Tuesday, May 30, 2006

நடுநிலைவாதிகள்

நாங்கள் ஒரு நூறு பேராவது இருப்போம்..

அனைத்தையும் பார்க்கிறோம்.
ஆதரவு என்று யாருக்கும் தருவதில்லை

இருந்தாலும் இவர்கள் விடுவதாயில்லை
எங்கள் காது செவிடாகக் கத்துகின்றனர்

கட்சிகள் மாறுகின்றன
காட்சிகளும் மாறுகின்றன

இன்று எம்மிடம் இருப்பவர்
நாளை எதிரிடம் போகின்றார்

அங்கிருப்பவர் இளித்துக் கொண்டே
இங்கே வருகிறார்

நாங்கள் கண்டுகொள்வதில்லை
அவர்களும் எங்களை மதிப்பதில்லை

உண்மையில் நாமில்லையெனில்
பாவம் இவருக்கு சட்டசபையில் இருக்கை ஏது

இது நிதர்சனமென தெரிந்தும் ஏனோ
எம்மைத் துச்சமாக மதிக்கிறார்.

நகைச்சுவை.. ஏளனம்..எதிர்ப்பு..
கோபங்கள்..கூச்சல்கள்
வாழ்த்துக்கள் வசைமொழிகள்
அடிதடிகள் அத்துமீறல்கள்
ஏதும் செய்வதில்லை எங்களை

சில காயங்கள் எங்களுக்கும் உண்டு
யாரும் கண்டுகொள்வதில்லை
நாங்கள் மரம்.

அவர்கள் பேசியதைக் கேட்டோம்
பின் அதையே மாற்றிப் பேசியதையும் கேட்டோம்

அதை எதிர்த்துப் பேசியவரையும் கேட்டோம்
எதிர்த்தவர் திடீரென ஒத்துப் போவதையும் கேட்டோம்

எங்கள் கேள்வி ஞானம் கண்டு
வள்ளுவரே பூரிப்பார்

கட்சி பேதமெமக்கில்லை
தட்டுவோர் தட்டினால்

சத்தமெழுப்பி ஆரவாரிப்பதைத் தவிர
வேறொன்றும் யாமறியோம்

அட.. நாம் நடுநிலைவாதிகள் அல்லவா!
அதனால் தான் கரைவேட்டிகள் அமர
படும் அங்கங்கள்
எங்களை இன்னும் அசிங்கப்படுத்துகின்றன.

-சட்டசபை பெஞ்சுகள்

Thursday, May 25, 2006

ஒரு ரோஜாச்செடி வாங்க வேண்டும் :)


இதற்காக நான் இந்தக் கடைக்கு வந்துள்ளேன். இது ஒரு அழகான வித்தியாசமான கடை. முற்றிலும் கண்ணாடிச் சுவர்களாலானது. அதனால் சுற்றி நடப்பவை எல்லாம் தெளிவாகவே தெரிகிறது.

இந்த வழியாகச் சாலையில் செல்லும் போது பார்த்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு சீக்கிரமாக நானும் இங்கே நுழைவேன் என்று எண்ணவில்லை.

இது சற்று வித்தியாசமான கடை என்று சொன்னேனல்லவா. ஏனெனில்...

வழியெங்கும் இரண்டு பக்கங்களிலும் ரோஜாச்செடிகள் நிறைந்திருக்கும். நீங்கள் அதிலிருந்து பிடித்த ஒன்றைத் எடுத்துக் கொள்ளலாம். கடை எப்போதும் திறந்திருக்கும். அதனால் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை சாவகாசமாகத் தேடலாம்... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கிருப்பது ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே. தேர்ந்தெடுத்தபின் நீங்கள் வெளியேற வேண்டியது தான். இன்னொரு முக்கியமான நிபந்தனை, வந்த வழியில் திரும்பி வரமுடியாது. ஆம்.. இது ஒரு ஒருவழிப்பாதை.

வாயிலில் நுழைந்தவுடனேயே இன்று கூட்டம் அதிகமாக இருப்பதாக நினைத்தேன். அனால் அது நாம் ஏற வேண்டிய பேருந்து மட்டும் வருவதற்கு எப்போதும் தாமதமாவது போல் தோன்றுவது போன்ற தோற்றப்பிழையென உணர்ந்தேன்.

