Thursday, November 24, 2005

சுயம் எனும் யாகம்

குழந்தை நான்
கண் விழித்தேன்
பளீரென வெளிச்சம்
இருளன்றி இன்னொன்று
பெரிதாக உருத்தவில்லை

அன்னையின் முத்தம்
நெற்றியில் ஈரம்
அது தவிர வேறொன்றும் தோன்றவில்லை

சுற்றிலும் அசைவுகள்
சத்தக் குழப்பங்கள்
நாட்டமில்லை எதிலும் எனக்கு

என் பயமெல்லாம்
எங்கிருந்தோம்..எங்கே இருக்கிறோம் என்பதே

சுற்றியிருந்த தடுப்புச் சுவரெங்கே
தேடுதென் கரங்கள்

காலிலும் ஏதும் இடரவில்லை
இப்படி ஒரு வெறுமையா

இது என்ன மாற்றம்...
பிடிக்கவில்லை எனக்கு

இதன் எதிரொலிப்பு
என் தொண்டையின் நரம்புகளில்

இது என்ன புது உணர்ச்சி
பசியா..இதுவரை இருந்ததில்லையே

தொப்புள் கொடியற்ற வயிற்றின் எரிச்சல்
என் வாய் வழியே வலியாக...

தேவைகள் தீர்கின்றன..
இமை மூடி முன்பிருந்த இடம் போலே உணர்கின்றேன்

எனக்கு தெரிந்ததெல்லாம்
நான்...
என் தேவைகள்..

எனக்கு தேவையெல்லாம்
என் தேவைகளின் தீர்வுகள்..
அது தவிர வேறொன்றும் நான் அறியேன்

வேர்களின் நீர் தேடல் போல்
விகல்பமில்லாத தேடல்

இது என் தேவைகளின் தேடல்
என தைரியமாக கத்தி அழும் தேடல்

இந்த தேடல்களைத் தவிர
எனக்கு வேறொன்றும் முக்கியமில்லை
என அகங்காரமான தேடல்

இதில் எனக்கு அவமானமேதுமில்லை
அது பற்றி நான் அறிந்ததில்லை
அறிய தேவையில்லை

தேவைகளைத் தீர்ப்பவர் பற்றி எனக்கு அக்கரையில்லை
இருந்தாலும் அது என் தேவைகளைத் தீர்ப்பதற்கே

பாசம் பற்றி தெரியவில்லை
இது நான் வாழும் உலகம்
இந்த கருவரைக்குள் இன்னொருவரை பார்த்ததில்லை

தேவைகள் தீர்கின்றன..
புதிய தேவைகள் வளர்கின்றன..

தேவைகளின் தீர்வுகள் எப்போதும் சுலபமாக கிடைப்பதில்லை
தீர்வுகளுக்கும் தேவைகள் உண்டு போல..
என்னிடம் இருந்து எதையோ எதிர்பார்க்கின்றன..
நான் தேவைகளை மதிக்கின்றவன் ..
நான் வாய் விரித்து கண் சுருக்கி குரல் கொடுத்தல் தேவை அவர்க்கு
அழகிய சிரிப்பென்று கொஞ்சி பின் என் தேவை தீர்க்கின்றனர்

சுயநலம் நான்...
வருத்தப் படுவதுமில்லை
என்னை யாரும் வருத்தப்படுத்துவதுமில்லை
வயதெனக்கு காப்பு

வருடங்கள் ஓட
மாற்றங்கள்..
மாறி மாறி மாற்றங்கள்

புதிய வார்த்தைகள் .. விளக்கங்கள் .. வரையறைகள்
இவையெல்லாம் தேவையற்றிருந்தேன்..

பாசம் நட்பு கற்பு கரிசனம் நாகரிகம்
ஒழுக்கம் கடமை உரிமை அன்பு பெருமை
கௌரவம் கட்டுப்பாடு வரைமுறை பண்பாடு.. என
வார்த்தைகள் தீர்வதில்லை ..
விளக்கங்கள் ஓய்வதில்லை

இவ்வரையறைகள்
தேவைகளில் ஊடுருவி
மழுப்புகின்றன

தேவைகளையே மறக்கின்றேன்..எனினும்
தேடல்களை விடுவதில்லை

தேவைகள் துவங்கிய தேடல்களே
காலத்தால் தேவைகளாகின்றன..

