Thursday, June 15, 2006

அரியவை ஆறு !

வெங்கட்ரமணி இணைக்க ... இதோ எனக்குப் பிடித்த ஆறு..

1) கல்லூரியின் பரிட்சைகளை முடித்து விட்டு களைத்துப்போய் கோடை காலத்தின் மதிய வெயிலில் உருகிக் கொண்டே வண்டியில் வீட்டுக்குச் செல்லும் போது .. பெரிய காய்ந்த வயலின் நடுவே இருக்கும் அரசமரமும் அதன் கீழ் அகன்ற திண்ணையும்.. இன்றைக்கும் நினைத்தால் ஏங்க வைக்கும் சொர்க்கம்... (அந்த திண்ணையில் யாராவது படுத்திருந்தால்.. நான் விடும் பெருமூச்சின் வெப்பத்திலே அவர் வெந்து விட்டிருப்பார்)

2) கோடையிலே பெய்யும் திடீர்மழை.. ஜன்னல் மழையில் ஆசிரியர்கள் கூட பாடம் நடத்தாமல் ஃப்ரீயாக விடுவது.. பள்ளி விட்டவுடன், நிமிடம் தவறினால் கூட ஏதோ உலகம் அழிந்துவிடுவது போன்ற அவசரத்தில் .. நனைந்து கொண்டே சைக்கிளில் வீட்டுக்கு வருவது.. எதிர் காற்றோடு முகத்தில் அறையும் செல்ல ஊசிகள் தனி சுகம் ...வீடு சேர்ந்ததும், சூடான போண்டாக்களும் காபியும் பின் நண்பர்களுடனான ராஜாராணி விளையாட்டும் .. தோணியில் தண்ணீர் பிடிப்பதும்.. மீளாத சொர்க்கம் போலும்..

3) குளிர்காலத்தின் காலைத் தூக்கம்.. இழுக்க இழுக்க வளரும் போர்வைக்கு ஒரு கண்ணன் கிடைத்தால் தேவலை.. பல் விளக்கிவிட்டு காபி குடிப்பது நல்ல பழக்கம் தான் ..இருந்தாலும்..

4) சனிக்கிழமை அதிகாலைகளில் இந்திராநகரிலிருந்து இரண்டு பைக்குகள் கிளம்பி கனகபுரா ரோட்டையோ, மைசூர் ரோட்டையோ தேய்க்க ஆரம்பிக்கும்.. பெங்களூரில் செகண்டு கியர்க்கு மேல் போக முடியாத அந்த பைக்குகள் கிராமத்துச் சாலைகளில் விதிகளைக் கொஞ்சம் விளையாடுவது தனிசுகம்.. சனிக்கிழமை கூட பள்ளி போல .. லிப்ட் சிறுவர்கள் தாவிக்கொள்ள இலவசமாய்க் கிடைத்த பொதுசேவை வாய்ப்பு ஒரு ஸ்பெஷல் சுகம்..

5) நண்பர்களிடம் வெட்டி அரட்டை.. பில்கேட்ஸ் கடன் கேட்டாரே செக் அனுப்பிட்டயா என அரம்பித்து 100% அக்மார்க் வெட்டியாய் முடியும் அரட்டைகள்

6) ரயில் நிலையம் ... கோவை செல்லும் போது வெள்ளிக்கிழமைகளின் சாயங்காலத்தில் .. சரவணபவன் காஃபியோடு காத்திருக்கும் சென்னை செண்ட்ரல் .. இதைப் பற்றி ஒரு தனிபதிவே எழுதலாம் :)


இணைக்க விரும்புவது
===============
1)Unmai
2)வெற்றி
3)SK
4)கப்பி பய
5)மணியன்
6)ஸ்ருசல்

Wednesday, June 14, 2006

எனது புதிய பென்சில் ஓவியம் -2


ஏற்கனவே ப்ளாக்கரில் ஏற்றியது காணாமலே போய்விட்டது. என் மற்ற ஓவியங்கள்

Monday, June 05, 2006

தோல்விகள் பழகு

கடலிள் துளி நீராய் திழைத்திருந்தேன்
ஆதவன் ஒரு நாள் எனை எரிக்க
எரிக்கப் பறக்கும் பினிக்ஸ் பறவையாய் இல்லையேயென
தோற்றுப்போய் ஆவியுமானேன்

அஹா..வான் வழி பயணம் இனிதோ இனிது
தேனாய் இனித்தது தோல்வி
கடலாய் கழிந்த காலத்தை கடிந்து கொண்டே
மேகமுமாகி ஊர்வலம் போனேன் வான் வழியே

குளிர்த் தென்றல் எனைத் தீண்ட
சிலாகித்து உருகி விட்டேன் நொடிப் பொழுதில்..
புவியெனை ஈர்க்க மழையென மாறி
மண்ணோக்கி வீழ்ந்தேன் நான்..
மீண்டுமோர் வீழ்ச்சி !

மீழ்வேனாயென மயங்கிக்
கிடந்தேன் சில நொடிகள்
மண்ணின் மணமும்
மலர்போல் படுக்கையும்
உயிர் கொடுத்தது எனக்கு..

கடலலை மறந்தேன்
வான்வெளி மறந்தேன்.
மண்ணினில் தவழ்ந்தேன்
குழந்தை போல..

கடலாகி நிறமற்றிருந்தேன்
வானாகி உருவற்றிருந்தேன்
மண் சேர்ந்து மணம் பெற்றேன்
செந்நிறம் பெற்றேன்

அருவியாய்.. காட்டறாய்.. ஒடையாய்
பீடு நடை போட்டு வந்த என்னை
வஞ்சித்தானே விதைக் கள்ளன்
வேரால் உறிஞ்சி

தோற்பது என் பிறவிக் கடனா
தோற்க நான் என்றும் தோற்றதில்லையே

விதை சேர்ந்துறங்கினேன் சில காலம்
விழித்த பொழுதினில்
விழிநோக்க வழியில்லை
வழியின்றி விதை கிழித்தேன்..
மண் பிழந்தேன்..

சிறு வித்தாகி
தலை நீட்டி
கதிர் நோக்கிய
அந்நொடியில் அடைந்தேன் சொர்க்கத்தை

உருவாக வாய்ப்பளித்த
விதையோனை வாழ்த்தி
வளர்ந்து மரமுமானேன்

மரமழிக்க மரம் கொண்டுவரும்
வருங்கால மனிதப் பிணமொன்றைத் தூரத்தில் கண்டேன்

மனம் வருந்த மனமில்லை
தோற்பது புதிதல்ல எனக்கு
உண்மையில் நான் தோற்றதென்பதுமில்லை
எல்லாம் தோற்றப்பிழையன்றி வேறில்லை

தோல்வியெனக்கு புது உரு கொடுக்கும் வாய்ப்பு
வாய்ப்பை வாழ்த்தாமல் வருந்துவானேன்

எனைக் கடலில் இருந்து மேலே அனுப்பிய
தோல்விகள் எனது படிக்கற்கள்
வெற்றியோ ஒரு போதை..
என்னை ஒரே இடத்தில் இருத்திவிடுகிறது..

என் தோல்வி, தோற்கடிக்கப் பட்டதால்
இழந்த வெற்றியை விட பெரிய வெற்றியை
நோக்கி பயணிக்க வைத்திருக்கிறது

பயணிப்பதும் பயணித்த இலக்கை அடைவதும்
என் கையிலேயே..

சில சமயம் எனக்கு இலக்குகளே இருந்ததில்லை
இலக்குகளை உணர்ந்ததில்லை
ஆனால் மாற்றங்களை ஏற்றுக் கொண்டேன்
மாற்றங்கள் சில சமயங்களில் ஏற்றங்களாயின
ஏற்றங்களிலிருந்த போதும் மாற்றங்கள் அழைத்தன
மிக கடினமான முடிவெடுக்க வேண்டிய தருணங்கள்

கஷ்டத்தில் இருக்கும் போது
மாற்றங்களை அரவணைக்க துணிவு தேவையில்லை
மாற்றங்களே தேவைகளாகும் தருணங்களவை

வென்ற பிறகும் வசதிகளில் திழைக்கும் போதும்
மாற்றம் கொள்ளத் துணிவதே துணிவு
வாழ்க்கைக்கு இலக்கொன்றை கொண்டோரின் துணிவு
ஏற்றுக் கொண்ட மாற்றங்கள் எமாற்றங்களை
அளித்தாலும் ஏற்றுக் கொள்ளும் துணிவு

தோல்விகள்.. அனுபவங்கள்
கற்றுத் தருபவை
அடையாளம் காட்டுபவை
எல்லைகளை வரையறுப்பவை
உடனிருப்போரை தோலுரித்துக் காட்டுபவை
ஓய்விற்கு ஒய்வு கொடுப்பவை
தோல்விகள்.. அவமானங்களல்ல
வழிகாட்டும் அடையாளங்கள்

வெற்றிகள் போதை..
போதையின் களிப்பு
வெற்றிப் போதையின் தெளிவே தோல்வி
இதை அடையாதவர்களில்லை
தவிர்ப்பவர்கள் முன்னேறமுடியாது
தவிப்பர்கள் மீழமுடியாது
தாங்குபவர்கள் முன்னேற்றத்தை தவிர்க்க முடியாது

தோல்விகள்.. மறந்திருந்திருந்த பலதை..
கண்ணீர்ச்சுவையை
அவமானங்களின் பதைபதைப்பை
எளனப் பேச்சுக்களை
அதை எற்க மனமின்று செய்த வாதாட்டங்களை
அவ்வாதட்டங்கள் வெறும் நேரவிரயமென்பதை
வெற்றிக் களிப்பில் மார் நிமிர்த்தி பீடு நடைபோடையில்
பணிந்து வணங்க மறந்த முகங்களை
என மறந்த பலதை நியாபகப்படுத்தும் மருந்தே தோல்வி

தவறுகளை வலிக்கத் திருத்தும்
தோல்விகள் எனது ஆசிரியர்
காலம் முழுக்க படிக்கப் பட வேண்டிய
பாடம் எனது தோல்விகள்
பாடங்கள் எனது வளர்ச்சிக்கு
வளர்ச்சியே எனது வெற்றி
தோல்விகள் எனது வெற்றிகள் !

