சிறுவனும் பெற்றான்.

உடமைகளை இழந்து மொழி தெரியாத நாட்டில் நிற்கும் போது, அவனது கனவுகள் நிறைவேறும் வாய்ப்புகள் ஏதுமில்லை என்ற உண்மையும் அவனுக்கு உரைக்கிறது. பாலைவனம் அவனது லட்சியத்தைப் பறித்துக் கொண்டது.

சிறுவனுக்கு வாழ்க்கை மிக எளிதாக தெளிவாகி விட்டது. உயிர் வாழ்தலும் முடிந்தால் உறவுகளோடு சேர்வதுமே லட்சியமென ஆனது. உண்மை, சிலவேளைகளில் சிலரது நிலைமைகள் சாதாரண விஷயங்களையும் லட்சியமாக்கிவிடுகின்றன.

லட்சியங்கள் பறிக்கப்பட்டாலும் பாலைவனம் பரிசளித்த பாடங்கள் அவனது வாழ்க்கையைப் படிப்படியாய் உயர்த்தியது. அவனது தினசரி உழைப்பின் அலுப்பான தூக்கத்தில் அவனது கனவுகளோடு தொலைத்திருந்தது புதையல் லட்சியங்களையும் தான்.

பாடங்களுக்கு என்றுமே பஞ்சமில்லை. தன் லட்சியத்தைத் தொலைத்தவர் ஒருவரின் புலம்பலை தற்செயலாய்க் கேட்டு தன் லட்சியக் கனவுகளை மீண்டும் நினைவில் கொணர்கிறான் நம் சிறுவன்.

சில வருடங்களைத் தொலைத்திருந்தாலும் தனது நிலைமை முன்பிருந்ததை விட நன்றாயிருப்பதை உணருகிறான்.

அவனது கற்பனை போன்ற லட்சியங்களும் நிதர்சனமான அனுபவங்களும் மோத அவன் எடுக்கும் முடிவுகள் ஒருபுறமிருக்க.

இந்த "Alchemist" நமது புதைந்த லட்சியக்கனவுகளை வெளிக் கொணர்வது உறுதி. முயன்று பாருங்கள்.


இந்த புத்தகத்தை நியாபகப்படுத்திய சேரலின் பதிவுக்கு நன்றி. ஒருகாலத்தில் இதை தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று கூட நினைத்திருந்தேன். எளிய நடையில் ஒரு நல்ல புத்தகம்.

வாழ்த்துக்கள்
சுகா

5 comments:

Suka said...

உண்மை,

நானும் ஒரே தடவையில் தான் படித்து முடித்தேன். விறுவிறு நடையும் அடுத்தடுத்த சம்பவங்களும் கொண்ட இந்த சிறிய புத்தகத்தை பெரும்பாலோனோர் இப்படித்தான் படித்திருப்பர்கள் என தோன்றுகிறது.

"The pilgrimage" படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் . நானும் படிக்கிறேன்.

நான் படித்த இன்னொரு புத்தகம் Ayn Rand இன் 'The fountainhead' மிகவும் பாதித்தது. அதையும் எழுத முயல்கிறேன்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல பதிவு சுகா!

Suka said...

நன்றி சேரல்.

G.Ragavan said...

இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் படித்ததில்லை.

Suka said...

வாங்க ராகவன். இது ரெம்ப சின்ன புத்தகம் தான். ஒரு நாள் ரயில் பயணத்தில முடிச்சுடலாம். அந்த சிறுவனோட நிலைமை ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். அதுல ஏதாவது ஒரு இடத்துலயாவது நாமலும் இப்பிடித்தான இருக்கிறோம்/இருந்தோம் ன்னு தோணும்.

சுகா