இது தானா பரிணாமம்
இது தானா வளர்ச்சி

வளர்ச்சிகள் வளர்ந்து
என் தேவைகளையும் பிறர் நிர்ணயிக்கும்
கொடுமைகள் காண்கிறேன்..

ஒடிக் கொண்டே இருப்பது வாழ்க்கையாகிறது
என் வேகம் எனக்கு மதிப்பளிக்கிறது
அந்த மதிப்பு எனக்கு முக்கியம்
என் தேவைகளின் தீர்வுகளுக்கு முக்கியம்
தேவைகளை மறந்தாலும் தீர்வுகளை மறக்கவில்லை

இது சக்கர வியுகம்
மீள்வதெப்படி..
குழந்தை இடமிருந்து கற்க வேண்டும்

பசியென்றால் நாகரிகம்
பார்க்காமல் கை கால்களை
உதைத்து அளும் குழந்தையிடம்
படிக்க வேண்டிய பாடம் அது

தானன்றி தரணியிலே உள்ளதெலாம்
தனித்தே இருக்கட்டுமெனும்
'சுயம்'

~சுகா

10 comments:

Anonymous said...

உங்கள் புளாகு மிகவும் போர் அடிக்கிறது

Suka said...

அடடா..தவறான இடத்துக்கு வந்துவிட்டீர்கள் போலே..

தினமும் பேசும் பார்க்கும் சினிமா, நகைச்சுவை, காதல் தவிர்த்து எனக்கு தெரிந்த எதார்த்தங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த தளம்..

தங்கள் கருத்துக்கு நன்றி

கயல்விழி said...

//தேவைகளைத் தீர்ப்பவர் பற்றி எனக்கு அக்கரையில்லை
இருந்தாலும் அது என் தேவைகளைத் தீர்ப்பதற்கே//

கருவறைக்கும் கல்லறைக்கும் இடையிலான வாழ்க்கைப்பயணத்தில் கருவறைக்காலம் தான் கவலைகள் வலிகள் தெரியாத காலம் அதன் பின்னர். அவஸ்த்தை அவஸ்த்தை அதைத்தவிர வேறு இல்லை. நல்ல கருப்பொருள். வசனங்கள மேலும் மொருகூட்டினால் சிறப்பாய் இருக்கும்.

Suka said...

ம்ம்..

நான் சொல்ல வந்த கருப்பொருள் அதுவல்ல..

கருவறைக் காலத்தில் கவலைகள், வலிகள் இருந்ததா இல்லையா என எனக்கு நினைவில்லை..இன்று எனது உலகத்தில் பெரிய கவலைகள் ஏதுமில்லை.

குழந்தையாக இருக்கும் போது நம் உணர்வுகளை வெளிப்படுத்த நமக்குள்ள சுதந்திரம் நாம் 'பக்குவப் பட்டு' பெரியவர்களாக ஆகும் போது இருப்பதில்லை.. அதற்கு முக்கிய காரணம் எதை செய்யும் போதும் அடுத்தவர் கோணத்தில் இருந்து பார்த்து அவர்களைத் திருப்திப் படுத்தும் வகையில் நடப்பதே...

உங்கள் பாராட்டை வாபஸ் பெற்றுக் கொள்கிறீர்களா :)

நன்றி

நளாயினி said...