உயர்ந்த கூரையும் , கண்ணைக் கூசாத ஆனால் பிரகாசமான ஒளியும் இந்த இடத்தை ரம்மியாமாகக் காட்டுகின்றது. இதுவும் சிலருக்குப் பிடிக்கவில்லை போல; புலம்பல்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்களின் தேவைகள் பெரியதோ என எண்ணத் தோன்றுகிறது. சரி நமது வேலையைக் கவனிப்போம்.

நுழைந்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன். ஏதோ உற்சாகத்தில் சுற்றிலும் இருந்த ஆரவாரத்தில், புதிய சூழ்நிலையின் தோற்றக் கவர்ச்சியில், சில செடிகளைக் கவனிக்காமலேயே நடந்துவிட்டிருந்தேன். முடிவு தெரியாத தோட்டமிருக்க கவலையென்ன என அலட்சியமாக நினைத்தேன். இருந்தாலும் நடையின் வேகம் சற்றே குறைந்தது.

பக்கத்தில் சில செடிகளின் பூக்கள் வெகு அழகாக இருந்தன, சில நல்ல மணம் வீசின.. சில மிக வித்தியாசமாய் இருந்தன.. ஆச்சர்யப்பட்டுக் கொண்டே என்னைக் கவர்ந்த சில செடிகளின் அருகில் சிறிது தாமதித்தேன். அதுவும் சுகமாகத்தான் இருந்தது.

தூரத்திலும் சில செடிகள் வெகு அழகாகத் தெரிந்தன. ஆனால் அவற்றிற்கான பாதை தெளிவாகத் தெரியவில்லை. நான் நடந்து கொண்டிருக்கும் பாதையில் பிரியும் சில கிளைப்பாதைகள் என்னை அங்கே கொண்டு சேர்க்கலாம்... சேர்க்காமலும் போகலாம். கிளைப்பாதைகளில் காலடித்தடங்கள் அவ்வளவாக இல்லை.

சரி.. இதில் போகலாமா என யோசித்துக் கொண்டே, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என கவனித்தேன்.

ஹும்.. ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விஷயத்தில் வித்தியாசமாகவே இருப்பதாகத் தோன்றியது.

சிலர் தனியாக வந்து தேடிக்கொண்டிருந்தனர். சிலர் பலருடன் வந்து கூடி விவாதித்துத் தேடிக் கொண்டிருந்தனர்.

சிலர் என்ன தேடவேண்டும் என்று தெரியாமல் தேடுவதைப் போல இருந்தது. சிலரோ மிகத் தெளிவான குறிக்கோளில் உறுதியாகத் தேடிக்கொண்டிருந்தனர்.

சிலர் மிகக் குறைவான கால அவகாசம் இருப்பதைப் போல வேகமாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். சிலர் ஏதோ கட்டாயம் போல ஒவ்வொரு செடியையும் வேண்டா வெறுப்பாகப் பார்த்து முகம் சுளித்துக் கொண்டிருந்தனர்.

சிலர் ரோஜாச்செடியின் பெயரை எழுதிவைத்து அதிலே எதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். சிலர் ஏதோ அளவுகளைக் குறித்தவண்ணம் இருந்தனர்.

சிலர் என்னைப் போல் மற்றவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் காரணம் வேறாகவும் இருக்கலாம்.

சிலர் யார் யாரிடமோ ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் அறிவுரைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தனர்.

சிலர் ஒரமாக ஒதுங்கி, அவசரப் பட்டுக் கடந்து வந்த ரோஜாச்செடியை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் அங்கேயே பலகாலமாக எங்கித் தவித்துக் கொண்டிருப்பதைப் போல் தோன்றியது.

சிலர் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் தேடிக் கோண்டிருந்தனர். சிலர் களைத்துப் போயிருந்தனர்.

சிலர் கையில்செடியுடன் சந்தோசமாக வெளியேறும் வழியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் கடக்கும் சில செடிகளைப் பார்க்கும் ஏக்கப் பார்வையும் லேசாகத் தெரிந்தது.