குறிப்பு : இது ஒரு மறுபதிவு.

Friday, June 02, 2006

கைப்புள்ள @ NBA



சங்கப்பலகைல இடம் இல்லாததால இங்க பிரசுரிக்க வேண்டியதா போச்சு.

இதைப்பத்துன கமெண்ட்ரி வந்துகிட்டே இருக்கு .. இன்னமும் சில படங்களோட.

Tuesday, May 30, 2006

நடுநிலைவாதிகள்

நாங்கள் ஒரு நூறு பேராவது இருப்போம்..

அனைத்தையும் பார்க்கிறோம்.
ஆதரவு என்று யாருக்கும் தருவதில்லை

இருந்தாலும் இவர்கள் விடுவதாயில்லை
எங்கள் காது செவிடாகக் கத்துகின்றனர்

கட்சிகள் மாறுகின்றன
காட்சிகளும் மாறுகின்றன

இன்று எம்மிடம் இருப்பவர்
நாளை எதிரிடம் போகின்றார்

அங்கிருப்பவர் இளித்துக் கொண்டே
இங்கே வருகிறார்

நாங்கள் கண்டுகொள்வதில்லை
அவர்களும் எங்களை மதிப்பதில்லை

உண்மையில் நாமில்லையெனில்
பாவம் இவருக்கு சட்டசபையில் இருக்கை ஏது

இது நிதர்சனமென தெரிந்தும் ஏனோ
எம்மைத் துச்சமாக மதிக்கிறார்.

நகைச்சுவை.. ஏளனம்..எதிர்ப்பு..
கோபங்கள்..கூச்சல்கள்
வாழ்த்துக்கள் வசைமொழிகள்
அடிதடிகள் அத்துமீறல்கள்
ஏதும் செய்வதில்லை எங்களை

சில காயங்கள் எங்களுக்கும் உண்டு
யாரும் கண்டுகொள்வதில்லை
நாங்கள் மரம்.

அவர்கள் பேசியதைக் கேட்டோம்
பின் அதையே மாற்றிப் பேசியதையும் கேட்டோம்

அதை எதிர்த்துப் பேசியவரையும் கேட்டோம்
எதிர்த்தவர் திடீரென ஒத்துப் போவதையும் கேட்டோம்

எங்கள் கேள்வி ஞானம் கண்டு
வள்ளுவரே பூரிப்பார்

கட்சி பேதமெமக்கில்லை
தட்டுவோர் தட்டினால்

சத்தமெழுப்பி ஆரவாரிப்பதைத் தவிர
வேறொன்றும் யாமறியோம்

அட.. நாம் நடுநிலைவாதிகள் அல்லவா!
அதனால் தான் கரைவேட்டிகள் அமர
படும் அங்கங்கள்
எங்களை இன்னும் அசிங்கப்படுத்துகின்றன.

-சட்டசபை பெஞ்சுகள்

Thursday, May 25, 2006

ஒரு ரோஜாச்செடி வாங்க வேண்டும் :)


இதற்காக நான் இந்தக் கடைக்கு வந்துள்ளேன். இது ஒரு அழகான வித்தியாசமான கடை. முற்றிலும் கண்ணாடிச் சுவர்களாலானது. அதனால் சுற்றி நடப்பவை எல்லாம் தெளிவாகவே தெரிகிறது.

இந்த வழியாகச் சாலையில் செல்லும் போது பார்த்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு சீக்கிரமாக நானும் இங்கே நுழைவேன் என்று எண்ணவில்லை.

இது சற்று வித்தியாசமான கடை என்று சொன்னேனல்லவா. ஏனெனில்...

வழியெங்கும் இரண்டு பக்கங்களிலும் ரோஜாச்செடிகள் நிறைந்திருக்கும். நீங்கள் அதிலிருந்து பிடித்த ஒன்றைத் எடுத்துக் கொள்ளலாம். கடை எப்போதும் திறந்திருக்கும். அதனால் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை சாவகாசமாகத் தேடலாம்... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கிருப்பது ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே. தேர்ந்தெடுத்தபின் நீங்கள் வெளியேற வேண்டியது தான். இன்னொரு முக்கியமான நிபந்தனை, வந்த வழியில் திரும்பி வரமுடியாது. ஆம்.. இது ஒரு ஒருவழிப்பாதை.

வாயிலில் நுழைந்தவுடனேயே இன்று கூட்டம் அதிகமாக இருப்பதாக நினைத்தேன். அனால் அது நாம் ஏற வேண்டிய பேருந்து மட்டும் வருவதற்கு எப்போதும் தாமதமாவது போல் தோன்றுவது போன்ற தோற்றப்பிழையென உணர்ந்தேன்.

உயர்ந்த கூரையும் , கண்ணைக் கூசாத ஆனால் பிரகாசமான ஒளியும் இந்த இடத்தை ரம்மியாமாகக் காட்டுகின்றது. இதுவும் சிலருக்குப் பிடிக்கவில்லை போல; புலம்பல்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்களின் தேவைகள் பெரியதோ என எண்ணத் தோன்றுகிறது. சரி நமது வேலையைக் கவனிப்போம்.

நுழைந்தவுடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன். ஏதோ உற்சாகத்தில் சுற்றிலும் இருந்த ஆரவாரத்தில், புதிய சூழ்நிலையின் தோற்றக் கவர்ச்சியில், சில செடிகளைக் கவனிக்காமலேயே நடந்துவிட்டிருந்தேன். முடிவு தெரியாத தோட்டமிருக்க கவலையென்ன என அலட்சியமாக நினைத்தேன். இருந்தாலும் நடையின் வேகம் சற்றே குறைந்தது.

பக்கத்தில் சில செடிகளின் பூக்கள் வெகு அழகாக இருந்தன, சில நல்ல மணம் வீசின.. சில மிக வித்தியாசமாய் இருந்தன.. ஆச்சர்யப்பட்டுக் கொண்டே என்னைக் கவர்ந்த சில செடிகளின் அருகில் சிறிது தாமதித்தேன். அதுவும் சுகமாகத்தான் இருந்தது.

தூரத்திலும் சில செடிகள் வெகு அழகாகத் தெரிந்தன. ஆனால் அவற்றிற்கான பாதை தெளிவாகத் தெரியவில்லை. நான் நடந்து கொண்டிருக்கும் பாதையில் பிரியும் சில கிளைப்பாதைகள் என்னை அங்கே கொண்டு சேர்க்கலாம்... சேர்க்காமலும் போகலாம். கிளைப்பாதைகளில் காலடித்தடங்கள் அவ்வளவாக இல்லை.

சரி.. இதில் போகலாமா என யோசித்துக் கொண்டே, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என கவனித்தேன்.

ஹும்.. ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விஷயத்தில் வித்தியாசமாகவே இருப்பதாகத் தோன்றியது.

சிலர் தனியாக வந்து தேடிக்கொண்டிருந்தனர். சிலர் பலருடன் வந்து கூடி விவாதித்துத் தேடிக் கொண்டிருந்தனர்.

சிலர் என்ன தேடவேண்டும் என்று தெரியாமல் தேடுவதைப் போல இருந்தது. சிலரோ மிகத் தெளிவான குறிக்கோளில் உறுதியாகத் தேடிக்கொண்டிருந்தனர்.

சிலர் மிகக் குறைவான கால அவகாசம் இருப்பதைப் போல வேகமாக அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். சிலர் ஏதோ கட்டாயம் போல ஒவ்வொரு செடியையும் வேண்டா வெறுப்பாகப் பார்த்து முகம் சுளித்துக் கொண்டிருந்தனர்.

சிலர் ரோஜாச்செடியின் பெயரை எழுதிவைத்து அதிலே எதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். சிலர் ஏதோ அளவுகளைக் குறித்தவண்ணம் இருந்தனர்.

சிலர் என்னைப் போல் மற்றவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் காரணம் வேறாகவும் இருக்கலாம்.

சிலர் யார் யாரிடமோ ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் அறிவுரைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தனர்.

சிலர் ஒரமாக ஒதுங்கி, அவசரப் பட்டுக் கடந்து வந்த ரோஜாச்செடியை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் அங்கேயே பலகாலமாக எங்கித் தவித்துக் கொண்டிருப்பதைப் போல் தோன்றியது.

சிலர் உற்சாகமாக மகிழ்ச்சியுடன் தேடிக் கோண்டிருந்தனர். சிலர் களைத்துப் போயிருந்தனர்.

சிலர் கையில்செடியுடன் சந்தோசமாக வெளியேறும் வழியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் கடக்கும் சில செடிகளைப் பார்க்கும் ஏக்கப் பார்வையும் லேசாகத் தெரிந்தது.

சிலர் வழக்கமான வழிகளைத் தவிர்த்து மற்றவழிகளில் நடந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வெளிப்படையாகச் சிலர் பரிதாபித்தும், சிலர் பரிகாசித்தும் கொண்டிருந்தனர்.

இந்தக் கடையின் இன்னொரு சிறப்பம்சம் இதன் முடிவே தெரியாததுதான். கடந்து வந்த பாதையின் தூரமும் , பார்க்கப்பட்ட செடிகளின் அலுப்பும் , கடையின் முடிவு அருகிலிருக்கிறது என்ற புரளிகளின் பயமும் சிலரின் பயணத்தை விரைவாக முடித்து வைக்கிறது.

