Wednesday, May 03, 2006

சில மனிதர்கள் ..சில பாடங்கள் - 1

சில மனிதர்களுக்கு அவர்களின் போராட்டங்களும் அவற்றின் வெற்றிகளுமே அவர்களை வெளியுலகத்திற்கு காட்டும் அடையாளங்களாக அமைந்துவிடுகின்றன. இந்த அடையாளங்கள் சுயமாகப் பெறப்பட்டதால் பெற்றவர்களுக்குப் பெருமையையும் பார்ப்பவர்களுக்கு ஊக்கத்தையும் அளிக்கின்றன.

இத்தகையோரின் வாழ்க்கையின் போராட்டங்களையும் அவர்கள் அவற்றைச் சமாளித்தவிதங்களையும் பார்க்கும் போது நமது போராட்டங்களுக்கு ஊக்கமாகவும் பாடமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய வாழ்க்கைப் போராட்டவாதிகளைப் பற்றி எழுதலாம் என நினைக்கிறேன். அதில் ஒருவர் இவர்.


பிறந்தது பிப்ரவரி 24, 1955 இல் கலிஃபோர்னியாவின் சான்ப்ரான்ஸிஸ்கோ நகரில். பிறந்த ஒரே வாரத்தில் தனது தாயாரால் வேறோரு தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டார்.

பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரியில் சேர்ந்தால் அந்த படிப்பை ஆறுமாதத்திற்கு மேல் தொடரமுடியவில்லை. பாதியில் வெளியே வந்தார்.

இருந்தாலும் தனது முக்கியமான குறிக்கோளான 'இந்தியாவிற்கு சென்று ஆன்மீகத்தில் ஈடுபடுவது' என்ற லட்சியத்திற்கு தேவையான பணத்தைப் புரட்டும் பொருட்டு வீடியோ கேம்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு நாள், விளையாட்டு விசில் ஒன்று எழுப்பிய சப்தம் தொலைபேசியின் அலைநீளத்தில் (2600 Hz)இருப்பதைக் கேட்டு அவருக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது. விளைவு.. சிறிது நாட்களில் தனது நண்பருடன் சேர்ந்து வெகு தூர தொலைபேசி அழைப்புகளை இலவசமாக அளிக்கக்கூடிய 'ப்ளூ பாக்ஸ்' பெட்டியைத் தயாரித்து அதன் விற்பனையைத் துவங்கினார்.

அதில் சேமித்த பணத்தில், கல்லூரி நண்பர் ஒருவருடன் துணையுடன் இந்தியா சென்று தன் தனது நெடுநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். மழுங்க மொட்டையடித்த தலையும் இந்திய துறவிகளின் உடையும் அணிந்து அமரிக்கவிற்கு திரும்பி பழைய வீடியோ கேம் தயாரிப்பு வேலையிலேயே சேர்ந்தார்.

இருபது வயது இருக்கும் போது தனது நண்பர் ஒரு பர்சனல் கம்ப்யூட்டர் வடிவமைக்கக் கண்டு அவருடன் சேர்ந்து சொந்தக் கம்பெனியை 1976 ஏப்ரல் முதல் நாளில் ஆரம்பித்தார். $666.66 விலையுள்ள ஆப்பிள்-1 அமோக வெற்றி பெற்றது. அதே வருடத்தின் டிசம்பர் மாதத்தில் அவர்களின் கம்பெனி பப்ளிக்லி ட்ரேடெட் கார்ப்பரேஷன் ஆனது.

கம்பெனியின் அபரிமிதமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க ஒரு அனுபவம் வாய்ந்த CEO தேவைப்பட்டார். "உங்கள் வாழ்நாளின் மீதி நாட்களில் சக்கரரத் தன்ணீரை விற்பனை செய்யப் போகிறீர்களா ..இல்லை உலகின் மிக முக்கிய மாற்றத்துக்கு காரணமாக இருக்க விரும்புகிறீர்களா.." என சாமர்த்தியமாக பேசி பெப்சி கோலாவில் தலைமையிலிருந்தவரைக் கொணர்ந்து ஆப்பிளின் தலைமைப் பதவி கொடுத்தார்.

1984 இல் முதல் கிராபிக்ஸ் கம்ப்யூட்டராக மேக்கிண்டோஷ் அமோக வெற்றி பெற்றது.

