Monday, June 05, 2006

தோல்விகள் பழகு

கடலிள் துளி நீராய் திழைத்திருந்தேன்
ஆதவன் ஒரு நாள் எனை எரிக்க
எரிக்கப் பறக்கும் பினிக்ஸ் பறவையாய் இல்லையேயென
தோற்றுப்போய் ஆவியுமானேன்

அஹா..வான் வழி பயணம் இனிதோ இனிது
தேனாய் இனித்தது தோல்வி
கடலாய் கழிந்த காலத்தை கடிந்து கொண்டே
மேகமுமாகி ஊர்வலம் போனேன் வான் வழியே

குளிர்த் தென்றல் எனைத் தீண்ட
சிலாகித்து உருகி விட்டேன் நொடிப் பொழுதில்..
புவியெனை ஈர்க்க மழையென மாறி
மண்ணோக்கி வீழ்ந்தேன் நான்..
மீண்டுமோர் வீழ்ச்சி !

மீழ்வேனாயென மயங்கிக்
கிடந்தேன் சில நொடிகள்
மண்ணின் மணமும்
மலர்போல் படுக்கையும்
உயிர் கொடுத்தது எனக்கு..

கடலலை மறந்தேன்
வான்வெளி மறந்தேன்.
மண்ணினில் தவழ்ந்தேன்
குழந்தை போல..

கடலாகி நிறமற்றிருந்தேன்
வானாகி உருவற்றிருந்தேன்
மண் சேர்ந்து மணம் பெற்றேன்
செந்நிறம் பெற்றேன்

அருவியாய்.. காட்டறாய்.. ஒடையாய்
பீடு நடை போட்டு வந்த என்னை
வஞ்சித்தானே விதைக் கள்ளன்
வேரால் உறிஞ்சி

தோற்பது என் பிறவிக் கடனா
தோற்க நான் என்றும் தோற்றதில்லையே

விதை சேர்ந்துறங்கினேன் சில காலம்
விழித்த பொழுதினில்
விழிநோக்க வழியில்லை
வழியின்றி விதை கிழித்தேன்..
மண் பிழந்தேன்..

சிறு வித்தாகி
தலை நீட்டி
கதிர் நோக்கிய
அந்நொடியில் அடைந்தேன் சொர்க்கத்தை

உருவாக வாய்ப்பளித்த
விதையோனை வாழ்த்தி
வளர்ந்து மரமுமானேன்

மரமழிக்க மரம் கொண்டுவரும்
வருங்கால மனிதப் பிணமொன்றைத் தூரத்தில் கண்டேன்

மனம் வருந்த மனமில்லை
தோற்பது புதிதல்ல எனக்கு
உண்மையில் நான் தோற்றதென்பதுமில்லை
எல்லாம் தோற்றப்பிழையன்றி வேறில்லை

தோல்வியெனக்கு புது உரு கொடுக்கும் வாய்ப்பு
வாய்ப்பை வாழ்த்தாமல் வருந்துவானேன்

எனைக் கடலில் இருந்து மேலே அனுப்பிய
தோல்விகள் எனது படிக்கற்கள்
வெற்றியோ ஒரு போதை..
என்னை ஒரே இடத்தில் இருத்திவிடுகிறது..

என் தோல்வி, தோற்கடிக்கப் பட்டதால்
இழந்த வெற்றியை விட பெரிய வெற்றியை
நோக்கி பயணிக்க வைத்திருக்கிறது

பயணிப்பதும் பயணித்த இலக்கை அடைவதும்
என் கையிலேயே..