நான் தனியாகவே வந்திருந்தேன். சிலர் இலவசமாகக் கொடுத்த அறிவுரையைத் தவிர்த்து தனியே எனக்குப் பிடித்த ஒரு கிளைப் பாதையில் செல்ல முடிவெடுத்தேன்.

என் பின்னே படப்படும் பரிதாபங்களும் பரிகாசங்களும் சிலவேலைகளில் முதுகில் உறைக்கத்தான் செய்கின்றன. என் முயற்சி வெற்றியா தோல்வியா என இவர்கள் உணரப்போவதுமில்லை ஆனால் இவர்களின் அறிவுரை எப்போதும் இலவசம்.

மாற்றுப்பாதை எளிதானதல்ல.. வழியில் குத்திய முட்கள் சில , ஏனோ முன்பு பார்த்த.. பாதித்த செடிகளை நினைவு படுத்தின. தனிவழியின் பயங்கள் பழக்கப்பட்ட வழிகளின் சலசலப்பை விட சுகமாகவே இருக்கிறது.

ஆச்சர்யப்படும் வகையில், யாரும் பார்த்திராத சில காட்டு ரோஜாக்கள் இங்கே மலர்ந்திருக்கின்றன. புதிய முகம் கண்டு வரவேற்று அவை எஸ்டர்களை கொஞ்சம் அதிகமாகவே வீசுவது போலிருக்கிறது.. ம்.. எனது ரோஜாச்செடி அருகில் தான் எங்கோ இருக்கிறது.

Monday, May 15, 2006

உங்களுக்கு 'ஆண்' மூளையா 'பெண்' மூளையா ?

இதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம். நான் இப்போது தான் பார்த்து அசந்து போனேன். இதில் சொல்லப்பட்ட மனோதத்துவக் காரணத்தில் பெரிய உடன்பாடில்லையென்றாலும் இது சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. இதைப் பதிய ஆங்கிலத்தை தவிர்க்க முடியவில்லை. மன்னிக்கவும்.

Female Brain or a Male Brain - TEST

Well do you have a male brian or a female brain?

Check this..! (this worked for me mustwork for others too!)

This is called the quick eye exam!

Quick Eye Exam... This will blow your mind...!

Just do it - don't cheat!!!


Count the number of F's in the following text in 15 seconds:


FINISHED FILES ARE THE
RESULT OF YEARS OF SCIENTIFIC
STUDY COMBINED WITH THE
EXPERIENCE OF YEARS

Managed it?

Scroll down only after you have counted them!

OK?





































































How many?

Three? (You r definitely male!!!)

Wrong, there are six - no joke!

Read again!



FINISHED FILES ARE THE
RESULT OF YEARS OF SCIENTIFIC
STUDY COMBINED WITH THE
EXPERIENCE OF YEARS



The reasoning is ...

The MALE brain cannot process the word "OF".

Incredible or what?

Anyone who counts all six F's on the first go has a brain of a Female

You can test this by asking a Guy/Girl near you to work it out.



இதன்படி எனக்கு 'ஆண்' மூளை தான் :(. பார்க்கலாம் .. இங்கே எத்தனை பேருக்கு இதில் கூறியபடி நடந்திருக்கிறது என்று.

Wednesday, May 03, 2006

சில மனிதர்கள் ..சில பாடங்கள் - 1

சில மனிதர்களுக்கு அவர்களின் போராட்டங்களும் அவற்றின் வெற்றிகளுமே அவர்களை வெளியுலகத்திற்கு காட்டும் அடையாளங்களாக அமைந்துவிடுகின்றன. இந்த அடையாளங்கள் சுயமாகப் பெறப்பட்டதால் பெற்றவர்களுக்குப் பெருமையையும் பார்ப்பவர்களுக்கு ஊக்கத்தையும் அளிக்கின்றன.

இத்தகையோரின் வாழ்க்கையின் போராட்டங்களையும் அவர்கள் அவற்றைச் சமாளித்தவிதங்களையும் பார்க்கும் போது நமது போராட்டங்களுக்கு ஊக்கமாகவும் பாடமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய வாழ்க்கைப் போராட்டவாதிகளைப் பற்றி எழுதலாம் என நினைக்கிறேன். அதில் ஒருவர் இவர்.


பிறந்தது பிப்ரவரி 24, 1955 இல் கலிஃபோர்னியாவின் சான்ப்ரான்ஸிஸ்கோ நகரில். பிறந்த ஒரே வாரத்தில் தனது தாயாரால் வேறோரு தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டார்.

பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரியில் சேர்ந்தால் அந்த படிப்பை ஆறுமாதத்திற்கு மேல் தொடரமுடியவில்லை. பாதியில் வெளியே வந்தார்.

இருந்தாலும் தனது முக்கியமான குறிக்கோளான 'இந்தியாவிற்கு சென்று ஆன்மீகத்தில் ஈடுபடுவது' என்ற லட்சியத்திற்கு தேவையான பணத்தைப் புரட்டும் பொருட்டு வீடியோ கேம்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு நாள், விளையாட்டு விசில் ஒன்று எழுப்பிய சப்தம் தொலைபேசியின் அலைநீளத்தில் (2600 Hz)இருப்பதைக் கேட்டு அவருக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது. விளைவு.. சிறிது நாட்களில் தனது நண்பருடன் சேர்ந்து வெகு தூர தொலைபேசி அழைப்புகளை இலவசமாக அளிக்கக்கூடிய 'ப்ளூ பாக்ஸ்' பெட்டியைத் தயாரித்து அதன் விற்பனையைத் துவங்கினார்.

அதில் சேமித்த பணத்தில், கல்லூரி நண்பர் ஒருவருடன் துணையுடன் இந்தியா சென்று தன் தனது நெடுநாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். மழுங்க மொட்டையடித்த தலையும் இந்திய துறவிகளின் உடையும் அணிந்து அமரிக்கவிற்கு திரும்பி பழைய வீடியோ கேம் தயாரிப்பு வேலையிலேயே சேர்ந்தார்.

இருபது வயது இருக்கும் போது தனது நண்பர் ஒரு பர்சனல் கம்ப்யூட்டர் வடிவமைக்கக் கண்டு அவருடன் சேர்ந்து சொந்தக் கம்பெனியை 1976 ஏப்ரல் முதல் நாளில் ஆரம்பித்தார். $666.66 விலையுள்ள ஆப்பிள்-1 அமோக வெற்றி பெற்றது. அதே வருடத்தின் டிசம்பர் மாதத்தில் அவர்களின் கம்பெனி பப்ளிக்லி ட்ரேடெட் கார்ப்பரேஷன் ஆனது.

கம்பெனியின் அபரிமிதமான வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க ஒரு அனுபவம் வாய்ந்த CEO தேவைப்பட்டார். "உங்கள் வாழ்நாளின் மீதி நாட்களில் சக்கரரத் தன்ணீரை விற்பனை செய்யப் போகிறீர்களா ..இல்லை உலகின் மிக முக்கிய மாற்றத்துக்கு காரணமாக இருக்க விரும்புகிறீர்களா.." என சாமர்த்தியமாக பேசி பெப்சி கோலாவில் தலைமையிலிருந்தவரைக் கொணர்ந்து ஆப்பிளின் தலைமைப் பதவி கொடுத்தார்.

1984 இல் முதல் கிராபிக்ஸ் கம்ப்யூட்டராக மேக்கிண்டோஷ் அமோக வெற்றி பெற்றது.

சாமர்த்தியம் , விடாமுயற்சி இவற்றின் மறுபெயராய் இருந்த போதும் சக ஊளியர்களிடம் இருந்து அவர் "ஆத்திரக்காரர்,உணர்ச்சிவசப்படுபவர்" என்ற பட்டத்தையும் பெற்றார். இதன் விளைவாக 1985 இல் ஆப்பிள் நிறுவனத்தில் நடைபெற்ற அதிகாரப் போட்டியில் பலிகடா ஆக்கப்பட்டு அவரது முக்கியமான பதவிகள் பறிக்கப்பட்டன. இதனால் கோபமடைந்த அவர் பதவிவிலகி ஒரே ஒரு பங்கைத்தவிர தன்னிடமிருந்த ஆப்பிளின் அனைத்து பங்குகளையும் விற்றார்.


பின் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் என்ற பெயரில் புதிய கம்பெனியைத் துவங்கினார். தொழில்நுட்பரீதியாக மிகத் துல்லியமான தரமான கம்ப்யூட்டர்களைத் தயாரிக்கமுடிந்தது.



இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் , நாம் இன்று இணைந்திருக்கும் இணையம் Tim Berners-Lee அவர்களால் முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது இந்த நெக்ஸ்ட் கம்ப்யூட்டரில் தான்.

1996 இல் ஆப்பிள் இந்த நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 402 மில்லியன் அமரிக்க வெள்ளிக்கு வாங்கியது. மீண்டும் தான் ஆரம்பித்த முதல் கம்பெனிக்கே திரும்பினார். 1997இல் இடைக்கால CEO வாக நியமிக்கப்பட்டார். பதவியேற்றதும் அதிரடியாக அவர் செய்த மாற்றங்கள் பல ஊளியர்களுக்கு தங்களது வேலை தொடருமா என சந்தேகத்தைக் கிளப்பியது. பல திட்டங்கள் (projects) மூடப்பட்டன.

நெக்ஸ்ட் கம்ப்யூட்டரின் மூளை (operating system) ஆப்பிள் கம்ப்யூட்டரில் பொறுத்தப்பட்டு iMac என்ற பெயரில் சந்தைக்கு வந்தது. அவரது மிக சாமர்த்தியமான வியாபார விளம்பர உத்திகளால் நிலைகுலைந்திருந்த ஆப்பிளின் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியது.

தற்போதைய iPOD மற்றும் iTunes படைப்புகளின் வடிவமைப்பு மற்றும் புதுமையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றியது. தற்கால CEO (interim CEO) என்பதும் iCEO என்று மாறி புதுமையாக்கப்பட்டது.

