Thursday, August 16, 2007

நவீன ஓவியங்கள்

நளாயினி அவர்களின் இந்தப் பதிவில் முதல் மறுமொழியில் ஒரு அனானி அந்த புகைப்படம் புரியவில்லை என்றும் புரியாததால் தான் அது நவீன ஓவியமா என உண்மையாகவே அங்கலாய்த்திருந்தார். அந்த அனானியின் நிலையில் நானும் இருந்திருக்கிறேன்.. நம்மில் பலரும் இருக்கலாம்.. எனவே நவின ஓவியம் குறித்த எனது எண்ணத்தை பகிர இந்த பதிவு.



மனம் அழுத்தமாக உள்ள சமயங்களில் எப்போதாவது புல்லாங்குழலின் இதமான இசையைக் கேட்டதுண்டா.. அந்த இசை நமது சுவாசம் போல் நம்மையுமறியால் உள்ளே சென்று நரம்புகளில் இதமாக ஊடுருவுகிறது.. அந்தப் புல்லாங்குழலின் இசை நமக்கு எதையும் குறிப்பாக உணர்த்துவதில்லை என்றாலும் அது மனதை இதமாக தாலாட்டுகிறது..

ஒவ்வொருவரையும் அவரவரின் அமைதியான இதமான கற்பனை சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்கிறது. அந்த சொர்க்கம் அவரவரின் கற்பனையில்... கோடைகாலத்தின் சாலையோர ஆலமரத்தடியாக இருக்கலாம்..அல்லது மரங்களடர்ந்த உயர்ந்த மலையோன்றின் சிகரத்தின் மயங்கிய மாலையாக இருக்கலாம்.. கேட்பவர்களை அந்த இசை ஆட்கொள்கிறது..




அதுவே ..கண்ணதாசனின் சோககீதத்தை தத்துவப் பாடலைக் கேட்கும் போது அதன் அர்த்தம் பொதிந்தவரிகள், சில வேளைகளில் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது.. ஆழமான அந்த வார்த்தைகளின் தேர்வு நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது.

வைரமுத்துவின் அடர்த்தியான உவமேயங்கள்.."முகிலினங்கள் அலைகின்றன முகவரிகள் தொலைந்தனவோ.." போன்ற கற்பனைகள் .. பாடுபொருள் பற்றிய கேட்பவரின் கற்பனைகளுடனேயே கவிஞரின் திறமையையும் மெச்சி சிலாகிக்க வைக்கின்றன.




நவீன ஓவியங்கள் முன்னால் சொன்ன இசைக்கு ஒப்பானவை. அர்த்தம் என குறிப்பாக ஏதும் இருப்பதில்லை. ஆனாலும் அதை அனுபவிப்பதில் தவறில்லை. ஓவியரின் கண்கொண்டு பார்க்க வேண்டியதில்லை ஆனாலும் அந்த வண்ணக் கலவைகள் மீட்டும் நுண்ணிய இசையைக் கண்கொண்டு கேளுங்கள்.. அவை புதிர்களல்ல தீர்வு காண்பதற்கு .. ஓவியரின் மனநிலையையும் கருப்பொருளின் ஆழத்தையும் கற்பனை செய்து பாருங்கள்..அமைதியான சூழ்நிலையில் சில ஓவியங்கள் இசையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். உணர்வுகளை ஆட்கொள்ளவே படைக்கப் படுவதால் பெரும்பாலும் பிரம்மாண்டமான அளவில் படைக்கப்படுகின்றன இவை.




ரெப்ரஸண்டேஸனல் ஓவியங்கள் , கவிதைகளுக்கு ஒப்பானவை. அர்த்தங்கள் வெளிப்படை.. பார்ப்பவர் அனைவருக்கும் ஒரேவிதமான விருந்து. பெரும்பாலும் ஓவியரின் திறமைகள் மதிப்பிடப்படுகின்றன அல்லது ஒப்பிடப்ப்டுகின்றன. ஓரிரு தடவைகளுக்கு மேல் பார்க்க மனம் அவ்வளவாக விளைவதில்லை.. எத்தனை முறை பார்த்தாலும் ஒரே பொருள் தான்.. ஒவ்வொரு முறையிலும் முன்பு பார்க்க மறந்த நுண்ணிய பொருள்களை திறனைக் கண்டு வேண்டுமானால் வியக்கலாம்.