ஆனாலும் திமிர் அதிகம் உங்களிற்கு. கயல் விழி எழுதிய பின்னூட்டத்திற்கு இப்படியா பதில் எழுதுவது? கவிதை நன்றாக உள்ளது. சுயத்தை தேடும் முயற்சி. மற்றவர்களது மனம் நோகாது நடந்து கொள்ள வேண்டும் என நினைத்து நம்மை காயப்படுத்திக்கொள்கிறோம். அது தான் உண்மை. குழந்தைக்கு இருக்கும் உணர்வுபோல் இருந்துவிட்டால் துன்பம் தான் ஏது?. நல்ல கவிதை. ஆனாலும் சொல்லிவிட்டீர்களே பக்குவப்பட்டு பெரியவர்களானதும் என. நாகரீகம் பார்க்காமல் குழந்தை அழுகிறதே. இது தான் வாழ்க்கை. ஒன்றை அதிக கரிசனையோடு வெளிப்படுத்துகிறோம் என நினைத்து சில சமயம் வலிகளை கொடுத்துவிடுகிறோம். நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல ஒரு சம்பவத்திற்கு நன்மையும் தீமையும் உண்டு என உணர்வது போல அதுவே தேடலின் முடிவும்.முடிவும் என முற்றுப்புள்ளி இடாதபடிக்கு சங்கிலித்தொடராய் வாழ்வின் எல்லை வரை தொடரும் அது வே உண்மை. தங்களின் கவிதை தொடர வாழ்த்துக்கள்.

Suka said...

நளாயினி,

தங்கள் கருத்துக்களை எந்த வார்த்தை ஜாலங்களாலிம் மழுப்பாமல் அப்படியே வெளிப்படுத்தியதைப் பாராட்டுகிறேன். என்னால் சிலசமயம் இவ்வாறு வெளிப்படையாய் எழுதமுடிவதில்லை.

கயல்விழியையோ மற்றவர்களையோ புண்படுத்துவது என் நோக்கமல்ல. நான் சிலவற்றைப் பற்றி சிலவாறு நினைக்கிறேன். அதைப் பகிர்ந்துகொண்டு மற்றவர் கருத்துக்களினின்றும் புதியதாக கற்க முடிந்ததைக் கற்க விளைகிறேன். அவ்வளவே தான்.

என் கவிதையின் கருப்பொருளைத் யாரவது தவறாக உணர்ந்தார்களேயானால் அதைத் திருத்தும் கடமை எனக்குண்டு. அடுத்தமுறை இன்னமும் தெளிவாக எழுத வேண்டும் என்ற பாடமும் எனக்குண்டு. தவறாக புரிந்து கொண்டு தரப்படும் பாராட்டுகள் எனக்கு தகுதியற்றவை. எனவே தான் திருத்தினேன். உங்கள் பார்வையில் அது திமிராகப்பட்டாலும் அது குறித்து எனக்கு வருத்தமேதுமில்லை.

இனி தங்கள் கருத்து குறித்து...

'இது தான் வாழ்க்கை' என வாழ வேண்டிய அவசியம் என்ன. சுயத்தைப் புரிந்து கொண்ட இருவர் பேசும்போது முகமூடிகள் தேவையில்லை. அதனாலே தான் சுயத்தின் தேவையை உணர்த்த இதை எழுதினேன். நம்மால் எப்போதும் நாமாக வாழமுடியாவிட்டாலும் அந்த நிலையை நோக்கிப் பயணிக்கவாவது ஆரம்பித்தால் வாழ்க்கை எளிதாகும் என்பது என் கருத்து.நீங்கள் இதைத் தெளிவாகப் புரிந்து எனைப் பாராட்டுவதால் மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் முதல் வாக்கியமே என்னை மிகவும் மகிழ்விக்கிறது :)

நன்றி

நளாயினி said...

இங்கே நான் திமிர் எண்டது உங்களின் சுயத்தை நிரூபிப்பதற்கே. ஒரு கவிஞனுக்குரிய சுயம் தெரிகிறது. நிச்சயமாக நல்ல கவிதைகளை இன்னும் தரமுடியும் உங்களால்.

Suka said...

நன்றி நளாயினி.

சத்தியா said...

இது சக்கர வியுகம்
மீள்வதெப்படி..
குழந்தை இடமிருந்து கற்க வேண்டும்

பசியென்றால் நாகரிகம்
பார்க்காமல் கை கால்களை
உதைத்து அளும் குழந்தையிடம்
படிக்க வேண்டிய பாடம் அது

இந்த வரிகள் எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது. நல்ல கவிதை. வாழ்த்துக்கள் சுகா.

Suka said...

நன்றி சத்தியா.