வெறும் ஒரு அமரிக்க டாலர் சம்பளத்திலேயே பலநாள் வேலை பார்த்தார். அது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

இவ்வாறு விடாமுயற்சி, சாமர்த்தியம் மற்றும் உழைப்பு இவற்றின் மறுபெயராக இருப்பவர் தான் தற்போதைய ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

குறிப்பு: ஒரு அறிமுகத்திற்காகவே இக்கட்டுரையை எழுதியதால் ஆழ்ந்த கருத்துகளை இங்கே எழுதவில்லை. விருப்பமிருப்பவர்கள் கீழுள்ள தளங்களில் அதிக தகவல்களைப் பெறலாம்.

1) http://en.wikipedia.org/wiki/Steve_Jobs

2) அவரது வாழ்க்கை குறித்து அவர் பேசியது இங்கே http://news-service.stanford.edu/news/2005/june15/jobs-061505.html

Tuesday, May 02, 2006

தேடல்..வித்யாசப்படுதல்.. கனவுகள்..இதுதானே வாழ்க்கை

சிறுவன் ஒருவனுக்கு கனவுகள் பெரிது. அதனால் பெரிய பிரச்சினை ஏதும் இல்லாத அவனது அன்றாட வாழ்க்கையைத் தவிர்க்கிறான்.

தனது லட்சியப் புதையலைத் தேடி அடைவதே வாழ்வதன் பொருள் என மனஉறுதி கொள்கிறான். அதற்காக அவன் தேர்வு செய்தது ஊர் ஊராய்ச் செல்லும் ஆடு மேய்க்கும் தொழிலை.

தேடல் என்பது லட்சியங்கள் மெய்ப்படுமாறு காணும் கனவுகளைப் போல் சுலபமானதல்ல. அவன் செல்லும் பாதைகளில் பற்பல சோதனைகள்.

விரக்தி அடையச் செய்யும் பாலைவனப் பயணக் களைப்பு ஒரு வித சோதனை என்றாலும் அனைத்துச் சோதனைகளும் உடல் உறுதியை மட்டுமே குறிவைப்பதில்லை.

வழியில் சந்திக்கும் பெண்ணின் காதல் வடிவில் ஒன்று. அழகிய பாலைவனச்சோலையில் அமைய வாய்ப்புள்ள அமைதியான அருமையான வாழ்க்கையைப் பற்றிய ஆசையைத் தூண்டும் இதுவும் ஒரு சோதனையே. முந்தைய சோதனையைவிட இது வீரியமானது. வலிகளைக் காட்டி பயமுறுத்தாமல் இன்பங்களைக் காட்டி மயக்குவது. வாழ்க்கையின் லட்சியமே இதுதானோ என்றுகூட திசை திருப்பவைப்பது.

இத்தகைய சோதனையைக் கடக்கும் மனவலிமை அவனிடம் இருந்தது. அழகிய பெண்ணையும் அருமையான வாழ்க்கையையும் உதறி மீண்டும் ஒரு நெடிய பயணத்தை... இலக்கு இருக்கும் தூரமறியாப் பயணத்தை அவனால் தொடர முடிந்தது.

தேடல்கள் சில வேளை வெறும் அலுப்பை மட்டுமல்லாது சில பாடங்களையும் கற்றுத் தருகின்றன. அந்தப் பாடங்களுக்குப் பரிசாக பலரின் லட்சியங்களையும் பெற்றுள்ளன. அந்தப் பாடங்களை நம் சிறுவனும் பெற்றான்.

உடமைகளை இழந்து மொழி தெரியாத நாட்டில் நிற்கும் போது, அவனது கனவுகள் நிறைவேறும் வாய்ப்புகள் ஏதுமில்லை என்ற உண்மையும் அவனுக்கு உரைக்கிறது. பாலைவனம் அவனது லட்சியத்தைப் பறித்துக் கொண்டது.

சிறுவனுக்கு வாழ்க்கை மிக எளிதாக தெளிவாகி விட்டது. உயிர் வாழ்தலும் முடிந்தால் உறவுகளோடு சேர்வதுமே லட்சியமென ஆனது. உண்மை, சிலவேளைகளில் சிலரது நிலைமைகள் சாதாரண விஷயங்களையும் லட்சியமாக்கிவிடுகின்றன.

லட்சியங்கள் பறிக்கப்பட்டாலும் பாலைவனம் பரிசளித்த பாடங்கள் அவனது வாழ்க்கையைப் படிப்படியாய் உயர்த்தியது. அவனது தினசரி உழைப்பின் அலுப்பான தூக்கத்தில் அவனது கனவுகளோடு தொலைத்திருந்தது புதையல் லட்சியங்களையும் தான்.

பாடங்களுக்கு என்றுமே பஞ்சமில்லை. தன் லட்சியத்தைத் தொலைத்தவர் ஒருவரின் புலம்பலை தற்செயலாய்க் கேட்டு தன் லட்சியக் கனவுகளை மீண்டும் நினைவில் கொணர்கிறான் நம் சிறுவன்.

சில வருடங்களைத் தொலைத்திருந்தாலும் தனது நிலைமை முன்பிருந்ததை விட நன்றாயிருப்பதை உணருகிறான்.

அவனது கற்பனை போன்ற லட்சியங்களும் நிதர்சனமான அனுபவங்களும் மோத அவன் எடுக்கும் முடிவுகள் ஒருபுறமிருக்க.

இந்த "Alchemist" நமது புதைந்த லட்சியக்கனவுகளை வெளிக் கொணர்வது உறுதி. முயன்று பாருங்கள்.


இந்த புத்தகத்தை நியாபகப்படுத்திய சேரலின் பதிவுக்கு நன்றி. ஒருகாலத்தில் இதை தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று கூட நினைத்திருந்தேன். எளிய நடையில் ஒரு நல்ல புத்தகம்.

வாழ்த்துக்கள்
சுகா

Wednesday, April 19, 2006

தேர்தல் புள்ளி விவரங்கள்..

அரசின் இந்த தளம் (http://ceotamilnadu.nic.in/comparison/a_index_right.htm)

1977 இல் இருந்து முந்தைய தேர்தல்களின் வெற்றி தோல்வி புள்ளி விவரங்களை தொகுதி வாரியாக பட்டியலிட்டு காட்டுகிறது.

pattern matching இல் இந்த தேர்தல் முடிவை கணிக்க யாருக்கேனும் உதவியாய் இருக்கும் :)

அடுத்த முறை இந்த விவரங்களையும் பட்டியலிட்டால் வசதியாயிருக்கும்

  • வேட்பாளப் பெருமக்களின் சொத்து மதிப்பு .. (அரசியல் வியாபாரமல்ல இருந்தாலும் லாபமில்லாமல் போவதில்லை)
  • யார் யார் எங்கிருந்து எந்தக் கட்சிக்கு சென்றனர்
  • ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதிகள்
  • ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு கட்சியின் கொள்கைகள் ( இது மட்டும் வெற்றிடமாகவும் இருக்கலாம்)

வேறு எதுவும் தோன்றவில்லை.

சுகா

Sunday, April 02, 2006

நட்சத்திரம் நகர்கிறது...

இந்த வாரத்தில் தமிழ்மணம் கொடுத்த தனி இடம் வாசகர்களுக்கு ஒரளவு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். இதன் மூலம் எனக்கு பயனுள்ள பல தகவல்கள் கிடைத்தன..

இந்த நட்சத்திர இடம் அங்கீகாரம்..அந்தஸ்து என்பதை விட, என்னை அறிமுகம் செய்து கொள்ள வாய்ப்பளித்து, ் பல நண்பர்களின் கவனத்தையும் ஈர்த்து என் வலைத்தளத்தின் பக்கம் திருப்பி அவர்களின் கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் உதவி செய்தது. பல புதிய நண்பர்கள் தொடர்பும் கிடைத்தது. அதற்கு காரணமானவர்களுக்கு நன்றி.

நான் எதிர்பார்த்ததைவிட பலமடங்கு அதிகமாகவே கிடைத்த வரவேற்பு மிக்க ஊக்கமளிக்கிறது. 4xxx இல் ஆரம்பித்த ஹிட் கவுண்டர் 7100க்கு மேல் போய்விட்டது. சாதாரணமாக வாரத்திற்கு ஒரு பதிவு எழுதுவேன்..இந்த ஊக்கத்தினால் இந்த வாரம் கொஞ்சம் அதிகம் எழுதியுள்ளேன்..

வாழ்த்துக்கள்...
சுகா

குழந்தைக் கவிஞர்...??

குழந்தைக் கவிஞர்...??
எனக்கு உறுதியாகத் தெரியவில்லை..இந்தப் பாடலை எழுதியவர் வள்ளியப்பா அவர்களா என்று. ஆனால் அவராக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

என் இரண்டாம் வகுப்புப் பாடநூலில் வந்த பாடல்... ஆசிரியர் ஆட்டம் பாட்டத்தோடு சொல்லிக் கொடுக்க இன்றும் மழையைக் கண்டால் இந்தப் பாடல் மனதிற்கு வராமல் போகாது.. சில வரிகள் நினைவினில் இல்லை.. யாரேனும் நியாபகப்படுத்தினால் மகிழ்ச்சி.


வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா

இடியிடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்

மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்

தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்

எட்டு திக்கும் காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே

தெருவெங்கும் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே

தவளை கூட பாடுமே
தண்ணீரிலே ஆடுமே

..... வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை

இந்தப் பாடலைக் நினைக்கும் போது ஏதோ ஒரு கிராமத்து ஓட்டுவீட்டின் திண்ணையில் அமர்ந்து வீதியில் பெய்யும் மழையை ரசிக்கும் குழந்தை போலுணர்வதைத் தவிர்க்க முடியவில்லை.

