Monday, August 01, 2005

வழிநடைப்பயணம்

வழிநடைப்பயணம்
------------------------

இது ஒரு நீண்ட பயணம்
துவங்கிய இடம் தெரியும்
சேருமிடம் தெரியாது ஆனால்
சேருமிடம் பற்றி பல கற்பனைகள் உண்டு

தேவைகள் இந்த பயணத்தை துவக்கின
தேவைகள் பயணத்தை வழிநடத்துகின்றன.
தேவைகளை நிறைவு செய்து கொண்டே
பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது

பழைய தேவைகள் நிறைவாகும் வேகத்தை விட
புதிய தேவைகள் உருவாகும் வேகம் அபரிமிதம்
சில நேரம் பயணத்துக்காக தேவைகளா, இல்லை
தேவைகளுக்காக பயணமா என குழம்புகிறேன்

தேவைகள் கூடுகின்றன, வேகமாக பயணிக்கிறேன்
வேகமாக பயணிக்கிறேன், தேவைகள் கூடுகின்றன
தேவைகளை நிறைவு செய்து கொண்டு
பயணித்துக் கொண்டே இருக்கிறேன்

சில வருடங்களாக பயணத்தை வழிநடத்துபவனாக உள்ளேன்
என்னுடன் பயணம் செய்வோர் என் பயணத்திற்கு வித்திட்டோர்
மற்றும் என்னுடன் பிறந்தோர், சில வருடங்களில்
தங்கள் வழியை தேர்ந்தெடுக்க இருப்போர்

வழிநடத்துவதின் சுமைகள் சுகமானவை
மற்றவர் வழியை பின்பற்றும் உல்லாசத்தை விட சுகமானவை
வழிநடத்தியோரின் வலிகளை உணர்த்துபவை
வழிகள் வலிகளையும் வலிகள் வழிகளையும் நிர்ணயிக்கின்றன

பாலைவனத்தின் ஒட்டகம் உண்ணும் காய்ந்த முட்புதர்கள்
சிலவேளை அதன் கடினமான உதடுகளை கிழித்து விடும்
உதட்டோர உதிரச்சுவையை முட்களின் சுவையாக ரசித்து உண்ணும்
ஒட்டகம் போலே இச்சுமைகள் எனக்கு சுகமாகத்தான் இருக்கின்றன

என்னை வழிநடத்தியவர்கள் வலிகளை நான் அறிந்திருந்தேன்
அந்த வலிகள் என்னுள் உண்டாக்கிய வலிகளை
அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. இப்போது அவர்கள் என் பின்னால்
நான் அவர்களுக்கு காட்டுவது வழிகளை மட்டுமே வலிகளையும் அல்ல


பயணம் தொடரும்...