சிலர் வழக்கமான வழிகளைத் தவிர்த்து மற்றவழிகளில் நடந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வெளிப்படையாகச் சிலர் பரிதாபித்தும், சிலர் பரிகாசித்தும் கொண்டிருந்தனர்.

இந்தக் கடையின் இன்னொரு சிறப்பம்சம் இதன் முடிவே தெரியாததுதான். கடந்து வந்த பாதையின் தூரமும் , பார்க்கப்பட்ட செடிகளின் அலுப்பும் , கடையின் முடிவு அருகிலிருக்கிறது என்ற புரளிகளின் பயமும் சிலரின் பயணத்தை விரைவாக முடித்து வைக்கிறது.

நான் தனியாகவே வந்திருந்தேன். சிலர் இலவசமாகக் கொடுத்த அறிவுரையைத் தவிர்த்து தனியே எனக்குப் பிடித்த ஒரு கிளைப் பாதையில் செல்ல முடிவெடுத்தேன்.

என் பின்னே படப்படும் பரிதாபங்களும் பரிகாசங்களும் சிலவேலைகளில் முதுகில் உறைக்கத்தான் செய்கின்றன. என் முயற்சி வெற்றியா தோல்வியா என இவர்கள் உணரப்போவதுமில்லை ஆனால் இவர்களின் அறிவுரை எப்போதும் இலவசம்.

மாற்றுப்பாதை எளிதானதல்ல.. வழியில் குத்திய முட்கள் சில , ஏனோ முன்பு பார்த்த.. பாதித்த செடிகளை நினைவு படுத்தின. தனிவழியின் பயங்கள் பழக்கப்பட்ட வழிகளின் சலசலப்பை விட சுகமாகவே இருக்கிறது.

ஆச்சர்யப்படும் வகையில், யாரும் பார்த்திராத சில காட்டு ரோஜாக்கள் இங்கே மலர்ந்திருக்கின்றன. புதிய முகம் கண்டு வரவேற்று அவை எஸ்டர்களை கொஞ்சம் அதிகமாகவே வீசுவது போலிருக்கிறது.. ம்.. எனது ரோஜாச்செடி அருகில் தான் எங்கோ இருக்கிறது.

Monday, May 15, 2006

உங்களுக்கு 'ஆண்' மூளையா 'பெண்' மூளையா ?

இதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். நான் இப்போது தான் பார்த்து அசந்து போனேன். இதில் சொல்லப்பட்ட மனோதத்துவக் காரணத்தில் பெரிய உடன்பாடில்லையென்றாலும் இது சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இதைப் பதிய ஆங்கிலத்தை தவிர்க்க முடியவில்லை. மன்னிக்கவும்.

Female Brain or a Male Brain - TEST

Well do you have a male brian or a female brain?

Check this..! (this worked for me mustwork for others too!)

This is called the quick eye exam!

Quick Eye Exam... This will blow your mind...!

Just do it - don't cheat!!!


Count the number of F's in the following text in 15 seconds:


FINISHED FILES ARE THE
RESULT OF YEARS OF SCIENTIFIC
STUDY COMBINED WITH THE
EXPERIENCE OF YEARS

Managed it?

Scroll down only after you have counted them!

OK?





































































How many?

Three? (You r definitely male!!!)

Wrong, there are six - no joke!

Read again!



FINISHED FILES ARE THE
RESULT OF YEARS OF SCIENTIFIC
STUDY COMBINED WITH THE
EXPERIENCE OF YEARS



The reasoning is ...

The MALE brain cannot process the word "OF".

Incredible or what?

Anyone who counts all six F's on the first go has a brain of a Female

You can test this by asking a Guy/Girl near you to work it out.



இதன்படி எனக்கு 'ஆண்' மூளை தான் :(. பார்க்கலாம் .. இங்கே எத்தனை பேருக்கு இதில் கூறியபடி நடந்திருக்கிறது என்று.

Wednesday, May 03, 2006

சில மனிதர்கள் ..சில பாடங்கள் - 1

சில மனிதர்களுக்கு அவர்களின் போராட்டங்களும் அவற்றின் வெற்றிகளுமே அவர்களை வெளியுலகத்திற்கு காட்டும் அடையாளங்களாக அமைந்துவிடுகின்றன. இந்த அடையாளங்கள் சுயமாகப் பெறப்பட்டதால் பெற்றவர்களுக்குப் பெருமையையும் பார்ப்பவர்களுக்கு ஊக்கத்தையும் அளிக்கின்றன.