சில இயற்கை காட்சிகளின் ஓவியங்கள் உங்களை ஆட்கொள்ளலாம். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டலாம், இருந்தாலும் அவை ஏக்கத்தின் தாக்கமாக இருக்கலாமே தவிர புதிய உணர்வுகளைத் தூண்டும் வாய்ப்புகள் குறைவு.




நவீன ஓவியங்கள் ஒவ்வொரு முறை பார்த்தாலும் ஒரு புதிய உணர்வை தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு தாக்கமும் ஓவியரின் கருப்பொருளை நோக்கி நகர்த்துகின்றது ரசிகர்களை.

நவீன ஓவியத்தை அதனை வடிக்கும் திறன் கொண்டு எடைபோட வேண்டாம்; அது ஏற்படுத்தும் தாக்கம் கொண்டு எடை போடுங்கள்.

பொதுவாக சில ஓவியங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன, சில மனதினைத் தாக்குகின்றன. அனைவருக்கும் ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்த தேவையில்லை. இசை போன்றவை இவை.. அடுத்தமுறை நவீன ஓவியங்களை பார்க்கும் போது கண்ணைமூடி அவற்றின் வண்ணக்கலைவையை கற்பனை செய்து பாருங்கள் ; உங்களை ஆச்சர்யப்படுத்தலாம் அவற்றின் தாக்கம்.


மணிக்கணக்கில் வரையப்பட்டு நிமிடக்கணக்கில் எடைபோடப்படும் ரெப்ரஸண்டேஸனல் ஓவியங்களுக்கு மத்தியில் , வருடக் கணக்கில் சிந்திக்க/அனுபவிக்க வைக்கும் நவீன ஓவியங்கள் இப்போது பிரபலமாவதில் ஆச்சர்யமேதுமில்லை.




எனக்குத் தெரிந்த சுமாரான நவீன ஓவியர் திருவாளர் இயற்கை.. மேகக் கூட்டங்களிலும்.. வனத்திடை சூரிய ஒளியின் நிழல்களிளேயும் என பல இடங்களில் வரைந்து தள்ளுகிறார். அவற்றில் சில ரசிக்கவும் படுகின்றன.





ஓவியங்களைப் பற்றி எழுதுவது போல் ஓவியங்களுக்கு செய்யும் துரோகம் எதுவுமில்லை. ஆதலால் சில நவீன ஓவியங்கள் பார்வைக்கு.






மூலம் : http://www.yessy.com/




மூலம் : http://www.artlex.com/ArtLex/f/images/futur_balla.lampada_xlg.jpg








சுகா

பென்சில் ஓவியம் - 3


இது எனது புதிய கிராஃபைட் பென்சில் (தமிழ்??) ஓவியம்.

மற்றவை : http://pencilsketch.blogspot.com/

சுகா

Thursday, August 09, 2007

தீராப் புல்தரை

கானமுயல்கள் சிரிக்கின்றன
யானை பிழைத்த வேல் ஏந்திக் கந்திய
கைகளைக் கண்டு

பல சின்னஞ்சிறு கதைகளும்
கேட்கப்படாமலே போக
அடைக்கின்றன காதுகளும்
பசியோ..

பசியில்லை ஆடுகளுக்கு
தீராப் புல்தரை..

நிமிர்ந்தறியாத கழுத்துமட்டும்
உறுத்துகிறது
ஆனாலும் புல்சுவை அதிகம்

புல் வளர்ப்பது புலி என்பது
தெரிய வாய்ப்பில்லை

நிமிர்தல் பாவம்..
சொன்னது கீதை

கீதையின் பக்கங்களிலும்
புலியின் உரோமங்கள்

தீராப் புல்தரை தீர்ந்தாலும்
நிமிராதது கழுத்து

புல்தரை தீர்ந்தது விதியால்..
முன்செய் பாவங்களால்

நிமிர்தல் பெரும் பாவம்..
பாவம் தருவது தீரும் புல்தரை

தீரும் புல்தரை மீண்டும் வேண்டாம்
பாவ நிமிர்தலிலும்
சாவது மேல்

புலிகளின் போதனை
கைமேல் பலன்

ஆடுகள் சுவைதான்
புலி உண்ணுமா புல்லை

மேயும் போதும்
பேசிக் கொள்கின்றன
நிமிர்வதைப் பற்றிய
பாவக் கதைகளை

நிமிர்தல் சிரமம்
நிமிர்தல் பயம்..

குனிதல் சுகம்
குனிதலில்...
தீரும் புல் ஒன்றே பயம்
தீரும் புல் பாவத்தால்
நிமிர்தலே பாவம்

மை தீர தீர
கீதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றன
புலிகள்


சுகா