Sunday, December 11, 2005

உரைநடை அல்லாததெல்லாம் கவிதை தானோ?

எனக்கு சந்தேகமாக இருந்தது, ஒருவேளை நான் எழுதுவது கவிதையாக இருக்குமோ என. சரி இதை உடனே நிவர்த்தி செய்துகொள்ளலாம் என நான் எழுதியதை ஒரு இணைய தளத்துக்கு மின்னஞ்சல் செய்தேன். அட, கவிதை பக்கத்தில் பிரசுரித்து விட்டார்கள். நானும் கவிஞனாகிவிட்டேனோ என சந்தோசப்படும் வேளையில் மீண்டும் ஒரு சந்தேகம். ஒருவேளை எனது மின்னஞ்சலில் கவிதை என குறிப்பிட்டிருந்ததால் தான் அதை கவிதை பக்கத்தில் பதிவேற்றினார்களா, இப்போதெல்லாம் கவிஞர்களுக்கு இணையாக தமிழ்தளங்களும் பெருகிக் கொண்டிருக்கிறது. தானியக்க முறையில் பதிவேற்றிவிட்டார்களா? இன்னொரு சோதனையும் செய்துவிடுவோம் என இன்னொரு மின்னஞ்சல்; இந்த முறை அனுப்பியதை 'இது கவிதை' எனக் குறிப்பிடவில்லை. அட.. இந்தமுறையும் கவிதைப் பக்கத்திலேயே வலையேற்றம். இருந்தாலும் எனக்கு உடன்பாடில்லை. சிறிது ஆராயலாம்.

மரபுக்கவிதை.. இது பற்பல இலக்கணங்களை வைத்து படைப்பின் வடிவத்தையும் கருத்துக்களின் தன்மையையும் வரையறுக்கிறது. சிலசமயங்களில் வடிவத்திற்காக வார்த்தைகள் விகாரமாகின்றன, சில பல இடங்கலிள் தொக்கிநிற்கின்றன. எளிதில் புரிந்துகொள்ளுவது சிரமம். பலவகையிலும் அர்த்தப்படுத்திக் கொள்ளும் வசதியையும் தருகிறது. இந்த வசதிகள் நடைமுறை வாழ்க்கையில் எனக்கு சில சமயம் உபயோகமாகவும் இருந்திருக்கிறது.

ஒருமுறை என் தங்கையை தாயார் சனியனே என திட்டிவிட, அவளைச் சமாதானப்படுத்த ஔயாரைத் துணைக்கழைத்து 'சனி நீராடு' என அவர் சொன்னாரல்லவா 'சனி' என்றால் குளிர்ச்சி..அதனால் அம்மா உன்னை 'குளிர்ந்தவளே' என புகழ்ந்திருக்கிறார் என்றேன். இந்த விளக்கத்தைக் கேட்பதற்கு நான் அம்மாவிடம் இன்னமும் கொஞ்சம் திட்டே வாங்கியிருக்களாம் என அம்மாவிடமே ஓடிவிட்டாள். எப்படியோ சங்கத் தமிழ் தங்கையை சமாதானம் செய்துவிட்டது.

இன்றுவரை திருவள்ளுவரின் முதல் குறளே சர்ச்சையில் அல்லவா உள்ளது.

மரபுக்கவிதை எழுதுவது பெரிய திறமை தான். வெறும் இலக்கணம் மட்டுமெனில் நாம் மரபுக்கவிதைவடிக்க மென்பொருளே எழுதிவிடலாம். தமிழ் மென்பொருள் எழுத இங்கே ஆர்வமிகுந்தோர் பலருண்டு. இலக்கணத்தோடு சொல்லவந்த கருத்தையும் அல்லவா சொல்லவேண்டும். அது தான் சிரமமே. அதிலும் அழகிற்கு அழகு கூட்ட அணியிலக்கணமுண்டு. இருக்கிறதோ இல்லையோ குறவஞ்சி கூறும் சந்திரகாந்தக்கல் குறித்த வர்ணனை அழகுதான்.

மரபுக்கவிதைகள் சொல்லவந்த கருத்துக்களைவிட சொல்வோர் சொல்வன்மையையே எடுத்துக்காட்டுவதாக தோன்றுகிறது.

புதுக்கவிதை .. மரபுக்கவிதை அல்லாத உரைநடை போல் நீண்ட அடிகள் அல்லாத அல்லது உரைநடை எனக் குறிப்பிடப்படாத எல்லாம் புதுக்கவிதைகள் தானோ என நினைத்திருக்கிறேன். 'புது' என்ற வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததோ .. இலக்கணம் ஏதும் தனியாக இல்லாத்தால் 'புது' என்பது கருத்துக்களுக்குத் தானோ என்று தோன்றுகிறது.

புதுக்கவிதை புதுமையான கருத்துக்ககளைக் கொண்ட 'கவிதை'. சரி அது என்ன கவிதை? உரைநடைக்கும் கவிதைக்கும் என்ன வித்யாசம்? கவிதை என்பது இசை அமைக்க தோதுவான வடிவமா?

நானும் கவிதை எழுதுகிறேன் என எதுகை மோனைகளைத் தேடியதுண்டு. ஏற்ற வார்த்தைகள் இருந்த போதும் எதுகையைத் தேடினால் அது கருத்தை மழுப்பிவிடாதா? இன்னும் பல பல கேள்விகள் தோன்றுகின்றன.

ஓவிய முறைகளில் நவீன ஓவியங்கள் என்பன மிகச்சில கோடுகளிலேயே காட்ட வந்த காட்சியைச் சித்தரிக்கும் முயற்சி. அதுபோல் புது கவிதையும் சொல்லவந்த கருத்தைச் சிக்கனமாக சொல்லுவது என்பதே நான் தற்போது நினைத்துக் கொண்டிருப்பது. வலையேற்றம் செய்தவர்களும் அதே அடிப்படையில் தான் நினைத்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.

2 comments:

jeevagv said...

சுகா,
எனது கருத்து:
எது சுருக்கமான வரிகளில் (நீண்ட வியாக்யானங்கள் இல்லாமல்) படிப்பவர் மனதை பறிக்கிறதோ அதுவே கவிதை என நினைக்கிறேன். எதுகை, மோனை அலங்காரம்தானோ தவிர, அவசையமில்லை என நினைக்கிறேன். ஆனால் அதுவே பாடலாகும்போது, சந்தமும், லயமும் அவசியம்.

Suka said...

நானும் அவ்வாறே நினைக்கிறேன்.

நன்றி