நகரத்து மழை பற்றிய என் கவிதை முயற்சிக்கு வித்திட்டதும் இந்த பள்ளிப்பாடலின் நினைவுகளே..

Saturday, April 01, 2006

உங்கள் அனைத்து பிரச்சினைகளும் தீர்வு இங்கே...

எதோ நேமாலஜி..வாஸ்து..நியூராலஜி என நினைக்க வேண்டாம்.. :) மிகப் பிரபலமான அறிவியல் முறை தான்.

இன்றும் பல மேலாண்மையில் உபயோகப்படுத்தும் மிக எளிய முறை. நம்மில் பலர் நம்மை அறியாமலே இந்த முறையைப் பயன்படுத்தி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.. அப்படியானால் நீங்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்.. தியரி ஆஃப் கன்ஸ்ட்ரெய்ன்ஸ் எனக்குத் தெரியும் என்று. நீண்ட நாட்களாக எழுத நினைத்த தலைப்பு இது.

என்னால் இங்கே முழுமையாக இந்த பதிவில் விளக்க முடியாதெனினும் சாராம்சத்தைத் தருகிறேன். தொடர்ந்து படிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு இணைப்புகளைக் கொடுக்கிறேன். தொடர்ந்து தமிழில் எழுதவும் முயல்கிறேன். எனக்கு தமிழ்ச் சொற்கள் தட்டுப்படவில்லை எனில் ஆங்கிலத்தைத் துணைக்கிழுப்பதையும் கண்டுகொள்ள வேண்டாம்.

இந்த தியரி ஆஃப் கன்ஸ்ட்ரெய்ன்ஸின்(TOC) சாராம்ஸம் இதுவே...

1) பிரச்சனைகள் எதுவானாலும் அதற்கு பல தீர்வுகள் இருப்பது போல் தோன்றுவது ஒரு மாயை. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரே ஒரு மிகச்சரியான தீர்வு மட்டுமே உண்டு. (There is nothing called choices)

2) நீங்கள் தீர்வுகளாக நினைக்கும் இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யும் போது, தேர்வு செய்யப்படாத மற்றொன்றால் நீங்கள் ஏதேனும் பயனை இழப்பதென்பது அணுவளவிற்கும் இருக்கக்கூடாது. ( Never ever compromise on requirments)


இதை அடைவது எப்படி என பார்ப்போம்..

பிரச்சினைகள்....அலுவலகமோ..சொந்த வாழ்க்கைப் பிரச்சினையோ.. அதைப் பற்றி நினைக்கும் போது முடிவில் ஒரு குழப்பத்தில் கொண்டுபோய் முடிக்கிறது.

இதைச் செய்வதா... அதைச் செய்வதா... இதில் இந்த பயன்... அதில் அந்தப் பயன் .. நமக்கு இரண்டுமே வேண்டுமே.. என்ன செய்ய .. இது தான் குழப்பம் (dilemma)

TOC இங்கே உங்களுக்கு உதவும்... மந்திர மாயம் போல் ஒரு தீர்வை எதிர்பார்க்காதீர்கள்.

TOCயால் நீங்கள் செய்ய நினைத்த செயல்களில் ஒன்றின் மூலமே.. நீங்கள் பெற நினைத்த இரண்டு பயனையும் ஒரு துளி கூட compromise செய்யாமல் பெறவைக்க உதவ முடியும்.

இது போன்ற தீர்வை அடைவது என்பது ஸ்வாரஸ்யமான 6 படிகள் கொண்ட முறை. ஒவ்வொரு படியும் உங்களை தீர்வின் அருகில் கொண்டு செல்வதை உணரமுடியும்..

சில முறைகள் ... நீங்கள் யோசிக்க மறந்த சில பிரச்சனைகளையும் வெளிக்காட்டி அதையும் சரி செய்ய உதவும்..

அனைத்துப் படிகளையும் இங்கே விளக்க முடியவில்லை என்னும் அதன் முதல் படியை நான் எடுத்த ஒரு முக்கிய முடிவை எடுத்துக்காட்டாக கொண்டு விளக்க முயல்கிறேன்.

ஒரு மாதம் முன்பு எனக்கு ஒரு பிரச்சனை.

பிரச்சனை: என் அலுவலகம் என் வீட்டிலிருந்து 50 மைல் தொலைவில் மாறிவிட்டது. கண்டிப்பாக கார் வாங்கவேண்டிய நிலை.

A) குறிக்கோள் : கார் வாங்க வேண்டும்

குழப்பத்திற்கு காரணமான இரண்டு தேவைகள்:

B)தேவை 1: மாதாமாதம் அதிக பணப் பிடித்தம் கூடாது

C)தேவை 2: காரில் ஓட்டுவது ஆபத்தில்லாமல் பிரச்சினையில்லாமால் இருக்க வேண்டும்.

இந்த இரண்டு தேவைகள் செய்யத்தூண்டும் இரண்டு conflicting செயல்கள்:

D)செயல் 1: உபயோகப்படுத்தபட்ட காரை வாங்கு

D`)செயல் 2: புதிய காரை வாங்கு


படி 1 : CCC (Core confict cloud)



கொஞ்சம் யோசித்துப் பின் மற்றபடிகளையும் முடித்தபிறகு எனக்கு தோன்றிய முடிவு கீழே. மற்ற சாத்தியக்கூறுகளையும் தீவிரமாக அலசியதில் நான் எதிர்பார்த்த செலவிற்குள்புதிய காரை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த தியரி அஃப் கன்ஸ்ட்ரெயின்ஸை மேலும் அறிய இணைப்புகள் இதோ.

http://en.wikipedia.org/wiki/Theory_of_constraints

http://www.focusedperformance.com/articles/toctp2.html

Friday, March 31, 2006

ஃபிபனோசி எண்கள் ! கணக்குப் பாடமல்ல..

Fibonacci numbers

ஃபிபனோசி எண்கள் !

ஒரு எண்தொடரில் இவ்வளவு ரகசியங்களா..மர்மம்.. ஸ்வாரஸ்யம் இதன் மறுபெயர் தான் ஃபிபனோசி எண்கள் என நினைக்கிறேன். டாவின்ஸி கோட் என்னும் பிரபலமான நாவலும் இந்த எண்ணின் ரகசிங்களை உணர்த்தியுள்ளது.

இயற்கையைக் கவிஞராக மட்டுமே உருவகப் படுத்திய கவிகள் இப்போது கணிதவியல் வல்லுனராக வாழ்த்திப் பாடினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஃபிபனோசி எண்களைக் கேள்விப்படாதவர்கள் இங்கே குறைவுதான் என நினைக்கிறேன். பன்னிரண்டாம் வகுப்பிலேயே கணிதப் பாடத்தில் வந்திருக்கிறது அல்லவா.

கல்லூரிகளின் கணிப்பொறியியல் படித்தவர்கள் நிச்சயமாக ஏதேனும் ஒரு கணிணி மொழியிலாவது இந்த ஃபிபனோசி எண்களை உருவாக்க ப்ரொகிராம் எழுதியிருக்க வேண்டும்.

எதற்கும் இங்கே சிறு விளக்கம்..இந்த ஃபிபனாஸி தொடரில் ஒவ்வொரு எண்ணும் அதற்கு முந்தைய இரு எண்களின் கூட்டுத்தொகையாகும் ..இதோ அந்த தொடர்.. Fibonacci series: 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89, 144, 233, 377, 610, 987, 1597, 2584, 4181, ... அடுத்தடுத்த ஜோடி எண்களின் விகிதம் கோல்டன் செக்ஸன் ( golden section) (GS) - 1.618033989 அதன் தலைகீழி 0.618033989 .

இந்த எண்களின் பயன்பாடு குறித்து எனக்கு அப்போது பெரிதாக ஏதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்த எண் இவ்வளவு மர்மமான.. சுவாரஸ்யமான வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்பு படுத்தக் கூடியதாய் இருக்குமென நினனக்கவே இல்லை..

இயற்கையோடு இந்த எண்ணுக்குரிய தொடர்பைப் பார்க்கும் முன்பு ஒரு சிறிய வரலாற்றுப் பிண்ணனியைப் பார்ப்போம்..

1170இல் பிறந்த லியாணர்டோ பைசானோ (Leonardo Pisano ) என்பது இயற்பெயராக இருந்தபோது அதை ஃபிபனோசி அதாவது பனோசியின் மகன் (son of Bonacci) என மாற்றிக் கொண்டார். இவர் ஹிந்து-அராபிய (0-9) எண்களின் பயனை அறிந்து ஐரோப்பியாவில் அதை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர்.

இவரின் பங்களிப்பு பாஸ்கல் முக்கோணம் , தங்க கோணம் (Goldan Angle ) என பலபலவாக இருந்தாலும் இயற்கைக்குள்ள தொடர்பைக் காண்போம்.

நம்மில் பலர் மலர்களை ரசித்திருந்தாலும் அவற்றின் இதழமைவை ஆராய்ந்திருப்போமா என்பது சந்தேகமே.அவ்வாறு ஆராய்ந்திருந்தால் பலபல மலர்களுக்கிடையேயான இதழ் எண்ணிக்கைகள் ஒரு எண் தொடரில் இருந்திருப்பதை உணரலாம்.. அது ஃபிபனோசி தொடரே

  • 3 petals: lily, iris
  • 5 petals: buttercup, wild rose, larkspur, columbine (aquilegia)
  • 8 petals: delphiniums
  • 13 petals: ragwort, corn marigold, cineraria,
  • 21 petals: aster, black-eyed susan, chicory
  • 34 petals: plantain, pyrethrum
  • 55, 89 petals: michaelmas daisies, the asteraceae family

Some species are very precise about the number of petals they have - e.g. buttercups, but others have petals that are very near those above, with the average being a Fibonacci number.