இத்தகையோரின் வாழ்க்கையின் போராட்டங்களையும் அவர்கள் அவற்றைச் சமாளித்தவிதங்களையும் பார்க்கும் போது நமது போராட்டங்களுக்கு ஊக்கமாகவும் பாடமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய வாழ்க்கைப் போராட்டவாதிகளைப் பற்றி எழுதலாம் என நினைக்கிறேன். அதில் ஒருவர் இவர்.


பிறந்தது பிப்ரவரி 24, 1955 இல் கலிஃபோர்னியாவின் சான்ப்ரான்ஸிஸ்கோ நகரில். பிறந்த ஒரே வாரத்தில் தனது தாயாரால் வேறோரு தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டார்.

பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரியில் சேர்ந்தால் அந்த படிப்பை ஆறுமாதத்திற்கு மேல் தொடரமுடியவில்லை. பாதியில் வெளியே வந்தார்.

இருந்தாலும் தனது முக்கியமான குறிக்கோளான 'இந்தியாவிற்கு சென்று ஆன்மீகத்தில் ஈடுபடுவது' என்ற லட்சியத்திற்கு தேவையான பணத்தைப் புரட்டும் பொருட்டு வீடியோ கேம்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு நாள், விளையாட்டு விசில் ஒன்று எழுப்பிய சப்தம் தொலைபேசியின் அலைநீளத்தில் (2600 Hz)இருப்பதைக் கேட்டு அவருக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது. விளைவு.. சிறிது நாட்களில் தனது நண்பருடன் சேர்ந்து வெகு தூர தொலைபேசி அழைப்புகளை இலவசமாக அளிக்கக்கூடிய 'ப்ளூ பாக்ஸ்' பெட்டியைத் தயாரித்து அதன் விற்பனையைத் துவங்கினார்.

அதில் சேமித்த பணத்தில், கல்லூரி நண்பர் ஒருவருடன் துணையுடன் இந்தியா சென்று தன் தனது நெடுநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். மழுங்க மொட்டையடித்த தலையும் இந்திய துறவிகளின் உடையும் அணிந்து அமரிக்கவிற்கு திரும்பி பழைய வீடியோ கேம் தயாரிப்பு வேலையிலேயே சேர்ந்தார்.

இருபது வயது இருக்கும் போது தனது நண்பர் ஒரு பர்சனல் கம்ப்யூட்டர் வடிவமைக்கக் கண்டு அவருடன் சேர்ந்து சொந்தக் கம்பெனியை 1976 ஏப்ரல் முதல் நாளில் ஆரம்பித்தார். $666.66 விலையுள்ள ஆப்பிள்-1 அமோக வெற்றி பெற்றது. அதே வருடத்தின் டிசம்பர் மாதத்தில் அவர்களின் கம்பெனி பப்ளிக்லி ட்ரேடெட் கார்ப்பரேஷன் ஆனது.

கம்பெனியின் அபரிமிதமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க ஒரு அனுபவம் வாய்ந்த CEO தேவைப்பட்டார். "உங்கள் வாழ்நாளின் மீதி நாட்களில் சக்கரரத் தன்ணீரை விற்பனை செய்யப் போகிறீர்களா ..இல்லை உலகின் மிக முக்கிய மாற்றத்துக்கு காரணமாக இருக்க விரும்புகிறீர்களா.." என சாமர்த்தியமாக பேசி பெப்சி கோலாவில் தலைமையிலிருந்தவரைக் கொணர்ந்து ஆப்பிளின் தலைமைப் பதவி கொடுத்தார்.

1984 இல் முதல் கிராபிக்ஸ் கம்ப்யூட்டராக மேக்கிண்டோஷ் அமோக வெற்றி பெற்றது.