சில சமயம் எனக்கு இலக்குகளே இருந்ததில்லை
இலக்குகளை உணர்ந்ததில்லை
ஆனால் மாற்றங்களை ஏற்றுக் கொண்டேன்
மாற்றங்கள் சில சமயங்களில் ஏற்றங்களாயின
ஏற்றங்களிலிருந்த போதும் மாற்றங்கள் அழைத்தன
மிக கடினமான முடிவெடுக்க வேண்டிய தருணங்கள்

கஷ்டத்தில் இருக்கும் போது
மாற்றங்களை அரவணைக்க துணிவு தேவையில்லை
மாற்றங்களே தேவைகளாகும் தருணங்களவை

வென்ற பிறகும் வசதிகளில் திழைக்கும் போதும்
மாற்றம் கொள்ளத் துணிவதே துணிவு
வாழ்க்கைக்கு இலக்கொன்றை கொண்டோரின் துணிவு
ஏற்றுக் கொண்ட மாற்றங்கள் எமாற்றங்களை
அளித்தாலும் ஏற்றுக் கொள்ளும் துணிவு

தோல்விகள்.. அனுபவங்கள்
கற்றுத் தருபவை
அடையாளம் காட்டுபவை
எல்லைகளை வரையறுப்பவை
உடனிருப்போரை தோலுரித்துக் காட்டுபவை
ஓய்விற்கு ஒய்வு கொடுப்பவை
தோல்விகள்.. அவமானங்களல்ல
வழிகாட்டும் அடையாளங்கள்

வெற்றிகள் போதை..
போதையின் களிப்பு
வெற்றிப் போதையின் தெளிவே தோல்வி
இதை அடையாதவர்களில்லை
தவிர்ப்பவர்கள் முன்னேறமுடியாது
தவிப்பர்கள் மீழமுடியாது
தாங்குபவர்கள் முன்னேற்றத்தை தவிர்க்க முடியாது

தோல்விகள்.. மறந்திருந்திருந்த பலதை..
கண்ணீர்ச்சுவையை
அவமானங்களின் பதைபதைப்பை
எளனப் பேச்சுக்களை
அதை எற்க மனமின்று செய்த வாதாட்டங்களை
அவ்வாதட்டங்கள் வெறும் நேரவிரயமென்பதை
வெற்றிக் களிப்பில் மார் நிமிர்த்தி பீடு நடைபோடையில்
பணிந்து வணங்க மறந்த முகங்களை
என மறந்த பலதை நியாபகப்படுத்தும் மருந்தே தோல்வி

தவறுகளை வலிக்கத் திருத்தும்
தோல்விகள் எனது ஆசிரியர்
காலம் முழுக்க படிக்கப் பட வேண்டிய
பாடம் எனது தோல்விகள்
பாடங்கள் எனது வளர்ச்சிக்கு
வளர்ச்சியே எனது வெற்றி
தோல்விகள் எனது வெற்றிகள் !

குறிப்பு : இது ஒரு மறுபதிவு.

9 comments:

Anonymous said...

hmm.. sonnabadi correctah monday ezhuthuteenga? will write my comments tomorrow. :o)

- tamil

Suka said...

வாங்க..தமிழ்..

நீங்க எப்ப எழுத சொன்னீங்க.. நியாபகமே இல்லையே.. :) சரி.. படிச்சுட்டு சொல்லுங்க.. ஒரு வருஷத்துக்கு மேலாச்சு இதை எழுதி ஆனா இது இன்னைக்கும் எனக்குத் தகுந்த மாதிரித்தான் இருக்கு அதான் மறுபடியும் எழுதினேன்..

Suka said...

நன்றி உண்மை..

Sivabalan said...

நல்ல வித்தியாசமான படைப்பு!!

நன்றி!

Suka said...

நன்றி சிவபாலன்.

Suka said...

நன்றி மதுஷாலு.

தமிழில் எழுதுவதற்கான உதவிகளை இங்கே பெறலாம்.

http://www.thamizmanam.com/resources.php

Suka said...

test

சுபா காரைக்குடி said...

ரொம்ப அருமையான படைப்பு !!
தன்னம்பிக்கையை தூண்டும் படைப்பு !!

"உண்மையில் நான் தோற்றதென்பதுமில்லை
எல்லாம் தோற்றப்பிழையன்றி வேறில்லை"

- மிகவும் ரசித்த வரிகள்.

Suka said...

நன்றி சுபா.