ஒரு இதழில் மலர் ...
white calla lily

ஈரிதழ் மலர்கள் அரிய வகை


euphorbia
மூவிதழ் மலர்கள் வெகு சாதாரணம்


trillium

ஐவிதழ் மலர்க் குடும்பங்களே நூற்றுக்கணக்கில்


எட்டு இதழ்கள் கொஞ்சம் அரிது


bloodroot

இது பதிமூன்று


black-eyed susan
டெய்ஸி மலர்கள் 13, 21, 34, 55 அல்லது 89 இதழ்களோடு காணப்படுவது சாதாரணம்.


shasta daisy with 21 petals

34 இதழோடு.



ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. அடுத்தமுறை என்ன பூ கிடைத்தாலும் பொறுமையாக எண்ணிப்பருங்கள்..

மலர்களோடு மட்டும் இது நிற்கவில்லை.. இதோ அடுத்த ஆச்சர்யம்.

மனித கைகளின் விரலமைவும் கூட இந்த எண்ணை ஒத்து போகிறது. இது தற்செயலாகக் கூட இருக்கலாம் !

இன்னும்பல ஆச்சர்யங்கள் இங்கே... http://www.world-mysteries.com/sci_17.htm


கூகுள் சரணம் கச்சாமி : Just Think , don't type, we search for you

ஸ்டேண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பாலிகிராஃப் சம்பந்தமாக ஒரு ஆராய்ச்சி நடந்து வந்தது. அதில் முக்கியமான கண்டுபிடிப்பு இது ..

நாம் எதாவது ஒன்றைப் பற்றி சிந்திக்கும் போது நம் மூளை அதைப் பற்றி மீச்சிறு அலைகளை எழுப்புகிறது..அது சிலசமயம் பேசுபவரின் தாய் மொழியின் வார்த்தைகளை ஒத்துள்ளது என்பது.

பலநாள் முன்பு உடைப்பில் போட்ட இதை கூகுள் தூசி தட்டி எடுத்து இப்போது ஒரு புது தேடல் வசதியை அறிமுகப் படுத்த முயற்சி செய்கிறது.

இதற்கு புதிதாக எந்த உபகரணமும் தேவை இல்லை என்பதே இதன் ஹைலைட். நாம் வழக்கமாக உபயோகப் படுத்தும் மைக் போதும்.. அதுவே நாம் யோசிக்கும் போது வெளிப்படும் கீ வேர்ட்ஸ்ஸை உள்ளிழுத்து சில pattern மேட்சிங் செய்து அதை வைத்து இணையத்தில் தேட ஆரம்பித்துவிடும்.

இதில் ஒரு பிரச்சினை .. மிக முக்கியமான பிரச்சினை .. ப்ரைவசி.. ஆமாம் .. இந்த வசதி கொண்டு அருகில் உள்ளவரின் மனதையும் கிட்டத்தட்ட படிக்க முடியும்.. அதனால் கூகுள் குழம்பியுள்ளது.. இதை வெளியிடுவதில் உள்ள சட்டச் சிக்கல் குறித்து ஆராய்ந்து வருகிறது.

ஹும்...பார்த்து யாரவது மைக்கோட இருக்கும் போது எக்கு தப்பா நினைச்சு வெக்காதீங்க .. :)

மூலம் : http://think.google.com/

வானின்று பெய்யும் அமிழ்தம் ..



ஆதவன் கடல் காய்ச்சி
கடைந்தெடுத்த அமிழ்தமது

அந்த மேருமலை வருந்தவில்லை
அரவக் கயிறும் தேவையில்லை

ஆமை முதுகிலும் பாரமில்லை
ஆனாலும் அமிழ்து கிடைக்கிறது

ஆவியாதலனெ அறிவியலாருரைக்க
ஆண்டவன் சித்தமென ஆன்மீகத்தார் கூற

ஆங்காங்கே சில கழுதைச் சோடிகளும்
ஆவென்று வாய்பிளந்து வான்நோக்க

கருப்புக் காளான்கள்
சாலைகளில் முளைத்திருக்க

காய்ந்திருந்த மரங்களின்
கற்பனையைத் தட்டிவிட அவை

தூரிகை ஏதுமின்றித் தன் மேனியிலே
பல வண்ண படம் வரைய

போட்டிக்கு சாலைத் தண்ணீரும்
தூக்கிய வேஷ்டிகளையும் புடவைகளைப் பதம் பார்க்க

பலநாள் கழித்துக் குளித்த காக்கைகள்
ஒரத்தில் ஒதுங்கி உடலுலுலர்த்த

வானம் பார்த்த பூமியாம் சில
உதடுகள் உஷ்ணமாக

சில்லென காற்று டீ கடையில்
சில சில்லரைகளைச் சேர்க்க

பல்லவன் தன்னுள் சிலைரைத்
தவணை முறையில் குளிப்பாட்டி

சாலையோர நடைபாதைவாசிகளை
தாராளமாய்க் குளிப்பாட்ட

சைக்கிள்காரர்கள் தலையில்
பாலித்தீன் பூக்கள் பூத்திருக்க

மாடியிலே மறக்கப்பட்ட வடாம்கள் சில
எமதர்மராணிகளை நினைத்து சிரிக்க

ஓட்டு வீட்டுத் தோணிகளின் தண்ணீர்
வீட்டுப் பாத்திரங்களை நிரப்ப

திண்ணைக் குழந்தைகள்
காகிதக் கப்பல் விட

இடியே விழுந்தாலும் மெகாத்தொடர்கள்
விடாது பார்க்கப் பட

மறக்கப்பட்ட குடைகள்
ஆணிகளில் தூங்கியிருக்க

இன்று கடும்வெயிலென்ற
வாநிலை ஆராய்ச்சி நிலையம் மீது

கொஞ்சம் கடுமையாகவே
நீர் வீழ்த்த..