சாமர்த்தியம் , விடாமுயற்சி இவற்றின் மறுபெயராய் இருந்த போதும் சக ஊளியர்களிடம் இருந்து அவர் "ஆத்திரக்காரர்,உணர்ச்சிவசப்படுபவர்" என்ற பட்டத்தையும் பெற்றார். இதன் விளைவாக 1985 இல் ஆப்பிள் நிறுவனத்தில் நடைபெற்ற அதிகாரப் போட்டியில் பலிகடா ஆக்கப்பட்டு அவரது முக்கியமான பதவிகள் பறிக்கப்பட்டன. இதனால் கோபமடைந்த அவர் பதவிவிலகி ஒரே ஒரு பங்கைத்தவிர தன்னிடமிருந்த ஆப்பிளின் அனைத்து பங்குகளையும் விற்றார்.


பின் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் என்ற பெயரில் புதிய கம்பெனியைத் துவங்கினார். தொழில்நுட்பரீதியாக மிகத் துல்லியமான தரமான கம்ப்யூட்டர்களைத் தயாரிக்கமுடிந்தது.



இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் , நாம் இன்று இணைந்திருக்கும் இணையம் Tim Berners-Lee அவர்களால் முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது இந்த நெக்ஸ்ட் கம்ப்யூட்டரில் தான்.

1996 இல் ஆப்பிள் இந்த நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 402 மில்லியன் அமரிக்க வெள்ளிக்கு வாங்கியது. மீண்டும் தான் ஆரம்பித்த முதல் கம்பெனிக்கே திரும்பினார். 1997இல் இடைக்கால CEO வாக நியமிக்கப்பட்டார். பதவியேற்றதும் அதிரடியாக அவர் செய்த மாற்றங்கள் பல ஊளியர்களுக்கு தங்களது வேலை தொடருமா என சந்தேகத்தைக் கிளப்பியது. பல திட்டங்கள் (projects) மூடப்பட்டன.

நெக்ஸ்ட் கம்ப்யூட்டரின் மூளை (operating system) ஆப்பிள் கம்ப்யூட்டரில் பொறுத்தப்பட்டு iMac என்ற பெயரில் சந்தைக்கு வந்தது. அவரது மிக சாமர்த்தியமான வியாபார விளம்பர உத்திகளால் நிலைகுலைந்திருந்த ஆப்பிளின் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியது.

தற்போதைய iPOD மற்றும் iTunes படைப்புகளின் வடிவமைப்பு மற்றும் புதுமையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றியது. தற்கால CEO (interim CEO) என்பதும் iCEO என்று மாறி புதுமையாக்கப்பட்டது.

வெறும் ஒரு அமரிக்க டாலர் சம்பளத்திலேயே பலநாள் வேலை பார்த்தார். அது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

இவ்வாறு விடாமுயற்சி, சாமர்த்தியம் மற்றும் உழைப்பு இவற்றின் மறுபெயராக இருப்பவர் தான் தற்போதைய ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

குறிப்பு: ஒரு அறிமுகத்திற்காகவே இக்கட்டுரையை எழுதியதால் ஆழ்ந்த கருத்துகளை இங்கே எழுதவில்லை. விருப்பமிருப்பவர்கள் கீழுள்ள தளங்களில் அதிக தகவல்களைப் பெறலாம்.

1) http://en.wikipedia.org/wiki/Steve_Jobs

2) அவரது வாழ்க்கை குறித்து அவர் பேசியது இங்கே http://news-service.stanford.edu/news/2005/june15/jobs-061505.html

Tuesday, May 02, 2006

தேடல்..வித்யாசப்படுதல்.. கனவுகள்..இதுதானே வாழ்க்கை

சிறுவன் ஒருவனுக்கு கனவுகள் பெரிது. அதனால் பெரிய பிரச்சினை ஏதும் இல்லாத அவனது அன்றாட வாழ்க்கையைத் தவிர்க்கிறான்.

தனது லட்சியப் புதையலைத் தேடி அடைவதே வாழ்வதன் பொருள் என மனஉறுதி கொள்கிறான். அதற்காக அவன் தேர்வு செய்தது ஊர் ஊராய்ச் செல்லும் ஆடு மேய்க்கும் தொழிலை.

தேடல் என்பது லட்சியங்கள் மெய்ப்படுமாறு காணும் கனவுகளைப் போல் சுலபமானதல்ல. அவன் செல்லும் பாதைகளில் பற்பல சோதனைகள்.