சாமர்த்தியம் , விடாமுயற்சி இவற்றின் மறுபெயராய் இருந்த போதும் சக ஊளியர்களிடம் இருந்து அவர் "ஆத்திரக்காரர்,உணர்ச்சிவசப்படுபவர்" என்ற பட்டத்தையும் பெற்றார். இதன் விளைவாக 1985 இல் ஆப்பிள் நிறுவனத்தில் நடைபெற்ற அதிகாரப் போட்டியில் பலிகடா ஆக்கப்பட்டு அவரது முக்கியமான பதவிகள் பறிக்கப்பட்டன. இதனால் கோபமடைந்த அவர் பதவிவிலகி ஒரே ஒரு பங்கைத்தவிர தன்னிடமிருந்த ஆப்பிளின் அனைத்து பங்குகளையும் விற்றார்.


பின் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் என்ற பெயரில் புதிய கம்பெனியைத் துவங்கினார். தொழில்நுட்பரீதியாக மிகத் துல்லியமான தரமான கம்ப்யூட்டர்களைத் தயாரிக்கமுடிந்தது.



இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் , நாம் இன்று இணைந்திருக்கும் இணையம் Tim Berners-Lee அவர்களால் முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது இந்த நெக்ஸ்ட் கம்ப்யூட்டரில் தான்.

1996 இல் ஆப்பிள் இந்த நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 402 மில்லியன் அமரிக்க வெள்ளிக்கு வாங்கியது. மீண்டும் தான் ஆரம்பித்த முதல் கம்பெனிக்கே திரும்பினார். 1997இல் இடைக்கால CEO வாக நியமிக்கப்பட்டார். பதவியேற்றதும் அதிரடியாக அவர் செய்த மாற்றங்கள் பல ஊளியர்களுக்கு தங்களது வேலை தொடருமா என சந்தேகத்தைக் கிளப்பியது. பல திட்டங்கள் (projects) மூடப்பட்டன.

நெக்ஸ்ட் கம்ப்யூட்டரின் மூளை (operating system) ஆப்பிள் கம்ப்யூட்டரில் பொறுத்தப்பட்டு iMac என்ற பெயரில் சந்தைக்கு வந்தது. அவரது மிக சாமர்த்தியமான வியாபார விளம்பர உத்திகளால் நிலைகுலைந்திருந்த ஆப்பிளின் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியது.

தற்போதைய iPOD மற்றும் iTunes படைப்புகளின் வடிவமைப்பு மற்றும் புதுமையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றியது. தற்கால CEO (interim CEO) என்பதும் iCEO என்று மாறி புதுமையாக்கப்பட்டது.

வெறும் ஒரு அமரிக்க டாலர் சம்பளத்திலேயே பலநாள் வேலை பார்த்தார். அது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

இவ்வாறு விடாமுயற்சி, சாமர்த்தியம் மற்றும் உழைப்பு இவற்றின் மறுபெயராக இருப்பவர் தான் தற்போதைய ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

குறிப்பு: ஒரு அறிமுகத்திற்காகவே இக்கட்டுரையை எழுதியதால் ஆழ்ந்த கருத்துகளை இங்கே எழுதவில்லை. விருப்பமிருப்பவர்கள் கீழுள்ள தளங்களில் அதிக தகவல்களைப் பெறலாம்.

1) http://en.wikipedia.org/wiki/Steve_Jobs

2) அவரது வாழ்க்கை குறித்து அவர் பேசியது இங்கே http://news-service.stanford.edu/news/2005/june15/jobs-061505.html

7 comments:

சிவக்குமார் (Sivakumar) said...

நல்ல கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள்.

Suka said...

வாங்க விஜயன். நன்றி

Sivabalan said...

நல்ல பதிவு!!

Suka said...

நன்றி உண்மை. தொடர்ந்து எழுதுகிறேன்.

வாங்க சிவபாலன், நன்றி.

Anonymous said...

too good....

Thekkikattan|தெகா said...

சுகா,

நல்லதொரு முயற்சி, வாழ்த்துக்கள்!

இருப்பினும் அவ்வப்பொழுது தாங்களின் சொந்தப் படைப்பும் அளியுங்கள், நான் உங்களின் ரசிகன் என்பது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, இருப்பினும் நான் நீண்ட நாட்களாக உங்கள் படைப்புகளை படித்து வருகிறேன்.

நன்றி!

தெகா.

Suka said...

நன்றி தெகா.

சொந்தப் படைப்புகள் என்று எதுமாதிரியானவற்றைச் சொல்லுகிறீர்கள் என சரியாகப் புரியவில்லை. கவிதை என்று சொல்லிவிடாதீர்கள்.. இருக்கும் ஒரே ரசிகனையும் இழந்துவிட மனமில்லை :))ஹ ஹா..

முண்ணனி நிறுவனங்களின் தலைவர்கள் எல்லாருமே பெரிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்மட்டுமல்ல என்பதை காட்ட இதைவிட நல்ல செய்தி கிடைக்கவில்லை. எனவே தான் பதித்தேன்.

வாழ்த்துக்கள்,
சுகா