சில செல்லத் திட்டுக்கள்
சில நன்றிகள்
சில சந்தோஷங்கள்
சில எரிச்சல்கள்

எதையும் பொருட்படுத்தாமல்
சோ வென பெய்யும் மழை..

~~~~~~~~~~~~****~~~~~~~~~~~

மேலே உள்ள கோடு ..இத்தோடு கவிதை முடிந்தது என்பதைக் காண்பிக்க. :) (நல்ல கவிஞர்களுக்கு இது தேவை இல்லை தான் ) .. மழைக் கவிதைக்கு காரணம் இதோ கீழே உள்ள வாநிலை அறிக்கை தான் ..

Thursday, March 30, 2006

நோபல் பரிசின் ஏமாற்றமான மறுபக்கம்


சென்ற வாரம் தொலைக்காட்சி (KQED) யில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது. ஒரு நோபல் பரிசின் மறுபக்கம் இவ்வளவு மோசமானதாக இருக்கும் என நான் கனவினுலும் நினைக்கவில்லை.

ஏப்ரல் 15, 1953 இல் இயற்கை(Nature) என்ற அறிவியல் இதழில் மூன்று முக்கிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியாயின. அவை மூன்றும் இன்றைய மருத்துவத்துறை வளர்ச்சியின் அடிப்படையான டி.என்.ஏ வின் கண்டுபிடிப்பைப் பற்றியவை. முதன் முறையாக அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

அந்தக் கட்டுரைகள் மரபணுவின் அமைப்பின் இரும்புத்திரை ரகசியத்தை உடைத்து அதன் டபுள் ஹீலிக்ஸ் எனும் வடிவத்தை உலகிற்குக் காட்டின. இந்த ரகசியம் மனித உடலில் வியாதிகள் பரவும் விதத்தையும் அதற்கு உடல் தகவமைத்துக் கொள்ளும் விதத்தையும் அறிவியலாலர்களுக்கு எளிதில் புரியவைத்து பலப் பெரும் வியாதிகளுக்கு மாற்று மருந்துகளைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவியது. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பல மருந்துகளுக்கு இந்த நிகழ்வே முன்னோடி என்க் கூறலாம்.

1950க்கு முன்பு அறிவியலாலர்களுக்கு மரபணுவைப் பற்றி ஒரு விதமான அனுமானத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை. கிரகார் மெண்டலின் அடிப்படைக் கோட்பாடுகள் மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். அதற்கு அடுத்த படியை அடையும் ஓட்டப்பந்தயத்தில் அறிஞர்களுக்கிடையே கடும் போட்டி இருந்தது.

சிலருக்கு ரோஸாலின் பிராங்ளின் பற்றி.. அவர் ஒரு கெமிஸ்ட், எக்ஸ் ரே கிரிப்டலோகிராஃபர் என தெரிந்திருந்தது. இன்னும் சிலருக்கு மட்டுமே அவருடைய எக்ஸ்ரே படங்களே.. இந்தப் புதிய கண்டுபிடிப்பிற்கு அடிகோலின என்றும் தெரிந்திருந்தது. ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடிக்குப் பிறகு அந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாக மிளிர்ந்த டி.என்.ஏ வின் வடிவக் கண்டுபிடிப்பின் பின் உள்ள ஒரு அசிங்கமான நம்பிக்கைத் துரோகம் விஷயமறிந்த பலரைப் பலகாலம் துக்கத்திலாழ்த்தியது.

1951 இல் ரோஸாலின் லண்டனின் கிங்ஸ் காலேஜில் ரேண்டல் லேபில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். அங்கே ஏற்கனவே இருந்த மௌரிஸ்க்கு ரோஸலினை அவ்வளவாக பிடிக்கவில்லை.

ஐந்து அடி உயரம்..வெகு ஒடிசலான தேகம்..யாரையும் சகஜமாய் பழகவிடாத வெட்கம்..வேலையைத் தவிர வேறெதையும் நினைக்காத குணம், எப்போதும் ஆராய்ச்சியே என கரும சிரத்தையாய் இருப்பது.. மனதில் பட்டதை வெளிப்படையாய் சொல்லுவது..போன்ற குணங்கள் அவருக்கு நண்பர்கள் யாரையும் சேர்க்கவில்லை..

பின்னாளில் நோபல் பரிசு வாங்கிய வாட்சன் தனது சுயசரிதையில் கூறுகையில் " ரோஸாலின் ஒரு பெண் போலவே இருக்கவில்லை.. உடையிலோ ..முக அலங்காரத்திலோ எதிலும் நாட்டமில்லை.." என தன் ஆணாதிக்கத்தைக் கொட்டினாலும் " அறிவுக்கு மட்டும் பஞ்சமில்லை" என ஒத்துக் கொண்டார்.

கிங்ஸ் காலேஜில் ரோஸாலின் , மௌரிஸ் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை.. டி.என்.ஏ வின் வடிவத்தை எக்ஸ்.ரே மூலம் கண்டறிவது..

அதே நேரத்தில் கேம்பிரிட்ஜ் லேபில் வாட்சனுக்கு புரதங்களை ஆராய்ச்சி செய்யும் வேலை இருந்தது..ஆனால் அதில் நாட்டமில்லாமல் இவர்கள் ஆராயும் டி.என்.ஏ பக்கம் அவர் கவனம் திரும்பியது.

ரோஸாலினின் கடின உழைப்பு படிப்படியாக பலனளிக்கத் துவங்கியிருந்தது.. மௌரிஸ்க்கு பெண்ணுடன் வேலை செய்யவேண்டியிருக்கிறது என்ற ஒரு குறுகுறுப்பும்..அதிலும் அவள் நன்றாக வேலை செய்கிறாலோ என்ற எரிச்சலும் அதிகமாகிக் கொண்டே வந்தது.

1951 இல் மௌரிஸ் வாட்சனை சந்தித்து பழக வாய்ப்பு கிடைத்தது.. ரோஸலினைப் பற்றிய மௌரிஸின் எரிச்சல்.. கிங்ஸ் காலேஜை ..கேம்பிரிட்ஜ்க்கு முன்னாலிழுத்துச் செல்லும் ரோஸலின் மீது உள்ள வாட்சனின் வெறுப்பு ..இரண்டும் இவர்களை நண்பர்களாக்கியது.

சில மாதங்களுக்கு பின் நவம்பர் 1951 இல் ரோஸலின் ஒரு ஆராய்ச்சி வகுப்பில் அதுவரையிலான தன் கண்டுபிடிப்பை விளக்கி .. டி.என்.ஏ வின் முதுகெலும்பு அதற்கு வெளியிலேயே அமைந்துள்ளது..அது ஹெலிக்கள் வடிவம் என விளக்கினார்.

வாட்சன் அந்த வகுப்பில் அமர்ந்திருந்தார்.. குறிப்பேதும் எடுக்காமல்..தவறாக சிலவற்றை நினைவில் இருத்தினார். அதற்கு இரண்டு காரணம் ..ஒன்று அவர் ரோஸலின் போல கெமிஸ்ட்ரி மேஜர் அல்ல... இரண்டாவது ஒரு பெண்ணின் லக்ட்சரை கேட்பதா என்ற எண்ணம்..

அவர் தன் அரைகுறை அறிவுடன் கிர்க் என்பவருடன் சேர்ந்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.. அதன் அடிப்படையே தவறாக முதுகெலும்பை உள் நிறுத்தி டி.என்.ஏ வடிவம் செய்து அதை மௌரிஸ் மற்றும் ரோஸலின் முன் சமர்ப்பித்தார்.

ரோஸ்லின் அதை தக்க காரணங்களுடன் தவறு என அனைவர் முன் நிரூபித்துவிட..வாட்சன் , கிர்க் இருவருக்கும் அவமானத்துடன் எரிச்சலும் வந்துவிட்டது. இவர்களின் இந்தத் தோல்வி அவர்களது கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சி தலைமைக்கு எட்ட ..புரதங்களை ஆராயமல் கால விரயம் செய்ததால் கடும் கோபம் கொண்டு டி.அன்.ஏ ஆய்வை அத்தோடு முடித்து பழைய ஆய்விற்குத் திரும்ப உத்தரவிட்டது.

ரோஸலினின் வளர்ச்சியை அங்கீகரித்த கிங்ஸ் காலேஜ் உயர்ந்த இடம் கொடுத்துக் கவுரவப்படுத்தியது. ஆனால் உடன் வேலை செய்யும் மௌரிஸ் அதைப் பொருட்படுத்தாமல் ரோஸலினைத் தன் அஸிஸ்டெண்ட் போல பயன்படுத்த அதற்கு ஒரு நிலையில் எதிர்ப்பு தெரிவித்தார். மௌரிஸ் மட்டுமல்ல அங்குள்ள கிட்டத்தட்ட அனைத்து ஆராய்ச்சியாளர்களாலும் பெண் என்ற ஒரே காரணத்திற்காக தனிமைப் படுத்தப்பட்டார். மதிய உணவு கூட அனைவரும் அமர்ந்து உண்ணுமிடத்தில் உண்ண அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மௌரிஸ்ஸால் சுத்தமாக ரோஸலினை சகித்துக் கொள்ள முடியாத நிலை வந்துவிட்டது .. ரோஸலின் அறைப்பக்கமே போவதில்லை.. ரோஸலினோ சுற்றி நடப்பதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தன் ஆய்வில் மூழ்கியிருந்தார்.

மே 1952 இல் மிக நுண்ணியமாக அவர் எடுத்த இரண்டு டி.என்.ஏ படங்கள் ட்ரை மற்றும் வெட் ஃபார்ம் மிக முக்கியமான மைல்கல்லாகின. யாரும் அது வரை அவ்வளவு தெளிவாக எடுத்ததில்லை.

எதுவும் சாதிக்காத வெறியிலிருந்த மௌரிஸ் .. ரோஸலினின் ஆராய்ச்சிக் குறிப்பு.. படங்களை அவர் இல்லாத போது நகலெடுக்க ஆரம்பித்தார்.

ஜனவரி 1953 இல் வாட்சன் திரும்பவும் ரோஸலினை சந்திக்க வந்தார்.. அவமானகரமான முந்தைய சந்திப்பிற்குப் பிறகு இவர் மீண்டும் வரக் காரணம்... லைனஸ் பாலிங் என்ற மற்றோரு விஞ்ஞானி டி.என்.ஏ வடிவமைப்பு பந்தையத்தில் வாட்சனுக்கு முன்பிருந்ததே... எப்படியும் இந்த முறை சரியான தகவலைப்பெற்று வென்று விடவேண்டும் அதற்கு ரோஸலினை விட்டால் கதியில்லை என வந்தார்.

அங்கே ரோஸலினை சந்திப்பதற்குள் மௌரிஸைப் பார்த்து வந்த காரணத்தைக்கூற... ரோஸலினிடனிருந்து திருடிய நகல்களைத் தாரைவார்த்தார். அந்தக் குறிப்புகளும் புகைப்படங்களும் அங்கேயே வெற்றிக் கோப்பையை வாட்சனுக்குக் காட்டின..

அறிவியல் ஆராய்ச்சியைப் பொறுத்தமட்டிலும் விஞ்ஞானிகள் தங்கள் படைப்புகளை பகிர்தல் அவசியம். அவ்வாறு பகிரும் போது கண்டுபிடிப்பாளர்களுக்குரிய அங்கீகாரம் வழங்க வழிவகுக்க வேண்டும் யாருடைய ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பையோ தன்னுடையது என உரிமை கொண்டாடக்கூடாது. இதுவே அடிப்படை விதி.