விரக்தி அடையச் செய்யும் பாலைவனப் பயணக் களைப்பு ஒரு வித சோதனை என்றாலும் அனைத்துச் சோதனைகளும் உடல் உறுதியை மட்டுமே குறிவைப்பதில்லை.

வழியில் சந்திக்கும் பெண்ணின் காதல் வடிவில் ஒன்று. அழகிய பாலைவனச்சோலையில் அமைய வாய்ப்புள்ள அமைதியான அருமையான வாழ்க்கையைப் பற்றிய ஆசையைத் தூண்டும் இதுவும் ஒரு சோதனையே. முந்தைய சோதனையைவிட இது வீரியமானது. வலிகளைக் காட்டி பயமுறுத்தாமல் இன்பங்களைக் காட்டி மயக்குவது. வாழ்க்கையின் லட்சியமே இதுதானோ என்றுகூட திசை திருப்பவைப்பது.

இத்தகைய சோதனையைக் கடக்கும் மனவலிமை அவனிடம் இருந்தது. அழகிய பெண்ணையும் அருமையான வாழ்க்கையையும் உதறி மீண்டும் ஒரு நெடிய பயணத்தை... இலக்கு இருக்கும் தூரமறியாப் பயணத்தை அவனால் தொடர முடிந்தது.

தேடல்கள் சில வேளை வெறும் அலுப்பை மட்டுமல்லாது சில பாடங்களையும் கற்றுத் தருகின்றன. அந்தப் பாடங்களுக்குப் பரிசாக பலரின் லட்சியங்களையும் பெற்றுள்ளன. அந்தப் பாடங்களை நம் சிறுவனும் பெற்றான்.

உடமைகளை இழந்து மொழி தெரியாத நாட்டில் நிற்கும் போது, அவனது கனவுகள் நிறைவேறும் வாய்ப்புகள் ஏதுமில்லை என்ற உண்மையும் அவனுக்கு உரைக்கிறது. பாலைவனம் அவனது லட்சியத்தைப் பறித்துக் கொண்டது.

சிறுவனுக்கு வாழ்க்கை மிக எளிதாக தெளிவாகி விட்டது. உயிர் வாழ்தலும் முடிந்தால் உறவுகளோடு சேர்வதுமே லட்சியமென ஆனது. உண்மை, சிலவேளைகளில் சிலரது நிலைமைகள் சாதாரண விஷயங்களையும் லட்சியமாக்கிவிடுகின்றன.

லட்சியங்கள் பறிக்கப்பட்டாலும் பாலைவனம் பரிசளித்த பாடங்கள் அவனது வாழ்க்கையைப் படிப்படியாய் உயர்த்தியது. அவனது தினசரி உழைப்பின் அலுப்பான தூக்கத்தில் அவனது கனவுகளோடு தொலைத்திருந்தது புதையல் லட்சியங்களையும் தான்.

பாடங்களுக்கு என்றுமே பஞ்சமில்லை. தன் லட்சியத்தைத் தொலைத்தவர் ஒருவரின் புலம்பலை தற்செயலாய்க் கேட்டு தன் லட்சியக் கனவுகளை மீண்டும் நினைவில் கொணர்கிறான் நம் சிறுவன்.

சில வருடங்களைத் தொலைத்திருந்தாலும் தனது நிலைமை முன்பிருந்ததை விட நன்றாயிருப்பதை உணருகிறான்.

அவனது கற்பனை போன்ற லட்சியங்களும் நிதர்சனமான அனுபவங்களும் மோத அவன் எடுக்கும் முடிவுகள் ஒருபுறமிருக்க.

இந்த "Alchemist" நமது புதைந்த லட்சியக்கனவுகளை வெளிக் கொணர்வது உறுதி. முயன்று பாருங்கள்.


இந்த புத்தகத்தை நியாபகப்படுத்திய சேரலின் பதிவுக்கு நன்றி. ஒருகாலத்தில் இதை தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று கூட நினைத்திருந்தேன். எளிய நடையில் ஒரு நல்ல புத்தகம்.

வாழ்த்துக்கள்
சுகா