அதை மீறி வாட்சனும் , கிர்க்கும் ரோஸலினை அங்கீகரிக்காமல் அவரது படைப்பை மட்டும் கொண்டு இரண்டாம் மாதிரியைப் படைத்தனர். அதை ரோஸலினை வைத்தே சரிபார்க்க வைத்தனர்.
அந்த ஆய்வினடிப்படையில் வெளியான கட்டுரைகள் தான் முதலில் நான் சொன்னது.

கண்டுபிடிப்பின் காரணகர்த்தாவான ரோஸலினின் கட்டுரை ஏதோ வடிவமைப்பை சரிபார்க்க மட்டுமேபயன்படுத்தப்பட்டது போல் தோற்றத்தை ஏற்படுத்தி நோபல் பரிசைத் தட்டிச் சென்றனர் வாட்ஸனும் கிர்க்கும்.

ரோஸலினுக்கு கிடைத்தது "டார்க் லேடி" என்ற சக ஆணாதிக்கவாதிகளின் பட்டப்பெயர் மட்டுமே.

முலம்: http://www.historycooperative.org/journals/ht/36.1/rapoport.html

நாடுகள் மாறலாம்.. கிண்டல்கள்!!

இன்று காலையில் பண்பலையில் கேட்ட செய்தி நன்றாக சிரிக்க வைத்தது..

அவங்கவங்க அடுத்த நாட்டைப் பற்றிக் கிண்டலடிக்கறதிலிருக்க சுகம் அனைத்து நாட்டினருக்கும் பொதுதான் போல...

இது அமரிக்காவின் கிண்டல் இங்கிலாந்தைப் பற்றி..

லண்டனில் ஜேப்படித் தொல்லை அதிகமாகி விட்டதாம்... போலீஸார் நேரில் திருடன் ஓடுவதைப் பார்த்தாலும் ஓடிப்போய் பிடிக்க முடியவில்லையாம்.. (இனி நம்ம ஊர் போலீசை யாராவது கிண்டல் பண்ணினீங்கன்னா பாருங்க..)

அதனால ரெம்ப யோசிச்சு சூப்பரா ஒரு ஐடியா பண்ணினாங்களாம் .. (அநேகமா பின்னால விசாரிச்ச போது..அந்த ஐடியாவைக் கொடுத்தது ..போலீஸ் உடையணிந்த திருடன்ன்னு கண்டு பிடிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..)

ஐடியா என்னன்னா.. ஸ்கேட்டிங் ஷூஸ்... ஆமாம் ..எல்லா ரோந்து போலீஸ் கால்லயும் சக்கரம் கட்ட சொன்னாங்களாம்..

அதுக்கு கொஞ்ச நாள் ட்ரெயினிங் வேற .. எல்லாம் முடிஞ்சு களத்தில் குதிச்சா .. அங்க அவங்களுக்கு பெரிய ஆப்பு !

திருடங்க இப்ப ரோட்ல ஓடாம ..புல் தரைல ஓடராங்களாம் உண்மைல நடந்தே போறாங்களாம்.. காலில் சக்கரத்தோடு போலீஸார் பாவமா முழிக்கறாங்களாம் ..

இத சொல்லி அமரிக்க ரேடியோ கேலி பண்ணுது .. இவங்களை பத்தி தெரியாதா.. இது ரெம்ப நாள் முன்னால கேட்ட ஜோக்..

அமரிக்கா காரங்க விண்வெளிக்கு போயி.. (ஸ்டுடியோ இல்லைங்க.. நெஜமான விண்வெளி) அங்க எதோ நோட்ஸ் எடுக்க ட்ரை பண்ணும் போது ... பேனா எழுதுலயாம் ..

என்னன்னு பார்த்தா .. விண்வெளில வாயு அழுத்தம் வேறு படரதுனாலன்னு கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிச்சாங்களாம்..

அப்புறம் .. இத சரி பண்ண ஒரு ஃபேமஸ் பேனா கம்பெனிக்கு நிறையா மில்லியன் கொடுத்து ஒரு புது டெக்னாலஜி பேனா .. விண்வெளில .. தண்ணீர்க்கடியில பயன்படுத்தறமாதிரி ஒரு சூப்பர் பேனா செஞ்சாங்களாம்.. மறக்காம பேட்டெண்ட் வேற பண்ணீட்டாங்க.. அதுல ரெம்ப கெட்டியாச்சே..

ஆனா ரெம்ப நாட்களும் காசும் செலவாகிடுச்சு..

அப்புறம் யோசிச்சாங்க.. அட நம்ம ரஸ்யாகாரங்க கூட விண்வெளிக்கு போயிருக்காங்களே.. அவங்க கிட்ட கொஞ்சம் ஷோ விடலாம் என அவங்க கிட்ட எல்லா பிரசண்டேஷ்ன்லாம் கொடுத்துட்டு பந்தாவா கேட்டாங்கலாம் ... ' நீங்க எப்பிடி நோட்ஸ் எடுக்கப் போறீங்க? வேனும்ன்னா இந்த டெக்னாலஜிய காசு கொடுத்து வாங்கிக்கங்க " ன்னு தூண்டில் போட்டதும் அவங்க சொன்ன பதில கேட்டு அமரிக்காக்காகாரங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சாம்..

என்ன சொல்லியிருப்பாங்க .. எனி கெஸ் ?

Wednesday, March 29, 2006

தடா முடா ராய்க்கல் .... மரம்புடிச்சு.

.. மசா பந்து ..தண்ணீர் தரை ..அடி ஜான்.. டாம் டூம் .. மேடு பள்ளம்.. உதவி.. கிராப் ..நொண்டி.. ஒளிஞ்ச விளையாட்டு.. ஏழு கல்.. குதிரை.. ராஜாராணீ .. ஒளிச்சுக முழிச்சுக .. தொட்டு விளையாட்டு .. கண்ணாமூச்சி .. கொல கொலயா.. சீட்டு (கல்) ..சீட்டு (அடிச்சு).. குண்டு .. பம்பரம் .. கில்லி .. பல்லாங்குழி.. அஞ்சுகல்.. தாயம். பரமபதம்..நம்பர் பார்த்து ... புக் க்ரிகெட்..

இந்த விளையாட்டுகளையெல்லாம் எத்தனை பேர் விளையாண்டிருக்குறீர்கள் என தெரியாது .. ஆனால் இது மாதிரி வேறு விளையாட்டுகள் .. வேறு பெயரில் விளையாண்டிருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தைப் பற்றி ரெம்ப யோசித்ததின் பக்கவிளைவு இது..

இப்போது பொடுசுகள் பெரும்பாலும் கார்ட்டூன் சேனலிலும் கம்ப்யூட்டர்/வீடியோ கேம்களிலும் அதிக நேரம் செலவிடுவதாகவே நினைக்கிறேன் .. கண்களைக் கெடுத்துக் கொண்டு உடல் பெருப்பதும் வாடிக்கையாகிவிட்டது..

வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் ஒரு விதத்தில் பத்து பதினைந்து வருடங்கள் முன்பிருந்த விளையாட்டுகள் இப்போது மறைந்தே விட்டன என நினைக்கிறேன்..

பழைய விளையாட்டுகள் பற்றி சில வரிகள் பகிர்ந்து கொள்கிறேன்.. நீங்கள் இதை வேறு பெயரில் கூட விளையாடியிருக்கலாம்..

மசா பந்து ..கொஞ்சம் டேஞ்சரஸ் தான் .. ரெண்டு டீம் . ஒரு டீம்ல குறைந்தது 4 பேர்.. பந்த எடுத்து அடுத்த டீம் மேல அடிக்கனும் .. ரெம்ப அடி படாதமாதிரியான பந்து தான்.. அந்த டீம் கைல பந்து கிடச்சுடுச்சுனா ..ஓடி ஒளிஞ்சு தப்பிக்கனும்


தண்ணீர் தரை .. ஒரு வட்டம் அது தான் தண்ணீர்.. வெளில தண்ணீர்... யாரு சிக்கியோ அவங்க தண்ணீர், தரை இல்லைன்னா தண்ணீர்த்தரை ( வட்டத்துல ஒரு கால் .வெளிய ஒரு கால்) ன்னு சொல்வாங்க ... அதுக்கு தகுந்த மாதிரி குதிக்கணும்.. மாறினா அந்த ஆள் சிக்கி..

அடி ஜான்.. கோலி குண்டோ .. கல்லோ .. யூஸ் பண்ணலாம் .. கால்ஃப் மாதிரி :) .. அடுத்தவன் கல்ல முதல்ல வீசிடுவான் .. ரெண்டாவது ஆள் அதை அடிக்க ட்ரை பண்ணலாம் .இல்லைன்னா அந்தக் கல்லுக்கு ஒரு ஜான் பக்கத்துல கொண்டு போய் நிருத்தி மறுபடியும் அடிக்க ட்ரை பண்ணலாம்.. எவ்வளவு தூரம் தள்ளீட்டு போறமொ அவ்வளவு தூரம் அந்த ஆள் நொண்டனும்

தடா முடா ராய்க்கல்... கொஞ்சம் ஜாக்கிரதையா விளையாடனும்.. ஆளுக்கொரு குச்சி வச்சிருக்கனும்.. யார் சிக்கியோ அவங்க குச்சி கீழ கிடக்கும் .. அடுத்தவங்க அவங்க குச்சிய எதாவது கல் மேல ஊன்றி இருக்கனும் . .. சிக்கியான ஆள் ஏமாறும் போது அவன் குச்சிய தள்ளிவிடனும்.. தள்ள ட்ரை பண்ணும் போது தொட்டு விட்டால் அவுட்..

மரம் புடிச்சு .. தென்னந் தோப்பு என்றால் .. மரமே . இல்லைன்னா .. ஜன்னல் தான் மரம் ... இத விளையாட அருகருகே ஜன்னல் இருக்கும் வீடுகள் வேண்டும்..

டாம் டூம் .. யாரது ... பேயது .என்ன வேண்டும்... நகை வேண்டும் .. என்ன நகை .. கலர் நகை... என்ன கலர்? . இந்த கேள்விக்கு சிக்கியானவன் எதாவது ஒரு கலர சொல்லீட்டு தொட ஒடி வருவான் ... அவன் வர்ரதுக்குள்ள அந்த கலரைத் தொட்டுடனும் ....

புக் கிரிக்கெட் ....க்ரூப் ஸ்டடில இத விளையாடத ஆளுயாராவது இருப்பாங்களா என்ன ;)

மேடு பள்ளம்.. இது தண்ணீர் தரை மாதிரியே ... நீண்ட திண்ணை இருக்கும் போது விளையாடலாம்...

உதவி.. கிராப் ..நொண்டி.. ஒளிஞ்ச விளையாட்டு.. ஏழு கல்.. குதிரை.. ராஜாராணீ .. ஒளிச்சுக முழிச்சுக .. தொட்டு விளையாட்டு .. கண்ணாமூச்சி .. கொல கொலயா.. சீட்டு (கல்) ..சீட்டு (அடிச்சு).. குண்டு .. பம்பரம் .. கில்லி .. பல்லாங்குழி.. அஞ்சுகல்.. தாயம். பரமபதம்..நம்பர் பார்த்து ... இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச விளையாட்டுத் தானே..

உங்க வீட்டு பொடுசுகளுக்கும் சொல்லிக் கொடுத்து விளையாட வைங்க.. :)

Tuesday, March 28, 2006

பிண்ணனி இசையற்று இனிக்கும் சில பாடல்கள் (ஒலி வடிவில்)

நிலாவே வா...

அன்பென்ற மழையிலே..

பூவே பூச்சூடவா ..

இந்தப் பாடல்கள் என் தங்கை ஆர்த்தி பாடியது.

நான் பாடி கேட்டுத் தான் ஆகனும் என அடம்பிடித்தால் யார் காப்பாற்றமுடியும் உங்களை.
இதோ இங்கே கிளிக்குங்கள். அன்று கொஞ்சம் வாய்ஸ் சரியில்லை ..அனுசரித்துக் கொள்ளுங்கள்.


சுகா